‘பேய் அரசு ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்றான் பாரதி. இஸ்ரேலின் ரத்தவெறி பிடித்த வலதுசாரி யூத அரசு – பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் குண்டு வீசித் தாக்கி ஐந்தாயிரம் குழந்தைகளை கொன்று குவித்திருக்கிறது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.சபையில் பதட்டத்தோடு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களித்து அந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளை காப்பாற்ற கைகொடுக்காமல் இஸ்ரேல் பயங்கரவாத அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது மோடி அரசு.
பாலஸ்தீனம் எனும் தேசிய இனம், தான் கொண்டிருந்த தேசத்தை சின்னாபின்னமாக்கி ஆக்கிரமித்து, அமெரிக்க ஏகாதிபத்திய சதியின் மூலம், உருவான ஆக்கிரமிப்பு போலி தேசம்தான் இஸ்ரேல். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஹிட்லரால் துரத்தி துரத்திக் கொல்லப்பட்ட இனமாகிய யூத இனத்திற்கு ஆதரவாக அவர்கள் அதிகம் வசித்த ஜெர்மனியை உடைத்து அங்கே இஸ்ரேலை உருவாக்காமல் போலியாக பாலஸ்தீனப் பகுதியில் அவர்களை கொத்துக் கொத்தாக வலுக்கட்டாயமாக பீரங்கி முனையில் குடியேற வைத்து, இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.
அன்று உலகின் பிரபலமாக அறியப்பட்டிருந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீனை இஸ்ரேல் அதிபராகும்படி அழைத்தார்கள். ‘இதுபோலி ஆக்கிரமிப்பு நாடு. இதற்கு நான் அதிபராக இருக்க முடியாது’ என்று அவர் மறுத்தது வரலாறு.
ஒரு நூற்றாண்டையும் கடந்து தங்களது ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக போராடி வரும் பாலஸ்தீன தேசிய இன மக்களுக்கு முழு ஆதரவை இந்தியா உட்பட நூறு நாடுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. ஒப்பற்ற பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத் பிரதமர் இந்திரா கொல்லப்பட்டபோது அந்த பூத உடலுக்கு மரியாதை செலுத்தியபோது கதறி அழுததைப் பார்த்தோம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்ரேல் தனது கொடூர உளவுப்படை மொகாத் மூலம் முற்றிலும் தீர்த்துக்கட்டியபோது உருவான இயக்கம் ஹமாஸ்.
இந்த இயக்கம் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்ட இயக்கம். ஆனால் அது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் என்று மோடி அரசு பிரச்சாரம் செய்கிறது. அகண்ட இஸ்ரேல் எனும் இஸ்ரேலிய ரத்தவெறி நில ஆக்கிரமிப்புக்குத் துணைபோகிறது பா.ஜ.க. அரசு. இதன்மூலம் நமது இந்திய தேசத்தின் பஞ்சசீலக் கொள்கையின் மனிதநேய வெளிஉறவுக் கொள்கையை குப்பையில் வீசி ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரின் அகண்ட பாரத அசிங்கத்திற்கு தூபம் போட்டிருக்கிறது ஒன்றிய அரசு.
இந்தியா எனும் நம் தேசத்தின் பெயரையே பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டு, பாரத் என்ற புனைபெயரை நிஜப்பெயராக்கும் கேலிக்கூத்தும், அதன் ஊடாக 2024 தேர்தலில், தான் தோல்வி அடைவது உறுதி என்று ஆன பிறகு, கவர்னர் மாளிகை பெட்ரோல் பாட்டில் நாடகம் முதல் தனக்கு தானே குண்டு வைப்பது கேலி சித்திரமாகும். ஒரு பாதயாத்திரை என்று எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைகிறார்கள்.
நம் தேசமான இந்தியாவின் உலகே போற்றும் ஒப்பற்ற வெளிஉறவுக் கொள்கையையும் கிடப்பில் போட்டு உலக அளவில் தலைகுனிய வைப்பதும் குழந்தைகளை கொலை செய்து தனது ரத்தவெறியை போக்கிக்கொள்ளும் இஸ்ரேல் அரசுக்குத் துணைபோவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுவீசும் ரத்தவெறி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பாலஸ்தீன மக்களின் பக்கம் உறுதியாக நிற்போம்.
