நிகழ் அய்க்கண்
இந்நூலானது மெல்லக்கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச்செயல்பாடுகள்; புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல் மற்றும் மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து; சமூகப்புறச்சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும் எனும் இரு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பின்கீழும் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களைப்பற்றி சுருக்கமாகக் காணலாம்.
மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச்செயல்பாடுகள்; புதியப் பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல் மற்றும் மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து-
தமிழ்நாட்டில் கடந்த 2022 – 2023ஆம் கல்வியாண்டு இறுதியில் நடந்து முடிந்த மேனிலைப்பள்ளி மானவர்களுக்கான 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான அரசுப் பொதுத்தேர்வுகளில் 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மிகப்பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் இப்படித் தேர்வெழுதாமல் போனதற்கு குடும்பச்சூழல்கள், போதைப்பொருட்கள் பழக்கம்; சமூக ஊடகங்களில் அதிகநேரம் செலவிடுவது; நுகர்வுவெறிக் கலாச்சாரம் என பல்வேறு காரணிகள் இருந்தபோதிலும், எல்லாத் தரப்பினராலும் கவனிக்கத் தவறுகிற கல்வி சார்ந்த காரணிகளும் இருக்கின்றன.
பொதுவாக, மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப்பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக்கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் அடைவுகளைப் பெறவைப்பதற்கான கற்பித்தல் – கற்றல் செயல்பாடுகள்தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத்தான் கல்விசார் கலைத்திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாகவும்; பங்கேற்கும் விதமாகவும் அமைந்திருந்தன.
கல்வி உளவியலாளர்கள் மாணவர்களை மூன்றுவகையாக வகைப்படுத்துகின்றனர். அதாவது, 1. மீத்திறன் மாணவர்கள். 2. சராசரி மாணவர்கள். 3. மெல்லக் கற்கும் மாணவர்கள் என்பதாகும். மேற்குறித்த வகையின மாணவர்களுக்கு ஏற்றவாறுதான் பாடத்திட்ட பாடப்பொருண்மைகள், கற்பித்தல், பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையிலிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, புதிய பாடத்திட்டம் என்கிற பெயரில் அதிகப்படியான பாடப்பொருண்மைகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பினை வழங்குவதற்குப் பதிலாக, மீத்திறன்மிக்க மாணவர்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அத்தரப்பினர் மாத்திரமே பங்கேற்கும்படியான வாய்ப்புக்களை உருவாக்கித் தந்திருக்கிறது. மெல்லக் கற்கும் மாணவர்கள் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே தேர்ச்சிபெற முடியும்.
பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல் போன மாணவர்களில் பெரும்பாலானோர் மெல்லக் கற்கும் மாணவர்களேயாவர். புதிய கல்விச்சூழலில், மெல்லக் கற்கும் மாணவர்களின் இத்தகைய தனிமைப்படுத்தலுக்கும் அந்நியப்படுத்தலுக்கும் மாணவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. மாறாக, புதிய பாடத்திட்டக்கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கைவிடும் நோக்கிலேயே அமைந்திருப்பதையும் சேர்த்தே காரணமாகக் கூறிட முடியும். ஒரு காலத்தில் கல்வி கற்பதிலிருந்து தீண்டாமைச் சாதியினரை விலக்கிவைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும் சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கிவைக்கும் நவீனத்தீண்டாமையை பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் ஏற்படுத்தித்தருவதாக இருக்கின்றன.
பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும், சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புக்களை அளித்திடல் வேண்டும்.
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து; சமூகப்புறச்சூழலும் மாணவர்களின் பிறழ்நடத்தைகளும். அண்மைக்காலமாக, இந்திய நிலப்பரப்பெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதவெறி, சாதிவெறி மற்றும் ஆண்பாலினவெறி வன்முறைகள் யாவும் மனித மாண்புகளைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மீது அவர்களது வீட்டுக்குள்ளேயே புகுந்து அரிவாளால் கொடூரமாகத் தாக்கிய சகமாணவர்களின் ஆணவக்கொலை வெறிச்செயல் பெரும் அதிர்வுகளையும், அச்சத்தையும் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
நாங்குநேரியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த திருமதி அம்பிகாபதி (54) கணவரால் கைவிடப்பட்டவர். இவருக்கு சின்னதுரை (17), சந்திராசெல்வி (13) இரு குழந்தைகள். இவ்விருவரும் 15 கி.மீ. தொலைவிலுள்ள வள்ளியூரிலுள்ள கண்கார்டியா மேனிலைப்பள்ளியில் முறையே 12, 8ஆம் வகுப்பு படித்து வந்திருக்கின்றனர். சின்னதுரை வகுப்பில் நன்கு படிக்கக்கூடிய மாணவராக இருந்திருக்கின்றார். இந்நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்ததையறிந்த அம்மா பள்ளிக்கூடம் செல்லாதது குறித்து கேட்டிருக்கிறார்.
அதற்கு, தம்மை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுமாறும் அல்லது சென்னைக்கு ஏதாவதொரு வேலைக்கு அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த 09/08/2023 அன்று “சின்னத்துரை ஏன் பள்ளிக்கு வரவில்லை? எதுவாக இருந்தாலும் பள்ளிக்கு அழைத்துவாருங்கள் சரிசெய்திடலாம்” எனப் பள்ளி ஆசிரியரியரொருவர் அவரது தாயாரிடம் கூறியிருக்கிறார். மறுநாள் தாயாருடன் பள்ளிக்குச்சென்ற சின்னதுரையிடம் அவ்வகுப்பாசிரியரும், தலைமையாசிரியரும் விசாரித்திருக்கின்றனர்.
அதேபள்ளியில் தம்முடன் படிக்கக்கூடிய செல்வரமேஷ், சுப்பையா ஆகிய இருவரும் தம்மை சாதிரீதியாக இழிவுபடுத்தி பேசிவருவதாகவும், தேர்வு சமயங்களில் தனது விடைத்தாள்களைப் பிடுங்கி காப்பியடிப்பதாவும், கையிலிருக்கும் பணத்தை எடுத்துக்கொள்வதாகவும் சின்னதுரை கூறியுள்ளார். நடந்த சம்பவங்களை தொகுத்து எழுத்தித்தருமாறு கேட்டுக்கொண்ட ஆசிரியர்கள், குற்றச்செயலில் ஈடுபட்ட அம்மாணவர்கள் மீது நடவடிக்கையெடுப்பதாகக் கூறியுள்ளனர்.
அன்று மாலையில் பள்ளியில் புகாரளிக்கப்பட்ட விவரத்தினை அறிந்துகொள்வதற்காக அம்மாணவரில் ஒருவரான செல்வரமேஷின் சித்தப்பாவும், பாட்டியும் சின்னத்துரையின் வீட்டிற்கு வந்து விசாரித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இரவு 10 மணியளவில் சின்னதுரையும் சந்திராசெல்வியும் சாப்பிடத்தயாரானபோது, தனது பள்ளி நண்பர் சுரேஷ்வாணனுடன் சேர்ந்து, இரண்டடி நீளமுள்ள அரிவாளுடன் வந்த செல்வரமேஷும் சுப்பையாவும் வீடு புகுந்து சின்னத்துரையையும், தடுக்கவந்த சந்திரா செல்வியையும் சராமரியாக வெட்டியிருக்கின்றனர்.
அலறல் சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவர… அதற்குள் அம்மூவரும் தப்பியோடிவிட்டனர். இச்சம்பத்தினை நேரில் பார்த்த சின்னதுரையின் தாத்தா அந்த அதிர்ச்சியில் இறந்தேபோய்விட்டார். பலத்த காயமடைந்த சின்னதுரைக்கும், அவரது தங்கைக்கும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் திருநெல்வேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அம்மூவர் மட்டுமல்லாது, குற்றச்செயலுக்கு துணைநின்ற மற்ற மூவரையும் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலடைத்திருக்கின்றனர். மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி இன்று அரிவாளாக மாறியிருக்கிறது.
தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதிக்களமாகவே காட்சியளிக்கின்றன. இந்தக் கொடூர நிகழ்வினால், சாதி, மத, பாலினரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியும், பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் குடும்பச்சூழலுள்ள ஒவ்வொரு மாணவனின் உடலும், உள்ளமும் முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது.
நாங்குநேரியில் நடந்த கொடூரத்தாக்குதல் நிகழ்வுகள்போல, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் அல்லது பள்ளிப்பருவ வயதுடையவர்களாக இருக்கின்றதைப் பார்க்கமுடிகின்றது. இவர்கள் இவ்வாறு ஈடுபடுவதற்குப்பின்னே சாதிவெறி, போதைவெறி, அரசியல் கட்சிகளின் பின்புலம், காவல்துறை உள்ளிட்ட அதிகார மையம், அந்நியப்படுத்தப்பட்ட கல்வி மையம், அரசு எந்திரங்களின் பாராமுகம், பெற்றோர் – குடும்ப வளர்ப்புமுறை, சமூக ஊடகப்பயன்பாடு, திருமணம்- குருபூஜை – திருவிழா – சுயசாதி அடையாளங்கள் போன்றவைகளே காரணிகளாக இருக்கின்றன.
கல்வியின் அறிவாற்றல் மூலமாகவும், அறிவியல் முன்னேற்ற வளர்ச்சியின் விளைவாகவும் மனிதர்களிடையே சமத்துவம் என்னும் உயரிய மானுடக் கோட்பாடு பரவலாகுவதற்குப் பதிலாக, பழைய இறுகிப்போன சாதி, மத, பாலினச் சமூகப் பாகுபாட்டுச் சிந்தனைகள் அதிகமாகப் பரப்பப்படுவதாக இருக்கின்றன.
சாதி- மதமெல்லாம் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே இதுபோன்றத் தாக்குதல்களைத்தொடுக்கின்றன. இத்தாக்குதல்களுக்கு மாணவர்களைத்தான் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. மாணவர்கள் ஆசிரியர்களின் கைப்பிடியிலிருந்து விலகி நெடுந்தூரம் கடந்துவிட்டார்கள். அவ்வாறு விலகியிருப்பதற்கு ஆசிரியர்; மாணவர் மட்டுமே காரணமல்ல. ஆசிரியர் – மாணவர்- கல்வி ஆகிய மூன்று கண்ணிகளும் அறுத்தெரியப் பட்டிருக்கின்றன.
மானுடச் சமத்துவத்தையும், தன்மான உணர்வையும் மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் காரணிகளில் மிக முதன்மையானது கல்விச்செயல்பாடுதான். மனிதச்சமூக வாழ்வியலுக்கு கல்வியும் ஓர் அங்கமாக எல்லாச் சமூகங்களாலும் கருதப்படுகிறது. அவ்வகையில், கல்வி எனும் அறிவாயுதமே சாமானிய மக்களின் பெருஞ்செல்வமாக கருதிக்கொண்டிருக்கும் நிலையில் அதனைச் சிதைப்பதும் அழிப்பதுமான காரியங்களில் சமூக உதிரிகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.
கல்வி வெறும் அறிவோடு மட்டும் தொடர்புடையதல்ல. சமூகவெளியின் பொது அறத்தையும், வாழ்க்கையின் தனிமனித அறத்தையும் கல்விதான் தந்துகொண்டிருக்கிறது. இன்றைய கல்விமுறைகல்வி நிலைகளில் இருந்தும், கல்விக்கூடங்களில் இருந்தும் வாழ்வியல் அறத்தையும், நெறிகளையும் ஒதுக்கிவைத்திருக்கிறது. வாழ்வியலுக்கான அறத்தைப் புறந்தள்ளுகிற இன்றையக் கல்வி முறையில் பயிலுகிற இன்றைய இளந்தலைமுறையினர், சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நெறிபிறழக்காரணமாக இருப்பது இன்றையக் கல்விமுறையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளிதான்.
பிற்காலத்தைய சமூக அமைப்பில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களும், உரிமைகளும் எல்லாத் தரப்பினருக்கும் வழங்கப்படவில்லை. ஆரிய வைதீக மரபுகளின் நால்வருணக்கற்பிதங்கள் பிற்கால சமூக அமைப்புக்களில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாதி வேறுபாடுகளோடு சேர்ந்து சாதிப்பாகுபாடுகளும் சாதியப்படிநிலைகளை உருவாக்கி பல தரப்பினர் கல்வி பெறுவதைத் தடுத்திருக்கின்றன.
கல்வி வேலைவாய்ப்புக்களில் மறுக்கப்பட்டோருக்கான வாய்ப்புக்கள் வழங்கும் வழிவகைதான் இட ஒதுக்கீடு எனும் வடிவமாகும். இதற்கு வழிகோலியவர் அண்ணல் அம்பேத்கராவார். இன்றைக்கும் சமூக நீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு மூலமாக பி.சி., எம்.பி.சியினர் கல்வி வேலைவாய்ப்புக்களில் அதிகப்பயன்களை அடைந்திருக்கின்றனர். ஆயினும், அம்பேத்கர் பி.சி., எம்.பி.சி யினர்களுக்கானவரல்ல என்கிற பொதுப்புத்தி, சாதிய மனப்பாங்கினையுடையவர்களாக இருக்கின்றனர். இந்தச் சமூக நோயைத் தீர்ப்பதிலும், அம்பேத்கர் அனைவருக்குமானவர் எனக்கட்டமைப்பதிலும் பட்டியலினச் சமூகங்களும், இயக்கங்களைக்காட்டிலும் பி.சி., எம்.பி.சி. மக்களிடம் அரசியல் வேலை செய்கிறவர்கள் கொண்டுசெல்லவேண்டும்.
தமிழ்ச் சமூகத்தில் சாதிபற்றிய பேச்சுக்களும், உரையாடல்களும் எழும்போதெல்லாம் முரண்பட்ட சாதி நிலைமைகளைச் சுட்டும்போது மேல்சாதி, உயர்சாதி, ஆதிக்கச்சாதி எனக் குறிப்பிடுவது தவறு. உயர்த்திக்கொண்ட சாதிவெறியன்/ ஒடுக்கும் சாதிவெறியன்/ ஆதிக்கம் செய்யும் சாதி என்பதுதான் சரியான சொல்லாடலாக இருக்கமுடியும். மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் பாடத்திட்டங்களானது, சமத்துவச் சமூகக்கல்விக்கான பாடத்திட்டங்களையோ, கல்விப்பொருண்மைகளை உள்ளடக்கியிருப்பது அவசியம்.
இதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் சாதிய அணுகுமுறையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, அவர்களிடம் பாடப்புத்தக அறிவு மட்டுமே போய்ச்சேர்ந்திருக்கிறது. சமூகச் சமத்துவத்திற்கான சமூக அறிவும், சமூகக்கல்வியும் இன்னும் போய்ச்சேரவில்லை. அதற்கான வாய்ப்புக்களை ஆசிரியர்களுக்கு உருவாக்கித்தருவது அவசியம்.
தமிழர்கள் என்கிற ஓர்மை எண்ணமும், சாதிய வாதிகளை தனிமைப்படுத்தும் போக்குகளும் இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்களை சமூக எதிரிகளாக்குவதிலிருந்து காப்பாற்றிட முடியும்.