து.பா.பரமேஸ்வரி
தேர்ந்த சமூக நலன் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் சமூக மனிதர்களின் பிற்போக்குச் சிந்தனைகளைச் செம்மைப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது. அதை மிகச்சில படைப்பாளிகள் முழு வீச்சுகொண்டு செயலாக்கப்படுத்தியுள்ளனர் இலக்கியங்கள் வழியாக. இந்த சீர்திருத்தத்திற்கு விரிந்த தேசங்களின் ஒவ்வொரு முனையும் அலச வேண்டியுள்ளது. பல கோணங்கள் கொண்ட சமூகத்தைக் கண்டறியும் அவசியமும் படைப்பாளிகளுக்கு உண்டு.

பல பாரம்பரியங்களின் வரலாறுகளை முழுமையாக அறிந்துவைக்க வேண்டிய தேவையும் அவ்வப்போது இருந்து வருகிறது. அப்போதே சமகாலத்தில் இடைசெருகிய பல புதிய வழக்கங்களுடன் நமது பண்டைய வழமைகளை ஒப்பீட்டளவில் புரிந்து கொள்ள முடியும். இது காலத்தின் தேவையாக இருக்கிறது.
இலக்கியத்தின் இந்தப் புள்ளியை தேவையின் அடிப்படையில் படைப்பாக்கம் செய்துள்ளார் ‘அமெரிக்கக்காரி’ சிறுகதைத் தொகுப்பின் கதாசிரியர் அ. முத்துலிங்கம் அவர்கள். ‘காலச்சுவடு’ பதிப்பகம் பிரசுரித்து வழங்கிய இந்தத் தொகுப்பு உலக தேசங்களின் 16 வித்தியாசமான மனிதர்களைத் தனது தொகுப்பிற்குள் ஊடாட வைத்து புதிய சட்டகத்தை இலக்கியப் புலத்திற்கு அறிமுகம் செய்துள்ளார்.
ஒருபுறம் உலகளாவிய பலதரப்பட்ட பழங்குடிகளின் சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வாசகரின் அறிவை உலக மரபுக்குடிகளின் வரலாற்றைப் புரட்டச் செய்த கதைக்கரார் மறுபுறம் நில மாந்தர்களான இலங்கையின் பிறிதொரு முகத்தின் புறத்தில் வாழும் சிறுபான்மை மனிதர்களின் யதார்த்த வாழ்வைச் சுட்டியுள்ளார்.
இலங்கை மக்களின் மொழி, கலாச்சாரம், சம்பாஷணை பழக்கவழக்கங்கள், பிற மொழிகள் அவர்கள் மீது காவிய போது அந்த மொழியின் ஒலி அவர்களின் தொனியிலிருந்து வெளிப்படும் பாங்கு, பிற தேசத்தவரிடமிருந்து இலங்கை மனிதர்கள் வேறுபடும் இடங்கள் என தொகுப்பு ஈழ மக்களை மனம் திறந்து வாசிக்க வழங்குகிறது.
நம்மின் மக்கள் நம்மைவிட்டு பல மைல்கல் கடந்து வாழும்போது அவர்களின் வாழ்க்கை ஆதாரங்கள், அங்கங்கள், குடும்ப உறவுகள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தத் தொகுப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது. நமது மூதாதயரைப் பற்றி அறிந்து கொள்ள வரலாறுகளையும் கல்வெட்டுகளையும் தேடிப்பிடிக்கும் ஆர்வமும் ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இத்தொகுப்பு ஏற்படுத்துகிறது . ஒரு நூறு நூல்கள் வாசித்து நெகிழச் செய்யாத பேராவலை இந்தத் தொகுப்பு இறுகிப்பிடித்துக் கொள்கிறது.
நிலத்திலிருந்து ஊற்றெடுக்கும் சுனைநீர் போல மனிதர் உணர்வுகள் பொங்கி வழிகிறது. காரணம் இந்திய மனநிலை எப்போதும் மேற்கத்திய மக்களின் நிலபுலங்களை, வாழ்வாதாரங்களைக் குறித்து அறியும் பேராவல் மேலோங்கி இருக்கும். நம்மின் தள்ளி வாழும் இரத்த உறவுகளைப் பற்றிய இலக்கியங்கள் அதிகம் கவனப்படுத்தவில்லை. அந்தக் குறையை இந்தத் தொகுப்பு முழுமையாக நிவர்த்தி செய்துள்ளது.
அயல் நாடுகளில் பெரிதாக கவனப்படும் பரிசாரகத் துறை சார்ந்த தகவல்கள், நடைமுறையில் பின்பற்றப்படும் விதிகள் குறித்து தெரிந்துகொள்ளும் சுவாரஸ்ய அனுபவத்தை தொகுப்பின் ‘மட்டுப்படுத்தப்படாத வினைச் சொற்கள்’ கதை வழங்குகிறது. இயல்பாகவே முத்துலிங்கத்தின் மொழிப்புலம் வாசிப்பின் வசீகரம், வாசகரை கதைக்குள் கட்டியிழுக்கும் திராணி வெகு இயல்பாக அவரின் எழுத்துக்கு உண்டு. அவற்றையெல்லாம் மீறிய ஒரு படைப்பாகவே இந்தக் கதைத் தொகுப்பு நமக்கு அறிமுகமாகிறது.
பூகோள அறிவியலின் உச்சபட்சக் கண்டுபிடிப்பு தேதிக் கோட்பாடுகள். இந்தத் தேதிக் கோட்பாடுகள் இரண்டு தேசங்களின் கையளவு தூரத்தில் இருந்துகொண்டு நாட்களையே புரட்டிவிடுகிறது என்கிற தகவல் ‘மயான பராமரிப்பாளர்’ கதை ஊடாக வாசித்தறிந்த எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
பூகோளக் கட்டமைப்பில் இந்தத் தேதிக்கோட்பாடு எவ்வாறெல்லாம் நிலப்பிரிவிலும் மனித மனத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை கதாசிரியர் கிரீன்விச் நகரத்தின் மெரிடியன் கோட்டில் கீறி வைத்திருக்கும் இடத்தின் கோபுரத்தில் இருந்து தினமும் சரியாக ஒரு மணிக்கு வீசப்படும் கறுப்புப் பந்து பற்றியும், பசிபிக் சமுத்திரத்தில் அருகருகே அமைந்துள்ள சமோவா மற்றும் ரொங்கோ தீவுகளில் வடிவமைக்கப்பட்ட சர்வதேச தேதிக்கோட்டின் அடிப்படையில் ஒரு முழு நாள் மாற்றம் பெறுவது குறித்தும் நூல் வழியாக அறியப்படுத்துகிறார்.
சாதிப்பாகுபாடு தமிழகத்தைவிட ஈழத்தில் கடுமையாக இருந்து வந்ததை கதை, தொங்கல் வைத்து சேலை உடுத்தும் வழக்கம் உயர்சாதிப் பெண்களிடம் இருந்து வந்தததையும் தாழ்த்தப்பட்ட குடிமை சாதிப் பெண்கள் தொங்கல் வைத்து சேலை கட்டியதால் உண்டான கலவரம் பற்றியும் அதைத் தீர்க்க கவுண் முந்து ஏஜெண்டாக இருந்த பிறீமன் துரை நேரில் வந்து சமரசம் செய்ததையும் கவனப்படுத்துகிற புதிய தகவல்கள். ஆங்கிலேய ஆட்சியில் சாதிப் பிரிவினை குறைந்து காணப்பட்டதையும் ஆங்கில அரசும் அதிகாரிகளும் சாதிப்பாகுபாடின்றி அனைவரிடமும் கலந்து பழகி வந்த செய்தியையும் கதை சுட்டிக்காட்டுகிறது.
லூசியா கதையில் காட்டப்பட்ட வரலாற்றுக் காலங்கள் சில கணங்கள் ஆச்சரியமூட்டியவை.அவை ஒவ்வொன்றையும் வரலாற்றுக் குறிப்புகளாக தேடிப்பிடித்து கதைக்குள் பதிவுசெய்துள்ளது கதைகள் வெறும் வாசிக்கும் ஆர்வத்தின் தூண்டலாக மட்டும் இருந்து விடாமல் பண்டைய மனிதர்களின் வரலாறுகள், நிலக்காட்சிகள், வாழ்க்கை நெறிகள், ஆதாரங்கள் என அனைத்தையும் அறிந்துகொள்ளும் இதிகாசப் புலமாக இருக்க வேண்டும் என்பதை இலக்கியத்தளத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
பதின்மப் பருவத்தின் கனவுகளுடன் வாழும் பிள்ளைகள் மத்தியில் புரட்சிப் போராட்டம், இலக்கை அடைய எதற்கும் துணியும் ஆவேசம், துப்பாக்கிகள், கிரேனுட்டுகள், குண்டுகள் உடனான போர், கொள்கைக்காகப் போராடுவது, சொந்த நிலத்தை மீட்டெடுக்க உயிரையும் பொருட்டாக நினைக்காமல் துணிந்து எதிர்த்து நிற்பது, எதிரியுடன் சரிக்குச் சமமாக சண்டையில் துணிவது என ஈழ தேசத்து ரேணுகா போன்ற போராளி குணாதிசயங்கள் கொண்ட எண்ணற்ற பெண்பிள்ளைகளை போராட்ட இயக்கங்கள் கொண்டிருப்பதை ‘பொற்கொடியும் பார்ப்பாள்’ கதையின் வழியாக அறிய முடிகிறது.
கதை யாழ்பாணத்துக் கோட்டையின் அரசாங்க ஆக்கிரமிப்பின் மீதான இயக்கப் போராளிகளின் கடுமையான புரட்சிப் போரை முன்னிறுத்திப் படைக்கப்பட்டுள்ளது. பல சிங்கள தேசத்து வரலாறுகளை கதை பதிவு செய்துள்ளது. 350 வருடங்களுக்குமுன் போர்ச்சுகீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றிய போது 107 நாட்கள் இந்தக் கோட்டையை சுற்றி முற்றுகையிட்டு போர் முடிவிற்கு வந்த சரித்திரம், இந்தக் கோட்டையை சிங்கள ராணுவத்திடமிருந்து கைப்பற்றத் தொடங்கிய யுத்தம் யூன் மாதம் 1990ஆம் ஆண்டு தொடங்கியதாகவும் பயிற்றுவிக்கப்பட்ட பெண்ணியக்கியப் படை முதல்முறையாக இதில் பங்கு கொண்டது எனவும் அதில் பெண் போரளியாக ரேணுகா தலைமை தாங்கி வழிநடத்திய தகவல்கள் இலங்கையின் போர் வரலாறுகள்.
இலக்கியப் புனைவுகளை ஒருபோதும் நிஜவாழ்க்கையில் ஒப்பிட்டு நமக்கு நாமே மனச்சிக்கலை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது என்பதை ‘வெள்ளிக்கரண்டி’ கதை இதுவரை நமக்குள்ளிருந்த அமானுஷ்யங்கள் மாயாலோகப் பிம்பங்கள், ஆவி உலகத்து மூடநம்பிக்கைகள் போன்ற கட்டுக்கதைகளுக்கு உயிரூட்டும் விதமாக சித்தரிக்கப்பட்ட கற்பனைக் கதை. வாசிக்கும்போது அயல் இலக்கிய மாயலோகப படைப்புகளை நினைவில் நிறுத்துகிறது.
‘உடனே திரும்ப வேண்டும்’ கதை வாசிப்பு ஒரு முழு திரில் திரைப்படத்தைக் கண்டுகளித்த சுவாரஸ்யத்தை வழங்குகிறது. வாசிக்கும் போதே ஆப்பிரிக்கா கண்டத்தின் நிலங்களை குறிப்பாக நைஜீரியா பிரதேசத்தைச் சுற்றித் திரிய வைத்தது. அயல்நாட்டில் சிலநாட்கள் தங்கி வாழ்ந்த பரபரப்பை கதாசிரியர் எதிர்கொண்ட அனுபவங்களின் வாயிலாக நமக்குக் கடத்துகிறார்.
மனித மனம் நிமிடத்திற்கொரு முறை மரம் விட்டு கிளையொன்றாகத் தாவிக் கொண்டிருக்கும் குரங்குபோல அப்போதைய சூழ்நிலையின் பதற்றத்தில் கடுமையான முடிவுகளை வாய்விட்டு உளறி விடும். சாவகாசமாக சுய சிந்தனையின் தன்னியல்பில் அமர்ந்தபின் நிகழ்கண யதார்த்தத்திற்கு வந்து சேரும். பதற்றம், பயம், அவசரகதி, பரபரப்பு அனைத்தும் மனதின் தற்காலிகக் கழிவுகள். நோய்மை நீங்கி அமைதியும் நிதானமும் மீண்டும் கூடிவரும் வேளை இயல்பின் நிஜத்தை உணர்ந்துகொள்ளும் என்கிற மனிதர் நிதர்சனத்தை கதைகள் ஒவ்வொன்றும் உணர்த்துகின்றன.

முத்துலிங்கம் அவர்களின் எழுத்துப்பாணி சாதாரண இலக்கியக் கட்டமைப்பிற்குள் அடங்காதது. மொழிப் புலத்தில் அவருக்கே உரித்தான சிங்கள நடைபலம். வாசிக்க புதுவிதமான மொழி அனுபவத்தை ஒவ்வொரு கதையிலும் உணர முடிந்தது. தொகுப்பு முழுவதும் கதைக்காரரே பெரும்பாலும் தனது அத்தனை கற்றலையும் கடத்தலையும் நுகர்தலையும் நுண்ணறிவின் நுணுக்கங்களையும் பேசித் தீர்க்கிறார். வித்தியாசமான படைப்பு போக்கு கொண்ட தொகுப்பு புதிய எழுத்தாளர்களின் இலக்கியப்புலத்தில் விரிவான பார்வையை திறந்து விடுகிறது.
மறைந்துபோன சில மொழிகள், புதைந்து விட்ட சில மொழிகள், சுருங்கிக் கிடக்கும் சில மொழிகள் என ஆதிமொழிகள் இன்று அநேகம் காணாமல் போயின. உலகில் தோன்றிய கணக்கற்ற மொழிகளில் இன்றுவரை 7,000 மொழிகள் எங்கோ மூலையில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றில் 2,000 மொழிகள் அழிவில் இருப்பதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய ஹீப்ரூ மொழியும் அராமிக் மொழியும் சமகாலத்து மொழிகள். இதில் இன்று அராமிக் வழக்கொழிந்து வருகின்றது. வெறும் எழுத்து வடிவத்தில் மட்டுமே வாழ்ந்து வரும் அராமிக் மொழி பேச்சுவழக்கில் நலிந்து வருகிறது. மொழியைப் பகிர்ந்து கொள்ள அந்த மொழிக்குடி மக்கள் சிதறி விட்டனர். ஒரு மொழி மண்ணில் தழைக்கவேண்டுமானால் அதற்கென்று ஒரு நாடு அவசியம்.
நாடு இருப்பதால் ஹீப்ரூ இன்றும் வாழ்கிறது. பிரத்யேகமான நாடு ஒன்று தனக்கென இல்லாததால் அராமிக் மொழி இறந்து வருகிறது. ‘ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை’ என்கிற நூலாசிரியரின் ஆதங்கக் குரல் ‘சுவருடன் பேசும் மனிதர்’ கதையெங்கும் உரத்து ஒலிக்கிறது. இந்த துர்நிலைக்குக் காரணம் மனிதர் ஆதிக்கம் மொழியின் மீதும் படர்ந்து வருவதே. சிங்களத்தின் ஆதிக்கத்தில் இலங்கையில் தமிழ் சுருங்கி அழிந்து வருவது சமகால மொழியாதிக்கத்தின் மிக முக்கியமான குறிப்பிடும்படியான சான்று.
அயல்நாடுகளில் சிதறிப் போன ஒரு மில்லியன் அராமிக் இன மக்களின் வலிகளை கதாசிரியரிடம் முடி திருத்தும் கலைஞன் பகிர்ந்து கொண்ட தனது இனக்குடியின் ஆதங்கத்தை வாசகருக்குக் கடத்துகிறது கதை.
மொழிக்கென்று தனித்த நாடு, தனியான தேசியகீதம் இல்லையென்றால் அந்த மொழி எத்தனை பழைமைவாய்ந்ததாக இருந்ததாலும் அதன் வீழ்ச்சி உறுதி என்று அறுதியிட்டுக் கூறுகிறார் கதாசிரியர். கதை கலையின் சிறப்பையும் கலைஞனின் செய்தொழில் மீது கொண்ட ஆர்வத்தையும் குறிப்பிடுகிறது. எந்தத் தொழிலாக இருந்தாலும் அது ஒரு கலைபோல பாவித்தால் நிச்சயம் நமக்கான தனித்த பாணியை, நேர்த்தியை, ஒழுங்கை, வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதை கதை வழியாக மொழி குறித்த அறியப்படாத பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார் முத்துலிங்கம்.
ஒரு திடுக்கிடும் தகவலை பதிவுசெய்கிறது கதை. “அராமிக் மொழி யேசு பேசிய மொழி” என்கிற செய்தி பைபிளின் மொழி குறித்த உண்மையை அவிழ்த்து விடுகிறது. பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட காலத்து அரசுகளின் ஆதிக்கத்தை வெளிப்படுத்த மொழி குறித்த இந்த வரலாறு போதுமானதாக இருக்கிறது. யேசுவின் மொழி குறித்த இந்த புதிய தகவல் இருட்டடிப்பு செய்யப்பட்டது மொழி ஆதிக்கத்தின் மற்றொரு முகம்.
படைப்பாளியின் திறனைவிட வாசகரின் வாசிப்பு மிக முக்கியம். சோர்வு ஏற்படுத்தாத அறிவுச் செறிவையும் உலக ஞானத்தையும் எழுத்து மட்டும் வழங்க முடியும் என்பதை முத்துலிங்கம் நிரூபித்துள்ளார். அயல்மொழி எழுத்தாளர்களின் படைப்புகளான ஆன் பாடலெட் அவர்கள் ஏழுதிய அவுஸ்திரேலியா ஆதிவாசிகள், யசுநாரி கவபாட்டா அவர்களின் ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ போன்ற நூல்களை அறிமுகப்படுத்தி பிற தேசத்து படைப்புகளைத் திறந்து காட்டுகிறது நூல்.
மனிதகுலம் கண்டுபிடித்த முதல் காற்று வாத்தியமாக, ஆதிவாசி மக்களின் ஆதி வாத்தியமாக உள்ளது. டிட்ஜெரிடு என்கிற வாத்தியம்.
இது யூகலிப்டஸ் மரத்தை கரையான் நடுவால் அரித்து, ஓட்டை உண்டாக்கி இயற்கையாகக் கிடைக்கும் வாத்தியம் என்கிற இசை குறித்த வரலாறும் புதியது. ஸ்வீடனில் ஒருவர் நூறு புகைப்படங்களையும் நூறு பெயர்களையும் கொடுத்தால் அவர் இன்ன புகைப்படத்துக்கு இன்ன பெயர் என்பதை சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார் என்கிற தகவல் விசேஷம்.
பொது சமூகத்தைப் பார்த்துப் பழகிய வாசகருக்கு உலகின் விளிம்பில் வாழும் மனிதர்களைக் காட்டி சமூகத்தின் உணர்வியல், உளவியல், வாழ்வியல், சார்பியல் என அனைத்தின் மீதுள்ள முன்முடிவுக் கட்டுக்களை உடைத்தும் பொதுமனப்பான்மையை தகர்த்தும் புதிய திசை நோக்கி விரல் சுட்டுகிறாள் அமெரிக்காக்காரி.