ஆயிஷா இரா. நடராசன்

நடமாடும் நூலகம் தெரியும். நூலகத்திற்கு நாம் போகவேண்டாம். நம் வீதிக்கே வரும் வேன் அல்லது வண்டி நூலகம். அது என்ன நடக்கும் நூலகம்? நான்கூட முதலில் கேள்விப்பட்டப்போ இப்படித்தான் நினைத்தேன். பள்ளிப்பாடசாலை செய்தித்தாள் என்று எதுவுமே நுழைய முடியாத இருபத்தொன்பது கிராமங்களுக்கு பல மைல் தூரம் தனது தோள்பையிலும் தலையிலும் புத்தகங்களை சுமந்து சாதாரண மக்களின் வாசிப்பு மேம்பட நடந்து நடந்து தனது வாழ் நாளையே தியாகம் செய்த போலன் சர்க்கார் எனும் மாமனிதரைப் பற்றி அறிந்து நான் அதிர்ந்து போனேன். ‘நடக்கும் நூலகம் வந்துவிட்டது’ என்று ஊரே கூடி மொய்த்தந்த மாமனிதர் அவர்களுக்கு விநியோகித்த புத்தகங்கள் யாவுமே அவரது சொந்தச் செலவில் வாங்கியது என்பது மேலும் என்னை நெகிழச்செய்தது.
வரலாற்றில் நடக்கும் நூலகங்கள் இதற்கு முன்னும் இருந்தது உண்டு. 1818ல் பெருங்கவிஞன் ஜான் கீட்ஸ் ஸ்காட்லாந்தின் லேக் மாகாணத்தில் தாந்தேவின் டிவைன் காமடி ஜான்மில்டனின் நூல்கள் என சுமந்து சென்று கவியரங்குகளில் ஆர்வலர்களை சந்தித்த கவிதை- காதல் நாட்களில் இருந்தே அது தொடங்கிவிட்டது.
அறிவியலையும் கவித்துவ இலக்கிய உலகையும் இணைப்பதாக மார்தட்டிய இங்கிலாந்தின் கன்சர்வேட்டி அறிஞர் ஜான்முயிர் – ஆயிரம் மைல் புத்தக நடைப்பயணம் என்று ராபர்ட் பர்னின் கவிதைகள் ஜான்மில்டனின் ‘சொர்கத்தை துறந்த காவியம்’ கூடவே அன்று பிரபலமாக இருந்த வில்லியம்வுட் எழுதிய ‘தாவரஇயல்’ போன்ற நூல்களையும் மக்களிடம் எடுத்துச் சென்றார். ஆனால் பயணித்த நூலகங்கள் என்பவை 1800களுக்கும் முற்பட்டவை.
உதாரணமாக 1574ல் வில்லியம் ஹெக்வில் எனும் வழக்குரைஞர், தான் பயணம் செய்த குதிரை பூட்டிய பெரிய டிராம் வண்டியில் – தான் எங்கே சென்றாலும் பொதுமக்கள் மாணவர்கள் பார்வை இட ஒரு நூலகமே வைத்திருந்தாராம். தனது யுத்தக் களத்தின் நடுவே கிடைத்த இடைவெளியில் நெப்போலியன் போனபார்ட் – யுத்தமுனை முகாமிற்கு ஆயுதங்களோடு- அறுபது பெட்டிகளில் புத்தகங்களையும் சுமந்து சென்று – தனது பெரும்பாலான தளபதிகள், தளவாடக் காப்பாளர்கள், அமைச்சர் பட்டாளம் என யாவரையும் புத்தகம் வாசிக்க வைத்தான் என்றும்கூட ஒரு வரலாற்றுக் குறிப்பை வாசித்திருக்கிறேன்.
1930களில் எடுக்கப்பட்டதாக ஓர் அரிய புகைப்படம் ட்விட்டரில் வெளியானது. லண்டன் நகரின் வீதிகளில் தனது முதுகில் இணைக்கப்பட்ட ஒரு சிறு புத்தக அலமாரியோடு ஒருபெண். அதிலிருந்து புத்தகம் ஒன்றை எடுத்து வாசித்தபடி இருக்கும் மற்றொரு பெண். புத்தகம் எடுத்து வாசிக்க வாரம் இரண்டு பென்ஸ் இங்கிலாந்து காசு.
ரம்ஸ்கேட் எனும் லண்டனின் பகுதியில் இப்படி நடக்கும் ஒரு நூலகம் 1930களில் இருந்திருக்கிறது. தான் எந்த ஊருக்கு, நாட்டிற்குப் பயணித்தாலும் கூடவே புத்தகங்களை சுமந்துவர ஒரு வீரரை பணிக்கு வைத்திருந்தார் சோவியத் நாட்டின் தலைவர் ஜோசப் ஸ்டாலின். அந்த வீரரை அவர் ‘நடக்கும் நூலகம்’ என்றே அழைத்தார். அப்படியான அந்த நடக்கும் நூலகத்திடம் எனனென்ன வகை நூல்கள் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் ஆணைகூட இருந்தது. அரசியல் சித்தாந்த நூல்கள் முப்பது இருக்க வேண்டும். ஆறு அல்லது ஏழு கவிதை நூல்கள், அறிவியல் நூல்கள் நான்கைந்து, நாவல்கள் மூன்று இருக்கலாம்… இப்படிப் போகிறது அந்தப் பட்டியல்.
இன்று நாம் மின்-புத்தகக் காலத்தில் வசிக்கிறோம். அவரவர் விருப்பம் போல நம் கைபேசிகளில்கூட புத்தகங்களை பதிவிறக்கி வாசிக்க முடிகிறது. திறன்பேசியில் – லைப்ரதி – என்று பைத்தான் கணினி நிரலாக்கம் ஒரு தனி அமைப்பையே தந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் கைபேசியை விடாமல் எங்கு பார்த்தாலும் சுமந்து செல்லும் நாம் யாவருமே ஒரு வகையில் நடக்கும் நூலகம்தான். ஆனால் போலன் சர்காரைப் பற்றி அறிந்தால் நீங்கள் உங்களை அப்படி அழைத்துக் கொள்ள மாட்டீர்கள். கைபேசியை விடுங்கள். கிராமப்புறங்களுக்குள் பயணிக்க மாட்டுவண்டி தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் போலன் சர்காரின் வரலாறு தொடங்குகிறது. அந்த நடக்கும் நூலகம் வரலாறான கதை இதோ.
போலன் சர்கார் 1921ல் செப்டம்பர் 10ம்நாள் வங்காளத்தின் நத்தூர் மாவட்டத்தில் பகட்டிபாராவில் பிறந்தார். அது ஒரு மிகச் சிறிய கிராமம். இன்று வங்காளதேசத்தில் ராஜ்ஷஷி எனும் எட்டு மாவட்டங்கள் கொண்ட மாகாணத்தின் ஒரு யூனியனாக பகட்டிபாரா உள்ளது. சிறுவயதில் இருந்தே செவிப்புலன் மிகக்குறைவு. அவர் ஓர் ஊமை என்று பிரசவம் பார்த்த மருத்துவத் தாதி கூறிவிட்டார்.
போலன் சர்காரின் இயற்பெயர் ஹாரஸ் உதின். பிறந்த ஐந்தே மாதத்தில் தனது தந்தையை இழந்தார் அவர். நலிந்து உணவிற்கு அலைக்கழிக்கப்பட்ட அவரது தாய் கை குழந்தையோடு தன் தந்தையின் வீட்டிற்கே போய்விட்டார். அது ஏறக்குறைய நாற்பது மைல் தள்ளி இருந்த பாய்ஷா எனும் கிராமம். அங்கே போலன் சர்காரின் தாத்தா கொஞ்சம் நிலம் வைத்திருந்தார். அங்கிருந்து சிறிய பள்ளியில் அவரை சேர்த்தார்கள். அந்த காலத்தில் ஆறாம் வகுப்பிற்கு மேல் இரண்டனா கட்ட வேண்டும். எனவே அவரது படிப்பு வறுமை காரணமாக ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டது. வருடம் 1932.

அதே வருடத்தில் வங்காள-விடுதலைப் போராட்ட விழிப்புணர்வு நாடக சமிதி எனும் அமைப்பு வீதி நாடகங்களை அறிமுகம் செய்தது. துபின் சந்திர சாட்டர்ஜி, மோண்டோலன் பந்தோபாத்யாயா போன்றவர்களின் நாடகக்குழு பாயுஷா கிராமத்தில் தங்களது நாடகத்தை அரங்கேற்றியபோது போலன் சர்கார் எனும் 12 வயதுச் சிறுவனும் அந்த நாடகத்தில் ஒரு சிரிப்பு நடிகனாக இணைந்தான். ஊர் ஊராகச் சென்று ஜனங்களை தங்களது துயரங்களை, பசி, பட்டினியை மறந்து சிரிக்க வைத்து – அதே சமயம் விடுதலை வேட்கையை விதைத்தார் அவர்.
அடுத்த பதினைந்து ஆண்டுகளில் – நாடகமேடை கலைஞனாக மட்டுமல்ல தீவிரமான புத்தக வாசிப்பாளராக வாழ்க்கை அவரை செதுக்கி இருந்தது. எங்கிருந்து எப்போது எப்படித்தான் அவருக்கு வாசிக்க புத்தககங்கள் கிடைத்தன என்று பலரும் ஆச்சரியப்படும்படி அவர் ஒரு புத்தக மனிதராக இருந்தார். மகாத்மா காந்தி எழுதிய வெள்ளையர்களால் தடை செய்யப்பட்ட கிராம சுயராஜ்யம் புத்தகத்தின் ஆறு பிரதிகள் அவரிடம் மட்டுமே இருப்பதை அறிந்து அவரை தேடி வந்தவர்கள் பலர். அவர்களில் பினாதாஸ், தினேஷ் குப்தா போன்ற நாடறிந்த விடுலைப் போராட்ட வேங்கைகளும் அடங்குவர்.
1974ல் இந்திய விடுதலையோடு நாடகக்குழு கலைக்கப்பட்டது. புத்தகக் காவலன் என புகழப்பட்ட போலன் சர்கார் தனது கிராமத்திற்கே திரும்பி இருந்தார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தான் கல்வி கற்று ஆறாம் வகுப்போடு வெளியேறிய பள்ளி ஆசிரியர் இல்லாமல் இடிபாடுகளுக்கிடையே பாழடைந்துபோய் மூடப்பட்டுக் கிடந்ததைக் கண்டு மனம் பதைத்தார் அவர். தனது பழைய நண்பர்களின் உதவியோடு தனது சொந்த உடல் உழைப்பின் மூலம் அந்தப் பள்ளியை – மேற்கூறை உட்பட – கட்டி உயிர் கொடுத்தார். விரைவில் கூலி வேலைக்கு அனுப்பப்பட்ட ஊரின் இருநூறு குழந்தைகளை அவரால் அப்பள்ளியில் இணைக்க முடிந்தது. அதே நாட்களில் தனது புத்தகங்களைக் கொண்டு வீட்டில் ஒரு நூலகத்தையும் அவர் அமைத்தார்.
மாணவர்களை புத்தக வாசிப்பை நோக்கி அவர் ஈர்த்தவிதம் சுவாரசியமானது. ஹருன்-அர்-ரஷீது எனும் அந்தப் பள்ளிக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் வருவார். வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கும் – பத்துபேரை தேர்வு செய்வார். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் பத்து பத்து. தன் புத்தகங்களை அவர்களுக்கு பரிசாக வழங்குவார் போலன் சர்கார். அவை அவரது அன்புப்பரிசு. விரைவில் வகுப்பில் இருந்த பிற மாணவர்களும் அவரிடம் புத்தகங்கள் வேண்டினர். அவர்களுக்கும் கொடுத்தார். ஆனால் ஒரு நிபந்தனை இருந்தது. இவர்கள் வாசித்து விட்டு புத்தகங்களை திருப்பித்தர வேண்டும். இது நடந்து ஓரிரு மாதங்களில் ஊரில் இருந்த பெரியவர்கள் அவரிடம் வந்தனர். பலருக்கு எழுத படிக்கத் தெரியவில்லை. அவர்களை எழுத்தறிவு உள்ளவர்களாக்கி புத்தக வாசிப்பாளராகவும் மாற்றிய பெருமை போலன் சர்காரை சேரும்.
இந்திய பிரிவினையின்போது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம். அப்படி இணைக்கப்பட்டவற்றில் போலன் சர்காரின் ராஜ்ஷஷி மகாணமும் ஒன்று. மேற்கு வங்கம் எனும் இந்தியப் பகுதி – பிரதமர் நேருவின் வழிகாட்டுதலாலும் பிறகு வந்த மேற்கு-வங்க இடதுசாரி அரசாலும் நல்ல பல திட்டங்களுடன் வளர்ச்சி கண்டது. ஆனால் கிழக்கு வங்கத்தை பாகிஸ்தான் கைவிட்டதாக அங்கே பெரும்பாலோர் கருதினர். கடுமையாக வரி விதித்து அங்கிருந்த செல்வங்களையும் பெற்று அதே சமயம் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டம் எதையுமே அறிவிக்காது பாகிஸ்தானிய அரசு புறக்கணிப்பதாக உணரப்பட்ட நாட்களில்தான் வங்கதேச விடுதலை குறித்த அடுத்த போர்க்களம் வெடித்தது. அதன் முத்தாய்ப்பான நட்சத்திரங்களில் ஒன்றாக ஜொலித்தவர்தான் போலன் சர்கார்.
1970ல் சட்டென்று ஒருநாள் அவர் இரு தோள்களிலும் தோள்பைகளில் வங்க- விடுதலையின் எழுச்சி நூல்களை எடுத்துக்கொண்டு தனது நடைப் பயணங்களைத் தொடங்கினார். அவரிடம் அவரது நடையின் போது இருநூறு புத்தகங்கள் இருந்தன. ராஜ்ஷஷி மாகாணத்தின் முப்பத்தாறு கிராமங்களில், தானே நேரில் நடந்து சென்று மக்கள் வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை, தானே நேரில் நடநது சென்று மக்கள வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்கள் முற்றிலுமாக 36 கிராமங்களை தனது புத்தக நடைப்பயணத்தில் முடித்தபின் ஒன்பது நாட்கள் கழித்து மீண்டும் அதே கிராமத்திற்கு வருவார்.
ஊர் மக்கள் முதலில் அவரது நூல் – அறிமுகத்தைக் கேட்டார்கள். பிறகு தங்களது விருப்ப நூலை தேர்வு செய்வார்கள். ஒன்பது நாட்களில் மறுமுறை அவர் வரும்போது திருப்பி கொடுத்துவிட வேண்டும். அடுத்த நூலை பெற்றுக் கொள்ளலாம். 1971ல் ஷேக் முஜிபூர் ரகுமான் பாகிஸ்தானை எதிர்த்து அவாமி முன்னணி சார்பில் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். விரைவில் முக்தி பாஹினி எனும் கொரில்லா யுத்த ராணுவம் விடுதலைக்காக அமைக்கப்பட்டது. அதில் இணைத்தளபதியாக இருந்தவர் ஏ.கே. காண்டுகர் இவர் ராஜ்ஷஷி மாகாணத்தின் பாப்னா கிராமத்தைச் சேர்ந்தவர். விமானப்படை வீரரான அவர் போலன் சர்காரின் ஒற்றை நூலகப் புரட்சியின் வாசிப்பு வித்தகர்களில் ஒருவர்.

பாகிஸ்தான் இஸ்லாமிய மதவெறி அமைப்புகளை ஏற்படுத்தி மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி அல்-ஷாமஸ், அல்-பாதர் எனறு பிற்போக்கு வெறி அமைப்புகளை ஆயுதம் கொடுத்து வங்கத்தில் ரத்த ஆறு ஓடிட முயற்சிகள் மேறகொண்டபோது – நடக்கும் நூலகமான போலன் சர்காரின் ராஜ்ஷஷி மாகாணத்தின் 36 கிராமங்களும அன்புநெறி தோழமை முற்போக்கு சமத்துவம் என்ற சிந்தனைகளை சிக்கெனப் பிடித்ததை வரலாறு பதிவு செய்கிறது. 1971 வங்கதேச விடுதலைக்குப் பின்னும் அந்த ‘நடக்கும் நூலகம்’ தன் பணியை நிறுத்தவே இல்லை.
ஆயிரக்கணக்கான நூல்களை தனது சொற்ப வருமானத்தில் தான் சேகரித்த பணத்தில் வாங்கி தன் சொந்தச் செலவில் மக்கள் – சாதாரண – இல்லத்தரசிகள், உழைக்கும் மக்கள் வாசிக்க எந்தக் கட்டணமும் வாங்காதவரின் தொடரும் ‘நடக்கும் நூலக’ பணியை 2006 – வங்கத் தொலைக்காட்சி தனது பிரபலமான ‘இட்டாடி’ நிகழ்ச்சி மூலம் அறிமுகம் செய்தது. 2009ல் அவரது அயராத நடக்கும் – நூலகச் செயல்பாடுகளை ராஜ்ஷஷி ஜில்லா பரிஷத் அவரது சொந்த இல்லத்தின் நூலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றி– அங்கீகரித்தது.
2011ல் வங்கதேசத்தின் பதம்பூஷன் அதாவது ‘எக்குஷே படக்‘ விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதில் எதுவுமே அவரைப் பாதிக்கவில்லை. நான்கு சந்ததிகளை புத்தக வாசிப்பாளர்கள் ஆக்கிய அந்த மாமனிதரை மக்கள் ‘பெரிவாலா‘ (ஒளியைக் கொண்டுவருபவர்) என்று அழைத்தார்கள். வாசிப்பை ஒரு சமூக- இயக்கமாக மாற்றிய போலன் சர்கார் 2019ல் 98 வயதில் தான் இறந்துபோவதற்கு ஆறு நாட்கள் முன்புவரைகூட நடக்கும் நூலகமாக இருந்தார் என்பதை அவர் மகன் ஹைதர் அலியின் சமீபத்திய ‘ட்ரிப்யூன்’ இதழ் கட்டுரை விவரிக்கிறது.
நடக்கும் நூலகமான போலன் சர்காரை பின் பற்றி இன்று காஷ்மீர், கேரளா மற்றும் வங்காளத்தில் நடக்கும் – நூலகங்கள் பல உருவாகி வருவதை இணையவழிச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.