சமூகத்தில் பரவலாகப் புத்தக வாசிப்பைக் கொண்டு செல்ல நம் தமிழக அரசு மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்த முடிவு செய்தது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) தன் பொறுப்பில் அதை ஏற்றதும்கூட வரவேற்கத்தக்கதே. ஆனால் இந்த ஆண்டு அவை எந்த சுவாரசியமும் இல்லாத வெற்றுச் சடங்குகளாகிப் போனது பெரும் வேதனை தருகிறது.
முதலில் அரங்குகளில் கூட்டமே இல்லை. ஏற்கெனவே அழைக்கப்பட்ட அதே பேச்சாளர்கள், புதியவர் யாருக்கும் வகையின்றி பொதுமக்களிடையே ஒரு வகைச் சலிப்பு ஏற்பட்டு விட்டது. கடலூர் போன்ற மாவட்டத் தலைநகரங்களில் நகரின் மையப் பகுதியான மைதானத்தில் அதை நடத்தாமல் மழைக்காலம் என்றும் பார்க்காமல் அதைக் கடற்கரையில் நடத்துவது வாசகர் வருகையை மேலும் குறைத்துவிடும்.
அரசு மாவட்டப் புத்தகக் கண்காட்சிகளை மேம்படுத்த உடனடியாகச் செய்ய வேண்டியவற்றில் ஒன்று இது போன்ற பிரமாண்டச் செலவு பிடிக்கும் புத்தகக் காட்சிகளுக்கு மாற்றாகத் திருமண மண்டபங்களில், ஊருக்குள் பொதுமக்கள் எளிதில் கூடுமிடங்களில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு மூன்று இடங்களுக்கு என அதைப் பிரித்து நடத்தலாம்.
அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆங்காங்கே உள்ள இலக்கிய அமைப்புகளையும் இணைத்து நூலகத்துறையே நடத்த பொறுப்பைகளை ஒப்படைக்கலாம். அந்தந்த மாவட்ட மைய நூலகங்கள் நடத்தும்போது அவை அதிக அரசியல் கலப்பின்றியும் இருப்பதைப் பார்க்கலாம். மேலும்…
கோலாகலக் கலைஞர் நூற்றாண்டில் நம் நூலகத்துறை (கடந்த மூன்றாண்டுகளாக) புதிய நூல்கள் எதையும் வாங்காததால் ஏற்கெனவே பதிப்பாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள்.
ஆன்-லைனிலேயே புத்தக ஏற்பு மற்றும் பதிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது பெரிய ஆறுதல் என்றாலும் ஏற்கெனவே போலி நூல்களுக்கு ஆர்டர்கள் அனுப்பி இருப்பதைத் தமுஎகச உட்பட பல அமைப்புகள் கண்டித்திருக்கும் சூழலில், நூலகத்துறை மூலம் புத்தகத் தேர்வு என்பது வெளிப்படைத் தன்மையோடு எத்தகைய ஒளிவு மறைவும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்ப் பதிப்பாளர் அனைவரின் விருப்பமும் கோரிக்கையும் ஆகும்.
தமிழ்ப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பயனடையும் விதமாகப் பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெருமளவில் பங்கேற்று நூல்களை வாங்கும் கவர்ச்சிகரமான மாற்று அமைப்பாக நாம் புத்தகக் கண்காட்சிகளை மாற்றுவதோடு, நூலகத்துறை காலதாமதம் இன்றிப் புத்தகங்களை வாங்கிப் பதிப்புத் தொழில் நொடிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் தளபதியார் தலைமையிலான கலைஞர் அரசின் கடமை ஆகும்.