அபுல் கலாம் ஆசாத்
சென்னையின் வரைபடத்தில் வடக்கே திருவொற்றியூரிலிருந்து தொடங்கி பெரம்பூர், பெரியமேடு, மண்ணடி, துறைமுகம், ராயபுரம், மீண்டும் திருவொற்றியூர் எனக் கோடு இழுத்தால், அதற்குள் அடங்கும் பகுதிகளில் அந்நாள்களில் பரம்பரைக் குத்துச்சண்டைப் போட்டிகள் அந்த மக்களின் மத்தியில் பிரபலமாக இருந்தன. இந்தப் போட்டிகள் குறிப்பிட்ட பரம்பரைகளுக்கு இடையே நடந்தவை. இந்தியாவில் 1949இல் இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் (Indian Amateur Boxing Federation) அமைக்கப்பட்ட பின்பும், வடசென்னையில் குத்துச்சண்டைப் போட்டிகள் பரம்பரையை விட்டு வெளியே வரவில்லை.

இந்த வரலாற்றையும், போட்டிகளில் பங்கேற்ற பதினெட்டு வீர்ர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் ஆய்வாளர் பா.வீரமணி அவர்களின் ‘நாக்கவுட்’ நூல் ஆவணப்படுத்துகிறது.
“வளர்ச்சியிலும், பண்பாட்டுத்தளத்திலும் வடசென்னைப் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் இவ்விளையாட்டுப் பாரம்பரியம் இருந்த சுவடே இல்லாமல் ஏறக்குறைய மறைந்துவிட்டது” என வலியின் வெளிப்பாடாகத் தொடங்கும் ஆசிரியர், புத்தகத்தில் தன்னுடைய கருத்தை வலியுறுத்தும் விதமாக விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
தற்கால வடசென்னை குறித்த மற்றவர்களின் பார்வை அந்த நிலப்பரப்பில் தற்பொழுது கானும் அனைத்தையும் வடசென்னையின் அடையாளமாக ஏற்கிறது அதுதான் வடசென்னையின் முகம் என அறிபப்படுத்துகிறது; ஆனாலும் வடசென்னையின் சில அடையாளங்களை ஆவணப்படுத்தி நூலாக்கி அங்கு பரவியிருந்த பாரம்பரியப் பெருமையின் ஒரு பகுதியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், மேற்சொன்ன மேலோட்டப் பார்வைகளுக்கு மாற்றுப் பார்வையை முன்வைக்கலாம். அதனை ‘நாக் அவுட்’ சிறப்பாகச் செய்துள்ளது.
‘திராவிட வீரன்’ என்னும் பட்டப்பெயர் தொடர்பான மாற்றுப் பார்வைகள் பரம்பரைக் குத்துச்சண்டை வட்டாரத்தில் உண்டு. ‘சார்பட்டா’ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் ரங்கன் வாத்தியார் என்னும் குத்துச்சண்டை ஆசிரியர் திராவிட வீரன் பட்டம் பெற்றவராகக் காட்டப்படுவார். ‘நாக்கவுட்’ புத்தகம் நமக்கு உண்மையான திராவிட வீரனை அறிமுகப்படுத்துகிறது. 3.8.1943இல் சென்னை ராயபுரத்தில் நடந்த கூட்டத்தில் குத்துச்சண்டை வீரர் கித்தேரி முத்துவுக்கு திராவிட வீரன் என்னும் பட்டத்தை தந்தைப் பெரியார் அவர்கள் அளித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா வாழ்த்துரை வழங்கியுள்ளார். இதைத் தெளிவாகப் பதிவு செய்து ‘திராவிட வீரன்’ தொடர்பான கற்பனைகளுக்கு ஆசிரியர் முற்றுப்புள்ளி வைக்கிறார்.
போலவே, பரம்பரைக் குத்துச்சண்டை வட்டாரத்தில் மேற்சொன்ன ‘திராவிட வீரன் கித்தேரி முத்துவுக்கும் சமகாலத்தில் மிகப் பிரபலமாக இருந்த டைகர் நாட்டெர்ரிக்கும் நடந்த போட்டி தொடர்பாக சில கட்டுக்கதைகள் உலவின. டெரியை முத்து ஒரே குத்தில் வீழ்த்தியதாகவும், டெரி மயங்கி விழுந்ததாகவும், அவரவர் கற்பனைக்கு ஏற்ப ஒன்றிரண்டைக் கூட்டிக் குறைத்துச் சொல்வர். ஆசிரியர் பா. வீரமணி அனைத்துக் கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார். ‘நாட் டெர்ரி – கித்தேரி முத்து’ போட்டியில் நடந்தவற்றைத் தெளிவாக எழுதி, டெர்ரியின் தவறான வீச்சு கித்தேரி முத்துவின் உயிர்த்தலத்தில் வீழ்ந்ததும், அது தவறான வீச்சு என நடுவர் சொல்லி அதுவரையில் கித்தேரி முத்துவின் கை ஓங்கியிருந்ததால் முத்துவை வெற்றியாளராக அறிவிக்கிறார்கள். பரம்பரைக் குத்துச்சண்டை வரலாற்றில் இது முக்கியமான போட்டி.
வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்களுக்கு அந்நாளில் திரைத்துறையினருடன் இருந்த தொடர்பைப் ‘புத்தகம் பேசுகிறது’. பெரியார் பெருந்தொண்டர் எஸ். ஆர். சாண்டோ மாஸ்டர், இவரை திரைப்பட சண்டைக்கலைஞர் ஸ்டண்ட் சோமு வாயிலாக அழைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இரண்டு முறை உரையாடியது வாய்வழிச் செய்தியாக அந்த வட்டத்தில் உலவியதையும், நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் சாண்டோ மாஸ்டரைத் தன் வீட்டிர்கு அழைத்து ஆறு மாதங்கள் சண்டைக்கலையைப் பயின்றுள்ளார். தன் உரையாடலில் “சாண்டோவைப்போலப் பல நுணுக்கங்கள் வாய்ந்த மாஸ்டரை நான் இதுவரை பார்த்ததில்லை” எனச் சொன்னாராம்.
புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் குத்துச்சண்டை வீரர் பா. கிருஷ்ணன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞருடன் பேசுகின்ற புகைப்படம் வடசென்னையின் வீரர்கள் பின்னாள்களிலும் அரசியல் வட்டாரத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. வீரர் டில்லிபாபு தொடர்பான கட்டுரையிலும் அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இருக்கும் புகைப்படமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று அவருக்கு அரசியல் மற்றும் திரைத்துறையினருடன் இருந்த தொடர்பை விளக்குகிறது.
‘தயார் தீனி’ என்னும் ஒரு வார்த்தையை ‘நாக்கவுட்’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது. வீரர்கள் போட்டிக்கு ஆயத்தமாகும் நாள்களில் அவர்களுக்கு புரதம் நிறைந்த உணவு கட்டாயத் தேவை. இறைச்சி, பால், முட்டை, பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள் போன்றவற்றை அவர்கள் சாப்பிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் உணவு தொடர்பானவற்றைப் படிப்போர்க்கு அது பெரிதாகத் தோன்றாது, ஆனால் அன்றைய காலகட்டத்தில் உணவு மிகப்பெரிய பிரச்சனை.
இன்றைக்குக் கிடைப்பது போல் பால் விற்பனை நிலையங்கள் தெருவுக்குத் தெரு கிடையாது. முட்டை விற்பனை குறிப்பிட்ட கடைகளில் மட்டும் இருந்தது. கோழியிறைச்சி இத்தனை சாதாரணமாகக் கிடைக்கவில்லை. சாதாரணத் தொழிலாளர் பணியில் இருந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு அத்தகைய உயர் புரத உணவு பெருஞ்செலவை உண்டாக்கும். அவர்களால் அதற்கு ஈடுகொடுக்க இயலாது.

அப்படியான காலகட்டத்தில் அந்த ‘தயார் தீனி’க்கு உதவியவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்த செல்வந்தர்கள் என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது. செல்வந்தர்கள் பலர் தங்கள் பண்ணையிலிருந்து குத்துச்சண்டை வீரர்களுக்கு தினசரி பாலை அனுப்பி உதவியிருக்கிறார்கள். உணவுச் செலவுக்கு உதவியிருக்கிறார்கள். பாரம்பரியக் கலையைப் பற்றிப் பேசும்போது இந்தப் பெருந்தன்மை தொடர்பாகவும் பா. வீரமணி அவர்கள் பதிவு செய்தது பாராட்டத்தக்கது.
பரம்பரையில், வீரரின் பெயரைச் சொல்லும்போது, அவருடைய பெயரின் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அவருக்கு சொல்லப்படும் கட்டியம். வீரரின் ஆசிரியர், அவருக்கு ஆசிரியர், அவர் வென்ற பட்டயங்கள், அவர் வாழும் பகுதி, நண்பர்கள், அவரை வாழ்த்தியவர், வாழ்த்தியவர் வென்ற முக்கியமான போட்டிகள் எனப் பத்துப் பதினைந்து வரிகளுக்குக் கட்டியம் நீளும். இது மரபாக இருந்தது. இது புத்தகத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள புகைப்படங்களிலும், வீரர்கள் தொடர்பான கட்டுரைகளிலும் காணக்கிடைக்கும்.
‘ராக்கி’ என்னும் குத்துச்சண்டைத் திரைப்படத்தின் கதாநாயகன் ராக்கி பல்போவாவுக்கு அவன் பயிற்சி பெற்ற நிலப்பரப்பு ஃபிலடெல்ஃபியாவைப்போல, குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு அவர் பயிற்சி பெற்ற நிலப்பரப்பு டீர் பார்க் – பென்சில்வேனியாவைப்போல, நமது பரம்பரைக் குத்துச்சண்டை வீரர்களுக்கு நிலப்பரப்பு வடசென்னை என்றால் அது மிகையில்லை.
குத்துச்சண்டையில் ஆர்வம் இருப்போரும், சென்னையின் வரலாற்றில் ஆர்வம் இருப்போரும் வாசிக்க வேண்டிய புத்தகம்,‘நாக்கவுட்’.
