மயிலம் இளமுருகு
‘கண்ணியமிகு காயிதே மில்லத்’ என்ற இந்நூல் காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கையைத் திறம்படக் கூறுவதாக உள்ளது. தெளிவான எழுத்துநடையில் அனைவருக்கும் புரியும்படியான வகையில் ஜே.எம்.சாலி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கண்ணியம், புண்ணியம் – இந்த இரண்டு சொற்களையும் உச்சரிக்கும்போது, கண்ணியத்திற்குக் காயிதே மில்லத் அவர்களை எண்ணாமல் இருக்க முடிவதில்லை. காரணம், அவற்றின் மொத்த உருவம், உருவகம், காயிதே மில்லத்.

கண்ணியத்திற்குரிய அந்த மா மனிதரை, மனிதாபிமானத் தந்தையைச் சந்தித்து உரையாடவும், ஆசி பெறவும் வாய்ப்புகள் கிடைத்ததைப் புண்ணியமாகக் கருதுகிறேன் என்பதாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன், முதல் முறையாக அவர்களைக் காணும் பேறு பெற்றேன். காயிதே மில்லத்தைப் பற்றிய பல செய்திகள் இளந் தலைமுறையினருக்குத் தெரியாது. சில தகவல்கள் வியப்பாகவும் தோன்றும். அவற்றை இயன்றவரை சொல்ல வேண்டும் என்ற ஆவலின் வடிகாலாக இந்நூல் அமைந்துள்ளது. காயிதே மில்லத் வரலாற்றுக் குறிப்புகளுடன், பல தலைப்புகளில் காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எழுதப்பட்டுள்ளது.
‘கவ்மின் காவலர் எம். முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள், கி.பி. 1896ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 5 ஆம் நாளன்று, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, பேட்டையில் பிறந்தார். தந்தையின் பெயர் மௌலவி மியாகான் ராவுத்தர். அவர் ஒரு மார்க்க அறிஞர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு ஆடைகள் விற்பனை செய்யும் வணிகராகத் தொழில் புரிந்து வந்தார். தாயார் பெயர் ஹமீதா பீவி. தம் தாயாரிடமே அரபுக் கல்வியும், மார்க்கக் கல்வியும் ஒருங்கே கற்றார். பின்னர், நெல்லை சி.எம். எஸ். கிறிஸ்துவ மிஷனரிப் பள்ளிக் கூடத்தில் பயின்றார். பிறகு, திருச்சி ஜோசப் கல்லூரியிலும், சென்னை கிறிஸ்துவர் கல்லூரியிலும் சேர்ந்து உயர் கல்வி பெற்று வந்தார். அவர் புத்தகப் புழுவாக இருக்கவில்லை. இயற்கை அறிவு மிக்கவர். அதனால், எல்லாப் பாடத்திலும் அவருக்கே முதலிடம். பல பரிசுகளைக் குவித்தவர்.
பின்னர் இஸ்மாயில் சாஹிப், தோல் மண்டியில் சேர்ந்து, இடையறா முயற்சியோடு பணியாற்றியதன் காரணமாகத் தோல் வியாபாரம் வளர்ந்தோங்கியது. எனவே, மண்டியின் பங்குதாரராக உயர்ந்தார். இவ்வாறு வர்த்தக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், மாநில அரசும், மத்தியப் பேரரசும் அமைத்த பல வர்த்தகக் குழுக்களில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அரும் பணியாற்றினார். இதுசமயம், சிறிது காலம்வரை தென்னிந்திய வர்த்தக சபையின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
வியாபாரத் துறையில் சிறிது காலம் ஈடுபட்டிருந்தபின், 1936-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினராகச் சேர்ந்து, பின்னர் அவர் ராஜ்ய முஸ்லிம் லீகின் தலைவரானார். சுதந்திரத்திற்கு முன்பே சட்டமன்றத்தில் இடம் பெற்று, அதற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபையில் பங்காற்றியது அழியாத வராலாறு. நெல்லை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த தமிழ்ச்செம்மல் காயிதே மில்லத், டில்லி நகரில், அரசியல் நிர்ணய சபையில் அனைவரும் வியந்து போற்றும் வகையில் அரும்பணியாற்றினார்.
அவர்தம் வாதங்களின் அடிப்படையில் இந்திய அரசியல் சட்ட விதிகள் 21 முதல் 30 வரை இடம்பெற்றன. சிறுபான்மைச் சமூகங்களின் மொழி, கலாச்சார, மார்க்கப் பாதுகாப்புக்கு அவை அரண்களாக அமைந்தவை. அரசியல் சட்ட விதி 44, பொது சிவில் சட்டம் பற்றியது. அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்க்கப்படாமல், கட்டளைக் கொள்கைகள் பகுதியில் சேர்க்கப்படுவதற்கு அரும்பங்காற்றிய பெருமை காயிதே மில்லத்தைச் சாரும் என சட்டத்துறை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1954 ஆம் ஆண்டில், இந்திய நாடாளுமன்ற மேலவைக்குக் காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளிலிருந்து இறுதிவரை, செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி வரலாறு படைத்த தலைவர். தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யவோ, தேர்தலுக்கான பிணைத் தொகை கட்டவோ, வாக்குகளைச் சேகரிக்கவோ, தொகுதிக்குச் செல்லாமல் கேரளத்தின் மஞ்சேரியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை, உலகறிந்த ஒன்று.
இக்கால அரசியல்வாதிகள் காயிதே மில்லத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு என்பதை நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் (உ.ம்) “தமிழ்தான் இந்த நாட்டின் அரசாங்க மொழியாக இருக்கத் தகுதி வாய்ந்த மொழி” என்று அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். காயிதே மில்லத்தின் சரியான வழிகாட்டலும், தலைமைத்துவமும்தான் இந்திய மண்ணில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அரசியல், சமுதாயத் துறைகளில் நன்மதிப்பை நல்கியது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய சமுதாயத்தின்பால் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த கவலை ஆகியவற்றை விளக்கும் கட்டுரைகள் நூலில் இடம் பெற்று இதம் சேர்க்கின்றன. காயிதே மில்லத்தின் சிங்கப்பூர், மலேசியப் பயணங்களின்போது நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளின் முக்கியப் பகுதிகள் ஆகியவையும் வாசிக்க வேண்டியவை. காயிதே மில்லத் அவர்களின் பன்முனைப் பணிகள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த முயற்சியில் ஓர் அங்கமே இப்பதிப்பு. இந்திய முஸ்லிம் யூனியன் அமைப்பாளராக காயிதே மில்லத் நியமிக்கப்பட்ட பின்னர், வங்கதேசப் பிரச்சினை தொடர்பாக ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டால் அப்போது தங்கள் இயக்கத்தின் நிலை என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி வந்தது.
தாமதிக்காமல் தயங்காமல் காயிதே மில்லத் பின்வருமாறு பதில் தந்தார்: “இந்தியா எங்கள் தாய்நாடு; நாம் அனைவரும் – இந்தியர்கள்; இந்தியாவுக்கு யார் யார் விரோதிகளோ, அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கும் விரோதிகள்தான். எதிரி ஆயுத பலத்தால் நம்மை எதிர்த்தால், நாமும் ஆயுத பலத்தால் எதிர்ப்போம். எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து, தோல்வியடையச் செய்வோம். இந்தியா மீது மீண்டும் பாகிஸ்தான் படையெடுக்குமானால், அதன் படைகளை முறியடித்து விரட்ட இந்திய நாட்டைப் பாதுகாக்க – உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துப் போராட இந்திய முஸ்லிம்கள் தயார் நிலையில் உள்ளனர்!” என்பதுதான் அவரது பேட்டியின் ஒரு பகுதி.

நாட்டின் அப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி, அவற்றுக்குத் தீர்வும் கூறிவந்தார் காயிதே மில்லத். நாட்டின் ஒற்றுமையைப் பற்றி அவர் அளவுக்கு அப்போது பேசியவர்கள் வேறு எவரும் இல்லை! அனைவரும் வியந்து சொன்னார்கள். இந்திய அரசியலில் இந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் காயிதே மில்லத். அண்ணாவும், காயிதே மில்லத்தும், ராஜாஜியும் 1966-ல் அமைத்த அரசியல் வியூகம், தமிழக அரசியலிலும், இந்தியாவிலும் இந்தத் திருப்பத்தை ஏற்படுத்தின.
தி.மு.கழகமும், முஸ்லிம் லீகும் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட பயனைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால், ஆளும் கட்சியை எளிதில் வென்றுவிட முடியும்! இதைத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன என எடுத்துச் சொன்னார் காயிதே மில்லத். காயிதே மில்லத், ஆட்சி மொழிச் சட்டத் திருத்த மசோதாவின் மீது, நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை அவர்களின் தொலைநோக்கைப் பறைசாற்றும் கருத்துரையாக நிலைத்து நிற்கிறது. ஒரு சுதந்திர நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்ற பொது நோக்கே அந்த உரையின் அடிநாதம்.
1967-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ல், இந்திய நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் நிகழ்த்திய அந்த உரையைச் சிந்தனைக் கருவூலம் என்று போற்றுவர். “ஆட்சி மொழியாகத் தங்கள் சொந்த மொழிதான் இருக்கவேண்டுமென்று என் நண்பர்களில் சிலர் சொன்னார்கள் அப்படியானால், நமது நாட்டில் போற்றத்தக்க முறையில் உயர்ந்த இலக்கியங்களைக் கொண்டதும் மிகப் பழமையான மொழியுமான தமிழ்தான் ஆட்சி மொழியாக இருக்கி வேண்டும் என்று நான் சொன்னேன். ஆரம்பத்தில், மொழிப் பிரச்சினை எழுந்த வரலாறு இதுதான்.
“இந்த நாட்டின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி, இந்த நாட்டில் தோன்றிய ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்றால், அதற்குரிய தகுதி தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் உண்டு. இப்படி நான் கூறுவதற்குக் காரணம் தமிழ் மொழியின் தொன்மையும், நாகரிகமும், இலக்கணமும், இலக்கியமும்தான்.
இவை போன்று இன்னும் “ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்” என்று முழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் காயிதே மில்லத் அவர்கள் காட்டிய இத்தகைய தாய்மொழிப் பற்று, உலகெலாம் எதிரொலித்து, இந்த அரும்பெரும் மாநாட்டைக் கூட்டுவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டது! குரோம்பேட்டை வீட்டிலிருந்து, கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார வண்டியில்தான் காயிதே மில்லத் வருவார். அரசியல் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும், அவர் வாகன வசதிகளை வைத்துக்கொண்டு இருக்கவில்லை! ஸ்டான்லி மருத்துவமனைக்கும், காயிதே மில்லத்துக்கும் பிணைப்பு உண்டு.
உடல் நலம் குன்றினால், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வழக்கம். டாக்டர் யூ.முகம்மது, காயிதே மில்லத்தைக் கவனிப்பார்.1972 மார்ச் மாதம் 29-ஆம் தேதி, கல்லீரல் நோய் முற்றியிருந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் காயிதே மில்லத் சேர்க்கப்பட்டார்கள். சிறுநீரகம் சீர்கெடத் துவங்கியதை அடுத்து, உடல் நிலை மோசமான கட்டத்தை எட்டியது. அதன் பேரில், டயாலிசிஸ் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. தலைவர் அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்ய, டாக்டர் யூ.முகம்மது தலைமையில் 15 பேர் கொண்ட மருத்துவக் குழு சில நாட்களாக அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வந்தது.
ஆனாலும் 5.4.1972 அன்று அவரது இழப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இரங்கல் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் இவ்வாறாக கூறினார்: “இந்த நாளில், தமிழ்ச் சமுதாயத்துக்கும் சொல்வேன். இஸ்லாமிய சமுதாயத்துக்கும் சொல்வேன்; இஸ்மாயில் சாகிப் இருந்தபோது, முஸ்லிம் சமுதாயத்துக்கு எந்தெந்தக் கடமைகளைச் செய்துவந்தோமோ, அதை இந்த அரசு தொடர்ந்து செய்யும் என்று மண் மூடியுள்ள அவர் உடலில் ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு உரையை முடித்தார்.
“அடக்கமே உருவானவராகவும், எளிமையானவராகவும் மக்கள் மீது இரக்கம் கொண்ட ஏந்தலாகவும் திகழ்ந்தவர் ஏழை காயிதேமில்லத். தமிழ்நாட்டில் கழக ஆட்சி அமைவதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களே என்று எம்.ஜி.ஆர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.” “அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, இவரே எங்களுக்குத் தமையனுக்குத் தமையனாய் விளங்கி வந்தார்” என்றும் அவர் கூறினார்.
மில்லத்தின் மறைவை ‘தினத்தந்தி’, ‘திணமணி’, ‘முரசொலி’, ‘அலை ஓசை’, ‘தென்னகம்’, ‘நவமணி’, ‘விடுதலை’, ‘நவசக்தி’, ‘கல்கி’, ‘துக்ளக்’, ‘நாத்திகம்’, ‘அஞ்சுகம்’ போன்ற பல நாளிதழ்கள் வெளியிட்ட செய்திகள் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மில்லத்தின் மறைவுக்குப் பிறகு மேடைகளிலும் ஏடுகளிலும் காயிதே மில்லத்திற்குச் செலுத்தப்பட்ட புகழ் அஞ்சலி முழுவதும் புதுமையான முறையில் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
இத்தகு பெருமைமிகு காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியருக்கும் நன்றாகப் பதிப்பித்துள்ள யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.