ஸ்டாலின் சரவணன்
“இதயத்தைப் பிடுங்கியெடுத்த பின்னும்கூட
பாருங்கள்
கனத்த உடலை இழுத்துக்கொண்டு
அந்தப் பன்றி காட்டுக்குள் எப்படி ஓடுகிறது
ஈட்டியோடு அதை விரட்டினோம்
ஓர் அடுக்குச் செம்பருத்திப் பூவைப் பறித்து
தன் இதயமிருந்த இடத்தில் வைத்துக்கொண்டு
இன்னும் அது வேகமெடுத்து மறைந்தது
நானிந்த கதையைச் சொன்னதிலிருந்து
நாளும் என் கிழத்தி செம்பருத்தியைச் சூடிக்கொள்கிறாள்
ரத்தக்கறையேறிய ஈட்டியில் துரு பரவி மிகுகிறது
மழை விட்டபாடில்லை”

கவிஞர் வெய்யில் எழுதிய இக்கவிதையைக் கதாநாயகி வாசிப்பதுபோல ஒரு காட்சி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
தமிழ்ப் படங்களில் நவீன கவிதை இடம் பெறுவது இதுவே முதல்முறை.
அசாமிஸ் மொழிப் படமான புல்புல் கேன் சிங் படத்தில் இளம் காதலர்கள் ஓடையின் கரையில் அமர்ந்தபடி நவீனக் குறுங் கவிதைகளை வாசிப்பர். மலையாளத் திரைப்படம் ஒன்றில் மனுஷ்யபுத்திரனின் கவிதை இடம்பெற்று இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இது போன்ற ஒரு காட்சி தமிழ்ப் படத்தில் இடம்பெறாதா என்று ஏங்கி இருக்கிறேன். மாரி செல்வராஜ் அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார். வெறும் வாசிப்பாக மட்டுமல்லாமல் “மகிழ்ச்சியான பன்றிக்குட்டி” தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் பேசும் அரசியல் உரிமைக்குரலைத் தனது படத்தின் மையப்புள்ளியாகவும் வைத்திருக்கிறார்.
பன்றி, நாய், குதிரையை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களில் தொடர்ந்து குறியீடாகப் பயன்படுத்தி வருகிறார். மாமன்னன் படத்தில் பன்றியை அவர் கைக்கொண்ட விதம் அற்புதமானது. சங்க காலத்தில் வீடுகளில் இறைச்சிக்காக மட்டுமின்றி விருப்பமாகும் பன்றிகள் வளர்க்கப்பட்டதாக பாடல்கள் உள்ளன. சங்கத் தமிழர்கள் வீட்டில் கோழிகள் ஆடுகளுடன் பன்றிகள் வளர்ப்பதாகப் பட்டினப்பாலை வரிகள் கூறுகின்றன.
“பறழ்பன்றி பல்கோழி
உறைகிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல் விளையாட”
கள்ளைக் காய்ச்சிப் பெண்கள் பாத்திரங்களைக் கழுவி ஊற்றிய நீரானது நிற்கின்ற பள்ளத்தில் உண்டாகிய சேற்றிலே குட்டிகளும் பன்றிகளும் உழல்கின்றன எண்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. பன்றியின் குடும்பத்துக்கு அரிசி மாவு ,திணை போன்ற உணவுகளை நாள்தோறும் அவற்றுக்கான குழியில் இட்டு வளர்த்த செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வரிகள் கூறுகின்றன.
இப்போதும் கருப்புப் பன்றிகள் மட்டுமல்ல வெள்ளை நிறம் கொண்ட ஐரோப்பா வகைப் பன்றிகளும் வளர்ப்பில் உள்ளன. தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வருபவை கருப்பு நிறப் பன்றிகளே.உணவுப் பழக்கங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வேறு வேறாக உள்ளன.

நாய் மாமிசத்தை விரும்பி உண்ணும் சீனர்கள், பசும்பாலை வெறுப்பதாகவும், பிரேசிலில் இருக்கும் சில பழங்குடியினர் எறும்புகளை மிகவும் விரும்பிச் சாப்பிடுவதாகவும் மான்கறியை வெறுப்பதாகவும் மார்வின் ஹாரிஸ் எழுதிய “பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” நூலில் இருந்து அறிய முடிகிறது. இவ்வாறு உணவுப்பழக்கம் உலகம் முழுக்க விருப்பு, வெறுப்பால் பின்னப்பட்டிருக்கிறது.
பன்றிக்குட்டிகள் பார்ப்பதற்கு மிக அழகானவை. மிருதுவானவை. ஆனாலும் நாம் ஏன் வெறுக்கிறோம்!? சுத்தம் ,அசுத்தம் என்ற இரு புள்ளிகளில் இருந்து கிளைக்கும் பதில்கள் இவற்றுக்குப் பொருத்தமானவை. சுத்தத்தை ஆதிக்க சாதியினருடனும் அசுத்தம் மற்றும் அழுக்கை ஒடுக்கப்பட்ட சாதியினருடனும் பொருத்தி வைத்துள்ள இந்தச் சமூகத்தில், பன்றிகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது, அவற்றை உண்பது, அவை இருக்கும் இடங்களில் புழங்குவது போன்றவை ஒடுக்கப்பட்ட சாதியினருடனே சேர்த்துப் பார்க்கப்படுகின்றன.
சுத்தம்-அசுத்தம் என்ற இருமையின் நீட்சியாகவே புனிதப்படுத்தப்பட்டுள்ள பசுவின் கழிவான சாணமும் சிறுநீரும்கூட உயர்வாகக் கருதப்படுவதைப் பார்க்கலாம். “பன்றியை விரும்புபவர்கள்- பன்றியை வெறுப்பவர்கள்” என்று மார்வின் ஹாரிஸ் எழுதிய கட்டுரையைப் படித்தால் இதுகுறித்து நாம் தெளிவடையலாம்.
பன்றியின் உடல் தகவமைப்பு நிலத்தோடு ஒன்றி இருப்பது அதன் பண்புகளில் முக்கியமானது. பன்றி தனது உடல் தட்பவெட்பத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள இயலாத ஒரு மிருகம். அதன் உடலைச் சுற்றிப் பாதுகாக்க முடிகள் இல்லை, அதற்கு வியர்வை சுரப்பிகளும் இல்லை. ஆகவே சுற்றியுள்ள வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட்டை விட அதிகமாகும்போது பன்றியால் அதனைத் தாங்க இயலாது. அப்போது தன் வெளியில் இருக்கும் ஈரப்பதம் கொண்டே அது தன் வெப்பத்தை ஈடு செய்ய வேண்டும். ஒருவேளை தண்ணீர் கிடைக்காத போது தனது மூத்திரம் மலத்தில் புரண்டாவது அதன் உடலைக் குளிர்வித்துக் கொள்ள முயல்வதாக அறிவியல் சான்றுகள் முன்வைக்கின்றன.
பன்றியின் அறிவியல் ரீதியான இந்தப் பண்பு, அழுக்கு பற்றிய சாதிய மனப்பான்மையோடு பொருத்தப்பட்டுவிடுகிறது, பன்றிகள் பற்றிய பொதுப்பார்வைக்கும் அது வழிவகுக்கிறது.பன்றி மற்றும் பசுவை வைத்து மிகப்பெரிய அரசியல் விளையாட்டை மதங்களும், கட்சிகளும் இந்தியாவில் காலம் காலமாக நிகழ்த்தி வருகின்றன. யூதர்களும் முஸ்லிம்களும் பன்றியை வெறுக்கின்றனர். பசுவைப் புனிதமாகக் கருதுவதாக இந்து மதத்தின் தீவிர ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர் பசுவதைச் சட்டங்களும் பசு மாமிசம் விற்பனைத் தடைச் சட்டங்களும் தேர்தல் ஆதாயக் கல்லாவில் முதன்மையாகி விட்டன. பன்றிகளும் பசுக்களும் அரசியல் பகடைக்காய்களாக மாறிவிட்டன.
சங்க இலக்கியம் தொடங்கி இப்போதுவரை தொடரும் பன்றி வளர்ப்பு தமிழகத்தில் அது தாழ்நிலையாகவேப் பார்க்கப்படுகின்றது. பன்றி வளர்ப்பை குறிப்பிட்ட சமூகங்களே செய்து வருகின்றதாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் பன்றி வளர்ப்பைக் குறியீடாக வைத்திருப்பது பெரும் துணிச்சலான அரசியல் செயல்பாடு. அதற்கு அடித்தளமாகப் பன்றியை அழகியல் குறியீடாகவும் அரசியல் பார்வையோடும் கவிஞர் வெய்யில் எழுதிய கவிதைகள் அமைகின்றன.
“என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது அதைப் பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன் தேவையைப் பொறுத்து அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன் சாந்தமாக இப்படிச் சொல்லும்…
“நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!”
எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட நான் புழக்கடைப் பக்கம் போய் மௌனமாக நின்றேன் புரிந்துகொண்டு சிரித்தபடி வந்து வெட்டு மேசையில் படுத்தது அதன் காதில் சொன்னேன்
“ஞாயிறு அந்தியில் உன் ரத்தத்தால் செவ்வானம் செய்வேன் உன் மாமிசம் மகிழம்பூவில் வாசமாயிருக்கும்”
இப்போது அதன் கழுத்து வெட்டுவதற்கு சிரமமாக இருக்கவில்லை மறுநாள் நான் உறங்குகையில் அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது “கேரட் என்று நினைத்தேன்!” என்றபடி தலைகுனிந்து நின்றது நானதன் விழிகளில் எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்.”
ஆழமான அரசியலை இக்கவிதை பேசுகிறது. பன்றியை வெட்டிய ஒருவன் மறுநாள் உறங்கும் போது பன்றியின் குட்டி அவன் சுண்டு விரலைத் தின்று விடுகிறது .கேரட் என்று நினைத்ததாகவும் அது கூறுகிறது. அதன் கண்களில் கவிஞர் பார்த்த எதிர்ப்பு வளையத்தையே மாமன்னன் திரைப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மாமன்னன் படத்தில் தகப்பன் கதாபாத்திரம் மேஜை மீது ஏறி வாகாகப் படுத்துக்கொண்டு கழுத்தை எதிர்க் கதாப்பாத்திரம் ஓங்கும் கத்திக்குத் தரத் தயாராகவே இருக்கும். அவரின் மகன் கதாபாத்திரம் எதிர்க் கதாபாத்திரத்தின் சுண்டு விரலைத் தின்ன முன் வரும்.
இத்திரைப்படத்தின் பாத்திரங்களை இக்கவிதையோடு இவ்வாறு என்னால் பொருத்திப் பார்க்க முடிகிறது.மகிழ்ச்சியான பன்றிக்குட்டி தொகுப்பில் இருக்கும் அரசியல் உரிமைக் குரல், அமைதியான தொனியில் ஆழமாக எடுத்து வைக்கும் முன் நகர்வுகள் ஆகியவை எல்லாம் மாமன்னன் படத்திலும் அமைகின்றன.
வளர்த்துவரும் செல்லப்பன்றியின் மீதான அன்பு என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அது வரலாற்றில் நிலை பெற்ற ஒன்று. பன்றிகளைக் குடும்பத்தில் ஒருவராக வளர்ப்பது, அருகில் அழைத்து உறவாடுவது, கயிறு கட்டி தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வது, முன்னோர்களை மனதில் நிறுத்திப் பன்றிகளைப் பலி கொடுப்பது என்று அந்த உறவின் அழகியல் குறித்து நாம் எழுதிக் கொண்டே போகலாம்.
பன்றியின் மீதான அன்பை, அழகியலைத் தமிழ்க் கவிதைகளில் தயக்கமின்றி முன் வைத்தவர் கவிஞர் வெய்யில். அதே போல இயக்குநர் மாரி செல்வராஜ் பன்றி அன்பைத் தனது படத்தின் பல காட்சிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். செல்ல நாய்க்குட்டியைப் போலப் பன்றிக் குட்டியை நாயகி கதாபாத்திரம் முக்கோடு மூக்கு உரசிக் கொஞ்சுவது, அரசியல் சூழலால் சிதறுண்டு கிடக்கும் வீட்டில் தனக்கு ஆறுதலாக மாமன்னனின் மனைவி ஒரு பன்றிக்குட்டியைக் கைகளில் வைத்துக்கொண்டே இருப்பது, பண்ணையில் ஆசையாக வளர்க்கப்பட்ட பன்றிகளுக்கு ஆபத்து நேரும்பொழுது பதறி ஓடும் அதிவீரன் எனப் பன்றிகள் மீதான அன்பை பல காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
சாதிய மேலாதிக்கத்தால் ஒன்றின்மீது படிந்துள்ள கறைக்கு எதிரான ஒரு மாற்றுக் கருத்தியலை ஆழமாக முன்வைக்கவேண்டியது அவசியம். பன்றிகளை உச்சி முகரும் இப்படைப்பாளிகள் திரையிலும் எழுத்திலும் குறிப்பிடத்தக்க ஓர் அரசியல் செயல்பாட்டை நிகழ்த்தி வருகின்றனர்.
