மயிலம் இளமுருகு
செஞ்சி தமிழினியன் என்ற புனைபெயரைக் கொண்ட இவரின் இயற்பெயர் விவேகானந்தன். என்னுடைய அனுபவங்களின் வழியே சில நகர்த்தல்களை நிகழ்த்துகிறேன். பல நேரம் உங்களோடு ஒத்துப்போகிறது. அப்படி ஒத்த அலைவரிசையில் பயணிக்கிறபோது படைப்பு நெருக்கமாகிவிடுகிறது. அனுபவங்களைத் தாண்டி சிருஷ்டிக்க விரும்பும் எல்லை விரிவடைகிறது. எல்லாவற்றிலும் படைப்பாளியைத் தேடுவது அபத்தம் என்றும் செஞ்சி தமிழினியன் கூறுவது கவனிக்கத்தக்கது. இந்நூலில் 13 சிறுகதைகள் உள்ளன.

முதல் நடவு என்ற கதையானது நம் மண்ணின் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சடங்குகளையும் நம் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதும் இக்கதையில் மிகச்சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கதை ‘சாவிகள்’ என்பதாகும். இயல்பாக வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு நிகழ்ச்சியை மிக சுவாரசியத்தோடு நகர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது. சாவியைத் தொலைத்து விட்டதாகக் கருதி பூட்டு சரிசெய்பவரை அழைத்து வந்து திறக்கும் ‘சாவிகள்’ என்ற இந்தக் கதை பல்வேறு விஷயங்களைப் பேசுவதாக இருக்கின்றது.
மூன்றாவது கதை ‘ஆசீர்வாதம்’. இக் கதையில் நம் வாழ்க்கையில் பின்பற்றப்படும் நடப்புகளை மிக இயல்பாக எழுதிச் சென்றுள்ளார். காரியம் செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் இயல்பான ஒன்று. அங்கே நடக்கின்ற காட்சிகளை மிக அழகாக தன் எழுத்தின் வழியே படிப்பவருக்கு அப்படியே படிவமாக்கிக் கொடுத்துள்ளார். சமூகக் கருத்தையும் ஆசிரியர் கதையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
செல்போன் டவர் இருக்கின்ற காரணத்தால் குருவிகள், பறவைகள் அழிந்து வருகின்ற சூழலையும் கதையின் உள்ளே வெளிப்படுத்தி உள்ளார். இக்கதை வாழ்வியலைப் பேசுகின்றது. நிதர்சனத்தையும் நம் முன்னே காட்டுகின்றது. காக்கா சோறு எடுக்கல என்பதற்காக ஐயர் சொல்லுகின்ற காட்சிகளையும் இந்தக் கதையில் நாம் பார்க்க முடிகின்றது. அதே சமயம் ஐயர் அவசரத்தையும் இந்தக் கதையில் நாம் படிக்க முடிகின்றது. கல் விழுதல், குளிக்கச் சொல்லுதல், சோறு கிண்டுதல் என்று நடக்கும் காட்சிகளைப் பதிவிடுகிறார்.
நான்காவது கதையான ‘பாலைவன வெளிச்சம்’ சமூகம் சார்ந்த கதையாக இருக்கின்றது. கிராமங்களில் சாலையில் இருக்கின்ற புளியம், மா, இலவம் மரங்கள் குத்தகைக்கு அதாவது ஏலத்திற்கு விடப்படுகின்றன. அப்படிச் சென்ற ஆண்டு ஏலம் எடுத்தவர்தான் அய்யனார். அவருக்கு இரண்டு குழந்தைகள் முத்தழகி, முத்தரசன் இருக்கின்றனர். மனைவியின் பெயர் செங்கேணி என்பதாகும். சென்ற ஆண்டு எடுத்த அந்த ஏலமானது நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த ஆண்டும் ஏலம் விடப்படுகிறது. இவர் எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். அது போலவே ஏலம் நடைபெறுகின்றது.
தங்கவேலு தனக்கு வேண்டும் என்று ஆளுக்கு ஒரு வருஷம் என போட்டிக்கு வருகின்றார். பிறகு சிலர் சொல்லவே அவர் விலகிக்கொள்கிறார். அதே சமயம் சாலை போடுவதற்காக மரங்கள் வெட்டப்பட இருக்கின்ற செய்தி கேட்டு அய்யனார் யோசித்துப் பின்பு ஏலம் எடுத்து விடுகிறார். மனைவியிடம் வந்து சொல்கிறார். அங்கே சாலை ஓரம் ஒரு கொட்டகை அமைத்து புளியமரத்தில் இருந்து புளிகளை எல்லாம் ஆட்டி எடுக்கின்றார்கள். புளியை எடுப்பதற்கு எப்படி செயல்படுகிறார்கள் என்பதை இக்கதையில் அழகாக கதாசிரியர் எழுதியுள்ளார். அதேபோல குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கதையில் நாம் தெரிந்துகொள்கிறோம். அய்யனாரும் அவரது குடும்பத்தினரும் பணியைச் செய்துகொண்டிருக்கின்றபோது மரங்கள் வெட்டப்படுகின்ற காட்சிகள் வருகின்றன.
புளிய மரத்திலிருந்து புளியை எடுக்கவில்லை. ஆனால் மரங்களை வெட்ட வருகின்றார்கள், அய்யனார் கேட்கின்றார். இருந்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை. சாலையை விரிவுபடுத்த வேண்டிய எல்லா மரங்களையும் வெட்டி விடுகின்றார்கள்.
அதைப் பார்த்துக்கொண்டே கண் கலங்கிக் கொண்டிருக்கின்றார் அய்யனார். பிறகு அவரது மனைவி, பிள்ளைகள் அவரை அழைத்துச் செல்கின்றார்கள். சாலையோரம் இருந்த அந்த இருளானது, நிழலானது வெட்ட வெளிச்சமாக மரங்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத சாலையாக மாறுகின்றது.
மிகச் சிறப்பான வார்த்தைகளோடு கதை எழுதப்பட்டுள்ளது. கதையின் உயிரோட்டத்தை வட்டார வழக்குச் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன. மிக அருமையான கதையாக இந்தக் கதையை நாம் இந்தத் தொகுப்பில் சொல்லலாம். அடுத்து ‘அழகி’ என்ற கதையும் ‘சுத்தம்’ என்ற கதையும் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளன.
‘புதிய சில்லாக்கோல்’ கதையிலும் நடைமுறை வாழ்க்கை தெளிவாகக் கூறப்படுகின்றது. ‘ரிக் ஷா கண்ணம்மா’ என்ற கதை வாழ்க்கைப் பிரச்சினையையும் தீர்வையும் பேசுவதாக அமைகின்றது. கவனிக்கத்தக்க கதைகளாக இவை இருக்கின்றன.
‘பெருமிதம்’ என்ற கதை வாழ்க்கையின் இயல்புகளை எடுத்துக் கூறுகின்றது. ராமசாமிக்கும் லட்சுமிக்கும் இருக்கின்ற அந்தக் காதல் வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள் இருக்கின்றனர். அதேபோல பேரன் இருக்கின்றனர். பெரிய மகளின் பெயர் பெரமிச்சி, சிறிய மகன் பெயர் அய்யனாரப்பன். சிறிய மருமகள் மோகனா தமிழ்த் துறைப் பேராசிரியராக இருக்கின்றார். சின்ன மகனின் பெயர் மோனிஷ். இவர்கள் சென்னையில் இருக்கின்றார்கள்.
விடுமுறை சமயத்திலும் ஊர்த் திருவிழா சமயத்திலும் இவர்கள் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். அப்படி அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றார்கள். அங்கே இருக்கின்ற தாத்தா, பாட்டியுடன் வாழ்கின்றனர். வாழ்க்கையை மிக அழகாக இந்தக் கதை எடுத்து இயம்புகின்றது. அன்பையும் காதலையும் மிகச் சிறப்பாக கூறுகின்றது. பொரிவிளங்காய் உருண்டை எப்படிச் செய்வது என்றும் அதை மருமகள் செய்ய முயன்று தோற்றுப் போகின்ற சூழலையும் இந்தக் கதை நமக்கு உணர்த்துகின்றது.
எப்படிச் செய்ய வேண்டும் என்று மாமியார் சொல்கின்ற அந்தப் பாங்கு மிகச்சிறப்பு. கிராமத்தில் விளைநிலத்திற்குச் சென்று அங்கே குளிக்கின்ற அந்தக் காட்சிகளும் குழந்தைகள் நடந்துபோகிற காட்சிகளும் மிக அழகாக சொல்லப்படுகிறது. மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை இந்தக் கதை முன்வைக்கின்றது. தன்னுடைய பேரன் மோனிஷ் பிறந்தபோது 5 தேக்கு மரத்தை வைத்தேன் என்று தாத்தா கூறுகின்ற காட்சி இதனை நிலை நிறுத்துகின்றது. இறுதியில் தாய், தந்தையர் மகன்களுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் கொடுத்து அனுப்புகின்றனர். திரும்பவும் வரவேண்டும் என்று கூறுகின்றார்கள். கண்டிப்பாக வருகிறோம் என்பதாக அந்தக் கதை முடிகின்றது. பெருமிதம் பொங்க இந்தக் கதை மிக அழகாக எழுதப்பட்டுள்ளது.
‘ராமசாமியும் ஆதிமூலமும்’ என்ற கதையானது ராமசாமிக்கும் ஆதிமூலத்திற்கும் நடக்கின்ற உரையாடல் உலக நடப்பை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. செருப்பு தைப்பதற்காகச் செல்லும் ராமசாமியும் செருப்பு தைப்பவராக ஆதி மூலமும் இங்கே கதைமாந்தர்கள். செருப்பு தைப்பவரின் வாழ்வியலை அழகாக இந்தக் கதை சொல்கின்றது. இந்தக் கதையில் மகனுக்கும் தந்தைக்குமான காட்சிகளும் குறிப்பிடப்படுகின்றன. எப்படித் தைக்க வேண்டும் என்பதும் பஸ்ஸுக்காக காத்திருக்கும் காட்சிகளும் நம் மனதைத் தொடுகின்றன.

விவசாயத்தின் நடப்பியலையும் இங்கே ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இவருடைய சொற்கள் இந்தக் கதைக்கு மிகவும் பலத்தைக் கொடுப்பதாக அமைகின்றது. ஆதிமூலம் இறுதியில் சில பழைய செருப்புகளைக் கோணியில் போட்டுக் கொண்டு செல்வதாகக் கதை முடிகின்றது.
‘மொடாக்குடியன்’ என்ற கதை இத்தொகுப்பின் கடைசிக் கதையாக அமைகின்றது. முரளி இந்தக் கதையின் நாயகனாக சொல்லப்படுகின்றான்.
ரத்தினம் என்பவர் இவரது பெரியப்பா. முரளியின் மனைவி கமலா. கணவன், மனைவிக்கான அந்த உரையாடல் காட்சிகள், அன்பு, காதல் என்பது மிக அழகாக இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளன. அதே சமயம் மருத்துவமனையின் பிணவறையில் நடக்கின்ற காட்சிகள் வித்தியாசமானதாக அமைந்துள்ளன. எப்படி பிணங்கள் அங்கே வருகின்றன, எப்படி அதைக் கூறு செய்கிறார்கள் என்ற காட்சிகள் சொல்லப்படுகின்றன.
முரளி தன் பெரியப்பாவோடு பேசுகின்ற அந்தக் காட்சிகளும் பிறகு பெரியப்பா மொடாக்குடியனாக இருந்து இறந்து போகின்ற காட்சியும் சொல்லப்படுகின்றது. பெரியம்மாவோடு சேர்ந்து புலம்புகிற காட்சிகள் நம் மனதை வருத்தமடையச் செய்கின்றன. பிறகு இரண்டு மகள்களோடு மகன் என்ற பெயரில் முரளிக்கு அவருடைய வேலை கிடைக்கின்றது. அதற்கு பெரிய டாக்டர் உதவி செய்கின்றார். பிணவறையில் இருக்கின்ற அந்த நாற்றம் தாங்காமல் மாத்திரை போடுகின்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறகு இரவு முழுக்க வேலை பார்ப்பது, பகலில் சென்று தூங்குவது, பிறகு பகலில் வேலை பார்ப்பது என்று காட்சிகள் நகர்கின்றன.
ஒரு விபத்தில் பத்துப் பிணங்களைக் கொண்டு வருகின்றார்கள். வெளியில் இருப்பவர்கள் பிணங்கள் என்பர். நமக்கு எல்லாம் வெறும் நம்பர்தான் என்று சொல்லப்படுகின்றது. நம்பர் போட்டுப் பதிவு செய்கின்றார். 8 பிணங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படுகின்றன. இரண்டு பிணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதைப் பார்க்கும்போதெல்லாம் பயப்படுகின்றான் முரளி. வீட்டிற்கு வருகின்றான். வந்து தூங்காமல் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றான். அந்தப் பிணத்தைப் பார்த்து வருந்துகிறான்.
பிறகு நாளை நாம் சென்றால் அந்தப் பிணங்களை எடுத்துச் செல்லப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறான்.ஆனால் அப்பிணங்கள் எடுத்துச் செல்லப்படவில்லை. திரும்பவும் வந்து புலம்புகிறான். இறுதியில் அவனும் பிணவறையில் பிணத்தைக் கூறு போடும் நபராகக் காட்டப்படுகின்றான். மயக்கம் வருகின்றது. ஒவ்வாமை வருகின்றது. பிறகு டாக்டர் அவனை அழைத்து குடிக்கச் சொல்கின்றார்.
அளவோடு குடித்தால் அது மருந்து. அளவுக்கு அதிகமாக குடித்தால் அதுவே நம் உயிரை வாங்கும் என்று கூறுகின்றார். இறுதியில் முரளியும் குடிகாரனாக மாறிப் போகிறான் என்பதாக கதை முடிகின்றது. மிகப் பெரிய கதையாகவும் அதேசமயம் புதிய கருத்தைக் கொண்டதாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. செஞ்சி தமிழினியனின் ‘மொடாக்குடியன்’ என்ற சிறுகதை சிறப்பானதாக மனித மனங்களையும் சமூகத்தையும் பேசுவதாக அமைகின்றது. இவர் இன்னும் அதிகமான கதைகளை எழுத வேண்டும். மிகச்சிறப்பக எழுதிய எழுத்தாளருக்கும் நன்றாகப் பதிப்பித்த ‘விதைநெல்’ பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.