நிலன்
இருநூற்றுக்கும் மேலான சிறுகதைகளையும் பத்துக்கு மேலான சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கும் எழுத்தாளர் ம.காமுத்துரை அவர்கள் கடந்த மூன்றாண்டுகால இடைவெளியில் எழுதி டிஸ்கவரி பேலஸ் பதிப்பகத்தின் வழியே வெளிவந்திருக்கும் தொகுப்புதான் ‘யானைத்தாலி’ இத்தனை தொகுப்பிற்கும் அப்பால் இக்கதைகளின் முக்கியத்துவம் என்ன என்பதாகத்தான் இக்கதைகளை நான் விரும்பியபடி ஆர்வத்தோடு வாசிக்கத் துவங்கினேன்.

சுமார் பதினேழு கதைகளைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பின் நிலம் முழுக்கவே தேனிதான். நகர்ப்புற வாழ்வைத் தவிர்த்து முழுக்க முழுக்க கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்வை, தான் பார்த்துக் கடந்து வந்த பேரனுபவங்களையெல்லாம் அகத்தின் வழியாகத் திரட்டி உருவாகியிருக்கும் கதைகள் இவை. எந்தக் கதையிலும் நகர்ப்புற வாழ்வோ, பகட்டான வாழ்விற்கான தொனியோ துளியும் இல்லை. தான் வாழ்ந்த, தன் கண் முன்னால் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிற அன்றாட மனித வாழ்வே இவரின் கதைக்களமும், கதாபாத்திர வடிவமும் எனலாம்.
இக்கதைகளைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் முழுவதுமே வர்க்கக்கதைகள் வடிவானவை. விவசாயம் சார்ந்ததோ, சாப்ட்வேர் அல்லது அரசு ஊழியர்களின் கதைகளாகவோ ஒன்றுகூட இல்லை. சந்தைக்கடைகளில் தினக்கூலி வேலை பார்ப்பவர்கள்தான் இவரது கதைகளின் கதாநாயகர்கள். உழைக்கும் மக்களின் பாடுபொருள்தான் மையம். முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வை தேனிச்சந்தைக் கடைத்தெருவில் இருந்து கொண்டு நம்மையும் கைநீட்டி அழைத்துச் செல்கிற கதைகளாக அத்தனையும் உருப் பெற்றிருக்கின்றன.
மொத்தம் பதினேழு கதைகளில் இரண்டு கதைகள் நம்பிக்கையையும், கருணையையும் கோருகிற மாறுபட்ட கதைகளாக இருக்கின்றன. திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனுக்கு நாய்க்கடி படுகிறது. மணவறைக்கு வருமுன் நாய்க்கடி சார்ந்து நடக்கிற சம்பாஷணைகளும் அதற்குப் பாட்டியால் சொல்லப்படுகிற நாட்டுமருந்து வைத்தியமும், நாய்க்கடி ஊசிக்கான அலைச்சலுமாக கதை நகர்கிறது. நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையில் சந்திரனின் திருமண வாழ்வு நடந்தேறுவதுதான் கதை. இன்னொன்று, மீசைக்காரர்கள் கதை.
எங்கிருந்தோ வந்து அவ்வூரில் தங்கியிருக்கும் மீசைக்காரர், தன் நட்பான பழக்க வழக்கத்தில் நிறைய உறவுகளைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஏதோ சூழலில் தற்கொலை செய்துவிட… மகனாகப் பழகியவனோ தற்கொலை செய்த உடலை இறக்க, போலீஸ் பயத்தில் தயங்குகிறான். அவ்விடத்தில் துணிச்சலோடு ஆதரவற்ற உடலை இறக்கிக் குளிப்பாட்டும் இடத்தில் சித்திக்காரியின் முகத்தில் மீசையிருப்பதாக உணரும் கருணை மிகுந்த கதை.
இதைத் தவிர்த்துவிட்டு மீதமுள்ள பதினைந்து கதைகளும் வர்க்கப் பின்னணியில் உருவானவைதான்.
கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் கதையில் கிழவியின் பென்ஷன் பணத்திற்காக பிள்ளைகள் அவளைப் படுத்தும் பாடு ஒருபுறம் இருக்க, ‘மௌனத் தாண்டவம்’ கதையில் வருகிற கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் நலவாரியம் வழியாக வருகிற ஓய்வூதியத்தைத் தனக்கு வேண்டாம் என்று மறுக்கிறார். ஓய்வூதியம் பெறுகிற வயதில் கிழவி காணாமல் போகையில் அவள் மூலம் வருகிற பெனஷன் பணம் போச்சே என்று புலம்புகிற பிள்ளைகளுக்கு மத்தியில், அவள் ரேஷன் அரிசியில் குருணை பொறுக்கிக் கொடுத்துவிட்டு வருகிறார். அதேபோல கட்சி ஊழியரான பிச்சையாவும் உழைக்க முடியாதவர்களுக்கு தானே ஓய்வூதியம், நான் உழைக்கும் வயதில் இருக்கிறபோது எதற்கு ஓய்வூதியம், அது வேண்டியவர்களுக்குக் கிடைக்கட்டும் என்கிறார்.
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பொருளாதாரம் நலிந்து கிடக்கையில் குடித்துவிட்டு வந்து குடும்பத்தை நிர்க்கதியாக்கும் கதைகளாக ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘யானைத்தாலி’ கதைகள் வருகின்றன. குடித்துக் குடித்து குடும்பத்தைச் சீரழிக்கும் தன் கணவனுக்காக வைதேகியோ சூட்டுக்கோலோடு காத்திருக்கிறாள். ‘யானைத்தாலி’ கதையில், எத்தனையோ வேலைகளைச் செய்து பணம் சம்பாதிக்கும் ரவி, பின் எல்லாமே காலியாகியதும் குடியைப் பின்தொடர்கிறான். அவனால் அம்மாவும் மனைவியும் அல்லோலப்படுகிறார்கள். அதேசமயம் அவர்களின் கேள்வியால் அவமானப்படும் ரவியின் கழுத்தில் அம்மாவின் சேலை ஒரு தூக்குக்கயிறாக மாறுவதுதான் ‘யானைத்தாலி’யாக உருவகித்து நிற்கிறது.
கொரோனா காலக்கதைகளாக மூன்று கதைகள் வருகின்றன. டிபன்பாக்சும் பித்தளை டாலரும் கதையில் எதுயெதுவோ வேலை செய்து சம்பாதித்து ஆடம்பரமாக தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்க்கிறான். கொரோனா கால வேலையின்மை காரணமாகக் கட்டணம் செலுத்த முடியாமல் பின் தவிக்கிறான். அதற்காக வீட்டையே அடகு வைக்கும் கதையை இது சொல்கிறது. இதில் மோடி அரசாங்கத்தின் டீமானிடைசேஷனைப் பற்றிப் போகிற போக்கில் எழுதிச் செல்கிறார்.

தலைப்பில்லாக் கதையில் வருகிற சாகுலுக்கு கொரோனா காலத்தில் அவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காகவே இறப்பு வீட்டில் சமையல் வேலைக்கு வேண்டாம் என்று மறுக்கிறார்கள். சாகுலுக்கு ரம்ஜானை நல்லபடியாகக் கொண்டாட வேண்டுமென்கிற ஆசைக்கு பணம் சம்பாதிக்க வேலை தருவதற்கு யாரும் தயாராக இல்லை. தக எனும் கதையில் பிறரை ஏமாற்றிப் பிழைக்கிற சம்பத் இந்தக் கொரோனா காலத்தில் டீ விற்றுப் பிழைப்பவனாக ஓர் உழைப்பாளியாக மாறுகிற ஊரடங்குக் காலத்தைப் பிரதிபலிக்கிறது. ஊரங்குதான் எத்தனை வகையான மனிதர்களை அடையாளம் காட்டியிருக்கிறது.
ஆறு கதைகள் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளை வர்க்கத்தின் வழியே பேசுகிறது. ‘தப்பித்தல்’ கதையில் வாடகை சைக்கிள் விட்டு பிழைப்பு நடத்துகிற ராவுத்தரை கொரோனா காலத்தில் தீவிரவாதியாகச் சித்தரித்து அவருக்குக் கொடுக்கவேண்டியிருந்த பணத்திலிருந்து தப்பிக்கிறார்கள் காத்தாயியும் அழகரும். அதே ராவுத்தரை ஜெயவேலனின் கதையில் அம்மனுக்குக் காவலாக, இந்துக்கள் வழிபடுகிற தெய்வமாக ஆக்கியிருக்கிறார் எழுத்தாளர். ராவுத்தர், ஜெயவேலனின் தாத்தா மீது அருள் வந்து ஆடுகிறார். இதுதான் எழுத்தாளனின் லட்சிய இடமும்கூட.
‘மாடோட்டி’ கதையில் வருகிற ஓகே பாஸ், மாட்டுத் தரகு வேலை பார்த்துக்கொண்டே மாட்டுக்கறி போடுகிறார். இதில் மாட்டு அரசியலும் வருகிறது. மாட்டைப் பிடித்துக் கொண்டு போகையில் துள்ளி ஓடும்போது அதன்பிடி விடாமல் இருந்து அடிபடுகிற அவருக்கு, அதனால் பணம் கைவிட்டு ஓடிவிடக்கூடாது என்கிற மனம்தானே அத்தனை வலியையும் தாண்டி இருக்கிறது. துறப்பும் பொறுப்பும் கதையில் கூலி வேலை செய்கிற கந்தசாமி, இறுதியில் பூசாரியாகிறான். அங்கும் அவன் நிராகரிக்கப்படுகையில் ஒரு சங்கத்தைத்தான் கையில் எடுக்கிறான்.
‘வேதாளம்’ கதையில் கூலியாக ஏமாற்றப்படுகிற பட்சிராசா உழைத்து முன்னேறி முதலாளியாக உருவாகிறான். ‘சுபவிரயம்’ கதையில் வாடகைக்கு சேர் எடுத்த காதணி விழாவில் அவை உடைந்துவிடவே அதற்கு யார் பொறுப்பு ஏற்பது, அதன் தண்டத்தை யார் தீர்ப்பது என்பதான இழுபறியில் இருப்பது பணம் மட்டும்தானே பாடலில் ஊறிய நாக்கும் ஆட்டத்தில் திளைத்த கால்களும் கதையில் கூத்துக்கலைஞர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைக் காண்கிறோம்.
இக்கதைகளில் முதலாளி கூலியாவதும், கூலியாக இருந்து தீவிரவாதியாக ஒருவர் முத்திரை குத்தப்படுவதும், திருடனாக இருந்து உழைப்பாளியாக மாறுவதும், கூலித்தொழிலாளி முதலாளியாவதும் பூசாரியாவுமாகவும் நிகழ்வதைக் கவனிக்க வேண்டும். இவை எல்லாமே வர்க்கப் பின்னனியில் உருவாவதை நாம் மறந்துவிடக்கூடாது.
பால்யத்துக் கதைகளாக ஜெயவேலனின் ‘கனவும்’, ‘இனி எப்பம்மா தீபாவளி?’ கதையும் இருக்கின்றன. திருவிழாவில் பர்ஸைத் தொலைத்துவிட்டு தேடுகிற ஜெயவேலனின் ‘கனவும்’ ‘ஆசையும் நம் காலத்து ஆசைகளும் நிராசைகளும் தானே’ ‘இனி எப்பம்மா தீபாவளி?’ என்று வெங்கடேசன் கனவில் தோன்றிய பணியாரத்துடனும், பட்டாசுடனும் விழித்தபோது கேட்கிற கேள்விகள் நாமும் பால்யத்தில் கேட்டதுதானே? வறுமை நம் எல்லோரையும் கனவு காணும் இடத்தில் வைத்து எல்லாவற்றையும் நிறைவேற்றி வைத்துவிடுவது தானே உண்மையும்கூட.
புனைவு வெளியில் அதீத உணர்ச்சியோடு கதைகள் வந்துகொண்டிருக்கிற இக்காலத்தில் வாழ்க்கையை யதார்த்தத்தின் பார்வையில் அணுகும் கதைகள் இவை. அவர் எளிய மக்களின் கதாநாயகன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.