மால்கம்
காலனி ஆதிக்கத்தின் சுவையை அறிந்த ஏகாதிபத்திய நாடுகள், காலனி நாடுகளுக்கு விடுதலையைத் தந்த பின்பும், சுரண்டலை நீட்டித்து ரத்தம் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலையும் கதைதான் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் சுதந்திரமடைந்த மூன்றாம் உலக நாடுகள், பெயரளவில் சோசலிச நாடுகளாக அறிவித்துக் கொண்டாலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய முதலாளித்துவ மாடலையே நோக்குதிசையாகக் கொண்டன. அதன் விளைவு எவ்வளவு பாரதூரமானது என்பதைப் புரிய வைக்கிறது இந்த நாவல்.

“முதலாளித்துவம் ஓர் உலக அமைப்பு. ஆனால், அது ஏகாதிபத்திய நாடுகளில் ஒரு முகத்தையும், காலனி நாடுகளில் வேறொரு முகத்தையும் கொண்டுள்ளது. ஏகாதிபத்தியம் காலனி நாடுகளில் முதலாளித்துவத்தையும், முதலாளித்துவ உற்பத்திமுறையையும், முதலாளித்துவச் சொத்துறவுகளையும் புகுத்துகின்றது; ஆனால் வளர்ச்சியை அறிமுகப்படுத்தவில்லை.” – பிபன் சந்திரா.
காலனிய நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்துச் சொல்லப்பட்ட மார்க்சிய அறிஞர் பிபன் சந்திராவின் இந்தக் கூற்று, காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த நாடுகளுக்கும் கச்சிதமாகவே பொருந்துகிறது, அந்த நாடுகள் ஏதோ ஒரு வகையில் ஏகாதிபத்தியத்தின் பிடியில் கட்டுண்டு கிடக்கும்போது…இப்படிப் பொருளாதார, சித்தாந்த ஆய்வுக்குரிய தலைப்பை, புனைவாக்க முடியுமா என்ற கேள்வி இலக்கிய ஆர்வலர்கள் யாருக்குமே எழுவது இயல்புதான். முடியும் என்று காட்டியிருக்கிறார் கூகி. கென்ய தேசம் விடுதலையான பின்பும்கூட, ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கி நலிவடைந்த அவலத்தைப் பிரச்சார நெடியில்லாமல் இயல்பான புனைவாகப் படைத்திருக்கிறார்.
1) ஓர் இளம்பெண்,
2) முதியவர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட குழந்தை பெற்றுக்கொண்ட அந்த இளம் பெண்ணை நேசிக்கும் பல்கலைக்கழக மாணவர்,
3) கென்ய சுதந்திரத்திற்காக மாவ் மாவ் இயக்கத்தில் இணைந்து போராடிய மூதாட்டி.
இவர்கள் மூவரும்தான் இந்த நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் இணைக்கும் ஒரு பயணத்தில் அறிமுகமாகும் டாக்ஸி ஓட்டும் டிரைவரை, ஒரு கோமாளியைப்போல நாவல் முழுவதும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் காட்டி விட்டு, நாவலின் இறுதியில் அந்தப் பாத்திரத்திற்கு முக்கியமான இடம் கொடுத்திருக்கிறார்.
இவர்களைச் சுற்றி கதையைப் பின்னிக் கொண்டு, ஒவ்வொருவரும் தனது தேடலை அடைய முன்னேறும் காட்சிகளை, கனவு, லட்சியம், மோதல், ஏமாற்றம், பரிதவிப்பு என மனித மனங்களின் இயல்புகளையும் குணாதிசயங்களையும் விறுவிறுப்புக் குறையாமல் எழுத்தில் வடித்திருக்கிறார் கூகி.
கென்ய மக்களில் பணத்தாசை பிடித்த குடிமகன்களே, காலனியாதிக்கவாதிகளுக்குத் துணை போய் நாட்டைச் சுரண்டியதை ஒப்புதல் வாக்குமூலமாக வழங்குவதுதான் நாவலின் மையக் கதை.
இந்த ஒப்புதல் வாக்குமூலம், அமெரிக்காவின் பொருளதார அடியாள் ஜான் பெர்கின்ஸ் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் போலவே அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியது. ஓர் அமெரிக்கராக ஜான் பெர்கின்ஸ் மத்தியக் கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் அடித்த கொள்ளைக்கு, அந்தந்த உள்ளூர்ப் பிரமுகர்கள் ஒத்திழைத்திருப்பார்கள் அல்லவா? அந்தக் கோடாலிக்காம்புகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால் எப்படி இருக்கும்? ஏகாதிபத்திய, பொருளாதார அடியாட்கள் கென்யாவைச் சுரண்டுவதற்கு, கென்ய நாட்டின் குடிமகன்கள் அளித்த ஒத்துழைப்பை, ஒப்புதல் வாக்குமூலம் போலப் படைப்பாக்கி, கென்ய மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதே இந்த நாவல் வழியாக கூகி நிகழ்த்த விரும்பிய கலகம்.
புனைவின் சுவை குறையாமல் அந்தச் சுரண்டல் பேர்வழிகளின் சாட்சியங்களை வாசகர்கள் முன் வைக்க, ஒரு வித்தியாசமான கதைக் களக் காட்சியைத் தேர்வு செய்திருப்பதுதான் நாவலின் வெற்றியாகும். நாவலின் தனிச்சிறப்பும் அதுதான். கென்யாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதை வீர, தீரச் செயல்களாகப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் காட்சியைப் புனைவாக்கி இருக்கும் விதத்தில்தான் இந்தப் பிரதி ஆய்வுக்குரிய தளத்தில் இருந்து விடுதலை பெற்று நாவலாக உயிர் பெறுகிறது.

நாட்டின் பிரபலமான திருடர்களும் கொள்ளைக்காரர்களும் ஒரு குகையில் ஒன்றுகூடி தங்களுக்குள் யார் சிறந்தவர்கள் என்பதைத் தேர்வு செய்கிறார்கள். திருடர்கள்-கொள்ளைக்கார்கள் என்றால், நாம் நினைப்பதுபோல அல்ல… வயிற்றுப் பசிக்காகத் திருடுபவர்கள் கிரிமினல்களாம். ஆனால் வயிறு நிறைந்திருப்பதால் திருடுபவர்களை எப்படி அழைப்பது?
1) ரியல் எஸ்டேட் 2) கல்வி 3) விளைபொருட்கள் / கனிம வளங்கள் கடத்தல் ஆகிய துறைகளின் வழியாகவும் 4) ஜனநாயக அமலாக்கத்தின் பொறிமுறையான தேர்தல் வழியாகவும் நாட்டைச் சுரண்டும் இவர்கள் நவீனத் திருடர்கள், அதிநவீனக் கொள்ளையர்கள்.
ஏகாதிபத்தியக் கொள்ளையர்கள் முன்பு, கென்யாவின் உள்ளூர்க் கொள்ளையர்கள் தங்கள் வீரப் பிரதாபங்களை முழங்கிக்கொண்டிருக்க, கோபமடைந்த மூதாட்டி – தேச விடுதலைக்காக மாவ் மாவ் புரட்சியில் பங்கேற்ற அதே மூதாட்டி – மக்களைத் திரட்டி, கொள்ளையர்களின் கூட்டத்தில் புகுந்து கலகம் செய்கிறாள். அத்துடன் நாவலை முடித்திருந்தால் ஒரு செய்திக் கட்டுரையின் நீண்ட விவரணை போன்றிருக்கும். ஆனால் கூகியின் நோக்கம் அதுதான். அதேசமயம், நாவலில் ஊடுபாவாகப் பெண்ணியம் பேசப்பட்டுக்கொண்டே வருகிறது.
சுதந்திரமடைந்த நாடுகளில் நவீன காலனியாதிக்கத்தின் மறைமுக ஒடுக்குமுறையால் மக்கள் படும் துயரத்தைப் பொதுமைப்படுத்தும் அதேவேளை, பெண்கள் அடையும் அவலங்கள் அதனிலும் கொடியவை எனப் பிரத்யேகப்படுத்திக் காட்டுகிறார் கூகி. நாவலின் இறுதியில் அந்த இளம் பெண்ணின் காதலன், அவளுக்குச் சகோதரன் முறை எனக் கதையை முடித்திருப்பது சினிமாத்தனமாக இருந்தாலும், அந்நாட்டில் பெண்களின் நிலை அப்படித்தான் இருந்திருக்கிறது.
மதம் மற்றும் வளர்ச்சி என்ற இரண்டு நயவஞ்சகத்தால் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்கத் தேசங்கள் அநேகம். அந்த மக்களின் குருட்டு மத நம்பிக்கைகளை ஏகாதிபத்தியம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை தாலந்து பற்றிய பைபிள் கதையினூடே, சுதந்திர கென்யாவின் கதையை நாவல் சொல்லிச் செல்கிறது. இந்த நாவலை வாசிக்கும்போது, சுதந்திரமடைந்த இந்தியாவின் வளங்களைச் சூறையாடிய சாத்தான்கள் பற்றிய எண்ணங்கள் மேலெழுவதைத் தவிர்க்க முடியாது. ஆப்ரிக்க, ஆசிய நிலப் பகுதிகளை வெள்ளையர்கள் ஆக்கிரமித்ததைப் பற்றி அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X விரிவாக எழுதியிருக்கிறார். குறிப்பாக இந்தியா பற்றியும் கவலையோடு இப்படிக் குறிப்பிடுகிறார்:
“ஆப்ரிக்காவில் நிகழ்த்தப்பட்ட அடிமை வணிகத்துக்குப் பின்பு, இந்தியாவில் பிரிட்டன் நடத்திய அடக்குமுறைக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் ஈடான நிகழ்வை வரலாற்றில் பார்க்க முடியாது.”
1960களில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் ஆப்ரிக்கத் தேசங்களில் விரிவான பயணம் மேற்கொண்டு தன்னுடைய அரசியல் பார்வையை விசாலமாக்கிக் கொண்டார். அந்தப் பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அம்சம் அவர் கென்யாவுக்குச் சென்று, அங்கு மாவ் மாவ் புரட்சியாளர்களைச் சந்தித்ததாகும்.
அப்போதுதான் அந்நாடு விடுதலையடைந்திருந்தது. மீண்டும் அமெரிக்கா திரும்பிய மால்கம் X, மாவ் மாவ் ‘‘புரட்சியாளர்களைப்போல நாமும் போராடினால், அமெரிக்கக் கறுப்பர்கள் நிறவெறிக் கொடுமையிலிருந்து விடுபட்டு விரைவில் சுதந்திரம் அடையலாம்’’ என பிரச்சாரம் செய்தார். ஆனால் பரிதாபம், மாவ் மாவ் புரட்சியின் மூலம் அரியணையில் அமர்ந்தவர்களே ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாக மாறி, சக சுதந்திரப் போராளிகளைக் கொலை செய்து நாட்டைக் கபளீகரம் செய்ததை அவர் அறிய வாய்ப்பில்லை. 1965ஆம் ஆண்டு மால்கம் X சுட்டுக் கொல்லப்பட்டார்.
கூகி வா தியாங்கோ தன் சொந்த நாட்டின் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அவலங்களைச் சிறைக்குள்ளிருந்தபடியே உருவாக்கிய இந்தப் படைப்பைத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலுக்கு இயைந்த மொழிநடையில் எளிமையாகவும், நூலில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆப்ரிக்கப் பழமொழிகளை-சொல் வழக்குகளை அழகியலோடு நேர்த்தியாகவும் மொழிபெயர்த்திருப்பதோடு, கென்ய விடுதலைப் போராட்ட வரலாற்றைக் கச்சிதமான அளவில் நூலில் சேர்த்திருப்பது, நாவலை எளிதாக உள்வாங்கிக் கொள்ள வாசகர்களுக்கு உதவுகிறது