அண்டனூர் சுரா
ஒரு வானொலி நிலையம் நூல் அரங்கம் நிகழ்ச்சியில் ஒரு நூலை அறிமுகம் செய்து உரையாற்றக் கேட்டுக்கொண்டது. அதற்காக ஒரு நூலின் பெயரைக் கேட்டது. நான் முனைவர் பா.ஜம்புலிங்கம் எழுதிய ‘சோழ நாட்டில் பௌத்தம்’ எனும் நூலை முன்மொழிந்தேன். ‘பௌத்தம் என்பது மதமல்லவா?’ என்றவர் அந்நூலுக்கு இசைந்திட மறுத்துவிட்டார். பிறகு நான் ‘வீரசோழியம்’ குறித்து உரையாற்றுகிறேன் என்றேன். ஆம், என்று ஒப்புக்கொண்டவர் ‘அந்நூல் குறித்து இப்பொழுதே சுருக்கமாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றார். ‘வீரசோழியம்’, ‘பௌத்தம் காலத்திய இலக்கண நூல்’ என்றேன். சற்றுநேரம் அமைதி காத்து அலைபேசியை அணைத்துவிட்டார்.

‘பௌத்தம் என்பது மதமா, ஒருவேளை மதமானால் எப்பொழுது முதல் அது மதமானது? யாரால் அப்படியானது?’ என்பதாக யோசித்தேன். ‘பௌத்தத்தை மதமாகப் பார்க்கும் புத்தியை என்னவென்று சொல்வது?’ என உள்ளுக்குள் யோசிக்கையில் புத்தம் என்கிற சொல் புத்தி என்பதிலிருந்து பிறந்ததும் அல்லது புத்தம் என்பது புத்தி என்பதாகப் பொருள் தருவதும் நினைவுக்கு வந்தது. புத்தி – புத்தர் – புத்தம் – பௌத்தம் நான்கும் பாலி மொழிச் சொற்கள். அச்சொல்லின் தமிழாழ்ந்த பொருள் அறிவு. ‘எதையும் அறிவு கொண்டு பார்’, என்கிறார் புத்தர். அப்படியென்றால் பௌத்தம் என்பது அறிவின் தத்துவம் அல்லது எழுச்சியின் தத்துவம் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு முறை நான் பேசுகின்றபொழுது விகாரம் என்கிற சொல்லை பயன்படுத்தினேன். “பார்க்க விகாரமாய் இருக்கிறது?” என்று. ஒருவர் கேட்டார், “விகாரம் என்பதை எப்படியாகப் பார்க்கிறீர்கள்? அழகா, அழகற்றா?”. “அழகற்று” என்றேன். ‘அப்படியென்றால் புத்தக் கோவில்கள் கோபுரங்கள் அழகற்ற கட்டுமானங்களா?’ எனக் கேட்டுவைத்தார். அப்பொழுதுதான் எனக்குப் புரிய வந்தது, விகாரம் என்கிற சொல் புத்த ஆலயங்களின் கோபுரம் என்று. இப்படியாகவே இவ்வளவு காலமும் நான் நினைத்து, நம்பி, புரிதல் கொண்டிருந்தேன்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் விகாரம் என்பதற்குக் கூடுதலாக ஒரு செய்தியைத் தருகிறார். புத்த பிக்குகள் வாழ்ந்த தனிக்குடிலுக்குப் பெயர் விகாரம். மேலும் விகாரம் என்பது கூட்டு வழிபாட்டிற்காக ஏற்பட்டது என்கிறார். சமணர்கள், பௌத்தர்கள் புதைவிடங்களில் ஒரு மேடையமைத்து அதன் மீது அரை உருண்டை வடிவ மேடு கட்டுவர். அந்த மேட்டிற்கு விகாரம் என்று பெயர்.
ஆய்வாளர் பா.ஜம்புலிங்கம் அவர்களை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் ஒரு தீர்த்தங்கரர் என்பதை இந்த இடத்தில் நான் நினைவுகூர்கிறேன். தீர்த்தங்கரர் இன்றும் இருக்கிறாரா என்கிற கேள்விக்குள் சட்டென சென்றுவிட வேண்டாம். இதன் பின்னே ஒரு சுவையான நிகழ்வு இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டியாவயல் அருகேயுள்ள கவிநாடு கண்மாயில் ஒரு சிலை கண்டெடுக்கப்படுகிறது. 3.5 அடி உயரம். 3 அடி அகலம். அச்சிலையை ஊரார்கள் சிவனார் என்கிறார்கள். சிலர் புத்தர் என்கிறார்கள். புத்தர் என்றதும் பா.ஜம்புலிங்கம் அந்த இடத்திற்கு வருகிறார். அமர்ந்த, தியான நிலையில் அச்சிலை இருக்கிறது.
சிலையைப் பார்த்தவுடன் ஜம்புலிங்கம் சொல்கிறார், ‘இது புத்தரல்ல, சமணர்’ என்று. “புத்தராக எண்ணிக்கொண்டிருந்த சிலையைச் சமணராக ஏற்க மறுக்கிறார்கள். சுருள் முடி புத்தர், சமணர் இரு சிலைகளிலும் காண முடியும். புத்தர் சிலையின் தலையில் வழக்கமாகக் காணப்படுகின்ற தீச்சுடர் இச்சிலையில் இல்லை. அது இருந்ததற்கான அடையாளமும் இல்லை. நெற்றியில் திலகக்குறி, கையில் தர்மசக்கரக்குறி இல்லை. மார்பில் மேலாடை இல்லை. ஒரு சிலை புத்தரா, சமணரா என்பதை உறுதிப்படுத்த சிலையில் உள்ள ஆடையைக் கவனிக்க வேண்டும்” என்று சொல்கிறார். இதுதவிர “சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை இதழ்கள், தலைக்குப்பின் பிரபை, கழுத்தில் திருவாலி என்கிற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள், மேலாடை, இடுப்பு ஆடை ஆகியவை புத்தருக்கான அடையாளங்கள்” என்கிறார்.
கவிநாட்டில் இவ்வளவு காலம் புத்தராக, புத்தர் என்று கூறப்பட்டு வந்த சிலை அதன் பிறகு தீர்த்தங்கரர் ஆனது. இந்தத் தீர்த்தங்கரர் மூலம்தான் ஜம்புலிங்கம் எனக்கு அறிமுகமானார்.
நான் முனைவர் தொ.பரமசிவன் நூல்களை விரும்பி வாசிக்கிறவன். அவர் தரும் அடுக்கடுக்கான செய்திகள் என்னை வியப்பூட்டும். அவரது படைப்புகள் மீது நான் வைக்கும் விமர்சனம் அவர் சொல்லும் பெரும்பாலான வரலாற்றுத் தகவல்களுக்கு ஆதாரச் சான்று கொடுக்காமல் கடந்துவிடுவதுதான். இதனால் சில செய்திகளை வாசிக்கையில் நம்பகத்தன்மை குன்றி புனைவாக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் ‘சோழநாட்டில் பௌத்தம்’ எனும் நூலில் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னே, கடைசி பக்கங்களில் நிறைய நூல் பட்டியலைத் தருகிறார். இது ஓர் ஆய்வு நூலுக்கு இருந்தாக வேண்டிய இலக்கணமாக எனக்குத் தோன்றுகிறது.
புத்தம் தரும் சொற்கள் ஒவ்வொன்றும் பெரும் வரலாற்றைக் கொண்டவை. உதாரணத்திற்கு ஒன்று சாத்தன் என்கிற சொல். தமிழக அகழாய்வில் தமிழ்பிராமி சொற்களால் வடிக்கப்பட்ட சாத்தன் என்கிற சொல் அதிகம் கிடைத்திருக்கிறது. இப்பெயர் பாலி அல்லது பிராகிருதச் சொல். சிலப்பதிகாரம் கோவிலின் தந்தை மாசாத்தான் என்பதிலிருந்தே தொடங்குகிறது. கடைசியில் கோவலன் இறந்ததை அறிந்துகொண்டு சாத்தான் புத்தபிக்குவாகி விடுகிறார். சாத்தன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. சாத்தன் பெயரில் பல புலவர்கள் இருந்துள்ளார்கள் என்கிற குறிப்பை இந்நூல் தருகிறது.
அழிசி நச்சாத்தனார், ஆடுதுறை மாசாத்தனார், ஆலம்பேரி சாத்தனார். உறையூர்க்கதுவாய்ச் சாத்தனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்ச்சேரமான் சாத்தன், கருவூர்ப்பூதஞ் சாத்தனார், சாத்தனார், சீத்தலைச் சாத்தனார், செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன், தொண்டி ஆமூர்ச் சாத்தனார், பிரான்சாத்தனார், பெருஞ்சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார், பெருந்தோட் குறுஞ்சாத்தன், பேரிசாத்தனார், மோசி சாத்தனார் இப்படியாக. இப்பெயர்களைக்கொண்டு பார்க்கையில் தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்த நிலப்பரப்பை அவதானிக்க முடிகிறது.மேலும் இளம்போதியார், சங்கவருணன், சிறுவெண்தேரையார், தேரதரன், மோரியர் திகிரி, வம்பமோரியர் ஆகிய சங்கப்புலவர்களின் பெயர்களைக்கொண்டு இவர்கள் பௌத்தச் சார்பினர் என்கிறார். காருண்யம், தருமம், நிதானம், தவப்பள்ளி, சங்கம், போதி, நிர்வாணம் ஆகிய சொற்கள் பௌத்தத்துடன் தொடர்புகொண்டவை.

புத்தர் சிலை பல ஊர்களில் பல வடிவங்களாக வழிபாடு அடையாளமாகியிருப்பதை இந்நூல் காட்டுகிறது. திருவாரூர் இடும்பவனத்தில் ‘அம்மணச்சாமி’, அதே மாவட்டம் உள்ளிக்கோட்டையில் ‘செட்டியார்’, ‘ராஜகுமாரன்’ புதுக்கோட்டை கரூரில் ‘அய்யனார்’, திரும்பாம்புரத்தில் ‘சிவனார்’, புத்தமங்கலத்தில் ‘மழைச்சாமி’, நாகப்பட்டினம் புஷ்பவனத்தில் ‘நாட்டுக்கோட்டை செட்டியார்’, பெரண்டாக்கோட்டையில் ‘சாம்பான்’, பெருஞ்சேரியில் ‘ரிஷி’, திருச்சி மாவட்டம் மங்கலத்தில் ‘செட்டியார்’, அரியலூர் ஜெயங்கொண்டத்தில் ‘பழுப்பர்’, புதுக்கோட்டை ஆலங்குடிப்பட்டியில் ‘சிவநாதர்’, அய்யம்பேட்டையில் ‘முனீஸ்வரன்’ என்பதாக.
அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம், திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை இவ்விரு ஊர்களிலும் அருகருகே காணப்படும் இரண்டு மூன்று புத்தர் சிலைகளின் மீது கடன் சார்ந்த ஒரு பெருங்கதை உலாவுவதை இந்நூல் கதையாடலாகக் காட்டுகிறது.
பேட்டைவாய்த்தலையில் கடன்காரப்பள்ளம் என்றோர் ஊர். அந்த இடத்தில் மூன்று சிலைகள் இருந்துள்ளன. அச்சிலைகள் கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன், சாட்சி சொன்னவன். இம்மூன்று சிலைகளும் சமணர்களின் சிலை என்பதாக அவ்வூர் மக்கள் நம்பிவருகிறார்கள். ஆனால் “இம்மூன்று சிலைகளில் இரண்டு சிலைகள் புத்தர் சிலைகள்” என்கிறார் பா. ஜம்புலிங்கம்.
இதேபோன்று திருச்சி பெரிய திருவோணத்தில் திருக்கோணத்தில் கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன் என்று இரண்டு சிலைகள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒரு சிலை மட்டுமே தற்போது இருக்கிறது, ‘அச்சிலை புத்தர்’ என்கிறார்.இப்படியாகக் கதைகள், வரலாறு, தொல்லியல், அகழாய்வு, தேடல் என்று பல சேகரிப்புகளில் புத்தர் சிலைகளைக் கண்டறிந்து வண்ணப் புகைப்படத்துடன் வரலாற்று ஆதாரமான செய்திகளுடன் தொகுக்கப்பட்ட ஆவண நூலாகச் “சோழநாட்டில் பௌத்தம்” எனும் நூல் வெளிவந்துள்ளது.
இந்நூலுக்குத் துணைநூற்பட்டியலாக 80 நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் கொடுத்துள்ளார். மேலும் புத்தர் சிலையைக் கண்டறியத் தகவல் கொடுத்தவர்கள், துணை நின்றவர்களையும் பதிவு செய்துள்ளார்.
பௌத்தம் என்பது மதமல்ல, வாழ்வியல் நெறி. சோழர் காலத்தில் சைவம் அரசு மதமாக நிறுவப்படுகையில் பௌத்தம், சமண அடையாள சின்னங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இரண்டு மதங்களாகத் திரிக்கப்பட்டன. புத்தர் சைவ, வைணவத்தின் அவதாரமாக மாற்றும் முயற்சிகளும் நடந்தேறின.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட வானொலி நிகழ்ச்சிக்காக என்னுடன் உரையாடியவர் ஒருவேளை தீவிர சைவராக இருந்திருக்கலாம். ஒரு மதத்தின் மீது தீவிரப் பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்கள் அதற்கு நிகரான அல்லது அதற்கும் முந்திய கால வழிபாட்டு நம்பிக்கை அடையாளச் சின்னங்களில் அணுகுவதில் பிரச்சனை இருக்கிறது. இங்குதான் பா. ஜம்புலிங்கம் தனித்துவம் பெறுகிறார். இவர் சைவ சமயப் பக்தர். நெற்றித்திருநீறு இவருக்கான அடையாளம். ஆனால் பௌத்தத்தைச் சமயக் காழ்ப்புணர்வற்று அணுகியிருக்கிறார்.
இவரது களப்பணிக்குப் பிறகு கேட்பாரற்று மண்ணில் புதைந்துகிடந்த சிலைகள் வழிபாட்டுச் சிலைகளாக மாறியிருக்கின்றன. இந்நூலில் கடைசிக் கட்டுரையான புத்துயிர் பெறும் பௌத்தம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல அசோகர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பௌத்தம் பக்தி இயக்கக் காலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இந்தப் பின்னடைவு சிலையாக, கல்வெட்டாக, செப்பேடு, தொல்லியல் அடையாளமாக மண்ணில் புதைந்துள்ளன. தொல்லியல், கல்வெட்டியல், அகழாய்வு மூலமாகப் பௌத்தம் மீட்சியாகிப் புத்துயிர் பெற்று வருகிறது என்பதை மறுக்க இயலாது.
புத்தர் நல்லது செய்வார், மழையைக் கொணர்வார், நல்ல விளைச்சல் தருவார் என்கிற நம்பிக்கை இன்னும் மக்களிடம் நிலைகொண்டிருப்பதற்குக் காரணம் பௌத்தம் மிக நீண்ட நூற்றாண்டுகள் மக்களிடம் வேர் விட்டிருந்ததே காரணம். தக்க தகவமைப்பும் வரலாற்று வழி உயிரூட்டமும் நிகழ்கையில் பௌத்தம் மீண்டும் தழைக்கும் என்பதைச் சொல்லும் ஆவணமாகவும் இந்நூலை நான் பார்க்கிறேன்.