ஆயிஷா இரா. நடராசன்

படகு நூலகங்கள் பற்றி நமக்குத் தமிழில் முதலில் எழுதியவர் தோழர் சிங்காரவேலர். மகா கவிசுப்பிரமணிய பாரதி நடத்திய யங்- இண்டியா இதழ் பற்றி ஒரு தனிக்கட்டுரையில் குறிப்பிடும் அவர் அது ஆந்திராவில் விஜயவாடா படகு நூலகங்கள் வரை பிரபலமாக வாசிக்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதுகிறார். இக்கட்டுரை 1941ல் எழுதப்பட்டது. இதை நான் வாசித்தது சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 150வது பிறப்பு கொண்டாட்டத்தின் (2011) ஒரு பகுதியாகச் சிறப்பு மலர்க் கட்டுரைக்காகத்தான் அதிலும் சிந்தனைச் சிற்பியைக் குறித்த புரட்சிக் கவி பாரதி தாசனின் எழுச்சிப் பதிவு தூக்கத்திலும் நினைவு வருவது எனக்கு.. அது இப்படிப் போகும்..
சிங்கார வேலனைப் போல
எங்கேனும் கண்டதுண்டோ? என்று தொடங்கும்
பொங்கிய சீர்திருத்தம்
பொலிந்ததும் அவனால்,
பொய்புரட்டு அறியாமை
பொசிந்ததும் அவனால்…. என்று தொடரும்…
கூடின அறிவியல்
அரசியல் அவனால் என்பார் பாரதிதாசன்.
கூடவே நான் வாசிப்பு.. புயலாய் வீசியது அவனால்! புத்தக புரட்சி புலர்ந்ததும் அவனால்! என்றெல்லாம் சேர்த்துக் கொண்டே போவேன். 1946ல் தனது 84வது வயதில் இறந்துபோவதற்குச் சில நாட்கள் முன்பு தான் சேகரித்து வைத்திருந்த 20000 அரிய புத்தகங்களைப் பற்றி அவர் கவலை கொண்டார். அதில் பெரும்பாலானவற்றைக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக நூலகத்திற்கே கொடுத்தார். ஓர் ஆயிரம் ஆங்கில நூல்களை அவர் தனது தோழரான ஆந்திராவைச் சேர்ந்த பட்டூரி நாகபூஷணம் என்பவருக்கு அளித்ததாக ஒரு குறிப்பு வருகிறது.

பட்டூரி நாகபூஷணம் ஆந்திர நூலக இயக்கத்தின் பிதாமகர் என்று போற்றப்படுபவர் புத்தக வாசிப்பே தேசத் துரோகம் என்று பிரித்தானிய காலனிய அரசு கொடுமை சட்டங்களை ஏவிய அந்த 1930களில் ஒரு பிரமாண்ட வாசிப்பு இயக்கத்தை நடத்தியவர் தோழர் பட்டூரி. அவ்வப்போது தோழர் சிங்கார வேலரை அவர் சந்தித்ததுண்டு. அதற்கு அடிப்படைக் காரணம் சென்னையின் லயோலா கல்லூரிதான். தோழர் பட்டூரி பிறந்தது ஆந்திராவின் குண்டூர் அருகே தெனாலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில், தனது ஆரம்பக் கல்வியைப் பெடாலம், நிதுபுரோலு போன்ற கிராமப்புறங்களில் முடித்து விட்டுச் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பில் இணைகிறார்.
தீவிரமான வாசிப்பு குற்றால அருவிபோல கொட்டிய சிங்காரவேலரின் தோழமை குடையின் கீழே சோசலிச சிந்தனையைப் போற்றிய எழுச்சிகர இளைஞர்களில் ஒருவராக அங்கே மிளிர்கிறார் தோழர் பட்டூரி நாகபூஷணம். புத்தகப் புரட்சியாளர்கள் என்று பட்டப்பெயர் பெற்ற அந்தக் காலத்தின் காங்கிரஸ் மகாசபையின் தனிப்படை அது. மகாத்மா காந்தி, பட்டேல் என்று யாவரையும் அவர்கள் எதிரிலேயே விமர்சனம் செய்யும் மகா தைரியசாலிகள். நேரு, ஆசாத் என்று பலரும் புதிய புத்தகங்கள் வாசிக்கக் கேட்டு இந்தக் கூட்டத்திடம்தான் வருவார்கள்.
பெர்ட்ரண்ட் ரஸல், சார்லஸ்டார்வின், இமானுவேல் காண்ட், காரல்மார்க்ஸ், எமர்சன் என்று கரைத்துக் குடித்த இளைஞர் படை அது. 1972ல் பெங்கால்- நாக்பூர் ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் ஒரு பெரிய திருப்புமுனை. அதன் தொடர்ச்சியாக 1928 தென்னிந்திய ரயில்வேத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடந்தபோது சிங்காரவேலருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தொடர் சட்டப்போராட்டம் காரணமாக 1930ல் அவர் விடுதலை செய்யப்படுகிறார். அன்றைய தினம் சென்னை மத்திய சிறைச்சாலை வாயிலில் நின்று அவரை வரவேற்ற எழுச்சிமிக்க இளைஞர்களில் ஒருவர் தோழர் பட்டூரி நாகபூசணம்.

தந்தை பெரியாரோடு இணைந்து குடியரசு இதழில் எழுச்சிமிக்க கட்டுரைகளை எழுதி, திருவல்லிக்கேணி பகுனுதிமாட்டா்ன் குப்பத்தில் மீனவச் சங்கங்களை ஒருங்கிணைத்து பொது உடைமைக் கட்சி எனும் அமைப்பைச் சிங்காரவேலர் தொடங்கிய நாட்களில் பட்டூரி நாகபூஷணம் ஆந்திராவின் பாடாபாலெம் பகுதியில் சேவா ஷராம.வாணி மந்திர் என்கிற சமூக சீர்திருத்தச் சங்கத்தைத் தொடங்குகிறார். அதன் வழியே 600 புத்தகங்களைக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் கிருஷ்ணா நதி- பேடாவடலபுடி- கொல்லூர்- படகு நூலக சேவை. இது ஆரம்ப காலத்தில் அரசாங்கம் அறியாத, இருளில் பயணிக்கும் ரகசியச் சேவையாக இருந்தது. 1935ல் ஏழு படகுகளில் 12000 நூல்களோடு அது விஸ்தரிக்கப்பட்டது.
விஜயவாடா நூலகச் சங்கம் எனும் அமைப்பை விரைவில் ஏற்படுத்துகிறார் தோழர் பட்டூரி. 1935 அக்டோபர் 25 அன்று படகு நூலக இயக்கத்தைத் தொடங்கிவைக்க வருமாறு அவர் அழைப்பு விடுத்த தலைவர்களில் சிங்கார வேலரும் ஒருவர். 19 கிராமப் பஞ்சாயத்துகள் கிருஷ்ணா நதி பீடத்தில் உடனடியாக படகு நூலக இயக்கத்தை அங்கீகரித்தன. குண்டூர் மண்டல நூலகத் தலைவராகவும் காங்கிரஸ் சமூக சீர்திருத்தச் செம்மலாகவும் அறியப்பட்ட சரனு ராமஸ்வாமி சவுத்ரி அந்த மிதக்கும் நூலக இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார்.
படகுகளில் ஏறிக் கூலி வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளிச் சிறார்கள் மீனவ சகோதரர்கள், பெண்கள் மிதக்கும் நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
கிருஷ்ணா கால்வாய் வாசகர் கூட்டமைப்பு ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம்சாட்டி அரசு தோழர் பட்டூரியைக் கைது செய்ய ஒரு வாரண்ட் கூடப் பிறப்பித்தது. ஆனால் கிராமப் பஞ்சாயத்து மண்டல் தலைவர்கள் படகு நூலகத்தைத் தாங்கள் எடுத்து நடத்துவோம் என்று 27 பட்டிகளில் தீர்மானம் நிறைவேற்றி மாகாண கலெக்டருக்கு மனுஎழுதினார்கள்.
வாசிரெட்டிப்பகுதி சின்னப்பாலம் அன்னப்பூர்ணம்மா எனும் பெண்-தனது தந்தையின் சவப் பெட்டி செய்யும் பட்டறையில் பிரமாண்டமான இருபத்தேழு நூலகப் பெட்டிகளைத் தன் சொந்த உழைப்பால் செய்தார். பிறகு தண்ணீர் புகமுடியாத அரக்குக் களிம்புகளால் அவை பூசப்பட்டு ஒவ்வொரு படகிலும் புத்தகங்கள் பாதிப்பு அடையாமலிருக்கத் தானமாக வழங்கினார். அன்னப்பூர்ணம்மா. பெண்கள் முதியவர்களுக்கான எழுத்தறிவு இயக்கத்தை கிராமம் கிராமமாகக் கட்டமைத்துக் காட்டியவர்.
மீனவர்கள் முதல் விவசாயக் கூலிகள் கட்டிட வேலை செய்யும் பெண்கள் உட்பட யாவரையும் மிதக்கும் நூலக இயக்கம் வாசிப்பை நோக்கி இழுத்தது. அவர்களது போராட்டம் பலமுறை ஒடுக்கப்பட்டது நிஜாம் ஆட்களும் ஜமீன்தார்களும் வெள்ளை ஆதிக்கத்தோடு கைகோர்த்தனர். கையில் புத்தகம் வைத்திருந்தால் கூலி கிடையாது புத்தகத்தைத் தின்று வாழமுடியுமா? என்று உயர்ஜாதி பிராமணர் மற்றும் பணியாக்கள் துர்பிரச்சாரம் செய்தனர்.
வாசிப்பு இயக்கத்தை தொடக்கத்தில் ஆதரித்த பல பஞ்சாயத்துகளில் சில ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் ஜமீனையும், ஆங்கில அரசையும் ஆதரிப்பதாகவும் அறிவித்தது ஒரு கொடுமை எனில் விஜயவாடாவிற்கு ஆந்திர நூலகச் சங்கக்கூட்டத்திற்கு ரயிலில் போகும் வழியில் தான், கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்த தோழர் பட்டூரி நாகபூஷணம் தலைமறைவானார். அவரோடு வெங்கலி புட்டண்ணா, ராகவகேசரிலு, ஜகலாரமுடி சுப்பராயன் எனப் பலரும் தலைமறைவு வாழ்வுக்குள் புகுந்தனர். தான் தலைமறைவாக இருந்தாலும் இந்த அற்புதப் போராளிகள் மிதக்கும் நூலகத்தைக் கைவிடவில்லை.
பாரதி, சிங்காரவேலர், தாகூர், நஜ்ரூல், இக்பால் என பலரது படைப்புகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக் கிருஷ்ணபட்ரிகா, ஆரோக்யபட்ரிகா, சர்வஞான பத்ரிகா, பிரக்ருதி போன்ற இதழ்களில் பிரசுரித்ததோடு அதைத் தொடர்ந்து மிதக்கும் நூலகங்களில் கிடைக்குமாறும் செய்தனர். குறிப்பாகத் தோழர் சிங்காரவேலர் எழுதிய மனிதனும் பிரபஞ்சமும், மூடநம்பிக்கைகளின் கொடுமை, சமதர்ம… போன்ற படைப்புகளைத் தோழர் பட்டூரி நாகபூஷணம் மொழி பெயர்த்துச் சிறு பிரசுரங்களாக்கி மிதக்கும் நூலகங்களில் இணைத்தார்.
மிதக்கும் நூலகங்கள் ஆந்திராவின் கடலோர கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. நெல்லூர் முதல் ராவல் பிண்டி வரை படகுகள் பலவற்றில் ஆற்றின்கரை மற்றும் கடற்கரை ஊர்களின் எழுத்தறிவுப் புரட்சியை இந்த நூலகத் தோழர்கள் ஒரு போராட்டமாகத் தோள்களில் சுமந்து சாதித்தனர். மிதக்கும் நூலகங்களை சர்வஜனி வித்யாபிரதாயனி நூலகம் எனும் மாதர் சங்க அமைப்பு சங்கமம், ஜகராலமுடி மற்றும் தெனாலி ஆகிய ஆற்றோரப் படகுக் குழாம்களில் ஏற்படுத்தியது அடுத்த வரலாற்றுச் சாதனையாகும். மொத்தம் முப்பத்தி ஒன்பது மீனவர் படகுக்குழாம்களில் இரவும் பகலும் மிதக்கும் நூலகங்கள் ஏகப்பரபரப்புடன் செயல்பட்டது உலகையே வியக்கவைத்தது.
இந்த மிதக்கும் நூலகங்களால் ஈர்க்கப்பட்ட அறிவு ஜீவிகள் பலர். அவர்களில் இந்தியப் பொது உடைமை இயக்கத்திற்கே அடிகோலிய அமீர் ஹைதர்கான் முதன்மையானவர். சங்கர் என்ற புனைப் பெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் அடிக்கடி கடல் மார்க்கமாக இருளில் பயணித்து மிதக்கும் நூலக இயக்கத்தில் பங்களித்தவர் அவர். 1939ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியபோது அதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது என்பதை வைத்து மிதக்கும் நூலக இயக்கம் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் என்று குற்றம் சாட்டி மேலும் இடுக்கிப் பிடிபோட்டது.
தோழர் பட்டூரி நாகபூஷணம் உள்ளிட்ட பலரோடு அதே 31-1929 ஆண்டுகளில் சென்னை லயோலா கல்லூரியில் உடன் படித்த நெல்லூர் தோழர் பி. சுந்தரய்யா எனும் பி.எஸ்., உப்புசத்தியாகிரகத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறுவர்சிறை, மத்திய சிறை என தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து 1936ல் விடுதலையாகி நேராகச் சென்று மிதக்கும் நூலக இயக்கத்தில் இணைகிறார். 1936ல்அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவரானவர் தோழர் பி.எஸ். என்பதோடு மிதக்கும் நூலக இயக்கத்தோடு இணைந்து எழுத்தறிவு பெறுவதற்கு லட்சம் விவசாயக் கூலிகளை அந்த 43-1942ல் இணைத்து அதைப் பிரமாண்ட இயக்கமாக்குகிறார்.

நல்கொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்டங்களில் கிராமராஜ்யங்கள் அமைந்ததும்… மிதக்கும் நூலகத்தின் வெளியே தெரியாத மவுனப் புரட்சி ஆகும். உலகெங்கும் பரவிய மிதக்கும் நூலகத்தின் பெரும் புகழால் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தானமாக வந்து கொண்டே இருந்தன. அவற்றை எப்படிப் பராமரிப்பது எனும்நிலை வந்தபோது நூலகத்துறையின் தந்தை என்று போற்றப்படும் மதராஸ் நூலகச் சங்கத்தின் செயலராக இருந்த எஸ்.ஆர்.ரங்கனாதன் நேரில் சென்று தோழர் பட்டூரி நாகபூஷணத்தைச் சந்தித்து நூல்களின் பட்டியல்முறைப் பராமரிப்பு குறித்து தானே நேரடியாக இரண்டு மாதங்கள் செலவிட்டுப் பெரும்பங்காற்றினார்.
படகுகளில் பயணித்துப் பணிக்கு செல்பவர்களுக்கான வாசிப்பு பொழுதுபோக்கு நூலக இயக்கமாகத் தொடங்கப்பட்டுப் பின் எழுச்சிமிக்க பெண்கள் முதியோருக்கான எழுத்தறிவு இயக்கமான இதழ்களின் வழியே சோஷலிசப் பகுத்தறிவு இயக்கமாகவும் உருமாறிய இந்த மிதக்கும் நூலகம்தான் 1940களில் வெடித்த தெலுங்கானாவின் பிரமாண்ட சிவப்பு யுத்தத்திற்கு வழிகோலிய தலைவர்களையும் உருவாக்கியது என்பது வரலாறு.
