பா. கெஜலட்சுமி
ரஷ்யாவிலுள்ள ஒரு சிறிய ஊரில் 1828ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ந் தேதி பிறந்த லியோ டால்ஸ்டாய், இலக்கியம் வழி உலக அமைதிக்கும், உலக மக்களின் ஒற்றுமைக்கும் வித்திட்ட மாமனிதர். ‘போர் மற்றும் அமைதி’, ‘அன்னா கரீனா’ ஆகிய புகழ் பெற்ற நாவல்களைப் படைத்த இவரை, நம் அண்ணல் காந்தி, குருவாக ஏற்றார். உண்மையின் உயர்வு, எளிய வாழ்வு, மனிதநேயம் ஆகிய அறநெறிகளை வலியுறுத்தும் இவரது கதைகளில், ‘இரண்டு பேர்’ என்னும் நெடுங்கதை மட்டும் இதுவரை தமிழில் வரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றின் இரண்டு வாக்கியங்களில் மட்டுமே இடம்பெற்ற அக்ஸின்யாவும், திமோபியுமே இப்புதினத்தின் மையப்பொறி. சிலந்தி வலையைப்போல் இவர்களைச் சுற்றியே மிக நுட்பமாக, நேர்த்தியாக கதைப் பின்னப்பட்டிருக்கிறது. இதுவரை டால்ஸ்டாயைக் கேள்விப்பட்டிராதவர்கூட இப்புதின வாசிப்பின்வழி அவரைப் பற்றிய கருத்தியலைத் தங்களின் புரிதலுக்கேற்றவாறு அகத்தில் கட்டமைத்துக்கொள்ளலாம்.
இதுதானே வாசிப்பு நல்கும் சுகானுபவம். பல புகழ்பெற்ற படைப்புகளைப் படைத்த இலக்கிய மேதையையே ஒரு பாத்திரமாக்கிப் புனைவாக்கும்போது, ஏற்கெனவே அவரை, அவர்தம் படைப்பின் வழியாக அறிந்தவர்களின் நிலைப்பாட்டைக் கருத்தில்கொண்டு நுட்பமாக; கவனமாக; நேர்த்தியாகக் கட்டமைக்க வேண்டியது மிகப் பெரிய சவாலே!
எஸ். ரா. தம்முடைய தொடர் தேடல்களிலிருந்தும், டால்ஸ்டாயின் படைப்புகளைத் தீவிரமாக வாசித்ததில் கிடைத்த பரந்த புரிதல்களிலிருந்தும் அழகாக எதிர்கொண்டிருக்கிறார். நம்மையும் கரம் பிடித்து, ரஷ்ய வெளிக்குள் பயணிக்க வைத்ததோடு, நமக்கான இடைவெளியையும் தந்திருக்கிறார்.
பனி பொழியும் ஒரு கிறிஸ்துமஸ் மாதத்தின் அதிகாலையில், ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்க, மனம் எதிலும் லயிக்காமல் எழுதிக்கொண்டிருக்கும் வயோதிக டால்ஸ்டாயிடமிருந்து தொடங்குகிறது நாவல். அக்ஸின்யாவின் இறப்பும், அதை லியோ டால்ஸ்டாயிடம் அவர் மகன் செர்ஜி தெரிவிப்பதுமாக முதல் அத்தியாயம் முடிவடைகிறது.
மது, மாது, சூதாட்டம் எனத் தன் இளம் பிராயத்தைக் கழித்த லியோவால் ஏமாற்றப்பட்ட பல பெண்களில் ஒருத்திதான் அக்ஸின்யா. ராணுவத்திலிருந்து, திரும்பி வந்த லியோவிடம், நம் மகன் எனக் கைக்குழந்தையைக் கொடுத்தபோது, அவர் ஏறெடுத்தும் பார்க்காமல், பெயரை மட்டுமே வினவினார். திமோஃபி, ‘கடவுளின் குழந்தை’ என புன்முறுவலோடு பதிலளித்தாள். கதை நெடுகிலும், புதிதாகப் பூத்த பூவின் வாசம் போல் நிறைந்திருக்கிறாள் அக்ஸின்யா.
அப்படியென்ன மற்ற பெண்களிலிருந்து மாறுபட்டிருக்கிறாள்! அவள் தனக்காகவும், தன் பிள்ளைக்காகவும் எந்த உரிமையையும் இறுதிவரை கோரவில்லை என்பதோடு, தாயின் முக்கிய மற்றும் முதல் கடமையான தந்தையை அறிமுகப்படுத்துதலைக்கூடத் தவிர்த்திருக்கிறாளென்றால், லியோவின் மீதிருந்த அன்பு, அவள் அகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்குக் கொண்டிருந்தது தெளிந்த நீரோடையாய் தெள்ளத் தெளிவாகிறது.
தந்தைக்காக ஏங்கித் தவித்து, பல கேள்வி கேட்டு முயன்ற மகனிடம், “உன் தந்தை சிறந்த கனவான். மிகவும் நல்லவர். உன்னைப் புரிந்துகொள்வார்” என்பதை மட்டுமே வலியுறுத்தி வந்தாள். தான் விரும்பித்தான் லியோவிடம் உறவு கொண்டாளே தவிர்த்து, அவர், அவளை ஏமாற்றவில்லை என்ற நிலைப்பாட்டோடு, குதிரை லாயத்தில் பணிபுரிந்துகொண்டே தன் இருப்பிடத்தைப் பண்ணைக்கு ஒதுக்குப்புறமாக அமைத்துக்கொண்டு துறவிபோல் வாழ்ந்து மறைந்திருக்கிறாள்.
மற்றோர் உள்ளம் கவர் பெண் பாத்திரம், சோபியா, லியோவின் மனைவி. பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்து; நாலாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணையை நிர்வகித்து; ஐம்பது வயதிற்குமேல் சைவத்திற்கு மாறிய தன் இணையருக்காகத் தனி உணவைத் தயாரித்து; அவரின் புரியாத எழுத்துகளைப் பிரதியெடுத்து; அவரின் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, அன்பிற்காக ஏங்கும் இப்பாத்திரப் படைப்பு, பல எழுத்துலக ஆளுமைகளின் பின்னாலிருக்கும் இரும்புத்தூணின் குறியீடு! ஏழு மொழிகளைப் பேசவும் எழுதவும் தெரிந்த;
இனிமையாக பியானோ வாசிக்க; அழகிய ஓவியம் தீட்ட ஆர்வம் கொண்ட தன் மனைவியைப் பற்றி, தன் இளைய மகளான மாஷாவிடம் இப்படி பகிர்கிறார் லியோ, “உன் அம்மாவின் வெகுளித்தனம், விளையாட்டுத்தனம் எல்லாம் போய்விட்டது. நான்தான் அவளை அப்படி ஆக்கி விட்டேன் என்ற குற்றவுணர்வு எப்போதும் எனக்குண்டு.” புகழ்பெற்ற ஆளுமைக்குக் குறிப்பாக எழுத்துலகில் கோலோச்சும் ஆண்களுக்கு இணையராகயிருப்பது வரமா! சாபமா!
இயல்பிற்கு மாறான உருவ அமைப்பினைப் பெற்ற முட்டாள் டிமிட்ரி பாத்திரப் படைப்பும் வாசகரின் நினைவுகளில் நீங்காமல் நிலைபெற்றிருப்பது திண்ணம். “சந்தோஷம் மட்டுமே அவனது உலகம். ஒருபோதும் உணவிற்காக அவன் திருடியதில்லை. யாரும் அறியாத உண்மைகளை அறிந்திருப்பவன்.”
திமோபிக்கு, அவன் தந்தையைக் காட்டிக் கொடுத்ததும் இவனே! ஜார் மன்னனின் ஆட்சி முறை, அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க லியோ, பண்ணையில் பள்ளி தொடங்கியபோது, கண்காணிப்பு அதிகாரியை அனுப்பி, பள்ளியை மூடச் செய்த அதிகார ஆணவம், கடுமையான பஞ்சம் நிலவிய போது உதவி செய்த லியோ குடும்பத்தினரை எச்சரித்தது என அக்கால ரஷ்ய அரசியலைக் காட்சிப்படுத்தியிருப்பது கூடுதல் பொலிவு!
மனைவி சோபியா, அவரது பிள்ளைகள் முக்கியமாக மாஷா, அபலை அக்ஸின்யா, தந்தைப் பாசத்திற்காக ஏங்கும் திமோபி, பண்ணைத் தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள், சமூகம், சக எழுத்தாளர்கள், வாசகர்கள் என அனைவரது பார்வையிலும் லியோ டால்ஸ்டாய் என்னவாக இருந்தார் என்று முழுமையாகச் சித்தரித்திருக்கிறது இப்புதினம்.
டால்ஸ்டாய், தனது காலத்தில் வாழ்ந்த தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், கோகோல், ஆன்டன் செகாவ் ஆகியோர்கள் மீது எவ்விதமான மதிப்பீடுகள் கொண்டிருந்தார்; ‘மிதமிஞ்சிய மத போதனைகளும், நீதிக் கருத்துகளும் டால்ஸ்டாய் படைப்புகளை ஆக்ரமித்துள்ளன’- இப்படியான அவரது காலத்தில் எழுந்த விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்தை, எஸ்.ரா.தனக்கேயுரிய நடையில் 15வது அத்தியாயத்தில், தன்னைப் பேட்டி காண மாஸ்கோவிலிருந்து வந்த இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலாகப் பதிவு செய்திருப்பது அழகியலை மெருகேற்றியிருக்கிறது.

டால்ஸ்டாய் கால யஸ்னயா போல்யானா பண்ணை, போல்யா கிராமம், துலா, மாஸ்கோ என ரஷ்யப் பெருவெளிக்குள் ஒரு தமிழ் நாவல் மூலம் பயணிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.
இலக்கியத்தில் வேண்டுமானால், டால்ஸ்டாய் புகழ்பெற்றவராக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை இப்புதினத்தின் நாயகன் திமோபியே! சிறு பிராயத்தில், மற்ற தோழமைகளைப் பார்த்துத் தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கினாலும்; தாயிடம் எத்துணை முயன்றும் தந்தை யாரெனத் தெரிந்து கொள்ள முடியாத இயலாமையில் கோபத்தை வெளிப்படுத்தினாலும்;
டிமிட்ரியின் மூலம் தந்தையை அறிந்துகொண்டபின் தங்களைப் புறக்கணித்து அவர் மட்டுமே சுகமாக வாழ்கிறார் என முரட்டுதனமாக நடந்தாலும்; பண்ணையை விட்டு வெளியேறி, பல தொழில்களைப் புரிந்து புது மனிதனாக இருப்பிடம் வந்தடைந்து தந்தையின் குதிரையோட்டியாய் மௌனத்தைக் கைக்கொள்வதிலும், நல்ல குடும்பத்தையும், சந்தோஷத்தையும் வழங்கி காலம் ஆழிப்பேரலையாய்ச் சுழன்றடித்து அனைத்துச் சொந்தங்களையும் அபகரித்த பின்னும் திமோபி, புதினத்தின் வழிநெடுகிலும், ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என ஒருமுறைகூட யாசிக்கவேயில்லை! இறுதிவரை அவன் அம்மாவின் அறிவுரைப்படி பொறுமையையும், பணியையும் ஆயுதமாக்கியதாலே, டால்ஸ்டாய், அக்ஸின்யாவின் புதைமேட்டில் மஞ்சள் மலர்களைச் சமர்ப்பித்த இறுதிக் காட்சி சாத்தியமாகியது என நெகிழ்கிறான்.
முழுநேர எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்தவர். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் 1966ல் பிறந்த இவர், கல்லூரி நாட்களிலிருந்து ரஷ்ய இலக்கியங்களை ஆழ்ந்து படித்து வருவதாகவும்; ரஷ்ய எழுத்தாளர்களைப் பற்றி விரிவான உரைகள் ஆற்றியிருப்பதாகவும் இந்நூலின் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார்.