து.பா.பரமேஸ்வரி
தனிமனிதனின் அனுபவத் தேக்கங்களின் வழியாகக் கடந்துபோகும் சம்பவங்களின் கூட்டாக ஆழ்மனதில் கீறிவிட்ட சமூகப் பாதிப்புகளின் தாக்கங்களைப் படைப்புகள் பிரசவிக்கின்றன குடும்பத்தின் பல இறுக்கமான சூழலிருந்து பணிக்கு வரும் பெண்களுக்கு ஆண்களின் தடித்தனம், பாலியல் சார்ந்த இடையூறுகள் தாக்குகின்றன. அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அதிலும் உயர் அதிகாரிகளாக இருந்துவிட்டால் தங்கள் பணியைத் துறக்கும் அளவிற்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மனநிலையுடன் பணிக்கு வருகிறார்கள். இப்படியான உளவியல் இறுக்கங்களுடன்தான் ஒரு பெண் வாசற்படி தாண்டி வேலைக்கு வருகிறாள்.

அமைதியான அலுவல் சூழலை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறாள். கணவனிடம் பகிராமல் குடும்பச் சூழலும் பாதிக்கப்படாமல் தனது சுயநிம்மதிக்கும் பங்கம் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்த இடத்திலிருந்து தனது பிரச்சனைகளுக்கான தீர்வை எப்படிக் கண்டடைகிறாள் என்பது போன்ற சமூக நெருக்கடிகளைப் பணிக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணின் சார்பில் பேசுகிறது எழுத்தாளர் பிரியா ஜெயகாந்த் அவர்கள் எழுதிய ‘இசைவு’ நாவல். முகவரி வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்ட இந்த நாவல் வேலைக்குச் செல்லும் பெண்களின் அனுபவங்களை நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
நாவலை வாசித்தவரை பெரும்பாலும் சுய அனுபவங்களின் படிமமாகவே ஆங்காங்கே தெரிகிறது. காரணம் அனுபவங்களின் வழியாக வெளிப்படும் படைப்புகள் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். புனைவுக்கலப்பு இருந்தாலும் அனுபவத்தின் உயிரோட்டம் அதில் உச்சம் பெறும். நாவலும் அநேக இடங்களில் இப்படியான உயிர்த்தன்மையை வாசிக்கும்போது உணரச் செய்கிறது.
கசப்புகளைக் காட்டும் அதே நொடி தான் அதை நிவர்த்திசெய்யவும் சமன் படுத்தவும் அதற்கு நிகரான ஓர் எதிர் சுவையை வாழ்க்கை உருவாக்கும் என்கிற பிரபஞ்சக் கோட்பாட்டை அடிநாதமாகக்கொண்டு படைக்கப்பட்ட ஒரு நாவலாக இதைக் காண்கிறேன்.அதேபோல் எதை எங்கு தொலைத்தோமோ அதை அங்குதான் தேடிக் கண்டடைய முடியும் என்பதையும் இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது. கதையின் நாயகி ப்ரீத்தி ஐ.டி., கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறாள். பத்து ஆண்டுகளாக இந்தத் துறையில் இருந்து வந்த ப்ரீத்திக்கு சமீபமாகப் பணிமாற்றம் செய்யப்பட்ட கம்பெனியின் உயர் அதிகாரி ராஜ் பாலியல் ரீதியாக மறைமுகமான தொந்தரவுகளைக் கொடுக்கிறான். மனதளவில் ப்ரீத்தி பாதிக்கப்படுகிறாள். தனது மனக்லேசங்களைக் கணவனிடம்கூடப் பகிரமுடியாமல் திணறுகிறாள்.
“தன் உடல் முழுதும் ஒருவித நெருப்புப் பொறி ஊடுருவதுபோல் ஒரு தகிப்பு. உடனே சென்று குளிக்க வேண்டும்போல் தோன்றியது.”
சமூகம் அப்படித்தானே ஒரு பெண்ணை வளர்த்தெடுக்கிறது. இது இந்திய மனநிலையிலிருந்து தன்னியல்பில் தோற்றுவிக்கப்பட்ட குணாதிசயம். இந்தியக் கலாச்சாரம் என்பது மத அடிப்படையில் உருவானது. குறிப்பாகப் பெண்களுக்கு இனம் சார்ந்த தாழ்வு மனப்பான்மையைச் சிறுவயது முதல் மனவேரில் அடியுரமிட்டு வளர்த்து வந்துள்ளது. “சேல மேல முள்பட்டாலும் முள் மேல சேல பட்டாலும் சேலைக்குதான் பாதிப்புனு… அதோட உண்மையான அர்த்தம் எனக்கு இப்பதான் புரியுது..” இவையே இந்தியப் பெண்களின் மனநிலையைப் பிரபலிக்கும் வரிகளாக இந்த நாவலில் காண்கிறேன். படித்த பெண்ணாகப் பல அடையாளங்களைச் சுமந்து நிற்பவளாக இருந்தாலும் சமூகம் தன்னைச் சுற்றி வரைந்து வைத்திருக்கும் வட்டத்திலிருந்து ஒருக்காலும் வர மாட்டாள்.
பெண் எனும் தனது பாத்திரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்தச் செயல்களிலும் பெண்ணானவள் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது என்பதே சமூகம் எழுதி வைத்த விதி என்பதைப் ப்ரீத்தியின் பாத்திரம் இறுதிவரை தனக்குத் தொந்தரவு தந்த உயரதிகாரியான ராஜ் மீது புகார் அளிக்காமல் இருந்ததும் தனது மன இறுக்கத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முன்வராமல் இருப்பதற்கான காரணங்களாக நாவல் முன்வைக்கிறது. இந்த நாவல், உயர்கல்வி கற்று மதிப்பான துறையில் திறமையாகச் செயல்படும் பெண்ணாகப் ப்ரீத்தி இருந்தாலும் ஆண் என்கிற ஆதிக்கத்திற்கு அஞ்சி விடுகிறாள். ஆண் வக்கிரத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் விடுவித்துக்கொள்ளவும் போராடுகிறாள். பல யுத்திகளைக் கையாள்கிறாள்.
ராஜின் தடித்தனத்திலிருந்து, பாலியல் வக்கிர அவஸ்தைகளிலிருந்து மீண்டு புதிய சூழலை ப்ரீத்தி அமைத்துக்கொள்ளும் இடைப்பட்ட காலங்களின் சம்பவங்களே கதையின் ஓட்டம்.
ஒரு சாமான்யப் பெண்ணாகவே ப்ரீத்தியின் பாத்திரம் இந்த நாவலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆணுக்கு எதிராக அமைதியான வழியில் போராடும் களப் போராளியாகவும் ப்ரீத்தியின் பாத்திரம் அடையாளப்படுத்தப்படுகிறது. போராட்டம் என்பது சண்டை சச்சரவுகள் உடன் இருக்க வேண்டிய அவசியம் அல்ல. தமது எதிர்ப்பை அமைதியாகவும் வெளிப்படுத்திச் சாதிக்க முடியும் என்பதை நாவல் கற்பிக்கிறது.
அதேபோல் அஸ்வின் பாத்திரம் நாவலில் என்னைக் கவர்ந்த பாத்திரம் என்றும் சொல்லலாம்.
பெண்களின் அவஸ்தைகளைப் புரிந்துகொள்ளாத ஆண்கள் கொண்ட சமூகத்தில் அஸ்வின் போன்ற பண்புடைய ஆண்களும் உள்ளனர். தோள் கொடுக்கவும் ஆதரவு காட்டவும்… உதவி செய்யவும்… ஆணிடமிருந்து படும் துயரங்களைப் பிறிதொரு ஆணிடம் தீர்வு கிடைப்பதாக கதையின் போக்கு சரியான நகர்வு. அஸ்வின் மட்டுமல்ல, சிவா, கல்யாண் போன்ற பாத்திரங்களையும் உருவாக்கி ஆண்களிலும் சில நல்ல பண்பு கொண்டவர்கள் பெண்களின் துயரங்களை அவர்களின் இடத்திலிருந்து அணுகும் மனப்பான்மை கொண்டவர்கள் உள்ளனர் என்பதை நாவல் சுட்டிக்காட்டி ஆண்கள் சார்பாகவும் பேசுகிறது.
கணவன் பாத்திரம் வழக்கமான ஆண் வர்க்கத்தின் பொதிக்கப்பட்ட நகல். மனைவி என்பவள் வெறும் பொருளாதாரத்தைச் சுமந்து நிற்கும் இயந்திரம். அவளுக்கென வலிகள், கஷ்டங்கள், இக்கட்டான சூழ்நிலைகள், மனக்கசப்புகள், சூழல் இறுக்கங்கள், பிடித்தங்கள், விருப்பு வெறுப்புகள் போன்ற சுயவுணர்வுகள் அடிப்படைத் தேவைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் மதிப்பளிக்கவும் இணையர் என்கிற உறவு எப்போதும் தேவை. இந்த மாண்பு கொண்ட தன்மையுடையவர் பொதுவாகக் கணவன் என்கிற சமூக வளர்ப்பில் உருவாகவில்லை என்பதே இன்றைய 21ம் நூற்றாண்டின் மற்றொரு பின்னடைவு. இந்த மேம்போக்கு மனப்பான்மையில் ப்ரீத்தியின் கணவன் பாத்திரம்.
“எனக்கானதை நீயே முடிவு செய்கிறபோது உன்னை எதிர்கொள்கிறது என் மௌனம்” என்கிற வரிகள் ஒவ்வொரு மனைவியின் ஆழ்மனக் குமுறல்களின் எதிரொலிகள். நாவலில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே பாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டும் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரும் பின்புலமும் குணாதிசயமும் வரையப்பட்டு இருந்தாலும் கதாநாயகி என்கிற கோணத்திலும் நாவலின் மையப் பாத்திரமாகவும் முழு நாவலும் அவளைச் சுற்றியே நகர்வதாலும் ப்ரீத்தியின் பாலியல் ரீதியான உளவியல் நெருக்கடிகள்தான் கதையின் மையமாக இருப்பதாலும் அதற்கு முழுக் காரணமாகப் பெண்ணின் அர்த்தநாரியான கணவன் என்கிற பாத்திரத்தின் பக்கபலமும் ஆதரவும் அவசியமாகிறது. ஆக, நாவல் ப்ரீத்தியின் கணவனுக்கு ஒரு பெயர் சூட்டி நாவலில் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து. மேலும் வாசகருக்கு அவனை அடையாளங்காட்டுவதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்பதும் சிறு எதிர்பார்ப்பு.
கணவனிடம் தனது பிரச்சனையைத் தெரிவிக்காமல் இருக்க ப்ரீத்தி முன்வைக்கும் விஷயங்களும் காரணங்களும் சாதாரண சமூக வடிவமைப்பிற்குள் விழுந்துவிடுவதால் கதை வாசிக்கும்போதே வாசகர் அடுத்தடுத்த பாத்திரங்களின் எண்ணவோட்டங்களை, நடவடிக்கைகளை ஊகிக்க முடிகிறது. அதேபோல் குறிப்பிடும்படியான பிரத்யேகக் காரணங்கள் இல்லாததும் ஒரு சிறு நெருடலை ஏற்படுத்துகிறது.
அஸ்வின் பாத்திரம் வழியாக நாவலாசிரியர் சம்பாத்தியம் பின் ஓடும் பெற்றோர்களின் அன்றாட சுயவிரும்பித்தனத்தை காட்டிக்கொடுக்கிறார். தங்கள் பிள்ளைகளுக்குள் புதைந்து கிடக்கும் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், விருப்பங்களை உணராமல் அலட்சியமாக இருந்துவரும் மனப்போக்கைச் சுட்டிக்காட்டி பிள்ளைகள் மனதின் கீறல்கள் வளர்ந்த பின்பும் வடுவாக நெஞ்சில் படிந்திருக்கும் என்பதை அஸ்வின், ப்ரீத்தியிடம் தனது பிராயகாலங்களைப் பகிர்ந்தபோது எத்தனையோ பிள்ளைகள் இது போன்ற விரக்தி நிலைக்கு ஆளாகி வளர்ந்து வருவதைப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக அமைந்திருந்தது.
அதேபோல் பெற்றோர்கள் கல்வி சார்ந்த தங்கள் விருப்பத்தைப் பிள்ளைகள் மீது திணித்து வருகிறார்கள். இந்தியச் சூழலில் பிள்ளைகள் பெற்றோர்களை பொருளாதாரத் தேவையின் பொருட்டுச் சார்ந்து வாழும் நிலையில் இருப்பதால் தங்களது கல்வி சார்ந்த கனவுகளையும் விருப்பப்பட்ட எதிர்காலத்தையும் தேர்வு செய்துகொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையை பெற்றோர்களுக்காக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள்.
தங்களது விருப்பம் நிறைவேறாமலும் பெற்றோர்களுக்காகப் பிடித்தமற்ற கல்வியைப் படிக்கும் நிர்பந்தமும் என சில பிள்ளைகளின் வாழ்க்கை வெறுமையின் விளிம்பில் வெளிக்காட்ட முடியாமல் தத்தளிக்கிறது. பெரும்பாலும் இப்படியான குடும்ப இறுக்கங்கள் அனேகம் நமது சுற்றியுள்ள பிள்ளைகளிடம் அவதானிக்கலாம். இவ்வாறான பிள்ளைகள் மனரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதையும் நாவல் அஸ்வின் புலம்பலும் அவனது வெறுமை பூத்த உரையாடலும் உணர்த்துகிறது.
நூலாசிரியர் ஒரு மரபுவழி மருத்துவராக இருப்பதால் மகப்பேறு மருத்துவமனைகளில் நிகழ்ந்து வரும் அடாவடித்தனத்தைச் சுட்டிக்காட்டி சமூகத்தின் பார்வைக்குத் தனது அனுபவமாகக் காட்டிக்கொடுக்கிறார். ப்ரீத்தி இரண்டாவது பிள்ளைக்காகக் கருவுற்றிருந்த காலத்தில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கில் நஞ்சுப்பை இறங்கியுள்ளதாகத் தவறாகக் கணித்து அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்த மருத்துவரின் பரிந்துரைப்பில் நம்பிக்கை ஏற்படாமல் வேறு மருத்துவமனையில் மறுபரிசீலனை செய்து பார்த்தபோது நஞ்சுப்பை சரியான இடத்தில் இருப்பதாகவும் இயற்கையான பிரசவத்திற்கு வாய்ப்பிருப்பதும் கண்டறியப்பட்டு இயற்கையான பிரசவமும் நடந்தேறுகிறது.
தவறான பரிந்துரைப்பு வழங்கிய மருத்துவர் மீதும் மருத்துவமனை மீதும் ப்ரீத்தியின் கணவன் வழக்குத் தொடுத்து நஷ்ட ஈடு பெறுவதாகவும் நாவல் பதிவிடுவது சமூகத்திற்கு எந்தவொரு தளத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கியமும் எழுத்தும் போதுமானதாக இருக்கிறது என்பதும் குற்றங்கள் நிகழ்த்தப்படும் போது சட்டத்தின் வழியாக அதற்கான தீர்வை நோக்கி அணுகலாம் என்கிற பரிந்துரையையும் நாவலாசிரியர் உணர்த்தி தனது பங்கைச் சமூகத்திற்கு இதன் வழியாக ஆற்றுகிறார்.
மிகவும் எளிமையான நடையிலும் வாசக மொழியிலும் நாவல் படைக்கப்பட்டுள்ளது. எழுத்தென்பது இலக்கியத்தைக் கொண்டாடுவதைவிட வாசிப்பை மேம்படுத்த வேண்டும், படைப்பு அதன் நோக்கத்தை அடைய மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதும் நாவல் அள்ளித்தரும் செய்தி. ஜனரஞ்சகப் படைப்பே எப்போதும் எந்தத் தளத்திலும் காலங்களைக் கடந்து நிலைத்திருக்கும் என்பதை மிகச் சரியாகக் கையாண்டுள்ளார் நூலாசிரியர்.
பிள்ளைகளை அருகமர்த்தி சுவாரஸ்யமாகத் தமது அனுபவங்களை ஓர் ஆசிரியரோ, கதைசொல்லியோ பகிரும் ஒரு நூதனமான பாங்கை இந்த நாவலில் உணர முடிகிறது. கதையின் ஓட்டம் சோர்வின்றி ஒருமித்து வாசித்து முடிக்கும் மனநிலையை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான பாத்திரங்களை நிரல்படுத்தி வாசகரைக் குழப்பாமல் கதையின் போக்கிற்குத் தேவையான பாத்திரங்களைக் கச்சிதமாக ஊடாட விட்டு கதையைப் புரிந்து கொள்ள எளிமையாக்கியுள்ளது நாவலின் மற்றொரு பலம்.

நாவலில் கதையோட்டத்திற்குத் தேவையான நிலபுலன்கள் இடைசெருகியுள்ளது காட்சிகள், அலுவலக அமைப்புகள் கண்முன் விரிகின்றன. ஐடி கம்பெனிக்குள் உலா வந்த ஒரு நேர்மையான உணர்வை ஏற்படுத்துகிறது . நாவலின் தலைப்புகள் அனைத்தும் பெண்மை உணர்வுகளைக்கொண்டு சூட்டப்பட்டுள்ளதும் அதே உணர்வுகளைக் கொண்டு நாவல் நகர்வதும் வித்தியாசமான அணுகுமுறை.
ஐ.டி. துறை சார்ந்த அநேக தகவல்களை நூலாசிரியர் பதிவு செய்துள்ளது பரிச்சயமற்ற புதிய தளத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவே அமைந்துள்ளது. ஐ.டி. தொழில்நுட்பங்கள், அங்கு வழக்கத்தில் உள்ள கலாச்சாரம், ஐ.டி. துறை சார்ந்த விதிகள், பெண்கள் படும் அவஸ்தைகள், பெண்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் ‘விமண் ஹராஸ்மெண்ட் டெஸ்க்’, கம்பெனி தங்களுக்குத் திருப்தியற்ற ஊழியர்களை பெஞ்ச்சில் அமர்த்தி சில மாதங்களில் வேலையிலிருந்து விடுவிப்பது, ப்ராஜெக்ட் குறித்த விரிவான தகவல்கள், கிளையண்ட் என அழைக்கப்படும் ஐ.டி. துறையின் அலுவல் சார்ந்த அடையாளங்கள், ப்ராஜக்ட் டீம் குறித்த விவரங்கள் என ஓர் அகண்ட களம் வாசகருக்குக் கதை வழியாக அறியப்படுகிறது நாவல்.
இறுதிக் கட்டம் எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பின் சுவாரஸ்யம் சற்றுக் குறைவாகவே இருந்தது. சினிமாத்துவ முடிவாகவே கடைசி அத்தியாயம் சாதாரணமாக அமைந்துள்ளது நாவலின் தொய்விற்கான காரணமாகச் சொல்லலாம். ஆசிரியர் எழுத்துத் தளத்திற்கு அறிமுகமாகி முதல் படைப்பில் தனது திறமையை வெளிப்படுத்திய விதம் பாராட்ட வேண்டியது