ஆயிஷா இரா. நடராசன்
‘என்னை யாரும் வளர்க்கவில்லை’ என்பது ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் மகா வாக்கியம். 1913ல் மகாகவி பாரதி ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார். ‘பொன்னிற வாலுடைய நரி’ (The fox with a golden tail) என்பது அதன் தலைப்பு. ஆயிரம் பிரதியும் விற்று 1914இல் மறுபதிப்புக் கண்ட நூல். அந்த நூல் ஜெ.கே. பற்றியது என்றால் இன்று யாருமே நம்பமாட்டார்கள். ஆனால் அந்தப் புத்தகம் உருவான வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும்.

குழந்தை ஞானிகள்–எனும் போலி கவுரவப் புரட்டுகளைப் பாரதி போட்டு உடைத்து அதை நகைமுரணாக மாற்றியதை இன்று வாசிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. ஜெ.கே. எனும் மெய்யறிவாளர் உருவாகிச் செதுக்கப்பட்ட படிநிலைகளின் வழியே நாம் பல பாடங்களை கற்று எழுச்சி கொள்ள முடியும். அதனூடாக ஜெ.கே.வைச் செதுக்கிய நூலகம் நம்மைத் திகைக்க வைக்கும் ஒன்று.
இப்போது முதலில் மகாகவியின் ‘பொன்னிற வாலுடைய நரி’ பற்றிப் பார்ப்போம். இது எழுதப்பட்ட பின்னணி ஒரு சுவாரசியமான கதை. 1875ல் நியூயார்க் நகரில் ஹெலெனா பிளாவாட்ஸ்கி எனும் உக்ரேனியர் சர்வ மதங்களின் சாரத்தைக் கடைப்பிடிக்கும் திசோபிய சபை எனும் திசோபியம் சொசைடியை தோற்றுவிக்கிறார். இந்துமதம், இசுலாமியம், கிருத்துவம், பவுத்தம் என அனைத்தின் சிறப்பையும் உள்ளடக்கிய உலகப் பொதுத் தத்துவ மெய்மை என்று தனது சபையைப் பிளாவாட்ஸ்கி அறிவித்து, திசோபிய சபையின் நோக்கம் ‘உலக – ஆசான்’ ஒருவரின் வருகைக்காக உலகைத் தயார் செய்தலே என்றும் அறிவித்தார்கள். 1888 வரை அமைப்பு ரகசியமாகச் செயல்பட்டது.

1895ல் திசோபிய சபையின் தலைமையை ஏற்ற அன்னிபெசன்ட் அம்மையர் இந்தியா வருகிறார். சென்னை அடையாறில் (தற்போதைய பெசன்ட்நகர்) திசோபிய சபை கட்டப்படுகிறது. இதே ஆண்டுதான் ஜெ. கிருஷ்ணமூர்த்தி பிறக்கிறார். மதனப்பள்ளியில் (தற்போதைய ஆந்திரா) தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் சஞ்சீவிவம்மாவுக்கும் ஜிரு. நாராயணையாவுக்கும் முதல் மகனாகப் பிறப்பு. நாராயணையா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கணக்காயர்.
சிறுவயதிலேயே 1898-ல் தம்பி (அவர் பெயர் நித்யா) பிறந்து சில ஆண்டுகளில் ஜெ.கே. தாயை இழந்தார். நாராயணையா பிரித்தானிய அரசு கணக்காயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அடையாறு திசோபிய சபையில் ஒரு வேலை கேட்டு விண்ணப்பித்து அலுவலக மேலாளர் பதவி பெற்றார். மனைவி இல்லாமல் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது சிரமமாக இருக்கவே மகன்களோடு ஆந்திராவில் இருந்து அடையாறு திசோபிய சபை வளாகத்திலேயே குடியேறினார். ஆண்டு 1909. வளாகத்திற்கும், கடற்கரைக்கும் இடையே ஒரு குடில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஜெ.கே. பள்ளியை வெறுத்தார். மலேரியா நோய் முதல் டைபாய்டு நோய் வரை பலமுறை படுத்த குழந்தை. அவர் கடற்கரையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தபடியும் அலைகள் பறவைகள் எனக் கவனித்தபடியும் கழித்தார். அப்படியான ஒரு நாளில் சார்லஸ் வெப்ஸ்டர் லீடு பீட்டர் எனும் ஆங்கிலேயத் திசோபிய சபை நிர்வாகி அவரைப் பார்க்கிறார். ஜெ.கே.விடம் தினமும் உரையாடிய அவர் பிளாவாட்ஸ்கி குறிப்பிட்ட உலக ஆசான் ஜெ.கே.தான் என்று அறிவிக்கிறார்.
அன்னிபெசன்ட் அம்மையார் நாராயணையாவிடம் பேசி வலுக்கட்டாயமாக அவரது மகன்களான ஜெ.கே. மற்றும் அவரது தம்பி நித்யா இருவரையும் திசோபியச் சபைக்குத் தத்துக் கொடுக்கக் கோருகிறார். உலகமே வியக்கும் மகா புருஷர்களாக அவர்கள் வருவார்கள் என வாக்களிக்கிறார். எர்னஸ்ட் வுட், சார்லஸ் வெப்ஸ்டர் உட்பட பலர் நாராயணையாவை ஏற்க வைக்கிறார்கள். மைத்ரேயா எனும் ஆதி மெய்மைக்கீர்த்தியின் சொல் தூதராக, உலக ஆசானாக ஜெ.கே. திடீரென்று சித்தரிக்கப்படுகிறார் அன்னிபெசன்ட். உலக நாடுகளுக்கு ஜெ.கே. எனும் அந்தச் சிறுவனை உருவாகி வரும் திசோபிய ஆசானாகச் சித்தரிக்கிறார்.
நாராயணையாவையே அவர்கள் திசோபியச் சபையில் இருந்து வெளியேற சொல்கிறார்கள். அவர் வழக்குமன்றம் போகிறார். அங்குதான் பாரதி நுழைகிறார். அப்போது மகாகவி புதுவையில் வசித்து வந்தார். அரவிந்தர் மூலம் அனைத்தையும் அறிகிறார். பிறந்தது அற்புதமான ஆங்கில நூல் பொன், வாலுடைய நரி, அந்த அழகான கதை இதுதான். அதை அழகான நூல் என்பதைவிட ஆத்திரமான நகைப்புணர்வு நக்கல் என்றே அழைக்கலாம்.
அந்தக் காலகட்டத்தில் ‘இல்லத்து ஆட்சி’ எனும் தனது ஹோம் ரூல் இயக்கத்தை அன்னிபெசன்ட் தொடங்கவில்லை. அவர் பாலகங்காதர திலகரை எதிர்ப்பவராகவும் இருந்தார். அவரது சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் சொல்லாக்கத்தைக் கேலி செய்பவராகவும் இருந்தார்.

பாரதி மட்டுமல்ல, தேசிய விடுதலைப் போராட்டத்தின் பல விடிவெள்ளிகள் கடும்கோபத்தில் இருந்தனர். பாரதி தனது பரிகாசத்தை ஒரு கதையாக எழுதுகிறான். அது இப்படிப் போகிறது. ‘ஒரு காலத்தில் தூரத்துக் கானகத்தே ஒரு பெண்- நரி இருந்தது. ரொம்பத் திமிர் பிடித்தது. தற்பெருமை கொண்டது. அதனால் அதைப் பிற நரிகள், நரிக் கானகத்திலிருந்து விரட்டின. அதன் தண்டனையாக வாலை அறுத்துவிட்டன. அதுவும் போலியாகப் பளபளத்த பொன்னிறத் தேங்காய் நாரினால் ஆன செயற்கை வால் ஒன்றை ஒட்டிக்கொண்டு குரங்குகளும் கழுதைகளும் வாழ்ந்த மற்றொரு கானகத்திற்கு வந்தது.
கழுதை தேசத்தின் கண்ணியம் இழந்த பெரியவர்களிடம் தனக்கு இரண்டு குட்டிக் கழுதைகளைத் தானமாக வழங்கினால் தான் நரிகளின் ராஜதந்திரத்தை மந்திரமாக ஓதி அவர்களது வாலையும் பொன்னிறமாக மாற்றிக் காட்டுவதாக வாக்களித்தது.’ என்று கதை போகிறது. பெண் நரி கண்டிப்பாக அன்னிபெசன்ட் அம்மையார்தான்.
குட்டிக் கழுதைகள் இரண்டு ஜெ.கே.வும் அவரது சகோதரர் நித்யாவும், நாராயணையா கொதித்தெழுந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்னிபெசன்ட் மீது வழக்குத் தொடர்ந்தார். பிரபல வழக்கறிஞர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவருக்காக வாதாட, அன்னிபெசன்ட்டே தனக்காகத் திறமையாக வாதாடியது வரலாறு. வழக்கு இழுத்தடித்து ஒரு வழியாகத் தீர்ப்பு நாள் வந்தபோது ஜெ.கே.வுக்கு வயதாகி (மேஜர்) அவர், தான் வெப்ஸ்டரோடு வாழ விருப்பம் தெரிவிக்க, தள்ளுபடி ஆனது.
சார்லஸ் வெப்ஸ்டருடன் வாழச் சென்ற ஜெ.கே. என்ன ஆனார். திசோபியச் சபையின் ஆதர்ச உலகப் பேராசான் ஆனாரா? அங்குதான் பெரிய திருப்பம். சார்லஸ் வெப்ஸ்டரும் மேலும் ஆறு திசோபியர் ஐரோப்பியர்களும் ஜெ.கே.வுக்கு பால பாடம் நடத்தப் பெருமுயற்சி மேற்கொண்டார்கள். அந்த 14-16 வயது நாட்களில் ஆங்கிலத்தைத் தனது தாய்மொழிபோலச் சரளமாக உபயோகிக்கத் தொடங்கினார். இதன்மூலம் பற்பல புத்தகங்களின் அற்புத வாசல்கள் திறந்தன.
ஜெ.கே.வின் வாழ்க்கை குறித்து மேரி லூட்யன்ஸ் என்பவர் ஒரு நூல் எழுதி இருக்கிறார். பல்வேறு நாடுகளுக்கு ஜெ.கே. அழைத்துச் செல்லப்பட்டுத் தனது கன்னிஉரைகளை நிகழ்த்தத் தொடங்குகிறார். ஆர்டர் ஆஃப் ஸ்டார்ஸ் என்று தனது சகோதரரையும் உள்ளடக்கிய திசோபிய உயர்நிலை வட்டத்தை ஜெ.கே. உருவாக்குகிறார். 1922ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து கலிபோர்னியா சென்ற ஜெ.கே. அங்கு தனது சகோதரர் நித்யாவுக்கு ரத்தச் சோகை நோய் ஏற்பட்டு நோய் உச்சத்தில் இருப்பதை அறிகிறார்.
திசோபியச் சபையின் பிரார்த்தனை அவரைக் காப்பாற்றிவிடும் என்று சார்லஸ் வெப்ஸ்டரும் மேலும் பலரும் நம்பவைக்கிறார்கள். உலகம் முழுதும் தன்னை காட்சிப் பொருளாக்கி திசோபியச் சபை பெரிய அளவில் செல்வந்தர்களிடமிருந்து ‘தானம்’ பெற்றிருப்பதைத் தனது அமெரிக்கத் தோழமையான ரோசலிந்த் வில்லியம்ஸ் மூலம் அறிகிறார். ஓநாய் எனும் தீவிற்கு, திசோபியச்சபை ஜெ.கே.வையும் அவரது சகோதரரையும் அழைத்து சென்று ஒரு குடிலில் தங்கவைக்கிறது. அந்த இடத்தைத் தனது நிரந்தர வாழிடமாக்கிட ஜெ.கே. விரும்புகிறார். ரோசலிந்த் அம்மையார் உதவியோடு அந்த ஓநாய்க் குடிலில் ஒரு நூலகத்தைத் தனக்காக வடிவமைக்கிறார். பல வகையாக அந்த நாட்களில் ஜெ.கே. நோய்வாய்ப்பட்டார். அதனை இறுதியாக உலக- ஆசான் தயாராகிறார் என்று அறிவித்தார்கள்.
மாற்றத்திற்கான இந்தக் காலகட்டம் பற்றி நமக்கு தெரிய வருவது ஜெ.கே.வின் தீவிர வாசிப்பு நண்பர்கள் வழியேதான். அவர்களில் முதன்மையானவர் அடொலஸ் ஹக்ஸ்லே. ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர், ‘பிரேவ் நியூவேர்ல்டு’ எனும் அறிவியல் புனை கதை நாவலின் ஆசிரியர். ஓநாய்த் தீவில் ஜெ.கே.வோடு பல புதிய புத்தகங்களைப் பரிமாற்றம் செய்த மாமனிதர்.
இரண்டாம் உலக யுத்தம் மூண்ட நாட்களில் இயற்பியல் அறிஞர் டேவிட் பூம் அவரது புத்தகத் தோழர் ஆகிறார். டி. புரோக்லி- பூம் கோட்பாடு குவாண்ட இயற்பியலில் மிகப் பிரபலம். அவர் தனது சுய சரிதையில் ஓநாய் தீவில் ஜெ.கே.வின் நூலகம் தன்னைப் பிரமிக்க வைத்ததாக எழுதுகிறார். காரல் மார்க்ஸ் முதல் டார்வின் வரை பலரது நேரடி விவரணைகளை ஜெ.கே. வாசிக்கிறார். அவர் ரஸலையும், டால்ஸ்டாயையும் ஐன்ஸ்டீனையும்கூட விட்டு வைக்கவில்லை என்று எழுதுகிறார்.
உயிரியலாளர் ராபர்ட் ஷெல்ட்ராக் லண்டன் ராயல் சொசைட்டியின் உயர்நிலை ஆய்வாளர். இந்திய மண்ணில் சில உணவுத் தாவர ஆய்வுகளில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர். அவரும்
ஜெ.கே.வின் ஆழமான வாசிப்பும் ஓநாய் தீவு நூலகமும்தான் அவ்வப்போது சென்று தன்னை வளப்படுத்திக் கொண்ட இடம் என்று எழுதுகிறார். ஜெ.கே.வின் சகோதரர் நித்யா இறந்துபோன அந்த இரண்டாண்டுகள் உலக வாழ்க்கை குறித்த ஜெ.கே.வின் இறுதித் தத்துவம் எட்டப்பட்டதாக பிப்புள் ஜெயகர் உட்பட பலர் எழுதுகிறார்கள்.
மனிதனுக்கு மதம் தேவை இல்லை என்று பிரகடனப்படுத்திவிட்டு ஜெ.கே. திசோபியச் சபையில் இருந்து வெளியேறியதோடு ஆர்டர் ஆஃப் ஸ்டார்ஸ் அமைப்பையும் 1948ல் கலைத்தார். யாரையுமே பின்பற்றாதீர்கள். உங்கள் வழியை நீங்களே தேடி, அடையுங்கள் என்று அறிவிக்கிறார்.அதே ஆண்டில் உதகை வந்த ஜெ.கே., அங்கு தங்கித் தனது உரைகளை நிகழ்த்தியபோது அவரைச் சந்தித்தவர்களில் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். ஜெ.கே.வின் உதகை நூலகம் வனங்களின் இடையே அமைந்த ஒன்று.
ஓநாய் தீவிலும் அப்படியே. மணிக்கணக்கில் நேரு பல உலகளாவிய விஷயங்களை ஜெ.கே.வோடு விவாதித்தார் என்கிறது வரலாறு. ரிஷி- பள்ளத்தாக்கில்கூட ஜெ.கே. முதலில் கட்டமைத்தது ஒரு நூலகத்தைதான். மனிதனின் சுயதேடலுக்கு இயற்கை நூலகம். சுற்றிலும் அறிவை, மனதை வளப்படுத்தும் சுதந்திர வகுப்பறைகள். இதுவே ஜெ.கே. காட்டும் கல்விப் பணி.
