என். சிவகுரு
சென்னை… பிரமிப்பூட்டும் நகரம்…இல்லை பெருநகரம்… தென் மாவட்டத்திலிருந்து சாலை வழியாக வருபவர்கள் செங்கல்பட்டு தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் டோல் கேட் தாண்டிய உடனேயே சென்னை துவங்குகிறது. மஹேந்திரா சிட்டி…மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர் எனப் பயணித்து தாம்பரம் வரும் போதே பாதி சென்னையைக் கடந்ததாகக் கருதுகிறார்கள். அதே போல் வடக்கிலிருந்து வருபவர்கள் கும்பிடிப்பூண்டியைக் கடந்த உடனேயே சென்னைக்குள் நுழைந்த மனநிலைக்கும்.. வேலூரிலிருந்து வருபவர்கள் ஸ்ரீபெரும்புதூரைத் தாண்டியதுமே சென்னையைத் தொட்ட உணர்வுக்கும் வருகிறார்கள்… அப்படிப் பரந்து விரிந்து இருக்கும் பெருநகரமாக வளர்ந்துள்ளது இரண்டு மாநகராட்சிகளையும் உள்ளடக்கிய சென்னை மாநகரம்.

அந்தச் சென்னை இன்று ஒரு கோடி மக்களின் வாழ்வாதார ஊர்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்விடம். அரசியல் தலைநகரம் மட்டுமல்ல, வலுவான பொருளாதாரத் தலைநகரமாக உருவெடுத்து வருகிறது. பலர் இந்தப் பெருநகரத்தில் தான் வாழவேண்டும் எனக் கனவு காண்கிறார்கள். தனது எதிர்காலத்தைக் கூர் தீட்ட இந்த மாநகரம் தான் சரியானது எனத் தீர்மானித்துப் புலம் பெயர்வோர் ஏராளம்.
அந்தச் சென்னையைப் பற்றிப் பேசும் ஏராளமான படைப்புகள் வந்துள்ளன. அதில் இந்தப் படைப்பு சற்றே வித்தியாசமானது.
உண்மையிலேயே புது வெளிச்சம் தருகிறது. எதனால் புது வெளிச்சம் என 96 பக்கத்தைப் புரட்டிப் படித்தால் இது அன்றாடம் மக்கள் படும் பாடுகளை, வேதனைகளை, வலியைச் சொல்வதோடு நகர்ந்து விடாமல் முறையான தீர்வுகளை முன்வைக்கிறது. தோழர் அ.பாக்கியம் எழுதியுள்ள, இந்தப் படைப்பு அப்படி என்ன என நீங்கள் யோசித்தால் இதை முழுமையாகப் படித்து முடிக்கும் போது “எல்லாமே சரி தான்” என நிச்சயம் யோசிப்பீர்கள் என்பது சர்வ நிச்சயம்.
’சென்னையின் மறுபக்கம்- நிஜங்களின் தரிசனம்.’
ஒர் இடது சாரி அரசியல் அமைப்பின் தலைவராகப் பணியாற்றி கொண்டிருப்பவர் தான் வாழும் இந்தப் பெருநகரம் எப்படியெல்லாம் உருமாறிச் சீரழிந்து சின்னாபின்னாமாகி வருகிறது என்பதை அனுபவப்பூர்வமாக இந்தப் புத்தகத்தில் அணுகியுள்ளார். சென்னை என்பது பொதுவாக வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள், இரவானால் மின்னும் ஒளி வண்ண விளக்குகள், பறக்கும் வாகனங்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள், ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகள் என வெளித்தோற்றத்துக்கு அழகுறவே இருப்பது போலத் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் என்ன? என்பதை நமக்குச் சொல்லிவிடும் புத்தகம் இது.
12 கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்…என்ன பெரிய தகவல் இருந்து விடப் போகிறது என நினைக்க வேண்டாம்…ஏராளமான புள்ளிவிபரங்களோடும் தரவுகளோடும் ஒவ்வொரு பக்கத்தைத் தாண்டும் போதும் யோசிக்க வைக்கிறது.
இதில் சில கட்டுரைகள் மிக முக்கியமானவை. அதில் முதல் கட்டுரை “நகரமயத் தோல்வியின் சின்னம்” …இதில் சென்னைப் பெருநகரத்தின் உள்ளார்ந்த உள்கட்டமைப்புப் பிரச்சனைகள், அதனின் பெருந்தோல்விகள், அதனால் பொது மக்கள் சந்திக்கும் இடையூறுகள், இன்னல்கள், அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான நிர்வாகச் சீர்கேடுகள், தொலைநோக்கின்மை…குறுகிய அரசியல் லாபம் என சகலத்தையும் அலசுகிறது.
தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் பொய் வாக்குறுதிகள், வெற்றி பெற்ற பிறகு அதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத அணுகுமுறை என ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையை அம்பலப்படுத்துகிறது.
புத்தகத்தின் தலைப்பினூடே ;
சென்னையின் மறுபக்கம் என்பது நூலாசிரியர் சொல்வது மெட்ராஸ் எவ்வாறு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலிருந்து எவ்வாறு உருமாறியுள்ளது என்பதை வரலாற்றுத் தகவல்களோடும், இந்த நகரம் உருமாறப் பாடுபட்ட உழைப்பாளி மக்களின் அளப்பரிய தியாகம், உழைப்புச் சுரண்டலை அவர்கள் எதிர் கொண்ட விதம், இடது சாரி இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு, எனப் பல தகவல்கள் உள்ளன.
சென்னையின் பிரச்சனைகளை, குறைகளைச் சொல்வது மட்டுமே நோக்கமல்ல, அதற்கான நடைமுறை சாத்தியமுள்ள மாற்று ஆலோசனைகளைச் சொல்வதே ஒர் இடது சாரி இயக்கத்தின் தலைவரின் அடையாளம் எனும் குணத்துக்கேற்ப இந்நூலில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் – அதனின் தீர்வுகள் என எழுதுவதுதானே சரி என்ற அடிப்படையில் சாலைப் பாதுகாப்பு, சதுப்பு நிலப் பராமரிப்பு, கழிவு நீர் மேலாண்மை, மழை நீர் வடிகால் பிரச்சனைகள் ஏராளம் இருப்பதையும் சுட்டிக்காட்டி அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகளையும் பதிவு செய்கிறார்.
உதாரணமாகக் கிண்டி பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஏற்படும் ஒரு விபத்தில் மூன்று மாணவிகள் உயிரிழக்கின்றனர். அந்த விபத்துக்கான காரணம், அந்தக் காரணியை எப்படிச் சரி செய்வது அதற்கான தீர்வுகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம்… சொல்லும் தீர்வு ஏற்புடையதாகவும் உள்ளது
இப்படி ஒரு பெருநகரத்தின் வளர்ச்சியில் உள்ளார்ந்து இருக்கக் கூடிய அடிப்படைப் பிரச்சனைகளைப் பேசுகிறது. ஒரு கட்டுரையில்
“முதலாளித்துவத்தின் அசுர வளர்ச்சியின் அடையாளம் சென்னை என வரையறுக்கிறார்” … அந்த வார்த்தைகளை எந்த ஆண்டில் எழுதினார் என்பது தெரியாது…இன்று 2023ல் அது நூறு சதம் உண்மை எனத் தெளிவாக உணர முடிகிறது.
இயற்கைப் பேரிடர்கள்- அனுபவங்கள் :
சென்னை சமகாலத்தில் எவ்வளவு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தது என்பதை அறிவோம். வெறும் தலைப்புச் செய்தியாக, BREAKING NEWS எனப் பார்த்துக் கொண்டிருந்தோம்… உண்மையிலேயே ஆட்சியாளர்கள் இந்தப் பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொண்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை எனத் தெளிவு பட உறுதியாகச் சொல்ல முடியும்.
ஏனென்றால் அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்புக்கள், அதையொட்டிய அரசுகளின் நடவடிக்கைகள் அரசு இயந்திரம் எந்தப் பாடத்தையும் உள்வாங்கவில்லை என்பதையே உணர்த்தின. ஒப்பீட்டளவில் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்புகளும்.. அவற்றை அவர்கள் கையாண்ட விதமும் நாம் (தமிழ்நாடு) எதிர்கொண்ட விதமும் நமக்கு இருக்கும் போதாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கூட மலிந்து போய் இருக்கும் நிர்வாகச் சீர்கேடும் – அதிகார அடுக்குகளின் கையாலாகாத போக்கையுமே வெளிச்சம் போட்டுக் காட்டியது. விலை மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புகளுக்குப் பிறகும் கூட அலட்சியம் தொடர்கிறது. எல்லாவற்றிலும் நீக்கமற இருக்கும், எப்படி வேண்டுமானாலும் விதி மீறலாம்,

பொதுச் சொத்துகளை அபகரிக்கலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம் சென்னை தான். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது தான் சென்னையில் எவ்வளவு ஏரிகள் இருந்தன என்பதும், அவை அனைத்தும் எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு நீர் வளம் கொள்ளை அடிக்கப்பட்டதும், ஏரிகளை, விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கிப் பெரும் கொள்ளையடித்த ரியல் எஸ்டேட் மாபியாக்கள், நீர் நிலைகளை அசுத்தப்படுத்தி, நிலத்தடி நீரை வணிகமாக்கும் பெரும் கூட்டம் சுத்தமான குடிநீர் எனும் பெயரில் கொள்ளையடிப்பது என சென்னையின் பிரச்சனைகள் விரிவாகப் பேசப்படுகின்றன.
வானுயர எழுந்து நிற்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைப் பார்த்து, வாய் பிளந்து “எவ்வளவு பெருசா சூப்பராக் கட்டி இருக்காங்க” எனப் பேசிக் கொள்கிறோம். அதன் பின்னணியில் நடக்கும் பணப் பரிமாற்றங்கள், விதி மீறல்கள், கையூட்டு என எல்லாம் வீடு வாங்க வேண்டுமெனப் பெருங்கனவோடு இருக்கும் அப்பாவி மக்களிடம் பெரும் தொகையைப் பெற்று விதி மீறித் தரமில்லாமல் கட்டுமானப் பணிகள் செய்து பாதியிலேயே இடிந்து வீழ்ந்த மவுலிவாக்கம் சம்பவத்திற்குப் பிறகு, அதிர்வலைகளை உண்டாக்கியது உண்மை தான்.. ஆனாலும் குற்றவாளிகள் முறையாக விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவேயில்லை என்னும் வேதனையை இந்த புத்தகம் உணர்த்தியது.
இந்தப் புத்தகம் தற்போது ஆட்சியில் உள்ளவர்களின் கையில் சேர்க்கப்பட்டு அவர்களும் முறையாகத் தொலைநோக்கோடு மக்கள் மீது அக்கறை கொண்டு முடிவெடுத்தால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் நகராட்சி மேலும் மக்கள் வாழத் தகுந்த நகரமாக மாறும். இல்லையெனில் நகரமயமாக்கலின் கோரப் பற்கள் மக்களைக் கடித்துக் குதறும். தான் வாழும் காலத்தில் சக மனிதர்கள் மீதான பெரும் அக்கறையோடு இந்தப் புத்தகத்தை படைத்த தோழர் அ.பாக்கியத்திற்கும், வெளியிட்ட பாரதி புத்தகாலயத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.