து.பா.பரமேஸ்வரி
‘வாசம்’ சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர்
கே. சண்முகம் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

“கூட்டுக் குடும்ப முறை சிதைந்துபோன புள்ளியிலிருந்தே சமூகச் சீரழிவு துவங்கியிருக்குமோ..?” என்கிற வரியை கோடிட்டுத் துவங்குகிறது வாசம் தொகுப்பு. வயது முதிர்ந்த காலத்தில் நமது குடும்ப மூத்தவர்கள் மீது ஒருவித தனித்த மூப்பு வாசம் நம்மை அவர்களின் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கும்.
கதை, வெகு தூரம் நாம் கடத்திவிட்ட நமது மூத்த பெற்றோரின் மூப்பு வாசத்தில் நம்மையும் நமது தாத்தாவையும் பாட்டியையும் தேடச் செய்கிறது.
“அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்ட பாட்டா தன் ஜாதி மேடை நெருப்புக்குள் வீழ்ந்தார்.” என்கிற வரிகள் நாஞ்சில் நிலத்திலும் குழிபறித்துக்கொண்டிருக்கும் சாதியின் பள்ளத்தாக்குகளை அறியப்படுத்துகிறது. பாட்டாவின் வாழ்வுக்கும் சாவுக்குமான இடைப்பட்ட நினைவுகளைச் சுமந்து நகர்கிறது தொகுப்பின் மணிமகுடமான ‘வாசம்’ கதையின் போக்கு.
‘வேஷம்’ கதை இரு வேறு பணிகள் செய்யும் பண்பாளர்களின் ஒருவர் பணி மீது ஒருவருக்கு ஏற்படும் ஏக்கபாவத்தை மனதின் ஓட்டங்களுடன் கதைக்கிறது. கல்லூரிப் பேராசிரியர் வெள்ளைச்சாமி,கொத்தனார் கூலித் தொழிலாளி சண்முகராசு இருவருக்குள்ளும் உண்டாகும் மனச்சிக்கலில் தங்களையும் தங்கள் பணியையும் தங்கள் அடையாளங்களையும் தாழ்த்திக் கொள்கின்றனர்.
தொகுப்பின் ‘வெறி’ கதையின் மிக முக்கிய விசேஷம் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இலக்கியப் புலத்தின் ஒவ்வொரு தளத்திலும் எழுத்தாளன் சமூகத்தைக் கேள்வி கேட்க முனையும் போது அவனைப் பெரிதாகப் பாதித்த அப்போதைய சமூகத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எழுதுவது வழக்கம். ஆனால் ‘வெறி’ கதையில் சமூக நீதியை, மனிதத்தன்மையை பின்னுக்குத் தள்ளும் இரண்டு முக்கியமான சமகால அவலங்களைத் தட்டிக் கேட்கிறார்.
ஒன்று பிறக்கும் பெண்பிள்ளைகளை துச்சமாகப் பார்க்கும் மக்கள், மற்றொன்று கிராமப்புறங்களின் மனிதர் மதியை சூழ்ந்திருக்கும் சாதிய புகைமண்டலம். குறிப்பாக குடியிருப்பு மக்களின் இறப்பிற்குப்பின் இடுகாட்டில் அவர்களின் பிணத்தை எரிக்கத் தடை போடுவதும் அவர்களின் இறுதி ஊர்வலத்தை பொது வழியில் எடுத்துச்செல்ல அனுமதிக்காது தடுப்பதும் பொதுக்கழிப்பறையில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு கழிவறை பயன்படுத்த விடாமல் பூட்டி ரகளை செய்வதும் சாதிஆதிக்கத்தை அறியப்படுத்துகிறது.
பலதரப்பட்ட மனித முகங்களுடனான ரயில் சிநேகங்களை, பயண அனுபவங்களை ‘சொர்க்க யாத்திரை’ கதை வழியாக நாம் மறந்துபோன பயணசாரிகளை நினைவுக்கிடங்கிலிருந்து மீட்டெடுக்கிறார் நூலாசிரியர். பிச்சைக்காரனின் சில்லறையைக்கூட போலீஸ் அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை நூலாசிரியர் ‘கழிப்பு’ கதையில்.
சமூகத்தின் சாபமாக ஆதரவற்ற பிள்ளைகளின் துயர நிலையை எழுத்தின் வழியாக சமூகத்தின் மௌடீகப் பார்வைக்கு முன்நிறுத்துகிறது ‘ஏக்கம்’ கதை. தங்களை அலைக்கழித்த அத்தனை இடப்பாடுகளையும் அசட்டை செய்து இலக்கின் குறியில் மட்டுமே கவனம் கொண்டன என்பதைக் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும் பறவை இனத்தின் ஈடுபாட்டையும் நேர்மையையும் செயல் அர்ப்பணிப்பையும் ‘புல் புல்’ கதைகொண்டு வாசகருக்கு அறியப்படுத்துகிறார் ஆசிரியர்.
“என்னையப் பார்க்கும்போதெல்லாம் பிணத்தோடு குடும்பம் நடத்த வேண்டி இருக்குன்னு கத்துறாரு… நான் என்னக்கா செய்கிறது… என் குழந்தைகூட என்னய பார்த்து பயந்து அழறா… தூக்கத்திலகூட பயந்து நடுங்குகறா… இதுக்காகவே மறஞ்சு மறஞ்சு எத்தனை காலம் வாழுறது? பெத்த பிள்ளையைத் தூக்கி வெச்சு கொஞ்சக்கூட மாரியாத்தா வழி விடல… எதுக்கு நான் பொழச்சேன். அன்னிக்கே நான் செத்துப்போய் இருக்கக் கூடாதா?” பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு அபலை சுப்புத்தாயக்காவின் குமுறலில் கண்ணீர் வெட்டிக்கிறது ‘மத்தாப்பூ’ கதை.
தொகுப்பின் ஒவ்வொரு கதையும் விட்டுப் போகும் துயரக்காட்சிகள் வாசிப்பிற்குப்பின் கண்களில் கோர்க்கும் நீர்த்துளிகளின் ரயில் பெட்டிகளாகவே சங்கிலியிடுகின்றன. அடுத்தென்ன என்கிற சமூகத்தின் மறைக்கப்பட்ட அவலங்களின் தேடல் களஞ்சியமாகவே இந்நூல் நம்மைக் கதிகலங்க வைக்கிறது.
‘எனக்குத் தெரியாதா’ கதை, மனப்பிறழ்வுற்ற மனிதர்கள் சமூகத்தால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்; அவர்கள் தங்களை மறந்த நிலையில் நடந்துகொள்ளும் நடத்தையின் தடுமாற்றங்களை அருண் மருத்துவமனையில் சந்தித்த மனப்பிறழ்ந்த மனிதரின் போக்கைக் காட்சிப்படுத்தி இப்படியான மனிதர்களிலிருந்தும் தனது சமூக அவதானத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
‘வரம் கொடுத்த சாமி’ கதை வழியாக கடவுள் சார்ந்த பல திருப்பங்கள் மட்டுமல்ல, உலக நடவடிக்கைகளில் உண்டாகும் திடீர் நேர்மையான மாற்றங்கள்கூட அன்றாட நிகழ்வுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை காட்சிகளாக்கியுள்ளார்…
‘பெருமிதம்’ கதை முந்தைய தலைமுறை வழியாக தேடிச்சென்று தபால் அலுவலகத்தைக் கண்முன் நிறுத்துகிறது. கதையை வாசிக்கும் போது பிராயகாலங்கள், பழைய தளர்ந்துபோன தபால் அலுவலகங்களில் கழிந்த காலங்களுக்கு டைம் மெஷினில் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி மகிழ்ச்சி கூட்டுகிறது. படுக்கை அரவணைத்துக் கொண்டவுடன் பணத்தையும் பொருளையும் சேமிப்பையும் பறித்துக்கொண்டு நிர்க்கதியாக்கி விடும் மனிதமற்ற மனம் வாய்க்கப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை பேசாமல் பேசுகிறது ‘மதிப்பில்லா உயிர்’.
கன்னியாகுமரியில் மாவட்டத்தில் அனந்தபுரி அருகிலுள்ள ஒழுகினசேரி பாலத்தின் பழையாற்றைச் சுற்றியுள்ள நிலப்பரப்பைப் பேசும் கதைக்கட்டுரையாக, சொந்த நிலத்தை விட்டு மாநிலம் கடக்கும் குடியானவனின் வாழ்நினைவுக்கால அனுபவமாக பழையாற்றின் பெருமூச்சு கதை வெறும் பழையாற்றின் நினைவுகளைச் சுற்றியே அசைபோடுகிறது.
பழையாற்றின் எழில் வளமையை காட்சியாக்கிய கதையாக ‘வாசம்’ கதையும் இத்துடன் ஜோடி சேர்கிறது. பத்தொன்பது கதைகளை சமூகத்திற்காக, சுற்றியுள்ள மக்களுக்காக எழுதிய ஆசிரியர், தன்னைப் பெற்று வளர்த்த அன்னை பூமியை மறவாது அவளுக்காகவும் சில பக்கங்கள் ஒதுக்கிய நிலப்பற்று நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவொன்று.
குடும்ப இழுக்குகளைப் பேசும் இலக்கியப் படைப்புகளை வாசித்தவர்க்கு குழந்தை பெற முடியாத பெண்ணின் உளவியல் முற்றிலும் வேறு விதமாக சிந்திக்க வைக்கும் என்பதற்குச் சான்று தருகிறது ‘சுமை’ கதை. இதுவரை குழந்தை இல்லாத எந்தப் பெண்ணும் செய்யத் தயங்கும் காரியத்தை முருகலட்சுமி தனது தோழி பஞ்சவர்ணத்துடன் இணைந்து செயல்பட்டு இறுதியில் மாட்டிக்கொண்டு தனது நீச்ச செயலில் கூனிக்குறுகி நின்று உணர்ந்து நிற்பதாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது ஆசிரியரின் பெண்ணுளவியலின் உச்சமான சிந்தனை.
‘உங்க வீட்டில்’ கதை சமூகத்தின் பிற்போக்குத் தனத்தைப் புறந்தள்ளி முற்போக்குச் சிந்தனையை விதைக்கும் விதமாக அமைந்துள்ளது.கதை முற்போக்கான விஷயங்களை நோக்கி வழிநடத்துவதாக அமைந்திருந்தாலும், புரையோடிப்போன சமூகத்தின் பின்னணி அத்தனை எளிதாக, கதை காட்சிப்படுத்தும் பழமை மனநிலைக்கு எதிர்வினையாற்ற விட்டு விடாது என்பதையும் நூலாசிரியர் கருத்தில் கொண்டு, இந்தக் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
வாழ்வுக்கும் வயிற்றுக்குமான இனச் சண்டையை மையமாகக்கொண்டு படைக்கப்பட்ட கதையாக ‘போட்டி’. ஜனார்த்தனன் போன்ற கிணற்றுத் தவளைகளையும்கூட சமூகப் பார்வைக்கு காட்டித் தருகிறது. தொகுப்பு முழுதும் சமூகத்தின் அனைத்து விதமான பாத்திரங்கள் நிரல்படுகின்றன. நெகிழ்ச்சியான உணர்வுப்பாவனைகளை வாசிப்பிற்குப்பின் தோற்றுவிக்கிறது. நம்மைச் சுற்றி உலாவும் மனிதர்கள் ஒவ்வொருவரும் கதைக்கான கரு என்பதையே ஒவ்வொரு கதையும் இளம் எழுத்தாளர்களுக்குப் படிப்பிக்கிறது.
இலக்கியம் படைக்க, தனியாகப் பயிற்சி எடுக்கவேண்டிய அவசியமில்லை. தூண்டலும் தாக்கமும் யாதொருவரையும் எழுதும் முனைப்பை ஏற்படுத்தும் என்பதை ‘கதை’ சிறுகதையின் முத்துச்சாமியின் வழியாகப் புரிய வைக்கிறது.
எழுத்தாளர், தான் பிறந்து வளர்ந்த மண்ணின், மைந்தர்களின் சரிதையை மட்டும் செதுக்கி வைக்கவில்லை, வாழ்வும் காலமும் தன்னை எங்கெல்லாம் இட்டு வைக்கிறதோ அங்கிருக்கும் நிலப்பரப்பையும் சூழலையும் மனிதர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் உளியிட்டுச் சிற்பமாக்கியுள்ளார் காலத்தால் அழிக்கவே முடியாதவகையில். அவருடைய ‘தீர்ப்பு’ கதையும்கூட அப்படித்தான் முளைத்திருக்கும்.

விருதுநகர் மாவட்டத்தில், தான் கண்ட ஒரு நிகழ்வைப் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு கணமும் நிகழ்வுகளும் சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன. அனைத்தையும் ஆசிரியர் கதைக்களமாக்கி உயிரூட்டியுள்ளார். இந்நூலாசிரியர் வெவ்வேறு தளங்களைக் கொண்டு இயங்கிய தனது ‘வாசம்’ கதைத் தொகுப்பில் தாயன்பின் பல முகநிறங்களில் தாயின் தாலாட்டில் கனிந்து போகும் குழந்தையின் பேரன்பையும் தாயைப் பிரிந்து வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் கலங்கும் அந்தப் பிணைப்பின் நெருக்கத்தை பிள்ளையின் தந்தைக்கு மட்டுமல்ல, வாசகருக்கும் புரிய வைக்கிறார் ’தாலாட்டு’ கதை வழியாக.
‘அவதாரம்’ கதை நூலாசிரியரின் சொந்த வாழ்க்கையைப் பதிவுசெய்த படைப்பு.
தான் கண்ட, வாழ்ந்த, வளர்ந்த, இருந்த, பெருகிய, கடந்த, சந்தித்த, தடுமாறிய அனைத்தையும் கதைகளாகப் பின்னலிட்ட நூலாசிரியர் தனது குடும்பத்தையும் கைவிடவில்லை.
மனம் நிறைந்த வாழ்வனுபவத்தில் குடும்ப சகிதமாகக் காட்சிதரும் தொகுப்பின் கடைசிக் கதையில் அவதரிக்கிறார் தோழரின் பிள்ளை அருண்கிருஷ்ணா ‘அவதாரம்’ ஆக. எழுத்துநடையின் பிரம்மாண்டமின்றி எளிமையான நடையில் கதைகளை நகர்த்துவதும் ஓர் எழுத்தாளனின் மனதைப் பிரதிபலிக்கும் இலக்கியமொழி. நெல்லை மதுரை என தொகுப்பு முழுதும் பல நிலங்களின் மொழிகள் தமிழக்கத்தை இணைக்கின்றன.