உலகிலேயே நிலாவின் தென்துருவத்தில் தனது நேரடி ஆய்வை நடத்திட இறங்கிக் காட்டிய முதல் நாடு இந்தியா என்கிற பிரமாண்ட வெற்றியின் ஆரவாரம் அடங்குவதற்குள் தனது காவித்தனமான நஞ்சை கக்கியுள்ளது, மோடியின் பாஜக ஆர்.எஸ்.எஸ்.அரசு. நாடுகள் தங்கள் விண்கலத்தின் மூலம் தரை இறங்கும் பிற கோள்களின் பகுதி அந்தந்த நாடுகளுக்கே சொந்தம் என்பது சர்வதேச விண்வெளி – அமைதி வழி – புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். அதன்படி நிலவில் தரையிறங்கிய (இந்தியாவின்) விக்ரம் உலாவிய இடமும், நிலவின் மேற்பரப்பில் பிரகியான் உலாவும் அப்பகுதிகளும் நம் நாட்டிற்கு சொந்தமாகின்றன.
1959ல் முதன்முதலில் நிலாவில் இறங்கிய சோவியத் நாட்டின் லூனா-2 தான் இறங்கிய அந்த இடத்திற்கு கோபர்நிகஸ் என்று பெயரிட்டது. சீனத்தின் சந்திர-ஆய்வுத்திட்டம் ச்சேங்-3 2013ல் தரை இறங்கியது. அப்போது அந்த இடத்திற்கு கன்பூசியஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் அப்பல்லோ திட்டங்கள் மூலம் நிலவில் தரை இறங்கியபோது ஆர்க்கிமெடிஸ், டாலமி, தாலஸ் என்றும் கென்னடிபாய்ன்ட் என்றும் பெயர் சூட்டினார்கள்.
1966ன் சர்வதேச விண்வெளி ஒப்பந்தப்படியும் சர்வதேச விண் ஆய்வு யூனியனின் (92 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன) கூற்றுப்படியும் அந்தந்த நாடுகளின் விஞ்ஞானிகள் பொறியியல் அறிஞர்கள் பெயர்களை சூட்ட முடியும். முதலில் நாம் அதற்கு தரை இறங்கிய பகுதியின் தெளிவான ஒளிப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். எந்த ஒரு விண்வெளி இடத்திற்கும் அரசியல் ராணுவ மற்றும் மதவாத பெயர் சூட்டல் அனுமதி இல்லை என்று சர்வதேச விண் ஆய்வு யூனியனின் (International Astronmical Union) இரண்டாவது பெயர் சூட்டல் விதி சொல்கிறது.
எனவே சந்திராயன்-3 தரை இறங்கிய இடத்திற்கு சத்தீஷ் தவான் பெயரையோ அல்லது அப்துல்கலாமின் பெயரையோ சூட்ட வேண்டும் என்றே நாடு முழுதும் இருந்து குரல் கொடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு சிவசக்தி’ என்று இந்துத்துவப் பெயர் சூட்டும் உரிமையை அவர்களுக்கு வழங்கியது யார். ஏற்கெனவே இந்திய அறிவியலை இருண்ட காலத்தை நோக்கி தள்ளிவிட்டது மோடி அரசு.
நானூறு அறிவியல் விருதுகளை ரத்து செய்தது. பாடத்திட்டத்தில் இருந்து டார்வினை நீக்கியது, தட்பவெப்ப மாறுதல் உட்பட அனைத்துவகை ஆய்வுகளுக்குமான நிதியை நிறுத்தி வைத்தது, போதாதென்று இஸ்ரோவை தன்னிச்சையாக செயல்படவிடாமல் இன்-ஸ்பேஸ் (IN-SPACE) எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ்-அதானி கார்பரேட் அமைப்பை ஏற்படுத்தி-விண்வெளி ஆய்வை தனியாருக்கு தாரைவார்க்கத் துணிந்தது. இந்திய அறிவியலின் முதுகெலும்பான சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் டி.ஆர்.டி.ஏ விஞ்ஞானிகளை, தான் கட்டும் ராமர்கோவிலில் ராமர் சிலைக்குமேல், ராமநவமி நாளில், சூரியஒளிபடுமாறு ஒரு கருவியை செய்து தர, ஆணை பிறப்பித்து இந்திய அறிவியலை அவமதித்ததும் மோடி அரசே ஆகும்.
கடும் பணிச்சுமை, குறைக்கப்பட்ட திட்ட-நிதிஒதுக்கீடு இவற்றிடையே அயராது உழைத்து, நம் நாடு சந்திரனை அடைய சாதனை செய்த விஞ்ஞானிகளைப் போற்றுவோம். அதன் ஊடாக எழும் காவி அரசியலை தூக்கி எறிவோம்.
