ச.சுப்பாராவ்
வாசித்தலும், எழுதுதலும் மிகவும் தனிமையான, தன்னடக்கமான செயல்பாடுகள். உலகின் கழுத்தைப் பிடித்து உலுக்கி அதை மாற்றிவிடக்கூடிய பாகுபலி செயல்பாடாக அவை ஒருபோதும் இருக்க முடியாது என்றே தோன்றும். பேனா வாளை விட வலிமையானது என்று சொல்லப்பட்டாலும்கூட, காலம் தோறும் வாளை ஏந்தியவர்கள் பேனா ஏந்தியவர்களை உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள். சிறையில் அடைத்திருக்கிறார்கள். சித்ரவதை செய்திருக்கிறார்கள். கொன்றிருக்கிறார்கள். அவர்களது படைப்புகளுக்குத் தடை விதித்திருக்கிறார்கள். தீயிட்டு அவற்றைக் கொளுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் எப்படியோ சின்னஞ்சிறிய அந்தப் பேனா முனையிலிருந்து புறப்பட்ட சொற்கள் இந்த பெரும் பலசாலி ஆட்சியாளர்களின், கொடுங்கோலர்களின் வாள் வலிமையைக் காலப்போக்கில் வீழ்த்தியிருக்கின்றன.

காலம் தோறும் புதுப் புது மாற்றங்களை உருவாக்கி, ஒரு புதிய யுகத்தை, புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கின்றன. நேற்றிருந்த மாதிரி இன்று உலகம் இல்லை. நேற்றைவிட ஓர் அங்குலம் முன்னேறியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நிச்சயமாக ஏதோ ஒரு புத்தகம்தான். இப்படி உலகத்தில், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படக் காரணமான புத்தகங்களின் பட்டியலை, அவற்றைப் பற்றிய ஏராளமான செய்திகளோடு Andrew Taylor என்ற ஒரு புத்தகக் காதலர் Books That Changed The World என்று எழுதியிருக்கிறார்.
மிகவும் தன்னடக்கத்தோடு யாமறிந்த புத்தகங்களிலே என்றுதான் சொல்லியிருக்கிறார். இந்தப் பட்டியல் என் பார்வையில் முக்கியமானது. உங்கள் பார்வையில் வேறொரு பட்டியல் இருக்கக்கூடும் என்கிறார். ஆனாலும், அவர் சொல்லும் பட்டியல் சுவையானது. மெய்யாகவே உலகில் மாற்றங்களைக் கொண்டுவந்த புத்தகங்களின் பட்டியலாகத்தான் இருக்கிறது.
300000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களிலிருந்து, ஒருவரது எண்ணங்களை, கருத்துகளை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதன் வழியாகத்தான் நாகரிகம் வளர்ந்திருக்கிறது. எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்குமுன் ஆயிரக்கணக்கான வரிகளை மனப்பாடம் செய்தே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார்கள். பின்னர் எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, விழுந்து விழுந்து, ஏடு ஏடாக எழுதி, எழுதி பிரதி எடுத்து, எடுத்து அறிவைப் பரவலாக்கியிருக்கிறார்கள். பின்னர் அச்சுத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஐரோப்பாவில் அச்சுத் தொழில்நுட்பம் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கி.பி.868ல்
‘வைர சூத்திரம்’ என்ற பௌத்த நூல் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி எழுத்து எவ்விதமாகப் பரவினாலும் சரி, அறிவுப் பரவலைச் செய்தது புத்தகங்கள்தான், எழுத்துகள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்கிறார் டைலர்.
அவரது பட்டியலின் முதல் நூல் ஹோமரின் ‘இலியட்’. கி.மு. 8 அல்லது 9ம் நூற்றாண்டின் இலக்கியம். மேற்குலக நாகரிகத்தின் அடித்தளமாக இன்று வரை இருக்கும் கவிதை நூல் இது. ஹோமர் கண் பார்வையற்றவர் என்று சொல்லப்படுகிறது. அவர் நமது சங்க காலப் புலவர்கள்போல் யாழ் மீட்டிப் பாடியபடி ஊர் ஊராகச் சென்றவர் என்ற செய்தி புல்லரிக்க வைக்கிறது. எப்படி எல்லாப் புலவர்களும் ஒன்றுபோல் இருக்கிறார்கள்? இலியட்டின் 15000 வரிகளும் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு வாய்வழியாக மனப்பாடம் செய்யப்பட்டே பரவியிருக்கிறது என்பது மற்றொரு வியப்பான செய்தி. அன்று செய்யுள்களை மனப்பாடமாகச் சொல்லத் தெரிந்தவன்தான் படித்தவனாகக் கருதப்பட்டான்.
அடுத்தது ஹொரோடோடஸின் ‘வரலாறு’. கி.மு. 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கிரேக்க மொழியில் Historii என்றால் விசாரணை, ஆய்வு என்று பொருள். எழுதுபவன் நேரடியாக களத்தில் சென்று பார்க்க வேண்டும், ஆதாரங்களை சேகரிக்க வேண்டும், நடந்ததை மட்டுமே கூற வேண்டும் என்ற அடிப்படையான விஷயங்களைச் சொன்ன புத்தகம் இது. வரலாற்றை எழுதுவதற்குக் கற்றுத் தந்த நூல். கல்வி கற்றுத் தருதலில் பெரிய மாறுதலை ஏற்படுத்திய முதல் நூல் கன்பூசியஸின் ‘போதனைகள்’.
பண்டைய சீனாவில் அரசு அதிகாரியாக நியமனம் பெற போட்டித் தேர்வு எழுத வேண்டும். அதற்கு இந்த நூல்தான் பாடத்திட்டம். பிரபுக்களின் குழந்தைகளோடு, எளியவர்களின் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துக் கற்பிக்க வேண்டும் என்று உலகிற்கு முதன்முதலில் சொன்னவர் கன்பூசியஸ்தான். இந்த வரிசையில் பிளேட்டோவின் குடியரசு (இன்று நாம் புரிந்துகொள்ளும் பொருளில் பிளேட்டோ குடியரசு என்பதை விவரிக்கவில்லை என்பது வேறு விஷயம்!), பைபிள் ஆகியவை வருகின்றன. விர்ஜில், ஓவிட், சிஸரோ ஆகியோரின் சமகாலத்தவரான ஹோரேஸின் ஓட்ஸ் தொகுப்பை அடுத்துச் சொல்கிறார் டைலர்.
டாலமியின் ஜியாக்ரஃபியா அடுத்து வருகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் அடுத்த 1500 ஆண்டுகளுக்கு புவியியல் தொடர்பான அத்தனை நூல்களுக்கும் ஆதாரமாக விளங்கியது. நகரங்கள், ஆறுகள், மலைகள் என சுமார் 8000 புவியியல் அமைப்புகளை விரிவாக விளக்கிய இந்த நூல் பின்னால் உலகில் புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டியாக இருந்தது. 2–3ம் நூற்றாண்டில் இந்தியாவின் வாத்ஸாயனர் எழுதிய காமசூத்திராவும், ஏழாம் நூற்றாண்டில் வந்த திருக்குரானும் மனிதனின் சிற்றின்ப, பேரின்பத் தேடல்களுக்கு விடை தந்தன.
குரானின் தாக்கத்தை தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 11ம் நூற்றாண்டில் அவிசென்னா எழுதிய ‘Cannons Of Medicine’ என்ற நூல் அது வரையிலான அத்தனை பண்டைய மருத்துவ முறைகளைப் பற்றியும் தொகுத்தளித்தது. நவீன, பரிசோதனை அடிப்படையிலான மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டது. மயக்க மருந்து தரும் முறையை முதன்முதலாகச் சொன்னவர் இவர்தான். இதயத் துடிப்பை நாடித் துடிப்பை வைத்து அறியலாம் என நாடி பார்த்து மருத்துவம் செய்யும் முறையை கண்டுபிடித்தவரும் இவரே! மற்றொரு புறம் சாஸரின் ‘காண்டர்பரி டேல்ஸ்’,
மாக்கியவில்லியின் ‘இளவரசன்’ போன்ற நூல்கள் வருகின்றன. அரச மொழியாக லத்தீனும், பிரெஞ்சும் இருந்தபோது, மக்கள் பேசு மொழியான ஆங்கிலத்தில் வந்த முதல் படைப்பு ‘காண்டர்பரி டேல்ஸ்’. அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னது இளவரசன்.
கி.பி. 1585ல் ஜெரார்ட் மெர்காட்டர் அட்லஸை தயாரிக்கிறார். பழைய நூல்கள்தான் புனிதமானவை என்ற எண்ணத்தை உடைத்து, புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியம் என்று காட்டிய படைப்பு இது. புதிய புதிய நாடுகளும், கடல்வழித் தடங்களும் உருவாகக் காரணமாக இருந்த நூல் இது.
காலம் தோறும் அறிவியலும், இலக்கியமும் போட்டி போட்டுக்கொண்டே வளர்ந்துள்ளன என்பதை அறிய வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நவீன மருத்துவத்திற்கு வழிகோலிய ‘An Analytical Study Of The Motion Of The Heart And Blood’ என்ற வில்லியம் ஹார்வியின் புத்தகம் ரத்த ஓட்டம் பற்றி, இதயத் துடிப்பு பற்றிச் சொல்கிறது. கலிலியோ ‘Dialogue Concerning The Two Chief World System’ எழுதுகிறார்.
நவீன கணிதம், இயற்பியலின் அடிப்படை நூலான ‘Principia Mathematica’வை நியூட்டன் எழுதுகிறார். மறுபுறம் உலக இலக்கியத்தையே புரட்டிப் போட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், செர்வாண்டிஸின் ‘Don Quixote’, சாமுவெல் ஜான்சனின் ‘ஆங்கில அகராதி’ என்று அழியாப் புகழ் பெற்ற இலக்கியப் படைப்புகள் வருகின்றன. கதேயின் ‘Sorrows Of Young Werther’ வருகிறது. எல்லாம் தமக்கே உரித்தான பாணியில் அதுவரை இருந்த உலகை, உலகத்தாரின் பார்வையை மாற்றிய புத்தகங்கள்.
1776ல் உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு நூலாக ஆடம் ஸ்மித்தின் ‘Wealth Of Nations’ வருகிறது. போட்டி, சுதந்திரச் சந்தை என்று இன்றளவும் பேசப்படும் பல விஷயங்களை முதன்முதலாகச் சொன்ன புத்தகம் இது. அரசியல் பொருளாதாரம் என்ற துறையை உருவாக்கித் தந்த புத்தகம் இது.
மக்களின் வாழ்வில் ஒரு ஜனநாயக அரசு எந்த அளவிற்கு தலையிட முடியும்? தலையிட வேண்டும்? மக்களுக்கு சேவைகள் வழங்கிட வரி விதிக்கலாமா? ஏழைகளைக் காப்பாற்ற அரசு முயற்சி செய்ய வேண்டுமா? இல்லை, அவர்களை அப்படியே விட்டுவிடலாமா? என்று கடந்த 250 ஆண்டுகளாக நடக்கும் விவாதங்களை துவக்கி வைத்தது இது.
வெளிவந்த மூன்றே மாதங்களில் 120000 பிரதிகள் விற்று (கி.பி.1776ல்!) அமெரிக்க சுதந்திரத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த தாமஸ் பெயினின் ‘Common Sense’. ‘United States Of America’ என்று அமெரிக்காவிற்கு பெயர் சூட்டியவரே இந்த தாமஸ் பெயின்தான். இந்த அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய புத்தகங்களுக்கு நடுவில் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைத் தொகுப்பும் வருகிறது. வெறும் 23 கவிதைகளின் தொகுப்பு.
ஜேன் ஆஸ்டினின் ‘Pride And Prejudice’ ஆங்கிலப் படைப்புகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. நாவல் எழுதுவது பெண்கள் செய்யக்கூடிய கண்ணியமான செயலல்ல என்ற மேட்டுக்குடி எண்ணத்தைத் தகர்த்தெறிந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் விதத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த சார்லஸ் டிக்கன்ஸின் ‘A Christmas Carol’ டைலரின் பட்டியலில் வருகிறது. டிக்கன்ஸின் மற்ற படைப்புகளை விட இது அவருக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை மிக விரிவாகவே சொல்லியிருக்கிறார்.

1848ல் வந்த கம்யூனிஸ்ட் அறிக்கை பட்டியலில் இல்லாமல் போகுமா என்ன? அதோடு கூடவே, மோபி டிக்கும், அங்கிள் டாம்ஸ் கேபினும், மேடம் பவாரியும் சார்லஸ் டார்வினின் ‘On The Origin Of Species’ம் தொடர்ந்து வருகின்றன. ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ‘On Liberty’. இன்றைய நவீன ஜனநாயகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்சங்களான தனிநபர் சுதந்திரம், பெண்களுக்கு சமஉரிமை, அனைவருக்கும் கல்வி ஆகியவை பற்றியெல்லாம் 1859ல் ஒரு புத்தகம் பேசியிருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும்? 19ம் நூற்றாண்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகமாக நியூ ஹேவன் மாவட்டத்தின் ‘தொலைபேசி டைரக்டரி’யைச் சொல்கிறார் டைலர்.
முதல் டைரக்டரியில் ஐம்பது பெயர்கள் மட்டுமே இருந்தன. கம்பெனியில் அந்தப் பெயரைச் சொன்னால் அவரது எண்ணிற்கு இணைப்புத் தருவார்களாம்! பின்னாளில் இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக ‘தொலைபேசி டைரக்டரி’தான் இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆண்டுதோறும் 15 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்ட ஒரே புத்தகம்!
இலக்கிய உலகில் காவல்துறையைச் சாராத ஒரு வெளிநபர் தனது புத்திசாலித்தனத்தால் காவல்துறைக்கே சவாலான குற்றங்களை எளிதாகக் கண்டுபிடித்துத் தரும் துப்பறியும் நாவல்கள் என்ற புதிய இலக்கிய வகைமையை உருவாக்கிய சர். ஆர்தர் கானன் டாயிலின் A Study Of Scarletக்கு பட்டியலில் முக்கியமான இடம் தரப்பட்டிருக்கிறது. வசந்த் கணேஷ், பரத் சுசீலா, விவேக் ரூபலா என்று பலருக்கும் முன்னோடியான ஹெர்லாக் ஹோம்ஸ் – டாக்டர் வாட்சன் அறிமுகமான நாவல்!
சிக்மண்ட் ஃபிராய்டின் ‘The Interpretation Of Dreams’, ஐன்ஸ்டீனின் ‘Relativity – The Special And General Theory’ ஆகியவை, நாஜி வதை முகாம்கள் பற்றி இன்றளவும் வந்துகொண்டே இருக்கும் புத்தகங்களின் முன்னோடியான பிரைமோ லெவியின் This is a Man, பெண்ணிய இயக்கங்களின் இரண்டாவது அலையைத் துவக்கி வைத்த சைமன் டி பீவரின் ‘The Second Sex’, வெளியுலகம் ஆப்பிரிக்காவை அறிந்து கொள்ள உதவிய சினுவா ஆச்சிபியின் ‘Things Fall Apart’, சூழலியல் பற்றிய அறிவியலை அறிமுகம் செய்த ரெய்சல் கார்சனின் ‘Silent Spring’ என்று அருமையாகப் பட்டியலிட்டுள்ளார் டைலர்.
ஒரு மனிதன் தன்னளவில் மாற்றங்களை ஏற்படுத்திய புத்தகங்களைப் பற்றி எழுதுவது எளிது. ஆனால், உலகளாவிய அளவில் ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்படுத்திய முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் படித்து, அதில், தான் முக்கியமாகக் கருதும் ஒன்றை மட்டும் தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டு, அதன் காரணத்தையும் விரிவாக விளக்குவது உண்மையாகவே மிகக் கடினமானதுதான். மிகப் பெரிய புத்தகக் காதலர் ஒருவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
ஹெர்லாக் ஹோம்ஸையும், சார்பியல் தத்துவத்தையும், நியூட்டனின் விதிகளையும், கம்யூனிஸ்ட் அறிக்கையையும், ஜான் மேனார்ட் கெயின்ஸையும், சாலிஞ்சரையும், ஜார்ஸ் ஆர்வெலையும், ஹாரிபாட்டரையும் ரசித்துப் படித்து பட்டியலிட்டிருக்கும் ஆண்ட்ரூ டைலர் இருக்கும் திரை நோக்கித் தொழுது, நாமும் இப்படிப் பட்டியல் ஒன்று போடும் அளவிற்கு எல்லா வகைமைகளையும் படிக்க வேண்டும் என்று ஓர் உறுதி ஏற்றுக்கொண்டேன்!