பிரியா ஜெயகாந்த்
முன்னுரை:
கதைகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துவிடுகிறது. நாம் சந்திக்கும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் சிறுகதைகள்தான் என்பதை ‘காரான்’ நூலின் ஆசிரியர் ‘மா. காமுத்துரை’ அவர்களின் பதிமூன்று கதைகளும் உணர்த்துகின்றன. ஒரேவிதமான நிகழ்வுகள் நம் கண்களுக்கு வெறும் சம்பவங்களாக மட்டுமே தெரிகின்றபோது அவை ஆசிரியரின் கண்களுக்கு மட்டும் கதைகளாக உருவகிக்கின்றன. அந்த சம்பவங்களை தனது எழுத்தின் வலிமையால் கதைகளாக வடிவமைக்கும் தனித்திறன் ஆசிரியருக்கு கைவந்த கலை என்பது அவரது சிறுகதை மற்றும் நாவல்களை வாசித்த அனைவருக்கும் பரிச்சயம்.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் என்பதால் அனைத்துக் கதைகளுமே தேனியைச் சுற்றியே தேனி வட்டார மொழியுடன் கதைகள் வலம் வருகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஒரு தொழிலை மையமாகக்கொண்டு எழுதியிருப்பது சிறப்பு.
காரான்:
தொகுப்பின் தலைப்பையே கதையின் தலைப்பாகக் கொண்ட முதல் கதை. வீட்டில் மாடு வைத்து வளர்ப்பவர்கள் அவற்றை ஐந்தறிவு ஜீவன்களாக மட்டும் பார்ப்பதில்லை. தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகவும் குடும்ப உறவுகளைவிட மேலாகவும் பாராமரிப்பார்கள். அதுபோன்ற அக்கறையுடன்தான் குருவம்மாளும் வளர்க்கப்படுகிறாள். ஓர் எருமை மாட்டை இவ்வளவு ரசித்து வர்ணித்தது நமது ஆசியராக மட்டுமே இருக்க முடியும். அதற்கு நோய் ஏற்படும்போது அதன் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அது கன்று ஈனும்போது ஏற்படும் நிகழ்வுகளையும் விளக்குவதில் ஆசிரியருக்கு மாடு வளர்ப்பிலும் அனுபவம் இருக்கிறது என்பது புலப்படுகிறது.
ஊனுகம்பு:
ராசு முதலாளிக்கும் சென்னையனுக்குமான உறவில் தொடங்கி, அவரது அண்ணன் கனகு முதலாளியுடன், தான் ஏற்படுத்திக்கொள்ளும் இணக்கத்தையும் சேர்த்து முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவின் வலிமையை, இணைப்பை மிக யதார்த்தமாக விளக்கும் கதை. திறமையும் விசுவாசமும் இருந்தால் தன்னை மதிப்பவர்களாக, கேட்காமலேயே தனக்கு விசேஷங்களுக்கு காசு அளிக்கும் விதமாக தமது முதலாளிகளை மாற்ற முடியும் என்பது இந்தக் கதை மூலம் அனைவரும் கற்கவேண்டிய பாடம்.
கமலக்கண்ணனின் கஷ்டம்:
டெய்லர் கடை வைத்திருப்பவர்களின் தினப்பாடுகளைச் சொல்கிறது இந்தக் கதை. தினமும் எதிர்பார்ப்புடன் கடையைத் திறந்துவைத்து வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பதற்கு தனிப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். அதுவும் பண்டிகை நாட்களில் அந்த எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்துவிடுகிறது. வரும் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்பதையும் சேர்த்தே நமக்குப் பாடமாகிறது. சில நேரங்களில் நம் கணக்கு தப்பாகிப்போவதும் உண்டு. அதனை இரு வேறு வாடிக்கையாளர்களின் உரையாடல்களில் விளக்கி நம்மை சிந்திக்கவைக்கிறார் ஆசிரியர். நான் ரசனையுடன் வாசித்த கதைகளில் இதுவும் ஒன்று.
பெண் பார்க்கும் படலம்:
மெல்லிய காதல் உணர்வை இயல்பாகக் கடத்தும் கதை. நாம் நம் பக்கத்து வீடுகளில் கண்ட சாதாரண நிகழ்வை தனது கலைநோக்குடன் கண்டு அதனை கதையாக்கிய விதம் அருமை. தங்கைக்குப் பெண் பார்க்கையில் தானும் அவளது தோழி ஈஸ்வரியைப் பார்க்கும் விதமான காட்சியமைப்பு ஒரு மெல்லிய தென்றலாய் நம் மனதை வருடுகிறது. ‘உள்ளேயும் பெண் பார்க்கும் படலம் தொடர்ந்தது’ என்ற ஒற்றை வரியில், தான் சொல்லவந்ததை நமக்குப் புரியவைத்துவிடுகிறார்.
பொன்வண்டுக் காலம்:
பள்ளி என்றாலே அங்கு ஒரு கண்டிப்பான ராசு வாத்தியார் இல்லாமல் இருப்பதில்லை. அதுவும் ஆண் பிள்ளைகள் வகுப்பு என்றால் சொல்லவே வேண்டாம். கிளாஸ் லீடர், வீட்டுப்பாடம், ஆங்கில வகுப்பு மீதான வெறுப்பு, சாக்பீஸ், வருகைப்பதிவேடு, பிரம்படி என்று ஒவ்வொன்றும் நமது இளம் பருவத்தை நினைவூட்டுகின்றன. இதற்கிடையில் தண்டபாணி தோட்டத்துப் பொன்வண்டும் பாவம் நம் வகுப்பிற்குள் வந்து பாடம் படிக்கிறது. நாமும் பல வருடங்கள் பள்ளிக்குச் சென்றிருக்கிறோம். பாடம் படித்திருக்கிறோம். பொன்வண்டு போன்று எத்தனையோ சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். அவற்றை நாம் கதையாக ஏன் பார்க்கத் தவறினோம் என்று எனக்குள்ளே நானே கேட்டுக்கொள்கிறேன்.
வெள்ளை வெய்யில்:

பொன்வண்டைப் போன்று இங்கு ஒரு பூனைக்குட்டி. குட்டியாக இருக்கும்போது எந்த விலங்கானாலும் அது புலியாகவே இருந்தாலும் அழகுதான். அதுவும் பூனைக்குட்டி என்றால் கேட்கவா வேண்டும். அவை நமக்குப் பிடித்துப்போனால் நம் கண்களுக்கு கம்பீரமாகத்தான் தெரியும் அசோகனுக்குத் தெரிவதைப்போல. சிறுவர்கள் குறும்புத்தனமாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறது என்று சேது நமக்கு விளக்கிவிடுகிறான். இடையில் பாட்டில் கம்பெனியின் வாடையும் சேர்ந்து வெள்ளை வெய்யில் நிறம் மாறிப் பூக்கிறது.
காட்டில் பெய்யும் நிலாக்கள்:
பேருந்தின் ஒருநாள் இரவுப்பயணம் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை, தவிப்பை, பதட்டத்தை, கற்பிதத்தை தனக்கே உரிய பாணியில் விவரிக்கிறது – காட்டில் பெய்யும் நிலாக்கள். கதையின் தலைப்பே நிலவு காட்டில் பொழிந்து என்ன பயன் என்பதை சகப்பயணி திருநம்பி மற்றும் குடிகாரன் என்ற இரு வேறு கதாபாத்திரங்கள்கொண்டு நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். நள்ளிரவில் விட்டுச்சென்ற திருநம்பி என்ன ஆனார் என்ற கேள்வியை நம்மீது தொடுத்துவிட்டு, அதற்குப் பதில் இல்லாமல் கதை முடிகிறது. வேற்றுப் பாலினத்தினரை இந்த சமூகம் பார்க்கும் பார்வை மாறவேண்டும் என்ற அவரது ஆதங்கம் வெளிப்படுகிறது.
கொஞ்சம் சிரிங்க:
கொரோனா காலத்தில் புரிதலற்ற வேடிக்கையான அரசின் விதிமுறைகளினால் பலர் சிரமப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தையே தொலைத்து அடுத்தவேளை உணவுக்கு வழியின்றி பசியினால் வாடிய குடும்பங்கள் ஏராளம். அதிலும் குழந்தைகள் நடப்பது என்ன என்றே தெரியாமல் தண்டனைக்கு உட்பட்டது கொடுமை. எதற்கு கட்டுப்பாடு விதிப்பது என்ற எல்லை தெரியாமல் விதிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுப்பாடும் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலில் சங்கடத்தையே ஏற்படுத்தியது. அத்தகு சங்கடத்தை தனது வரிகளில் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். திருமண வீட்டில் வேலைக்குச் சென்ற பவுன்ராசு போலீசாரால் கைது செய்யப்படுவது அதற்கு உதாரணம். தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தங்கள் மகனை விடுவிப்பார்களா, இல்லையா என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.
பசிக்கி:
ஒரு கதைக்கு அதன் கதைக்களம் குறித்த வர்ணனை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அது இடுகாடாக இருந்தாலும் அதனை விவரிப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பது நம் ஆசிரியரின் கருத்து. அதன் அடிப்படையில் தனது விவரிப்புடன் இடுகாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறார் அதில் உள்ள சாதிப் பிரிவினையும் சேர்த்து. கதிரேசன் தனக்கு இடப்பட்ட வேலைகளை செய்து வயிற்றை நிரப்பிக்கொள்பவன். அவனது பசியைப் பொருட்படுத்தாமல் அங்கும் இங்கும் அவன் அலைக்கழிக்கப்படுவதில் நமக்கே பசி ஏற்பட்டுவிடுகிறது. அவனுக்காக ஒரு சாப்பாட்டு பப்ொட்டலாம் காத்திருப்பது தெரியாமல் அலைந்து திரிந்து இறுதியில் அவன் இடுகாட்டிற்குச் செல்வது போல நாமும் பல நாட்கள் நமக்கானதை எங்கு தேடுவது என்று தெரியாமல் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
கடல் மூச்சு:
பெற்றோரின் மன வலியைப் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் மகாலிங்கம் தன் மகனாக வளர்த்து ஆளாக்கிய தனது தம்பி மகனையும் பேரப்பிள்ளைகளையும் காணும் ஆசையிலும் சென்னையை சுற்றிபார்க்கும் ஆசையிலும் செல்ல, அங்கு அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக சிவா, அவர் வருகையை முன்னரே தெரிவிக்காததற்கு கடிந்துகொண்டவுடன் அவனை சென்று பார்க்காமலே ஊர் திரும்புகிறார். அதை அறிந்த சிவா தொடர்ந்து அழைத்தும் அந்த அழைப்பை ஏற்க மனமில்லை. பெரியவர்கள் தங்கள் வாரிசுகளின் மீதுள்ள உரிமையில் சிலநேரம் செய்யும் செயல்கள் இளைய தலைமுறையினாரால் புரிந்துகொள்ளப்படுவதில்லை. தலைமுறை இடைவெளி என்பது எல்லா காலத்திலும் பொதுவே. அதில் பெரியவர்கள் மட்டுமே தங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளையோருக்கு இருப்பதால் வயதில் முதியவர்களாக இருந்தாலும் அவர்களை அவமதிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது என்ற சமூகச் சூழலை உணர்த்தி எச்சரிக்கிறார் ஆசிரியர்.
மப்பு:
“சாராயம் குடிக்கரவனெல்லாம் கெட்டவனா?” என்று சங்கரன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நல்ல குடும்பம், குழந்தைகள், வருமானம் என்று நல்ல நிலையில் இருக்கும் சங்கரன் குடிக்கு அடிமையாகி இருப்பதற்கு நியாயமான எந்த காரணமும் இல்லை என்றாலும், தன்னை நல்லவனாக காட்டிக்கொள்வதற்காக அவன் கூறும் விளக்கங்கள் யாருக்காக என்று தெரியாமலேயே அனைவரிடமும் தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறான். குடிப்பவர்கள் யாரும் தங்கள் குடிப்பழக்கம் தவறு என்றோ, அதற்கு காரணம் தாங்கள்தான் என்றோ ஒப்புக்கொண்டதாக சரித்திரம் இல்லை. ஆசிரியரின் வித்தியாசமான சிந்தனை பொதிந்த விளக்கம் நம்மையும் சிந்திக்க வைத்து மப்பு குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
அவனை வரச்சொல்லடி:
கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தர்ஷன் -அவந்திகா தம்பதியின் வீட்டார் மற்றும் ஊரின் பெரியவர்கள் இணைந்து உரையாடும் சம்பவத்தை இந்தக் கதை சொல்கிறது. எவ்வகையான பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் அமர்ந்து பேசினால் தீராத மனவேறுபாடுகளும் தீர்ந்துவிடும் என்பதை அவந்திகாவின் அக்கா கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் பதிவு செய்கிறார். அந்தப் புரிதல் இன்றைய இளம் தம்பதியர்களுக்கு வேண்டும். அப்படிப் பேசினால் தங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் தானாக குறைய சாத்தியக்கூறுகள் இருப்பதை இந்தக் கதை மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
நாளைக்கும் அம்மா சில டப்பாக்களை வாங்குவார்:
நூலின் கடைசி சிறுகதை. பாம்பின் கால் பாம்பரியும் என்பதைப் போல சேல்ஸ் பிரிவில் வேலை செய்யும் தனது மகன் மாறனின் துயரத்தை உணர்ந்தவளாக அவன் தாய் தன் வீட்டிற்கு வந்து வியாபாரம் செய்பவரிடம் பொருட்களை வாங்கினால், தன் மகனிடமும் இதுபோல் பிறர் வாங்குவார்கள் என்று நம்புகிறார். அவர் நம்பிக்கை பலிக்க வேண்டும்.
முடிவுரை:
‘காரான்’ சிறுகதை தொகுப்பின் மூலம் வெவ்வேறு சிறுதொழில் செய்யும் எழ்மைக் குடும்பங்களை சேர்ந்தவர்களின் வலிகளையும் அவர்களின் பனிச்சுமையையும் நம் கண் முன்னே காட்சிப்படுத்தியிருக்கும் ஆசிரியர் அவர்களின் உணர்வுகளையும் அதனுடன் இணைத்து தனது எழுத்தின் மூலம் நமக்கு கடத்துகிறார். ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு கற்பிதத்தை, சிந்தனையை நமக்கு வழங்குகிறது. அவற்றை வாசிக்கும் வாசகர்களின் மனதில் இது மாற்றத்தை ஏற்படுத்தும். ‘காரான்’ சிறுகதை தொகுப்பை வாசித்து அதன் சாரத்தை அனைவரும் சுவைக்கவேண்டும்.