ஆயிஷா இரா. நடராசன்

இன்று ஒருவழிப்பாதை எனும் ஒன்-வே இல்லாத ஊரே இல்லை. ஆனால் உலகத்திலேயே முதன்முதலில் ஒருவழி பாதையாக மாற்றப்பட்ட சாலை எது தெரியுமா. சென்னை ரங்கநாதன் தெருவா… ஹாலிவுட்டின் போல்வேவார்டு சாலையா… பாரீஸின் ரோ லஃபேயாட்டாக இருக்குமா… மும்பையின் மிக நெரிசலான எக்ஸ்பிரஸ்ஸே கூட பலரது நினைவில் வரலாம்.
உலகின் முதல் ஒரு வழிச்சாலை உருவாகக் காரணம் ஒரு நூலகம் என்றால் நம்புவது கடினம். அந்த சலையின் பெயர் அல்பமாரேல் சாலை, அது லண்டனில் உள்ளது. அந்த சாலையில்தான் ராயல் கல்வியக நூலகம் அமைந்துள்ளது. 1835ல் அந்த சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. காரணம் அந்த நூலகத்தை உலகறிய வைத்த அறிஞர் மைக்கெல் ஃபாரடே. இந்தக் கட்டுரை மைக்கெல் ஃபாரடே குறித்தது அல்ல. இது ராயல் நூலகத்தின் கதை. 1833ல் தொடங்கி ஒவ்வொரு நாளும் மதியப்பொழுதில் ராயல் நூலக வளாகத்தின் உள்ளே மைக்கெல் ஃபாரடே தனது அறிவியல் எழுச்சி உரைகளை நிகழ்த்தினார்.
பிரமாண்ட அலமாரிகளில் சுற்றிலும் நிரம்பி வழிந்த புத்தகங்களின் நடுவே அவரது உரையை ஆர்வத்தோடு கேட்கவரும் குழந்தைகளும் ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று யாவரும் தரையில்தான் அமர்வார்கள். தினமும் முறையே ஓர் அறிவியல் சோதனையை சின்ன மேடை மீதிருந்து மேசைமேல் அவர் நிகழ்த்துவார். பிறகு ஓர் அறிவியல் புத்தகத்தை அறிமுகம் செய்வாராம். ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை நீண்ட அந்த உரைகளில் பங்கேற்ற குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, உரையை அவர் நூலக நுழைவாயிலுக்கு வெளியே வெட்டவெளிக்கு மாற்ற வேண்டிவந்தது. கட்டுக்கடங்காதபடி கூட்டம் கூடிய ஞாயிறுகளின் மதியம் ஆரம்பத்தில் அந்த ராயல் நூலகம் இருந்த சாலையான அல்பமாரேல் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது என்பதே வரலாறு.

பொதுவாகவே அறிவியல் அறிஞர்களில் யாருடைய வாழ்க்கை வரலாறை வாசித்தாலும் அவர்கள் இத்தனாம் ஆண்டில் ராயல் கல்வியக கழகத்தின் (Royal Society) உறுப்பினராக ஏற்கப்பட்டார் என்று ஒரு குறிப்பு வரும். அது ஏதோ நோபல் விருதுக்கு இணையான கவுரவமாகவும் பேசப்படுவதைப் பார்க்கிறோம். அந்த ராயல் கழகம் முதலில் ஒரு நூலகமாகத்தான் தொடங்கப்பட்டது. உலகின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்று. அதன் அற்புத வரலாறுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
1646ல் கிரெஷாம் கல்லூரி நூலகத்தில் வாரம் தோறும் கூடிய 12 உடலியல் அறிஞர்கள் அறிவியலின் மறுமலர்ச்சியைக் கொண்டாடி ஆய்வுகளை அந்த நூலகத்தில் இடம்பெற வைக்க – தங்களது வாராந்திரக் கூட்டத்தில் ஆய்வுகளை இணைத்தனர். இவர்களின் மையப்புள்ளியாக விளங்கிய மாமனிதர் வேதி அறிஞர் ராபர்ட் பாயில் ஆவார். விரைவில் இந்த அறிவியல் மன்றத்திற்கு எதிர்ப்புக் கிளம்பவே ராபர்ட்பாயில், பிராஸிஸ் டாலண்ட்ஸ், ஜான் வில்கின்ஸ், கிறிஸ்டோஃபர் வெர்ன் ஆகியோர் ‘கட் புலனாகாத கல்லூரி’ (invisible college) எனும் ரகசிய அமைப்பை தொடங்கினர். அறிவியல் நூல்களை வெளியிடுதல் மற்றும் வாசித்து கருத்து பகிர்தல் கூடவே வாரம் ஓர் அறிவியல் அறிஞரின் நேரடி ஆய்வு. முதல் கூட்டம் 1660ல் நவம்பர் 28 அன்று இன்று வரை அறிவிக்கப்படாத ஓர் இடத்தில் நடந்தது. 12 அறிஞர்கள் கூடினர்.
ஆனால் சர் ராபர்ட் மொரே அப்போதைய இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸை சந்தித்து தொடர்ந்து அமைப்பாக செயல்படவும் உலகின் அறிவியலுக்காகவே ஒரு நூலகத்தை அமைக்கவும் அனுமதி பெற்றார். அப்போதெல்லாம் மன்னர்களின் அனுமதிக்கு ‘ராயல் கார்ட்டர்’ என்று பெயர். எனவே அந்த அமைப்பிற்கே ராபர்ட் பாயில் ‘ராயல் கழகம்’ (Royal Socieity) என்று பெயரிட்டார்.
1662ல் ஜூலை 15ல் நடந்த கூட்டத்தில் பிரிட்டிஷ் கப்பல்படை அதிகாரியும் கணித மேதையுமான வில்லியம் பிரவுன் கர், ராயல் கழகத்தின் முதல் தலைவராக ஆதரவு பெற்றார். ஆனால் அப்போதும் தேவாலயத்தின் தரப்பிலிருந்து அந்தக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று தொடர்ந்து நெருக்கடிகள். 1663ல் இரண்டாம் முறையாக மன்னரிடம் இருந்து அனுமதி பெற்றதோடு உலக ஞானத்தை மேம்படுத்திட மன்னராலேயே தோற்றுவிக்கப்பட்ட கழகம் என்றே ஒரு வாக்கியம் பெயர்ப்பலகையில் சேர்க்கப்பட்டது. ராயல் கல்வியக நூலகம் மேம்படுத்தப்பட ராபர்ட் பாயில், உலககெங்கிலும் இருந்த அறிவியல் சகாக்களுக்கு கடிதங்கள் எழுதினார். 1663ல் அந்த நூலகத்தில் ஆறு நூறு சிறப்பான அரிய அறிவியல் நூல்கள் இருந்தன.

நாத்திகர்களின் கூட்டம் என்று அதை பிற்போக்குவாதிகள் வசை பாடினர். அதில் உண்மையும் இருந்தது. ராயல் கழக ஸ்தாபகர்களில் ஒருவரான ஜான் எவிலைன் உலகின் முதல் சுற்று சூழலியலாளர் என்று அழைக்கப்பட்டார். இவர் 1660லேயே ராயல் கழகத்திற்கு ஒரு முழக்க வாசகத்தை (Motto) தேர்வு செய்து அறிவித்தார். அது ‘நுல்லுயிஸ் இன்வெர்பா’ எனும் லத்தீன் மொழி வாசகம். அதற்கு ‘யார் சொன்னதாக இருந்தாலும் நம்பாதே, சுயமாக சிந்தித்து முடிவெடு’என்று அர்த்தம். இது ஒரு பகுத்தறிவு வாசகம். ஏறக்குறைய 360 ஆண்டுகளுக்குமுன் அறிவியலுக்காக, பகுத்தறிவுக்காக ஒரு நூலகத்தை மையமாகக் கொண்டு அறிவு இயக்கமாக ராயல் கழகம் செயல்படத் தொடங்கியது.
இன்று ஓர் அறிவியல் கண்டுபிடிப்பை அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடுகிறார்கள். கண்டுபிடிப்பு உரிமங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 1600களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் புத்தகங்களாக எழுதப்பட்டன. அவை வெளிவந்தவுடன் அந்த நூல்கள் புதிய அறிவியல் சிந்தனைகளைத் தந்து மக்களை விழிப்புணர்வு அடைய வைத்தால் அதை உடனே அரசோடு இணைந்து தேவாலயம் தடை விதித்து யாருமே வாசிக்காமல் செய்துவிடும். அப்படி கலீலியோ உட்பட பலரது நூல்களை சொல்லலாம்.
ராயல் கழக நூலகம் அந்த நூல்களை எல்லாம் வைத்துப் பாதுகாத்து தன்னை நாடி வருபவர்களை வாசித்து சிந்தனை ஊக்கம் பெறவும் நூல்களின் கருத்துக்களை வாதாடவும் நூலாசிரியர்களான அறிஞர்கள் தங்களது கண்டுபிடிப்பு குறித்த விளக்கங்களை நேரில் வழங்கிடவும் அவர்களை அழைத்து கவுரவிப்பதையும் ஒரு வாராந்திர நிகழ்வாக ஆக்கியதோடு… தொலைநோக்கி, நுண்ணோக்கி உட்பட பல அன்றைய காலத்தின் உபகரணங்களையும் வாங்கி காட்சிக்கு வைத்து அசத்தினார்கள்.
இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் (கலீலியோவின் ஊர்) ஓர் அறிவியல் கழகம் இருந்தது. கலீலியோ, கியோவாணி பொரெலி மற்றும் வின்சென்ஸோ விவியியானி ஆகிய அறிவியல் அறிஞர்களின் மாணவர்கள் நடத்திவந்த அமைப்பு. அவர்கள் இயற்கை விஞ்ஞானப் பரிசோதனைகள் என்று ஒரு நூறு ஆய்வுகளின் (அந்தக்கால) தொகுப்பு ஒன்றை இத்தாலிய மொழியில் நூலாக வெளியிட்டு இருந்தார்கள். இந்த நூலை ராயல் கழகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தங்களது முதல் வெளியீடாக வெளியிட்ட ஆண்டு 1666. ஆனால் லண்டனின் பிரமாண்ட தீ விபத்து என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமான கொடிய சதிவேலையை பிற்போக்குவாதிகள் செய்தனர். ராயல் கழகம் நூலகத்தோடு சேர்த்து தீக்கிரையாக்கப்பட்டது. ராபர்ட் டாயில், ஜான் எவிலைன், பெங்கட் ஸ்கைட் போன்றவர்கள் போராடி பல நூல்களை மீட்டனர்.
அருண்டெல் இல்லம் எனும் லண்டனின் நகர்மன்றக் கட்டடத்திற்கு ராயல் கழகத்தை தற்காலிகமாக இடம்மாற்றினார்கள். 1667ல் ராயல் கழகத்திற்கு நூலகத்தோடு கூடிய புதிய கட்டிடத்தை எழுப்பிட நிதி உதவி பொதுமக்களிடமிருந்து பெற ஓர் ஆய்வு கட்டடம் கட்டப்பட்டது. நூலகம், ஒரு சிறு ஆய்வகம், அறிவியல் ஆய்வுகளை செய்து காட்டும் வசதி, கலந்துரையாடல் அரங்கம் என்று அல்பமாரேல் சாலையில் அந்தக் கட்டிடத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நாட்களில் கூட்டு நுண்ணோக்கி கண்டுபிடிப்பாளர் அறிவியல் அறிஞர் ராபர்ட் ஹுக் அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலகத்தின் பொறுப்பாளராக பதவியேற்றார். அவர் செய்த அற்புதமான இன்னொரு பணி ராயல் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை குறித்த அடிப்படை விதிகளை உருவாக்கியது. பிரதானமாக பாதுகாக்க வேண்டிய அறிவியல் நூல்களின் முதல் பிரதிகளுக்கு தனியாக பாதுகாப்பு பெட்டக அறையையும் அமைத்தார்கள். தொடங்கியது அறிவியலுக்கான பிரமாண்ட வரலாறு.
டெனிஸ் பாப்பின் மற்றும் ராபர்ட் ஹுக் இருவரும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை முன்வைத்து அந்த நூலகத்தில் கூடும் அறிஞர்கள் முன்னிலையில் விவாதிக்கும் புதிய அலையை உருவாக்கியது வரலாறு. 1703ல் அறிஞர் ஐசக் நியூட்டன் ராயல் கழகத் தலைவராகிறார். 25 ஆண்டுகள் அவர் அந்தப் பணியில் இருந்தார். 1672லேயே அவர் ராயல் கழக சிறப்பு உறுப்பினராக ஏற்கப்பட்டிருந்தார். நியூட்டனுக்கும் ஜெர்மன் கணிதவியலாளர் லீப்னிஸ் ஆகியோரிடையே நடந்த கடும் கணித யுத்தங்களின் திறந்த அரங்கமாக ராயல் கழக நூலகம் மாறியபோது அது உலகப் பிரசித்தி பெற்றது. இங்கிலாந்து அரசு அறிவியல் தொடர்பான திட்டம், ஆலோசனை என்றால் ராயல் கழக உறுப்பினர் ஒருவர் திட்டக்குழுவில் இருக்க வேண்டும் என்று தனிச் சட்டமே கொண்டு வந்தது.
1777ல் இடிதாங்கியைக் கண்டுபிடித்தது பெஞ்சமின் பிராங்களினா அல்லது பெஞ்சமின் வில்சன் என்பவரா என்கிற பெரிய சர்ச்சையை ராயல் கல்விக் கழக நூலக விவாதமே தீர்த்து வைத்தது. முதன் முதலில் பை என்பதைக் குறிக்க π என்ற குறியீட்டை வழங்கிய வில்லியம் ஜோன்ஸ் ஹாலி நட்சத்திரப் புகழ் எட்மவுண்ட் ஹாலி போன்றவர்கள் காலத்தில் ராயல் நூலகம் உலக அளவில் அதுவரை வெளிவந்த அனைத்து அறிவியல் நூல்களிலும் ஒரு பிரதியை வைத்திருக்கும் பெட்டகமாகி… துறைவாரியாக அறைகள் ஒதுக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. நியூட்டன் இருக்கும்போது தி பிலோசஃபிகர் டிரான் – சாக்ஸன்ஸ் என்று ராயல் கழகம் ஒரு அறிவியல் இதழையும் நடத்தத் தொடங்கியது.
சார்லஸ் டார்வினின் ‘உயிரிகளின் தோற்றம்’ நூல் 1859ல் வெளிவருகிறது. அதை வெளியிட்டது ஜான் முர்ரே, ராயல் கழகம் அல் பாமரேல் வீதி லண்டன். ஆனால் உடனடியாக அந்த நூல் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. பிஷப் சாமுவேல் வில்பர்ஃபொர்ஸ் 1860ல் அந்த நூலுக்கு ஒரு விமர்சனம் எழுதப்போவதாகக் கூறி பலவகை அவதூறுகளை அள்ளிவிட்டபோது, டி.எச்.ஹக்ஸ்லே உட்பட பலரும் பிரமாண்ட விவாதத்தை நடத்தியதும் இந்த ராயல் கழக நூலக வளாகத்தில்தான் ராயல் கழகம் 1839ல் டார்வினை அவரது முப்பது வயதிலேயே – தனது பரிணாமவியல் தத்துவத்தை அவர் வெளியிடும் இருபதாண்டுகளுக்கு முன்பே தனது உறுப்பினராக்கி அங்கீகரித்தது வரலாறு. நோபல் பரிசில்னா அந்த நாட்களில் ஆகப்பெரிய அங்கீகாரம் அதுதான்.

ராயல் கழக நூலகம் எத்தனை சிறப்பானது என்பதற்கு இயற்பியல் நோபல் அறிஞர் சுப்பிரமணியம் சந்திரசேகர் தனது சுயசரிதையில் எழுதி உள்ள கீழ்கண்ட சம்பவம் சாட்சி. 1973ல் சுப்பிரமணியம் சந்திரசேகர் ஒரு அறிவியல் உரை நிகழ்த்திட ராயல் கழகம் செல்கிறார். தனது உரையின் ஊடாக இந்தியாவின் – இயற்பியல் அறிஞர் மெக்நாத் சாகா வை பற்றி குறிப்பிட்டு சாகாவும் சத்யேந்திர நாத்போசும் இணைந்து ஐன்ஸ்டீனின் – சார்பியல் குறித்த ஆய்வுக் கட்டுரையை ஜெர்மன் மொழியில் இருந்து முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டதை பற்றி கூறுகிறார். அப்போது அங்கிருந்த ஜப்பானின் அறிஞர் ஷிஸ்ஹாசு என்பவர் அங்கிலத்தில் ஐன்ஸ்டீன் கட்டுரையை முதலில் மொழிபெயர்த்தவர் ஹுவான் லீ என்ற ஜப்பானியர்தான் என்று வாதிடுகிறார்.
தனது இருக்கையிலிருந்து அப்படியே எழுந்து இறங்கி சென்று அந்த ராயல்- நூலகத்தின் வரிசைகளில் எளிதாகத் தேடி மெக்நாத்சாகாவின் அந்த நூலை எடுத்து, தான் உரையாற்றிய இடத்திற்கே திரும்பி உயர்த்திக் காட்டி அது வெளிவந்த ஆண்டையும் குறிப்பிட்டு ஆரவார கைத்தட்டல் பெற்றார் சுப்பிரமணியம் சந்திரசேகர். இந்த டிஜிட்டல் யுகத்திலும் அந்தப் பழங்காலத்து அற்புத நூல்களை பேணிக் காத்து வரும் ராயல் கழகம் ஒரு நூலகமாகத் தொடங்கப்பட்டு உலகின் சிந்தனைப் போக்கை அறிவியலை நோக்கித் திருப்பிய பிரமாண்டத்தை சாதித்த அற்புதம் ஆகும்.
2000 ஆண்டுவரை கணிதமேதை சீனிவாச ராமானுஜன் உட்பட 39 இந்தியர்கள் ராயல் கழக உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பதோடு நோபல் அறிஞர் வெங்கிராமகிருஷ்ணன் ராயல் கழகத் தலைவராகவும் சமீபம் வரை (2020 வரை) இருந்தார் என்பதும் பெருமைக்குரிய விஷயம். உலகின் முதல் ஒரு வழிப்பாதையாக 1833லேயே ஒரு சாலை உருவாகக் காரணமான அந்த ராயல் நூலகத்தின் கம்பீரத்தை எத்தனையோ முயன்றும் ஹிட்லின் யுத்த வெறியால்கூட பாதிக்க முடியவில்லை என்பது வரலாறு.