ச.சுப்பாராவ்
புத்தகங்களின் மீதான காதல் எந்த நேரத்தில் எப்படி எப்படியெல்லாம் உருமாறும் என்று சொல்ல முடியாது. காதலின் சிறப்பம்சமே அதுதானே! புத்தகங்களின் மீதான காதல் ஒரு பெண்மணிக்கு, தான் வழக்கமாகப் புத்தகம் வாங்கும் கடையின் மீதான காதலாக மாறியது. அந்தப் பெண்ணுக்கும், அந்தப் புத்தகக் கடைக்குமான பிணைப்பும், ஈர்ப்பும், நெருக்கமும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. இத்தனைக்கும் அந்தக் கடை இருந்தது இங்கிலாந்தில். இந்தப் பெண் இருந்தது அமெரிக்காவில்.

3000 மைல் தள்ளி இருந்துகொண்டு, தான் நேரில் பார்க்காத, நேரில் ஒரு முறைகூடப் போகாமல், தபால் வழியாகவே ஆர்டர் செய்து புத்தகம் வாங்கி, அந்தக் கடையை, அந்தக் கடையின் ஊழியர்களைத் தன் உடன்பிறந்தோர்போல் நேசித்த அந்தக் காதல் கோட்டை கமலியின் பெயர் ஹெலன் ஹாஃப். அந்தப் புத்தகக் கடைக் காதல் கடிதங்களைத் தொகுத்து அவர் போட்ட ‘84 Charing Cross Road’ என்ற புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அந்தக் கமலியின் கதையை அறிய அவரது மற்றொரு நூலான ‘Q’s Legacy’ என்பதையும் ஊடுவாசிப்புச் செய்ய வேண்டும்.
ஹெலன் 1916ல் பிறந்தவர். வசதிக் குறைவால் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. பத்திரிகைகளுக்கு அவ்வப்போது கட்டுரைகள் எழுதி அனுப்பிப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். பிழையின்றி ஆங்கிலம் எழுத ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற இடங்களில் படிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. இடைவிடாத தேடலில் கேம்ப்ரிட்ஜின் பேராசிரியரான சர்.
ஆர்தர் க்வில்லர் என்பவரின் ஆங்கில இலக்கிய, இலக்கண நூல்களைப் படிக்கிறார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவரான இவரது படிப்பறிவிற்கு ஏற்ற வகையில் திருவாளர் க்யூ – அவரை அப்படித்தான அழைத்தார்கள் – எழுதியிருந்தார். அவரது புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார் ஹெலன்.
க்யூ இலக்கணத்தோடு கூடவே அனைவரும் கண்டிப்பாகப் படித்தே தீரவேண்டிய செவ்விலக்கியங்களையும் பரிந்துரைத்துக்கொண்டே இருப்பார். அவர் சொல்லும் புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்க ஹெலனுக்கு ஆசை. எங்கு கிடைக்கும் என்ற அடுத்த தேடலில் மார்க் அண்ட் கோ என்ற பழைய, அரிய புத்தகங்கள் விற்கும் கடையின் முகவரி கிடைக்கிறது. என்ன, கடை 3000 மைல் தள்ளி, இங்கிலாந்தில் 84, சாரிங் குறுக்குச் சாலையில் இருக்கிறது.
ஹெலன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ‘இந்த மாதிரி, இன்னின்ன புத்தகங்கள் வேண்டும். எனக்கு ஒரு புத்தகத்திற்கு ஐந்து டாலருக்கு மேல் செலவு செய்ய முடியாது. அதற்குள் விலை இருக்கும்படியான புத்தகங்கள் மூன்றை அனுப்பவும்’ என்று எழுதுகிறார். கடையின் மேலாளர் பிராங்க் உடனடியாக இவர் கேட்ட மாதிரி கேட்ட விலைக்குள் அடங்கும்படியான புத்தகங்கள் மூன்றை அனுப்புகிறார். இதெல்லாம் இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில். 1946 வாக்கில்.
இப்படி வந்த புத்தகங்களைப் படித்த அனுபவம், அந்தப் புத்தகங்களுக்குத் தொடர்புடைய புத்தகங்கள் என்று கடிதங்கள் தொடர்கின்றன. உலகப் போர் முடிந்து, இங்கிலாந்து பொருளாதார ரீதியாகத் திணறிக் கொண்டிருந்த காலம். ரொட்டிக்கும், முட்டைக்கும் ரேஷன். அப்போது அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு உணவுப் பொருட்களை வேண்டியவர்களுக்கு அனுப்புவதற்கான நிறுவனங்கள் நிறையச் செயல்படுகின்றன.
ஹெலன் தன்னால் முடிந்த அளவு ரொட்டி, முட்டை, பண்டிகை நாட்களுக்கு கேக், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் என்று மார்க் அண்ட் கோ ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. அவர்கள் எல்லாரும் பல நாட்கள் கழித்து அப்போதுதான் முட்டை சாப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு ஊழியராக ஹெலனுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுகிறார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்த நாளுக்குத் தம்மால் முடிந்த பரிசுகளை அனுப்புகிறார்கள். நேரில் பார்க்காமலேயே ஹெலனுக்கு மார்க் அண்ட் கோ ஊழியர்களின் குடும்ப விவகாரங்கள் முழுவதும் தெரியும். இலக்கியமும், குடும்ப விஷயங்களுமாகக் கடிதங்கள் குறுக்கும் மறுக்குமாக இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் பறக்கின்றன. இடையில் ஹெலன் பள்ளிக் குழந்தைகளுக்கான கலைக் களஞ்சியத்திற்கு அமெரிக்க வரலாறு பற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். சிறார் கதைகள் எழுதுகிறார்.
பெண்கள் ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும் பிரச்சார நாடகங்கள் எழுதுகிறார். அப்போதுதான் அமெரிக்காவில் தொலைக்காட்சி அறிமுகமாகிறது. நெடுந்தொடர்கள் வருகின்றன. நெடுந்தொடர்களுக்குக் கதை, வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைக்கிறது. புகழ் பெற்ற எழுத்தாளர் என்றெல்லாம் இல்லாவிட்டாலும், வயிற்றுப் பிழைப்பு எப்படியோ ஓடுகிறது. ஹெலனின் கடிதங்களில் இவை பற்றியெல்லாம் மார்க் அண்ட் கோக்காரர்கள் அறிந்துகொள்கிறார்கள். இப்படியான கடிதத் தொடர்பு ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, சுமார் 25 வருடங்களுக்கு, 1970கள் வரை தொடர்கிறது.
மார்க் அண்ட் கோ சாதாரணப் பழைய புத்தகக் கடை அல்ல. அது உலகப் புகழ் பெற்ற கடை. இரண்டாம் உலகப் போரின் போது, கடை மீது குண்டுகள் விழுந்து, கடையின் ஜன்னல்கள் நொறுங்கி, புத்தகங்கள் எல்லாம் தெருவில் குப்பையாக விழுந்துவிடுகின்றன. லண்டன் புத்தகப் பிரியர்கள் குண்டுவீச்சுக்கு அஞ்சாமல், தெருவில் சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்து, உடைந்த ஜன்னல்கள் வழியே கடைக்குள் போட்டுவிட்டுப் போனார்களாம்.
இங்கிலாந்திற்குச் சுற்றுலா வரும் அமெரிக்க, பிரெஞ்சு, ஸ்காண்டிநேவியப் பயணிகள் எல்லாரும் மறக்காமல் வந்து பார்த்து, ஞாபகார்த்தமாக இரண்டு புத்தகங்கள் வாங்கிச் செல்லும் மிகப் பெரிய கடை. ‘யார் யாரோ நம்ம கடைக்கு வராங்க, நீங்க இன்னும் வராம இருக்கீங்க’ என்று மார்க் அண்ட் கோ ஊழியர்கள் புலம்புகிறார்கள். ஹெலன் திருநாளைப் போவாராக இருக்கிறார். ஐந்து டாலருக்குமேல் விலை உள்ள புத்தகத்தை வாங்க முடியாதவர் எப்படி இங்கிலாந்து போய் வர முடியும்?
இப்படியாகக் கடிதங்கள் இருபுறமும் பறந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் கடையின் மேலாளரும், ஹெலனின் மிக நெருங்கிய நண்பருமான பிராங்க் இறந்து போகிறார். கடைசி வரை நேரில் பார்க்காத நண்பரை இழந்த துக்கத்தில் ஹெலன் மார்க் அண்ட் கோவுடனான தனது நெருக்கத்தைப் பற்றி 50 – 60 பக்கங்களுக்கு, தம் இருதரப்பினரின் கடிதங்களையும் சேர்த்துக் குட்டியாக ஒரு புத்தகம் எழுதுகிறார். அதுதான் 84 சாரிங் குறுக்குச் சாலை. படித்துப் பார்த்த ஹெலனின் பதிப்பாளர் கண்கலங்கி விடுகிறார். உடனே பதிப்பிக்கிறார்.
ஒரே புத்தகத்தில் ஓஹோ என்று புகழ். புத்தகம் நினைத்தே பார்த்திராத அளவிற்கு விற்பனை ஆகிறது. ரீடர்ஸ் டைஜஸ்ட்காரர்கள் அதைப் பதிப்பிக்கிறார்கள். அவர்கள் ‘ராணி முத்து’ போல் புகழ் பெற்ற புத்தகங்களைச் சற்றுச் சுருக்கிப் போடுவார்கள். அதற்கு டைஜஸ்ட் 8000 பவுண்ட் தருகிறது. அக்காலத்தில் அது மிகப் பெரிய தொகை. டைஜஸ்ட் பதிப்பால் புத்தகம் உலகம் முழுவதும் பரவுகிறது.
பிபிஸி ஹெலனைப் பற்றி ஓர் ஆவணப் படம் எடுக்கிறது. ஹெலன் இதுவரை லண்டன் போகவில்லை. ஹெலன் மார்க் அண்ட் கோவில் வாங்கிய புத்தகங்கள் ஆவணப்படத்தின் செட் பிராப்பர்ட்டியாக நடிக்க லண்டன் செல்கின்றன. ஹெலனின் புத்தகம் நாடகமாகிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெரிய வெற்றி பெறுகிறது. ஆன் பாங்க்ராஃப்ட் என்ற நடிகை புத்தகத்தைப் படித்து மிகவும் உணர்ச்சிவசப்பட, அவரது பிறந்த நாள் பரிசாக அவரது கணவர் புத்தகத்தின் திரைப்பட உரிமையை வாங்கிப் படமாக எடுத்து, ஆன் பாங்க்ராஃப்டை ஹெலனாக நடிக்க வைக்கிறார்.

ஹெலனாக நடிப்பதற்காக ஆன் ஹெலனின் நடை, உடை, பாவனைகளை உள்வாங்க, ஹெலன் வீடு வந்து தங்குகிறார். படம் மிகப் பெரிய வெற்றி (நான் படித்த இந்தப் புத்தகத்தின் பதிப்பிற்குக் கதாநாயகி ஆன் பாங்க்ராஃப்ட்தான் முன்னுரை எழுதியிருக்கிறார்) படம் யூடியூபில் இருக்கிறது. மாறி மாறிக் கடிதங்கள் எழுதுவது, ஹெலனும், பிராங்கும் அமெரிக்கா மற்றும் லண்டன் தெருக்களில் நடந்து கடிதங்களைத் தபால் பெட்டியில் சேர்ப்பது, ஹெலன் வீட்டில், புத்தகக் கடையில் அவரவர் தமக்கு வந்த கடிதங்களைப் படிப்பது என்று மிக மிக மெதுவாகச் செல்லும் படம். ஆனால், படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
பல விருதுகள் பெற்றிருக்கிறது என்றால், அமெரிக்க, இங்கிலாந்து புத்தக, சினிமாப் பிரியர்களின் ரசனை எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்! தினமும் ஹெலனுக்கு ரசிகர்களிடமிருந்து கடிதங்கள் மூட்டை மூட்டையாக வருகின்றன. புத்தகத்தில் கையெழுத்துக் கேட்டு, புத்தகத்தையும், தபால் செலவையும் அனுப்புகிறார்கள் அந்த வெறி பிடித்த ரசிகர்கள். பதினைந்து வயது ரசிகச் சிறுவன் ஒருவன் என்னைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா? என்று கேட்டு எழுதுகிறான்!
இங்கிலாந்தில் மார்க் அண்ட் கோ கடை நொடித்துப் போகிறது. கடை மூடப்படுகிறது. கடை மூடப்படுவதற்குமுன் ஹெலன் கடைக்குச் சென்று பார்க்கிறார். ஒரு சினிமா டிக்கெட்டின் விலையில் அலெக்ஸ் டி டாக்வீலியின் ஜர்னி டு அமெரிக்காவும். பிளேட்டோவின் மைனர் டையலாக்ஸும், மார்டர்ன் இங்கிலீஷ் வெர்ஷன் ஆஃப் காண்டர்பரீ டேல்ஸும், பெர்னார்ட் ஷா – எலன் டெரி கடிதப் போக்குவரத்தும், வெர்ஜீனியா உல்ஃபின் காமன் ரீடரும் வாங்கிய கடையைக் கண்ணீரோடு பார்த்தார்.
பிராங்கின் குடும்பத்தினர், கடை ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் எல்லார் வீட்டுக்கும் சென்று பார்த்தார். லண்டன் நகரில் இருந்த அத்தனை முக்கியமான பெரிய படைப்பாளிகளின் வீடுகளுக்கும், நினைவிடங்களுக்கும் சென்றார். ஆனால், அவருக்குப் பிரியப்பட்ட கடையில்தான் நேரில் புத்தகம் வாங்க முடியாமல் போனது!
கடை இருந்த கட்டிடம் இடித்துக் கட்டப்படுகிறது. இடத்தை வாங்கிய ரியல் எஸ்டேட்காரர் கடையின் பெயர்ப் பலகையை அழகாக வார்னிஷ் அடித்து ஹெலனுக்குப் பரிசளிக்கிறார். அது ஒரு பெரிய விழாவாகவே நடக்கிறது. அந்த இடத்தில் பெரிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. ரியல் எஸ்டேட்காரர் 84, சாரிங் குறுக்குச் சாலை நூல் மூலம் ‘உலகப் புகழ் பெற்ற மார்க் அண்ட் கோ இருந்த இடம்’ என்று பெரிய அறிவிப்புப் பலகையை வளாகத்தின் வாசலில் வைக்கிறார். இங்கிலாந்தில் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துப் போகிறோமோ அதைக் கண்டிப்பாகப் பார்த்துவிடலாம். “நான் அங்கு ஆங்கில இலக்கியத்தைப் பார்க்கப் போனேன்.
எல்லா இடங்களிலும் இலக்கியத்தைத்தான் பார்த்தேன் ”என்றார் ஹெலன். ஹெலனின் இந்த இரண்டு புத்தகங்களும் சிறிய புத்தகங்கள்தான் என்றாலும், இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய வியப்பாக இருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு புத்தகக் காதலனுக்கும் ஒரு மார்க் அண்ட் கோ இருக்கத் தான் செய்கிறது.
என் வாசிப்பு வாழ்க்கையில் புத்தகக் கடைகள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. கடை ஊழியர்களுடன் ஓரளவு பழகியதும் உண்டு. எனினும் கடிதப் போக்குவரத்து என்பது பாரதி புத்தகாலயத்துடன்தான். அதுவும் மின்னஞ்சலில்தான்.
ஹெலனின் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குக்கூட 7, இளங்கோ சாலை என எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எழுதி, அதுவும் பரபரப்பாக விற்பனையாகி, திரைப்படமாக்கப்பட்டால், என் பாத்திரத்தில் எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்ற யோசனையோடு கட்டுரையை முடிக்கிறேன்!
