இ.பா.சிந்தன்
மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்
ஓங்கில் கூட்டத்தில் வெளியான முதல் நூல் என்றால் அது மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்தான். முக்தா சால்வே என்பவர் இந்நூலை மராத்தி மொழியில் எழுதினார். ஒரு சிறு கட்டுரையாக 1855 ஆம் ஆண்டு தியானோதயா என்கிற பத்திரிக்கையில்தான் முதன்முதலில் அது வெளியாகி இருந்தது. சரி, யார் அது முக்தா சால்வே என்று நமக்கு ஒரு கேள்வி வரும். நம்மில் பெரும்பாலானவங்களுக்கு சாவித்ரிபாய் புலே யாரென்பது தெரிந்திருக்கும்.

இன்றைக்குதான் பள்ளிக்கூடங்களில் எல்லாச் சாதியினரும் படிக்கலாம் என்கிற நிலைமை இருக்கிறது. ஆனால் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, பார்ப்பனர்களைத் தவிர யாரும் எளிதில் கல்வி கற்றுவிடமுடியாது. அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, குருகுலங்களாக இருந்தாலும் சரி. எல்லா இடத்திலும் அதே நிலைதான். அதிலும் பார்ப்பனப் பெண்களுக்குக் கூட கல்விமறுக்கப்பட்ட காலம் அது.
இதை எதிர்த்துப் பேசியதோடு மட்டும் நிற்காமல், இந்தியாவிலேயே முதன்முதலாக எல்லா சாதிப் பெண் குழந்தைகளும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காகப் பெண்குழந்தைகளுக்கென்றே தனியான பள்ளிகளைச் சாவித்ரிபாய் புலே துவங்கினார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக அவர் மீதி சாணியைக் கரைத்து ஊற்றியதும், காறித்துப்பியதையும் எல்லாம் தாண்டித்தான் சாவித்ரிபாய் புலே அதனை தொடர்ந்தார்.
அந்த சாவித்ரிபாய் துவங்கிய பள்ளிக்கூடத்தில் அவரிடம் படித்த ஒரு பெண்தான் முக்தா சால்வே. தன்னுடைய 14 வது வயதில், சாதி குறித்துத் தனக்குத் தோன்றியதை ஒரு கட்டுரையாக எழுதினார் முக்தா சால்வே. அந்தக் கட்டுரையை 150 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் மொழிபெயர்த்து, ஓங்கில் கூட்டத்தில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
திவ்யா பிரபு என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். மிக அற்புதமான மொழிபெயர்ப்பாக வந்திருக்கிறது. பெண்கள் அதிகமாக எழுத வரவேண்டும், அவர்களுக்கான இடத்தை உறுதி செய்யும் வேலைகளையும் ஏற்கனவே இருக்கிற பால் பேதமற்ற அனைவரும் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்நூலை முதல் நூலாக வெளியிட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மகர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குப் புத்தகங்களை வாசிக்கவும் எழுதவும் சொல்லிக்கொடுத்துவிட்டால் என்னாகும் என்பதற்கு உதாரணம்தான் இந்நூல். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த காரணத்தாலேயே தனக்கு நேரும் கொடுமைகளை எல்லாம் அந்தப் பெண் எழுதியிருக்கிறார்.
“என்னையும் பார்ப்பனர்களையும் உருவாக்கியவர் ஒரே கடவுள் தான் என்றால், நானும் மற்ற பார்ப்பனர்களும் ஒரே மதம்தான் என்றால், எனக்கு மட்டும் ஏன் வேதங்களைப் படிக்க அனுமதிப்பதில்லை?
எனக்கு மட்டும் ஏன் நல்ல ஆடைகளை உடுத்த அனுமதியில்லை?
என்னை மட்டும் ஏன் கல்வி கற்க அனுமதியில்லை?
எனக்கு மட்டும் ஏன் சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள அனுமதியில்லை?
நான் செத்தால் மட்டும் பக்கத்திலேயே எரிக்கக்கூட ஏன் அனுமதியில்லை?
எனக்கு மட்டும் ஏன் கூலிகூட இல்லை?”
என்று முக்தா சால்வே எழுப்பும் கேள்விகளெல்லாம் கொழுந்துவிட்டு எரியும் கேள்விகள்.
அந்தக் கேள்விகள் பலவும் இன்றைக்கும் அப்படியே தேவையான கேள்விகளாக இருக்கின்றன என்பதை நினைக்கும் போது, நாம் பல நூற்றாண்டுகளாக ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டே, பல கிலோமிட்டர் ஓடிப்பயணித்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், நாம் அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட அறியாமல். ஒரு 12 வயதுக் குழந்தைக்கு இந்நூலில் சொல்லப்பட்ட அனைத்தும் புரியுமா என்பது ஒருபக்கமிருந்தாலும், இன்னொரு 14 வயது குழந்தையின் குமுறலைக் கேட்பதற்கும், அதில் இருந்து பல கேள்விகளைத் தனக்குள்ளே உருவாக்கிக்கொண்டு அதற்கான விடைகளைத் தேடவைப்பதற்கும் இந்நூல் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.
சுல்தானாவின் கனவு :
“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதற்கு?” என்கிற வாக்கியத்தில் அடுப்பு ஊதுவது வேண்டுமானால் பழமை ஆகியிருக்கலாம். ஆனால் “பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்கிற வாக்கியம் இன்னமும் கொஞ்சமேனும் நம் சமூகத்தில் ஒட்டிக்கொண்டு உலவிக்கொண்டு தான் இருக்கிறது. படிப்பதற்கோ பணி செய்வதற்கோ வீட்டு வாசப்படியைப் பெண்கள் தாண்டிவிடக்கூடாது என்கிற கருத்தைக் கொண்டவர்கள் இன்றைக்கும் ஏராளமாக இருக்கத் தான் செய்கிறார்கள்.
அப்படியே படிக்க அனுப்பினாலும் “கல்யாண வயது வரும்வரைக்கும் படிக்கட்டும்” என்று அனுப்பும் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. 18-20 வயது ஆனதும் வரன் பார்க்கத் துவங்கிவிடுவார்கள். நல்ல வரன் கிடைத்துவிட்டதாக நினைத்துவிட்டால், உடனே அப்போது பெண் என்ன படித்துக் கொண்டிருந்தாலும் அப்படியே படிப்பை நிறுத்திவிட்டுத் திருமணம் செய்துவிடுவார்கள்.
படிப்போ வேலையோ எதுவாகினும் “திருமணத்திற்குப் பின்னர் கணவர் வீட்டிடம் அனுமதிபெற்றுச் செய்துகொள்” என்பதே பிறந்தவீட்டின் வார்த்தைகளாக இருக்கும். அதுவரையிலும் பிறந்த வீட்டின் ஆண்களுடைய அனுமதிக்காகக் காத்திருந்த பெண், பின்னர் புகுந்த வீட்டிலுள்ள ஆண்களின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் வரும். ஆக, எதைச் செய்வதாக இருந்தாலும், எங்கே இடம் மாறினாலும் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களின் அனுமதிக்காகவே காத்திருக்க வேண்டிய சூழலுக்குப் பிறந்தது முதல் இறந்ததுவரையிலும் பெண்கள் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் கடந்தகாலத்தைவிடவும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது தான் என்றாலும், அடிப்படைக் கருத்தியலில் பெரிய முன்னேற்றமில்லை.
இதனையெல்லாம் யாரிடம் உரையாடுவது?
எந்த வயதினரிடம் விவாதிப்பது?
யாரை மாற்றுவது?
என்பதில் மாற்றத்தை விரும்புவோரிடத்திலும் குழப்பம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண்-ஆண் சமத்துவம் குறித்து பேசத்துவங்கிவிட வேண்டும் தான். வீட்டில் சமையலறை என்பது பெண்களுக்குத் தான் சொந்தம் என்பதை முறியடிப்பதில் இருந்து, அரசியல் பேசுவதும் நாளிதழ் வாசிப்பதும் ஆண்களுக்கே உரியது என்பதை உடைப்பது வரை அனைத்திலும் குழந்தைகளின் பொதுப்புத்தியில் சமத்துவக் கருத்தினை நுழைத்தாக வேண்டும்.
துடைப்பத்தைக் கையில் தொடக்கூடாது, சாப்பிட்ட தட்டை எடுக்கக்கூடாது, அழக்கூடாது போன்றவற்றை ஆண் குழந்தைகளிடம் சொல்வதும், இதெல்லாம் பெண் குழந்தைகளுக்கே உரித்தானது என்பது போன்ற ஏராளமான அசமத்துவத் கருத்தினை நிறுத்தவேண்டியது அவசியம். அதேபோல, ஆண்கள் என்ன உடை அணிவது என்பதில் ஆண்களுக்கு எப்போதுமே எவ்விதச் சமூகக்கட்டுப்பாடும் அழுத்தமும் இருந்ததே இல்லை. சூழலுக்கும் வசதிக்கும் ஏற்ப லுங்கியோ, பேண்டோ, ஷார்ட்சோ வேட்டியோ என எதனை அணியவேண்டும் என்று அவர்களாகவே தீர்மானித்து அணிகிறார்கள்.
ஆடை தொடர்பாக அவர்களுடைய முடிவில் இந்த சமூகம் எந்தவிதத்திலும் மூக்கையோ முகத்தையோ நுழைத்து எந்தக் கருத்தையும் சொல்வதே இல்லை. ஆனால் பெண்களுடைய ஆடையில் தான் ஆயிரம் கருத்துகள், விவாதங்கள், திணிப்புகள், சண்டைகள் எல்லாமே. பெண்கள் இந்த ஆடையைத் தான் அணியவேண்டும் என்று ஒரு கூட்டமும், இந்த ஆடையை அணியவே கூடாது என்று இன்னொரு கூட்டமும் அதிரடியாகவும் அடாவடியாகவும் அவரவர் கருத்தினைத் திணிக்கிற வேலையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
ஆண்களைப் போலவே எந்தவோர் உடையையும் அணிவதோ அல்லது புறக்கணிப்பதோ பெண்களின் தனிப்பட்ட விருப்பம் என்கிற அளவில் கூட அவர்களுக்கு அடிப்படை உரிமை இல்லாமல் போகிறது. இப்பூமியில் பிறக்கிற ஒவ்வொருவரிடமும் பிறந்தது முதலே இதையெல்லாம் பேசவேண்டுமென்றாலும், வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் தான் மிகத்தீவிரமாக உரையாட வேண்டும். அவர்கள் தாம் இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்த உலகத்தில் பெரியவர்களாக வலம் வரப்போகிறவர்கள். சமத்துவத்தைப் பேண வேண்டிய அவசியத்தை வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் மிக அதிகமாக வலியுறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அப்படியான ஒரு உரையாடலைத் துவங்கும் நோக்கில், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரொக்கேயா பேகம் எழுதிய ஒரு குறுநாவலை எடுத்து மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது ஓங்கில் கூட்டம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை எப்படி இன்றைக்குச் சரியாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அந்தக் கதை எழுதப்பட்ட வடிவமும் பேசப்பட்ட கருத்தும் இன்றைக்கும் ஒத்துப்போவதாக இருக்கிறது. ஃபேண்டசி கலந்த அறிவியல் புனைவுக் கதையாக எழுதியிருக்கிறார் ரொக்கேயா.

பெண்களை எல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைத்துவைத்திருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், ஆண்களை அதே போல அடைத்துவைத்தால் எப்படி இருக்கும் என்கிற சின்னப் புள்ளியில் இருந்து வளர்த்தெடுத்து இக்கதையை எழுதியிருக்கிறார். இக்கதையில் வரும் சில அறிவியல் புனைவுகளையெல்லாம் படிக்கையில், “ஆகா அற்புதமான கண்டுபிடிப்பா இருக்கே. இந்த மாதிரி செஞ்சா நல்லா இருக்கும்ல” என்று இன்றைக்கும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுகிறது. இதனையெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரொக்கேயா எழுதியிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. இந்த நூலை ஆங்கிலத்திலும் படித்துவிட்டேன். திவ்யா பிரபு அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வாசித்துவிட்டேன். மிகச்சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
மிகப்பழைய நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே நமக்குத் தோன்றாத அளவிற்கு எளிமையாகவும், இன்றைக்கு நம்முடைய பயன்பாட்டில் இருக்கிற வார்த்தைகளைக் கொண்டும் மொழிபெயர்த்திருக்கிறார். நேரடியாக ஒரு நூலை எழுதுவதைவிடவும் கடினமான பணியாகத் தான் நான் இதனைப் பார்க்கிறேன். தமிழில் மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் குறைவாக இருக்கிற நிலையில், அவர் தொடர்ந்து பல நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்பது எனது விருப்பமும் கோரிக்கையும் ஆகும்.
அதேபோல நூலின் மற்றொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால் அதன் ஓவியங்கள். ஓங்கில் கூட்டம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை எடுத்துக்கொண்டு ஒரு டைம் மெசினில் நூறாண்டுகளுக்கு முன்னர் பயணித்து, ரொக்கேயாவிடம் காட்டினால், அவர் அசந்துபோய்விடுவார் என்பது உறுதி.
நூலுக்குத் தோழர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் வழங்கிய அணிந்துரையும் நூலைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அத்துடன் ரொக்கேயா குறித்து நூலின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள அறிமுகமும் இக்கதையையும் அது எழுதப்பட்ட காலத்தையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள உதவிகரமாக இருக்கிறது. “கரணம் தப்பினால் மரணம்” என்பார்களே, அப்படியான ஒரு நூலை எடுத்துக்கொண்டு, மிக அழகாக மொழிபெயர்த்து, ஓவியம் வரைந்து, வடிவமைத்து வெளியிட்ட ஓங்கில் கூட்டம் அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கான நூல்களைப் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக உருவாக்கி வருவது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நன்றியும் பாராட்டும். 65 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல் என்பதால், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வாசித்து முடித்துவிடலாம்.