ஜெயபால் இரத்தினம்
தன் இனத்தின் தொல்லெச்சங்களையும், பண்பாட்டு வேர்களையும் கண்டறிவதில் ஆர்வம் மிகுந்தவன் மனிதன். அதற்கான தேடல் அரசாங்கம் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சார்ந்து இருந்தாலும், ஆர்வமுள்ள ஒவ்வொருவரும், அவர் எந்தத் துறை சார்ந்தவராக இருப்பினும், அத்தகைய தேடலில் தங்களையும் இணைத்துக்கொள்கின்றனர். கவிஞரும் ஊடகவியலாளருமான ஒருவரது தேடலில் கண்டறிந்தவற்றின் சாரங்களின் தொகுப்பாக அமைந்த நூல் இது.

நூலாசிரியர்: பா. மீனாட்சிசுந்தரம், இயல்பில் ஒரு கவிஞர். இவரது கவிதைத் தொகுப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்கும் இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவர். தமிழகத்தில் நீண்டகாலமாக இயங்கிவரும் ஒரு புகழ்மிக்க தேசிய ஆங்கில நாளிதழின் கோவை பதிப்புப் அலுவலகத்தில் பல காலம் செய்தியாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். பல்வேறு பொருண்மைகள் குறித்துக் கட்டுரைகள் எழுதி வருபவர்; கொங்கு நிலத்தின் தொன்மை, வரலாறு, தொல்லெச்சங்கள் குறித்துக் களஆய்வுகள் மேற்கொள்வதோடு, தான் கண்டவற்றைக் கட்டுரையாக மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் ஆர்வம் உள்ளவர். அப்படி ஊடகங்களில் அவர் எழுதிய சில செய்திகளின் தொகுப்பே இந்நூலில் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன.
நூலின் உள்ளடக்கம்: ‘தனது நினைவின் மேற்பரப்பில் நின்ற பத்து பொற்சித்திரங்களே தன்னை எழுதத் தூண்டிய சிறுபொறிகள்’ என்ற நூலாசிரியரது கவித்துவமான சொற்றொடர்களுடன் கூடிய முன்னுரை; அதனைத் தொடர்ந்து, ‘உற்ற நண்பனின் எழுத்தில் உள்ளம் நிறைகிறேன்’ என்ற தலைப்பில், திருமுருகன் காந்தி வழங்கிய அணிந்துரை; ஆகியவற்றுடன் தொடங்குகிறது நூல். நூலாசிரியர் எழுதிய பத்துக் கட்டுரைகள், துரை.சுந்தரம் என்னும் கல்வெட்டு ஆய்வாளர் வடித்த ஒரு கட்டுரை என மொத்தம் பதினோரு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைக்குத் தொடர்புடைய ஒளிப்படங்களையும், தான் கண்ட காட்சிகள் மற்றும் அடைந்த உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மனதில் உருவான தனது சொந்தக் கவிதைகளையும் ஆங்காங்கே சேர்த்துள்ளார்.
பொருளடக்கம்: ‘தௌலத் நிஷாவும் புலிகுத்திவீரனும்’ என்னும் தலைப்பில் அமைந்த முதல் கட்டுரையே கவனம் ஈர்க்கிறது. நூலாசிரியர், கோவை உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தின் தென்புறம், தான் முன்பொருமுறை பார்த்திருந்த ஆநிரை காக்க உயிர் நீத்த வீரனுக்காகப் பழங்காலத்தில் எழுப்பப்பட்டிருந்த ’புலிகுத்தி வீரனுக்கான நடுகல்’;
சிறுகோவில்போல் அமையப்பெற்றிருந்த அக்கல் நின்ற பகுதியை தினசரி சுத்தப்படுத்திக் கற்பூரம் ஏற்றிப் பராமரித்து வந்த, வாலாங்குளக் கரையில் உள்ள மஜித் காலனியில் வாழ்ந்து வந்த தௌலத் நிஷா என்ற இஸ்லாமியப் பெண்மணியைச் சந்தித்து உரையாடியது; ஆகியவற்றை விவரிக்கும் நூலாசிரியர், சில ஆண்டுகள் கழித்து, தௌலத் நிஷாவைச் சந்திப்பதற்காக மீண்டும் அப்பகுதிக்கு அவர் சென்றபோது, பெற்ற ஏமாற்றமான அனுபவங்களை விவரித்து, தௌலத் நிஷாவை எங்கே சென்று தேடுவேன் என்ற ஏக்கத்துடனும், வாலாங்குளத்தின் இயற்கை அழகை வர்ணிக்கும் அழகிய கவிதை ஒன்றுடனும் கட்டுரையை நிறைவு செய்கிறார்.
‘அவளை’க் கண்ணுற்ற அழகிய மாலைப்பொழுது’ என்னும் தலைப்பிட்ட கட்டுரையில், நண்பர்களுடன் சென்ற ஒரு மரபு நடைப்பயணத்தின்போது பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றின் கிழக்குக் கரையோரம் அமைந்திருந்த ’ஆதாளி அம்மன்’ என்ற பெண் தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று தரிசித்ததையும், அந்த அம்மன் சிலையை நண்பர்களோடு நேரில் சரிபார்த்தபோது, அச்சிலை உண்மையில் பெண் தெய்வத்திற்கான சிலை அல்ல என்பதையும், மாறாக அது சமண தீர்த்தங்கரரான மகாவீரரது சிலையாக இருந்தது என்ற உண்மையை அறிய நேர்ந்தது என்பதையும் பதிவிடுகிறார்.
திருப்பூர் அருகே அமைந்துள்ள குட்டகம் என்னும் ஊரில் உள்ள ‘மொக்கணீசுவரர்’ கோவில் பற்றிக் குறிப்பிட்டு ‘மொக்கணி’ என்பது குதிரையின் மூக்குப்பையைக் குறிக்கும் சொல் எனவும், உண்மையில் குதிரையின் மூக்குப்பையைச் சிவனாகக் கருதி வழிபட்ட ஒரு வணிகர் எழுப்பிய கோவில்தான் அது எனவும் அகோவிலின் வரலாற்றைச் சுவைபட விவரிக்கிறது ஒரு கட்டுரை.
திருநிழலும் மண்ணு’யிருஞ்சிறந்த மைப்பே’ எனத் தொடங்கும், நான்கடி நேரிசை வெண்பா பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கோவை எட்டிமடைப் பகுதியில் உள்ள வனத்திற்குள் கண்டறியப்பட்டு, கல்வெட்டு ஆய்வாளர். பூங்குன்றன் அவர்களால் படிக்கப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறை சார்ந்த முதுபெரும் அறிஞர்கள் எல்லாம் பார்வையிட்ட ஒரு வரலாறுச் சிறப்புமிக்கக் கல்வெட்டு அது.
பொ.ஆ.ஒன்பதாம் நூற்றாண்டில், சோழ அரசனான முதலாம் ஆதித்தசோழன் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டதும் தமிழகத்தின் பெருவழிகளில் ஒன்றான ‘இராஜகேசரி பெருவழி’யைப் பற்றிக் குறிப்பிடுவதுமான இந்தக் கல்வெட்டைத் தேடிச்சென்ற நூலாசிரியர் தனது அனுபவங்களை இரண்டு கட்டுரைகளில் பதிவிட்டுள்ளார்.
‘உமையாயியும் முத்துக்கண்ணம்மாளும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில், சிறந்த சதிராட்டக்காரரும், இசைஞானம் மிக்கவரும், தேவரடியாருமான விராலிமலையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாளைச் சந்தித்த அனுபவங்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கட்டுரையாளர், முன் காலத்தில் கொடுமுடியில் வாழ்ந்த சதிராட்டக்காரரும் தேவரடியாருமான உமையாயி என்பவர் பற்றியும், அவர் வேட்கோவர் குலத்தில் பிறந்த ஒரு சிறுவனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தது குறித்தும் திருமண வயதை அடைந்தபின் அவ்வளர்ப்பு மகனுக்கு அவன் பிறந்த வெட்கோவர் இனத்திலேயே பெண் பார்த்துத் திருமணம் செய்துவைக்க முற்பட்டபோது, பெண் கொடுப்பவர், மணமகனுக்கு வேட்கோவர்களது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் ஆற்றல் இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துத் திருப்தி அடைந்த பின்னரே பெண் கொடுக்க இணங்கியதையும் விவரிக்கிறார்..
‘திரு’மூர்த்தி மலையா? ‘திரி’மூர்த்தி மலையா?’ என்று கேள்விக்குறியுடன் அமைந்த கட்டுரை, திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேசுவரர் என்னும் பெயரில் வணங்கப்படும் சிவன் சிலை உண்மையில் இருபத்தி இரண்டாம் சமண தீர்த்தங்கரான நேமிநாதரது சிலைதான் என்பதை விவரிக்கிறது. ‘கரை தின்ற ஆறு காணாக் காசிம் புலவர்’ என்ற தலைப்பிலான கட்டுரை, ராமாயணம் பாடிய அப்துல்கபூர், குலக்கல் மாரியம்மனைப் பாடிய மதார்சா இராவுத்தர், அரிச்சந்திரா நாடகம் எழுதிய ஜம்பை காசிம்புலவர் ஆகியவர்களைப் பற்றிய செய்திகளை அளிக்கின்றன.
‘அவன் பெயர் கணைக்கால் இரும்பொறை’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில், கும்கி யானை ஒன்றினால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட ‘மதுக்கரை மகராஜ்’ என உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்ட காட்டுயானை, மனிதன் கொடுத்த எந்த உணவையும் ஏற்காமல், தான் அடைபட்ட மரக்கூண்டில் மோதி மோதியே உயிரை மாய்த்துக் கொண்டது என்ற உண்மைத் தகவலை விவரித்து, யானையின் இச்செயலை, எதிரி மன்னனின் தண்ணீரைக்கூட அருந்தாமல் உயிர் விட்ட சேரமன்னன் ‘கணைக்கால் இரும்பொறை’யுடன் ஒப்பிட்டு அந்த யானையை, ‘மதுக்கரை மகராஜ்’ என்பதற்குப் பதிலாக ‘கணைக்கால் இரும்பொறை’ என அழைக்குமாறு, தான் செய்தித்தாளில் எழுதியதை நினைவுகூர்கிறார் நூலாசிரியர்.

உளவியல் மற்றும் நடைமுறை வாழ்வியல் சூழல் ஆகியவற்றைப் பிணைத்து உருவாக்கம் பெற்ற, ‘சிக்மெண்ட் பிராய்டும் எமதர்மராஜாவும்’ என்ற தலைப்பில் அமைந்த பத்தாவது கட்டுரை தனித்துவமானது. நஞ்சப்பத்தேவர் என்பவரது கனவில் எமதர்மன் தோன்றித் தனக்குக் கோவில் கட்டுமாறு ஆணையிட்டதன்படி, சிங்காநல்லூரை அடுத்த வெள்ளலூரில் நொய்யல் ஆற்றங்கரையில், அவரால் எமதர்மனுக்குக் கோவில் கட்டப்பட்டது; திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அக்கோவில் இன்றும் வழிபாட்டில் உள்ளது;
எமனுக்குரிய தெற்குத் திசையில் அமைந்த அக்கோவிலின் கருவறையில் மூலவராக, எருமை வாகனத்தில் அமர்ந்து தனது கையில் பாசக்கயிற்றைப் பிடித்தபடி எமதர்மன் வீற்றிருக்கிறார்; எமகண்ட நேரத்தில் மட்டுமே அக்கோவிலில் பூசை நிகழ்த்தப்பெறும்; பூசையின்போது மங்கல இசைக்கருவிகள் எதுவும் ஒலிக்கப்படாமல், இழவு வீட்டில் ஒலிக்கச் செய்வதுபோல சங்கும் சேகண்டியும் மட்டுமே ஒலிக்கப்படும் எனக் கோவில் குறித்த பல்வேறு செய்திகளை விவரிக்கும் கட்டுரையாளர், கோவில் கட்டப்பட்ட செயலை, ஒருவரது ஆழ்மனதிலுள்ள ஆசைகளின் வெளிப்பாடே அவரது கனவுகளாக வெளிப்படுகின்றன என்ற, உளப்பகுப்பாய்வு அறிஞர் சிக்மெண்ட் பிராய்டின் கருத்தியலுக்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
மரணம் குறித்த அச்சமும் மரணத்தை வென்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்ற ஆசையும் கொண்ட நஞ்சப்பத்தேவரின் ஆழ்மன ஆசையின் வெளிப்பாடுதான், கனவும் கோவில் அமைவும் என்கிறார் நூலாசிரியர். பூமியில் வாழ்ந்தபோது ஒருவர் செய்கின்ற பாவங்களுக்கு அவரது மரணத்துக்குப் பின்னர் தனது அவையில் தண்டணை வழங்கும் எமதர்மன், தனது காலடியில் உள்ள நொய்யலாற்றை மாசுபடுத்திவரும் குளமழித்தோர்க்கும், நதியழித்தோர்க்கும், வனமழித்தோர்க்கும் தண்டனை எதுவும் வழங்காததால் அவர்கள் ஓர் இன்ப வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று சுற்றுச்சுழல் சீர்கேடு குறித்த தனது ஆதங்கத்தைக் கொட்டியும் கட்டுரையை நிறைவு செய்கிறார்.
வானவராயர் அறக்கட்டளை சார்பில் நூலாசிரியர் நிகழ்த்திய உரையின் சாராம்சங்களைக் கொண்டு துரை.சுந்தரம் என்பவர் ‘இதுவல்லவோ எங்கள் கோவை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை பதினோராவதாக இடம் பெற்றுள்ளது. காளமேகப்புலவர், கடைமொழிமாற்று இலக்கணப்படி எழுதிய ஒரு வெண்பாவுக்கான விளக்கம், திப்பு சுல்தான் தொடர்பான சில தகவல்கள், யானைகள் குறித்த தகவல்கள், நாமக்கல் கவிஞரைப் பற்றிய செய்திகள், வளமையின் குறியீடாகப் பெண் கருதப்படுவது, கோவை நகரில் காணப்படும் நடுகல், கோவையின் முதல் பெண் மருத்துவர் உள்ளிட்ட ஏராளமான செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
கொங்குப் பகுதிகளின் தொன்மை மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் குறித்த பெருமிதத்துடனும், ஒரு கவிஞன் என்ற நிலையில் உணர்வுமயமாகவும், ஓர் அச்சு ஊடகவியலாளராகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக்கொண்டு சுருக்கமாகவும் எளிமையாகவும் கட்டுரைகளை வடித்துள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். கொங்கு மண்ணைச் சார்ந்தவர்களுக்கும், கோவையின் பெருமைகளை அறிந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கும் பயனுள்ள தகவல்களைச் சுவைபட வழங்கும் நூல் இது.
