இரா.தெ.முத்து
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி சார்பான தென் மண்டல வியாபாரப் பகுதி பொறுப்பாளனானப் பிரான்சிஸ்டேக்கு இரவு உறக்கத்திற்கான பெண்ணாக அறிமுகமான கிளாரிந்தாவின் அன்பும் அன்னியோன்யமும் பிரான்சிஸ்டேக்குப் பிடித்துப் போக அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.

மசூலிப்பட்டினத்திலிருந்து பாண்டிச்சேரி வரும் வழியில் திருவாமூர் அவளுக்குப் பிடித்துப் போக இதனை முன்னிட்டு ஆற்காடு தரப்பிலிருந்து குத்தகை எடுத்தோரிடமிருந்து விலைக்கு வாங்கி இதன் சுற்று வட்டார கடற்பாக்கக் கிராமங்களை இணைத்து நேற்றைய மெட்ராசிற்கான அடிக்கல்லை பிரான்சிஸ்டே இடுவதாக எஸ்.ராமகிருஷ்ணன் யாமம் நாவலின் காற்றும் வெயிலும் அத்தியாயத்தில் எழுதுகிறார்.
மதராபட்டணம் எனும் கடற்பாக்கம் அத்தியாயத்தில் கர்னல் மெக்கன்சி பற்றிய குறிப்பு வருகிறது.அவர் சுங்க அதிகாரியாகவும் பணியாற்றிய விவரம் சொல்லப்பட்டுள்ளது.செம்மண் பாதைகள் கொண்ட மதரா பட்டணம் எனும் மெட்ராசில் பெரிய அளவிலான இருபது ஏரிகள் இருந்தன என்கிறார் எஸ்.ரா. ஆத்தாடீ இன்று அதன் ஞாபகமாகச் சேத்துப்பட்டு படகுச் சவாரிக் குளம் மட்டுமே எஞ்சி நிற்கிறது என்பதை நினைத்து மனம் வெதும்புகிறது.
பட்டணத்து வாசிகளின் சரிதம் அத்தியாயத்தில் மெட்ராசின் உயர் கனவான்கள் பயன்படுத்தும் அல்லது நறுமுகைவாசனை விரும்பிகள் பயன்படுத்தும் ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் அத்தர் வாசனைத் தைலத்தை சென்னையில் 1684 களில் அப்துல்கரீம் எனும் வணிகர் தன் மூதாதை வழியாகத் தயாரித்து மெட்ராசில் விநியோகித்துப் புகழடைந்த கதை வழி அந்தப் பதினேழாம் நூற்றாண்டு மெட்ராசின் வணிகம் பற்றிய வரலாற்றிற்குத் தரவாகிறது யாமம்.
அப்துல்கரீமின் மூதாதையான மீர்காசிம் தயாரித்த அத்தரின் பெயர் யாமம் எனச் சொல்லப்படுகிறது. யாமம் எனில் இரவு எனும் பொருளாகும். பரிசுத்தமான தினம்தினம் புதுப்புது வாசனை தோன்றக்கூடியது இரவு என்பதால் மீர்காசிம் தயாரித்த அத்தர் தைலத்தின் பெயர் யாமம் என வாசிக்கையில், இன்றும் சென்னையில் பிரபலமான அத்தர் கடை பழைய ப்ளாக் சிட்டியின் அங்கப்பன் தெருவில் இருக்கிறது என்பதை யாமம் வழி தேடிக் கண்டடைகிறோம்.
மெட்ராஸ் மாகாணத்தின் நிலவியல் வரைபட ஆய்வுத்துறையில் பணியாற்றும் லாம்டன் துரையிடம் பணி செய்யும் பத்ரகிரி குடும்பத்தோடு வசித்திருக்கும் அல்லிக்கேணி வீதிகள் விசாலமாக இருக்கின்றன என்றும் கிருஷ்ணப்ப கரையாளர் வழக்கு நடத்த வந்திருக்கும் மெட்ராஸ் வேப்பேரி சாலைகள் மரம் அடர்ந்து இருக்கின்றன என விவரிக்கப்படும் சித்திரிப்புகள் இன்றும் பெரும்பாலும் பொருந்திப் போகின்றன.திருவல்லிக்கேணியின் அகலமான தெருக்களைச் சென்றடையும் வழிகள் நாலாபுரமும் சந்துகளும் வீடுகளும் அடர்ந்து கிடக்கும் பகுதியாக இன்று மாறிவிட்டது.
உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்கிக் கிழக்கிந்தியக் கம்பெனி மெட்ராஸ் மாநிலத்தில் தன் ஆட்சியை வலுவாக ஊன்ற மெட்ராஸ் மாகாணம் சார்ந்த நிலப்பரப்பு குறித்த வானிலை குறித்த ஆய்வுகள் தேவைப்படுகின்றன.இதற்கான வரைபடங்களும் வானிலை மையமும் மெட்ராஸ் மாநிலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் அமைவதற்கான ஆய்வுகளில் நாவலின் பாத்திரங்களான லாம்டன்,டோபிங், பத்ரகிரி ஈடுபடுகின்றனர். ஏழுகிணறு சந்தை அத்தியாயத்தில், பகல் நேர சந்தைப் பொழுதுகளில் ஆட்டுக்கிடாய்களை மோதவிட்டு சண்டைக்கு விட்ட நாட்டுப்புறம் சார்ந்த அந்த மெட்ராஸ் இன்றில்லை. அந்தக் கரடுமுரடான காலம் இன்றில்லாது தொலைந்து விட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் பரவிய பரங்கிநோய் எனப்பட்ட காலரா மெட்ராஸ் முழுவதும் பரவியது. எங்கெங்கும் சாவின் ஓலங்கள். இனி மெட்ராஸ் வேண்டாம் என ஊர்ப்பக்கம் உயிர்தப்பி ஓடிப்போன பல்லாயிரக்குடும்பங்களின் மரண ஓலம் சுரையா, வஹிதா வழி நாவலின் இறுதி அத்தியாயங்களை வாசிக்கையில் நம் காலத்தில் பரவிய கொரோனா 19 மரண அனுபவங்கள் நிழலாடுகின்றன.
மதராஸ் மயிலாப்பூர் இசபெல் மருத்துவமனை பற்றிய சிறு குறிப்பு வந்து போகிறது. யாமம் நாவல் எஸ்.ராமகிருஷ்ணனின் நான்காவது நாவல்.சென்னையில் அலைந்து திரிந்த இரவுகளும் தலை சாய்க்க இடம் தந்த அறைகளும் மனிதர்களின் விசித்திரமான குணபாவங்களும் அழிந்த பாதைகளுமே இந்த நாவலை எழுதத் தூண்டியவை என முன்னுரையில் குறிப்பிடுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
யாமம் நாவலிலிருந்து நாம் பல நூற்றாண்டுகளின் முன்னான மெட்ராஸ் நகரத்தின் அன்றைய அமைப்பைக் கிராமம் நகரமான கதையைச் செம்மண்பாதை கான்கிரீட் வனமான பின்னாளைய கதையை அறிந்து கொள்கிறோம். மெட்ராஸின் அன்றையப் பண்பாட்டு நடவடிக்கைகளின் பிறைக்கீற்றுப் பார்வையையும் நாவல் வழி அறிவதில் ஒரு தரவாக யாமம் நாவல் இருக்கிறது.
