கெஜலட்சுமி
எக்காலத்திலும் வயது வரம்பின்றி, அனைவராலும் கதைகள், விரும்பப்படுவதற்குக் காரணம், அவை வெறும் அனுபவத் திரட்டுகளல்ல; நம்முள் அமிழ்ந்து கிடக்கும் உணர்வுகளை மலரச் செய்து, புறத்தே நின்று நம்மை நாமே தரிசிக்கும் சுகானுபவத்தை வழங்குகின்றதால்தான். ஏக்கங்களாலும், குழப்பங்களாலும் சூழப்பட்ட மனதிற்குக் கற்பனைக் கனவுலகத்தையும், சூழலைச் சமரசம் செய்துகொள்ளும் யதார்த்த உலகத்தையும் வேறுபடுத்திக்காட்டி; தெளிவுபடுத்தி; சக மனிதனிடம் புரிந்துணர்வைப் பூக்கச் செய்வதால்தான் கதைகள், இன்னும் தீர்ந்து போகாமல், உயிர்ப்புடன் திகழ்கின்றன.
ஆண்களாலும், அவர்களது உணர்வுகளாலும் மட்டுமே இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் மனம், அதனை எதிர்கொள்ள; சமயங்களில் கடந்துசெல்ல, எத்தகைய அகப்போராட்டங்களைக் கைக்கொள்கிறது என்பதை அப்பால் சார்ந்த படைப்பாளியால் மட்டுமே அழுத்தமாகவும், நுட்பமாகவும் பதிவு செய்ய இயலும் என்பதற்கு இத்தொகுப்பே ஆகச் சிறந்த சாட்சி.

பெண்களைச் சுற்றியே, பெண்களின் மீதே, பண்பாடும், குடும்ப அரசியலும், சமூக மதிப்பீடுகளும், அற விழுமியங்களும் கட்டமைக்கப்பட்டிருப்பதால், காலில் அப்பிய ஈரக்களிமண்ணைப்போல், மன வேதனைகளோடுதான் அவள், தன் வாழ்வினை முன்னெடுத்துச்செல்ல வேண்டியிருக்கிறது.
தொகுப்பின் அநேக கதைகள் சொந்த நிலத்தின் இன்றியமையாமையை ஆங்காங்கே மறைவாக வலியுறுத்தினாலும், ‘நெகிழிக் கனவு’, ‘அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்’ ஆகிய இரு கதைகள் நேரிடையாகவே நிலமற்றவனின் பாடுகளை இருவேறுபட்ட கோணங்களில் அலசுகினறன.
கல்லறைத் தோட்டத்துக் கல்லறை ஒன்றை, தன் வசிப்பிடமாக்கிய நிரந்தர வேலையற்ற ஒருவன், குளிரைத் தாங்க முடியாமல், ‘இந்த கல்லறை தானாகத் திறந்துவிடாதா! நிம்மதியாகத் தூங்கிவிட்டு வெளியேற என நம்மையும் அவனுடன் சேர்த்து ஆதங்கப்பட வைக்கிறான் ‘நெகிழிக் கனவு’ கதையில். வீடு என்ற பெயரளவில் சொல்லிக்கொள்ளும் நாலு சுவற்றிற்குக் குடிபெயர்ந்தாலும் கழிப்பறையில்லாமல், தினந்தோறும் தன் கழிவுகளை அப்புறப்படுத்த அவன் கைக்கொள்ளும் வழிகளை வாசிக்கையில், சொந்த வீடு, வெறும் கௌரவத்திற்கான குறியீடல்ல; தனக்கான இருப்பிடம்தான் வாழ்க்கையின் முதல் சுதந்திரம் என்ற கருத்தியலை விதைக்கிறது.
மாறாக, ‘வீடற்ற பொறம்போக்கு’ என்று தன்மேல் விழுந்த பழிச்சொற்களைப் போக்க, உயிரற்ற வீடைத் தனதாக்கிக்கொள்ளும் அசுர முயற்சியில், உயிருள்ள மனைவியின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதோடு; அவள் தனிமையையும், தகிப்பையும் கொஞ்சங்கூடப் புரிந்துகொள்ள யத்தனிக்காமல், ‘எப்பவும் இதே நினைப்போடதான் இருப்பியா?’ என்று காயப்படுத்தும் ஆரோக்கியசாமியின் கதையே ‘அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்’.
நமது மரபு வேளாண்மையாக இருந்த வரையில், பிற உயிர்கள் அனைத்தையும் தன்னுயிர்போல் பேணிக் காத்து, அவற்றிற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான் மாட்சிமை பொருந்திய அக்கால மனிதன். ஆனால், பன்னாட்டுப் பெருநிறுவனங்களோடு ஒத்திசைந்த வாழ்வாகிப்போன இக்காலச் சூழலில், பிற உயிர்களின் இருப்பிடத்தையும், நீர்நிலைகளையும் அழித்து தனக்கான பெரு வசதிகளை மட்டுமே விரிவாக்கிக்கொள்ளும் போக்கை சிரமேற்றிருக்கிறான். ‘பருந்து’, ‘செல்வி’, ‘மொட்ட வாலு’, ‘பெரிய ஆடு’ ஆகிய கதைகளில் முறையே பருந்து, நாய், ஆடு ஆகியவற்றை அன்பாக அரவணைத்து, ஆதரித்த கதை மாந்தர்களின் இயல்பை முன்னிறுத்துகின்றார் ஆசிரியர். மேற்கண்ட கதைகளின் கருவை தம் வெவ்வேறு விசாலமான, மாறுபட்ட பார்வையால் வேறுபடுத்திப் புனைந்திருக்கிறார்.
இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கதைகளிலும், பெரும் பிரச்சனைகளையோ, கடினமான சூழ்நிலைகளையோ பிரதானப்படுத்த பிரயத்தனம் செய்யவில்லை. ஆகையால், எதிர்பாராத திருப்பங்களோ, பெரு முடிச்சுகளை, விடுவிக்கும் முடிவுகளோ காட்சிப்படுத்தப்படவில்லை. பெயர்கூடத் தேவைப்படாத பல எளிய மனிதர்களின் நுண்ணுணர்வுகளைக் கூர்மையாக அவதானித்து கட்டமைத்திருப்பதால், எளிய நடையே விரவியிருக்கிறது. ‘மொட்டை வாலு” கதையில், தனக்குப் போக்குக் காட்டும் நாயினைப் பார்த்து, “தனக்கு மொட்டை வாலு மட்டும்தான் இப்போதைக்கு இல்லாத குறை என நினைத்துக் கொண்டாள் என்பதாக முற்றுப்பெறுகிறது. இம்மாதிரி எளிய வாக்கிய அமைப்புகள் கதைக்கு வலு சேர்ப்பதோடு, கரை ஓரத்தில் நின்று அலைகளில் பட்டும்படாமல் கால் நனைப்பதுபோல் வாசகனின் மனதைப் போகிற போக்கில் வருடிச் செல்கிறது.
‘செல்வி’யின் நாயகன் தாஸ், தன் அம்மாவை வேறொருவரோடு பார்த்த பின், செல்வி எனும் நாய்க்குட்டியைக் கையிலேந்தி, வீட்டைவிட்டு வெளியேறுகிறான். பட்டறையில் தங்கிக்கொண்டு, தனக்குக் கிடைக்கும் உணவைச் செல்வியோடு பகிர்ந்து கொள்கிறான். பருவமடைந்து, தெரு நாய்களுடன் இணை சேருவதையறிந்து, நேசித்த செல்வியை எங்ஙனம் வெறுக்கிறான் என்று சொல்லிச் செல்கிறது அக்கதை. சக மனிதன் மீது படிமமாக உறைந்திருக்கும் வெறுப்பு, காரணமற்றவர்களின்மேல் வெளிப்படும் உளவியல் சிக்கலை அலசுகிறது.
“எல்லா சந்தோஷங்களைத் தாத்தாவால குடிசைக்குக் கொண்டுவந்து சேர்க்க முடிகிறது. அவர் வைத்துவிட்டுச் செல்லும் சந்தோஷங்களைத் திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்வதுபோல் இருக்கும் குடிசைக்குள் போய் வருவது.” சிறிய குடிசையில் தனித்து வாழும் தாத்தாவுடனான அன்பைப் பகிர்ந்து கொள்ளும் பேத்தியின் வரிகள், ‘பெரிய ஆடு’ கதையிலிருந்து.
வளரிளம் பருவம் மிகச் சிக்கலானது மட்டுமின்றி உணர்வுப்பூர்வமானதும் கூட. கனன்றுகொண்டிருக்கும் கங்காய் அடிமனதின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களும் வெறுப்பும் வேரூன்றுவது இப்பருவத்தில்தான். கவிதா, தன் தோழிகளான ஜெயா, மாலா, சோபியாவுடன் இயற்கை தன் அற்புதங்களை விரித்து வைத்திருக்கும் கிராமத்துக் குளத்தில் மூழ்கி ஆம்பக்காய் பறிப்பது, வாத்து முட்டையைக் கண்டெடுப்பது, தொட்டு விளையாடுவது என பால்யத்தைக் கொண்டாடிக் களிக்கிறாள், ‘ஆம்பக்காய்’ கதையில்.
முரணாக, பள்ளியில் கொலுசு அணிந்திருக்கும் சக மாணவியின் சலங்கை சத்தத்தால் ஈர்க்கப்பட்டுப் பித்தாகிறாள், ‘வெற்றிடக் குளம்’ நாயகி. பாட்டியிடம் வளர்வதால் சிறிய ஆசையைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாமை இடைமறிக்கிறது. தனக்குப் பிடித்த ஒன்றிலியே நிலைத்திருக்கும்போது, சுற்றியிருப்பதெல்லாம் அதுவாகவே வெளிப்படும். சிறுமியின் ஆசையைத் தன் இளைய மகளிடம் பரிமாறுகிறாள் பாட்டி. பேத்திக்குக் கொலுசு கிடைத்து மகிழ்ந்தாளா! வாசித்துத்தான் அறிய வேண்டும்!
“இயலாமையின் வார்த்தைகள் அதிகாரத்தோட இருக்கும்” என்ற உரைக்கும் ஆசிரியர், மனப்பிறழ்வு மாந்தர்களையும் இரண்டு கதைகளில் உலவ விடுகிறார். நிகழ்காலத்தில் மட்டுமே வாழும் இவர்களைக் கண்டுதான் நாம் பயப்படுகிறோம்; பரிதாபப்படுகிறோம்; புறக்கணிக்கிறோம். இவர்களைக்கூட நம் மூத்தோர் சமூகம் மடங்களைக் கட்டிப் பாதுகாத்திருக்கிறது. பெற்றோரையே பொறுப்பேற்க மறுக்கும் காலத்தில் இதையெல்லாம் பேசிக்கொண்டு…!
“வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் எப்போது அப்படி இருப்பேன்! எந்த நிலையில் இருப்பேன் என்று என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் போராட்டமே” என்கிற வரிக்குச் சொந்தமான பெண்ணாக சிறிது நேரத்திற்கு நாம் மாறிவிடுவோம், ‘கடல் கரம் பற்றிய தடம்’ வாசிக்கும்போது.
‘கல்லானாலும் கணவன்’ கற்பிதம், பெண்ணை எத்தகைய சுயசிந்தனையற்றவளாக உருமாற்றி விடுகிறது. மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இரவானால் வெளியே துரத்தி விடும் விசித்திரக் கணவன். இரவு முழுவதும், மாடிப்படியின் கீழே தன்னைச் சுருக்கிக் கொண்டும்; நடந்துகொண்டும்; பெண்கள் கூட்டம் நிரம்பியிருக்கும் இரவுக் காட்சியில் நேரத்தைச் செலவிட்டும், அதிகாலை அவசரமாக வீடடைந்து, இயற்கை உபாதைகளை வெளியேற்றிக்கொள்கிறாள்.

நல்லவர் துணையால் உண்டுஉறைவிடப் பள்ளியில் இணைத்துக்கொண்டாலும், கணவனுக்காக அவளின் காத்திருப்பும், ‘கரிச்சான்’ கதையில் பல பெண்களுடன் தொடர்பிலிருக்கும் கணவனை ஏற்றுக்கொள்ளும் பெண்ணின் மனம், கணவன் நாடிச் செல்லும் அந்நியப் பெண்ணின் மீது உமிழும் வெறுப்பும் நம் கண்களை வியப்பினால் விரிய வைக்கிறது. இப்படியான பேதை, மங்கை, மடந்தை என பெண்ணின் பல பருவநிலை உணர்வுகளைத் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறது இத்தொகுப்பு.
சோறு பதத்திற்கான வரிகள். “சோப்பின் கவரைப்போல கவனிக்காமல் கிடக்கும் தனிமை” என தனிமையையும், “அட்டைப் பெட்டியில் குளிரால் நடுங்கி தலை கவிழ்ந்து இருக்கும் குற்றமற்ற கைதியைப்போல” என கள்ளப்பிராந்தின் ஒப்புமையும் அழகியலைச் செப்புகிறது. நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குமொழி கதைக்கு வலிமை! அன்றாட வாழ்வின் சிறு தெறிப்புகளிலிருந்து கதைக்கான கரு கண்டெடுக்கப்பட்டு; யதார்த்த உணர்வின் தாக்கத்தைச் சிறுகதையாக மாற்றும் கலையைக் கைவரப் பெற்றிருக்கும் ஆசிரியர் அமுதா ஆர்த்திக்கு வாழ்த்துகள்!
படிகம் புத்தக மையத்தில், தட்டச்சராகப் பணிபுரிந்து வரும் இந்நூலாசிரியர், கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லாஞ்சிவிளை என்னும் ஊரில் வசித்து வருகிறார். அமுதா என்பது இயற்பெயர். மகளின் பெயரான ஆர்த்தியை இணைத்து அமுதா ஆர்த்தி என்ற பெயரில் சிறுகதை எழுதி வருகிறார்.