ஸ்ரீதர் மணியன்
இலக்கியத்தின்மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல் படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் கதைகளின் உள்ளடக்கம், மொழி வெளிப்பாடு, தலைப்பு எல்லாம். ஏற்கனவே உள்ள நியமங்களின் மீது இவை எழுப்புகிற வினாக்கள் நியாயமானவை, படைப்புகளின் புதிய வடிவங்களை வெளிப்படுத்துபவை. நமது முன்வடிவங்களும், வழமையான அளவுகோல்களும் இவற்றின் முன் சரணடைகின்றன.
தனது நூலில் கீரனூர் ஜாகிர்ராஜா…

படைப்பாளிகளின் அகவுலகு உணர்வுபூர்வமானது. உணர்வுகளின்வழி பெருக்கெடுத்து ஓடக்கூடியது. அவ்வாறே தன் தளம் சார்ந்த பிற படைப்பாளிகளின் உருவாக்கங்களை அறிமுகம் செய்வதும் அவை குறித்துப் பேசுவதும் எழுதுவதும் ஒரு எழுத்தாளனுக்கு உவப்பளிப்பதாகிறது. சிறந்த படைப்புகளை பிறருக்கு அறிமுகம் செய்வதனை இலக்கியத்திற்குச் செய்யும் சேவையாகவும் அவன் கருதுகிறான்.
படைப்பாளிகள் பெரும்பான்மையானோர் தங்கள் எழுத்துகளைக் கடந்து இத்தகைய கட்டுரைகளை எழுதுவதனை, கடமையாக மட்டுமல்லாது தங்களைக் கவர்ந்த, தாங்கள் ஆசானாக வரித்துக்கொண்டோருக்குப் பெருமை சேர்த்திடும் செயலாகவும் கருதுகின்றனர் என்பதே உண்மை. ‘குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை’ என்ற தனது நூலின் வழி கீரனூர் ஜாகிர்ராஜா இதனை மெய்ப்பித்திருக்கிறார். இவரது மற்றுமொரு கட்டுரை நூலான வண்ணக்கோலங்களிலும் பல சிறந்த எழுத்தாளர்களது படைப்புகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளைக் காணலாம்.
முதல் கட்டுரை கலகக்காரராக தமிழிலக்கியச் சூழலில் அறியப்படுகின்ற தஞ்சை பிரகாஷ் பற்றியது. கட்டுரையின் அறிமுகப்பகுதியில் கூறப்பட்டுள்ள கருத்தாக்கத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடியது. தஞ்சை பிரகாஷின் பன்முகத்தன்மையினை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. பேய்க்கவிதை, மேபல், மீனின் சிறகுகள் என கட்டுகள் ஏதுமற்று தன்னிச்சையாய்த் திரிந்து முடிவுறும் பல கதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர் பிரகாஷ். மேலோட்டமான வாசிப்பில் தஞ்சையின் ஆழத்தினைத் தரிசிக்க இயலாது, முன்முடிவுகளின்றி பிரகாஷை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என இப்பகுதியினை முடிக்கிறார் ஜாகிர்.
தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட ‘தஞ்சை பெரிய கோவில்’ என்ற கட்டுரை ராசராசன் ஆட்சி முறை குறித்த மாறுபட்ட கோணத்தினை வாசகன் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கோவிலாக அது உருவெடுக்க எத்தகைய முறைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை வாசிக்கும்போது அதன் பிரமாண்டமும் பெருமையும் மறைக்கப்பட்டு வேதனை மிகுவதும் கவனிக்கத்தக்கது. மேலும், கட்டுரையாசிரியர் க.நா.சு., மௌனி, புதுமைப்பித்தன் என பல சிறந்த படைப்பாளிகள் குறித்து தனது புத்தகத்தில் பேசியுள்ளார். இவை பரவலாக வாசகர்கள் அறிந்தவை. இருப்பினும் அதிகம் அறியப்பெறாத ‘சுவரெழுத்து சுப்பையா’ என்ற கலைஞனை, செயல் வீரரைக் குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது.
1980களில் இவரை சந்தித்ததை கீரனூரார் குறிப்பிட்டுள்ளார். பெரியாரது கொள்கைகளைப் பரப்பியதில் சுப்பையாவிற்கு பெருமளவில் பங்குண்டு. குப்பைத்தொட்டியைக் காட்டி, இதில் எழுதுங்கள் அண்ணே, என்றால், புராணத்தை இதில் போடு என்றெழுதுவார் சுப்பையா, அந்தளவிற்கு காட்டமான சிந்தனையும், சீற்றமும் உடையவர் எனக் கூறுகிறார் கீரனூரார். இந்நாளில் இத்தகைய சுவரில் எழுதி தொண்டு செய்வோரைக் காணவியலாது. இவ்வாறான செயல்வீரர் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார் என்பதும், திராவிடக் கழகத் தலைமை அவரது ஒரு புகைப்படத்தினைக்கூட தங்களது அலுவலகத்தில் வைத்திருக்கவில்லை என்பதும் தன்னைக் கலங்க வைத்தது எனப் பதிவாக்குகிறார் நூலாசிரியர்.அவ்வாறே வல்லிக்கண்ணன் குறித்த கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.
அதிகம் அறியப்படாத அவர் கடித இலக்கியத்தையே தன் அடிநாதமாகக் கொண்டவர். கிருஷ்ணசாமி எனும் இயற்பெயருடைய வல்லிக்கண்ணன் ஏறத்தாழ எட்டு புனைபெயர்களில் எழுதியவர். அவர் குறித்து கரிசல் காட்டு தாத்தாவான கி.ரா. எழுதிய கவிதையுடன் இக்கட்டுரை துவங்குகிறது. பேதாபேதமின்றி எழுதுவோரைனைவரையும் ஊக்குவித்தவர் வல்லிக்கண்ணன். அவருக்காக எட்டு பக்கங்களை ஒதுக்கி வேறெவரும் செய்திடாத சிறப்பினைச் செய்திருக்கிறார் கீரனூரார். அதற்காக எனது தனிப்பட்ட நன்றியை கீரனூர் ஜாகிர்ராஜாவிற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். வல்லிக்கண்ணனின் ‘ஆட்சிப் பொறுப்பில் எலிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது.
நேர்மையாக, நடுநிலை தவறாது மிகக் காத்திரமாகவும் அதே சமயம் மிக்க நையாண்டியாகவும் அவரது முப்பத்துமூன்று கட்டுரைகள் அடங்கிய குறுநூல் அது. அக்காலகட்டத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த திராவிட ஆட்சியின் அவலங்களை விமர்சித்தும், வெள்ளித்திரை நாயகர்களான நடிகர் திலகம் மற்றும் புரட்சித் தலைவர் என விளங்கிய சிவாஜி, எம்.ஜி.ஆர் குறித்தும் அவர் எழுதிய விமர்சனங்கள் பெரும் சலசலப்பை உண்டாக்கக்கூடியவை.
சமகால அரசியல் சூழலில் இத்தகைய நூல் பிரசுரம் காணுமா என்ற அளவிற்கு வினாவினை எழுப்பக்கூடிய கருத்துகள் அடங்கியது. அது குறித்து தனியே எழுதுமளவிற்கு தகுதி பெற்றதாயினும் இக்கட்டுரையில் கீரனூர் ஜாகிர்ராஜா குறிப்பிடாததால் அது தவிர்க்கப்பட்டுள்ளது (செண்பகா பதிப்பகம் வெளியீடு), 1982ஆம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரங்களை கதைக்களமாகக்கொண்ட பொன்னீலனின் ‘மறுபக்கம்’ நாவலை ஏறத்தாழ 6 பக்கங்களில் மிக ஆழமாக, விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். பொன்னீலனின் இந்தப் படைப்பு அனைவரும் வாசிக்கத்தக்க நூலாக மாற்றுமளவிற்கு இக்கட்டுரை உள்ளது.

கங்கைக் கரையில் பிறப்பெடுத்த வேத நாகரிகம் இந்திய நாடு முழுவதையும் தன் பிடிக்குள் கொண்டுவர சிறுதெய்வங்களையும் அவை சார்ந்த நாட்டார் கலை இலக்கிய வடிவங்களையும் அழிக்க முனைவது தொடங்கி இக்கதை பேசுகிறது. இந்நாவலின் கூறுகளாக திருவிதாங்கூர் வரலாறு, தோள்சீலைப் போராட்டம், காவடிப்போர், உலக்கைப் போராட்டம் ஆகியன அடங்கியுள்ளதையும் கட்டுரையாசிரியர் விரித்துச் சொல்கிறார், நூலின் இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது.
கவிஞர்கள் குறித்தும் கட்டுரை உண்டு. பாரதி தொடங்கி சுரதா, பிரமிள், கல்யாண்ஜி, சிவகாமி, பவித்திரன் தீக்குன்னி, சேலம் பாபு என நீண்ட பட்டியல் கொண்ட பகுதி அது. மேலும், தோழர் தமிழ்ச்செல்வனின் படைப்புகளையும் குறிப்பாக பாவனைகள், அசோகவனம், வெயிலோடு போய், பதிமூனில் ஒண்ணு என அவரது பல கதைகளை அலசுகிறார் கீரனூரார். பின்னர் பேப்பூர் சுல்தான் என்றறியப்பட்ட மலையாள பிதாமகர் முகம்மது பஷீர் ஆக்கங்கள் குறித்தும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. கொச்சு முகம்மது என்ற இயற்பெயருடைய அவரது பல பரிமாணங்கள் இப்பகுதியில் வெளிப்படுகின்றன.
இக்கட்டுரையில் 1985களில் ஷாபானு பிரச்சினை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருந்த தருணங்களில் பஷீர் கூறிய கருத்தினைப் பதிவிட்டுள்ளார் நூலாசிரியர். ‘இப்படியெல்லாம் தலாக் கொடுப்பவனின் ஆண் இயந்திரத்தை வெட்டி தோளில் தொங்கவிடவேண்டும்’ என்பதே அது. குறிப்பாக பஷீரைப் பற்றிக் கூறுகையில் ‘பஷீரின் கதை சொல்லும் பாங்கு இங்குள்ள அதிநவீனர்கள் சிலருக்கு எரிச்சலூட்டக்கூடும். புத்தூஸ், படுக்கூஸ், பப்ளிமூஸ்குண்டி, புஸ்ஸாட்டோ, லுட்டாப்பி என்ற மலையாள முஸ்லிம் நாட்டார் வழக்குச் சொற்களும், ஆனைவாரி பொன்குருசு, தொரப்பான், ஒத்தக்கண்ணன் போக்கர் போன்ற கதைமாந்தர்களின் பெயர்களையும் கேட்டாலும் முகம் சுளிப்பார்கள்’ என்று பதிவிடுகிறார்.
நூலின் தலைப்பு கொண்ட கட்டுரையில் அன்றைய மணிக்கொடி கால பி.எஸ்.ராமையா முதல் கு.ப.ரா., கு.அழகிரிசாமி,ந.பி. புதுமைப்பித்தன் என ஜெயகாந்தன் வரையிலான தரவுகள் இடம் பெறுகின்றன. மேலும், சமகால இளம் படைப்பாளிகள் வரை இப்பட்டியல் மிக நீண்டுள்ளது. மிகச் சொற்பமானோரே இப்பட்டியலில் விடுபட்டிருக்கக்கூடும். அவ்வாறு இலக்கியகர்த்தாக்கள் அனைவருக்கும் சிறப்பு செய்துள்ளார் கீரனூர் ஜாகிர்ராஜா.
நிறைவாக்கிட மணல்வீடு ஹரிகிருஷ்ணனின் ‘நாயி வாயி சீலை’ தொகுப்பு குறித்து தனது பார்வையினை இணைத்துள்ளார் ஆசிரியர். அவரது மற்றொரு சிறுகதைத் தொகுப்பான ‘குன்னூத்தி நாயம்’ நூலும் வட்டார வழக்கு நடையினை அடிப்படையாகக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களது அன்றாட வாழ்வியல் கூறுகளையும் அடக்கியது. கூடுதலாக, வட்டார வழக்குக் கதைகளையும், நடையினையும் சுவைக்க விரும்பும் வாசகர்கள் ஹரிகிருஷ்ணன், சந்தியூர் கோவிந்தன், வா.மு.கோமு உள்ளிட்டோரை வாசிக்கலாம்.
2011 முதல் 2013 காலகட்டத்தில் ‘புதிய புத்தகம் பேசுது’ இதழில் வெளியான கட்டுரைகளும் பல கருத்தரங்கங்கள், கூட்டங்களில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் இப்புத்தகத்தில் ஜாகிர்ராஜா சற்றே மாறுபட்ட மொழிநடையினைக் கையாண்டுள்ளதும் கவனம் பெறுகிறது. படைப்பாளிகள் குறித்தும், அவர்தம் உருவாக்கங்கள் குறித்தும் எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும் அவரவர் தத்தமது தனிப்பட்ட பார்வையினையும், படைப்புகள் குறித்த கோணத்தையும் இத்தகைய நூல்களில் பதிவாக்கி, தங்களது உள்ளக்கிடக்கையினை நிறைவாக்கிக் கொள்கின்றனர்.
அவ்வகையில், அந்த அணிவகுப்பில் செறிவான பொருண்மை கொண்ட கீரனூராரின் நூலும் குறிப்பிடத்தக்கதாகிறது. தோழர் தமிழ்ச்செல்வன் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார். பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இது பதிப்பு பெற்றுள்ளது.