மால்கம்
ஷோபாசக்தியின் சிறுகதைகளை வாசிப்பதென்பது, தாங்கவியலாத துயரத்தை நெஞ்சில் வலிய நிரப்பிக் கொள்வதற்குச் சமம்.

ஷோபாசக்தியின் சிறுகதைகளை வாசிப்பதென்பது, மயிலிறகால் வருடி நம்பிக்கைக் கீற்றை நெஞ்சில் வலிய நிரப்பிக் கொள்வதற்குச் சமம். இரண்டும்தான். வரலாற்றைச் சுமந்து புனைவின் வழியாக, கொடுங்கனவை நம் நெஞ்சில் பதிய வைக்கும் இலக்கியம் போலவே, புனைவின் வழியாக நம்பிக்கையை விதைத்து மானுடம் காக்கும் இலக்கியமுமாகும் ஷோபாசக்தியின் எழுத்துகள்.
எதை மையமாக வைத்து உங்கள் கதைகளை எழுதுகிறீர்கள் என ஆண்டன் செகாவிடம் கேட்டபோது, ‘மனிதர்களின் இயல்பை வைத்துத்தான்’ என பதிலளித்திருக்கிறார்.கருங்குயில் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளில் மட்டுமல்ல, முந்தைய தொகுப்புகளிலும் செகாவின் இந்தத் தீண்டல் இருப்பதோடு கூடுதலாக, சமூகத்தின் கூட்டு மனசாட்சியை ஒரு பாத்திரத்தின் வழியே குறியீடாகக் கடத்தும் நுட்பமும் ஷோபாவின் எழுத்துகளில் விரவிக் கிடக்கும். ‘மிக உள்ளக விசாரணை’ ‘மூமின்’ – இந்த இரண்டு சிறுகதைகளும் மேலே சொன்ன ‘குறியீடாக’ அமைந்த கதைகள்.
இரண்டும் மிகப்பெரிய பாதிப்பை என்னுள் ஏற்படுத்திய கதைகள். உலக நாடுகளில் ஃபாசிஸம் ஆழிப்பேரலையாக மிரட்டும் இந்த நாட்களில் சிறுபான்மையினத்தவன் எவனுக்கும் இந்த இரண்டு கதைகளும் தூக்கத்தை கெடுக்காமல் இருக்காது.
நிற்க.கருங்குயில் தொகுப்புக்கு வருவோம். ஷோபா எப்போதும் சொல்வது போல, ஈழ மக்களின் கதையைச் சொல்லிக் கொண்டே இருக்க அவரிடம் போதுமான கையிருப்பு இருக்கிறது. அவற்றில் சிலவற்றைக் கருங்குயில் கருக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் மாவீரன் திலீபன், ஜேவிபி-யின் தலைவர் ரோகண விஜயவீர, கவிஞர் பாப்லோ நெருடா ஆகியோரைக் கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார்.
மெய்யெழுத்து சிறுகதை, ‘புலி’த் தடத்தோடு மாவீரன் திலீபனின் ‘பின் தியாக’ நாட்கள் கதையாக விரிகிறது. 2009-ம் ஆண்டின் ஈழப் போர் முடிவுக்கு வந்த நாட்களை முதல் பத்தியில் குறிப்பிட்டுவிட்டு, அடுத்த பத்தியிலேயே ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்திற்கு நகர்ந்து, திலீபனின் கதை தொடங்குகிறது. இது ஒரு வரலாற்றுச் சிறுகதை. உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் பிரேதம்தான் கதையின் கரு. புலி எதிர்ப்பாளர் என்ற முத்திரையோடு திரியும் ஷோபா, இந்தக் கதையில் திலீபனின் பிரேதத்தைக் காக்கப் பிரயத்தனப்பட்ட புலிகளின் பிரதாப விவரணைகளை விவரிக்கிறார்.
வரலாற்றைச் சொல்வது இலக்கியமாகுமா? ஆகாதுதான், ஆனால் இலக்கியத்திலிருந்து வரலாற்றுத் தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே… யூதர்கள் வட்டி வாங்குவதைத் தொழிலாகச் செய்து வந்தனர் என்பதை ஷேக்ஸ்பியரின் எழுத்துகளிலிருந்து ஆதாரமாக எடுத்தாள்வதை வரலாற்று நூல்களில் காண முடிகிறது. திலீபனின் தியாகத்திற்குப் பிந்தைய 22 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளோடு, ராகுலன் என்ற ஒரு கதாபாத்திரத்தையும் இறந்த மயிலின் உடலையும் புனைவுகளாக இணைத்து மெய்யெழுத்து என்ற பெயரில் சிறுகதை இலக்கியமாகியிருக்கிறது.
ஒரேயோர் இடத்தில் ஷோபாவின் குரல் இந்தக் கதையில் துருத்திக் கொண்டு வெளிப்பட்டு விட்டதாக எனக்குத் தெரிந்தது. எனக்கு மட்டும்தானா? நீங்களும் இந்த வரியை கதையோடு வாசித்துப் பாருங்கள்: “இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது” – இந்த வார்த்தை, கதாபாத்திரத்தைத் தாண்டி ஷோபாவின் குரலாகவே ஒலிக்கிறது. ஷோபா கதை எழுதக் கூடியவரல்ல என் பார்வையில்… கதை சொல்லக்கூடியவர். வாய்மொழியாகக் கதை சொல்லும் அதே அமைப்பில் எழுத்தில் கதையை எழுதுவதோடு, நவீன சிறுகதை ஒழுங்கையும் மீறக்கூடியவர். சிறுகதையின் முடிவை, ஒரு தெறிப்பைப் போலக் கொண்டு வந்து நிறுத்தி, குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு என்ன ஆகியிருக்கும் என்பதை வாசகரின் கற்பனைக்கு விட்டுவிடுவது, நவீன சிறுகதை வடிவங்களின் ஒழுங்காகப் பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பிலும் ஷோபாவின் ஏராளமான சிறுகதைகள் உள்ளன. ஆனால் சில கதைகளில் இந்த ஒழுங்கைத் தெரிந்தே மீறுவார். கதையின் ஒரு திருப்பத்தில் நிறுத்தினாலே போதும், அந்தக் கதை வாசகனிடம் எதைக் கடத்த விரும்புகிறதோ அதைக் கடத்தி விடும் என்றாலும், இன்னும் ஓரிரண்டு துணுக்குகளைக் குறிப்பிட்டு ‘சுபம்’ போடும் வகையில் கதையை நீட்டித்துச் செல்வது ஷோபாவின் பிரத்யேக எழுத்து வகைமையாக இருக்கிறது.
அப்படியே நீட்டினாலும் வாசகருக்கு அலுப்பைத் தராமல் சிறுகதையை படைப்பது, வாசக மனநிலையில் இருந்து அந்தக் கதையை அவர் அணுகுகிறார் என்பதாலேயே சாத்தியம் என்பதை உணர முடிகிறது. அப்படியான ஒரு கதைதான் இந்தத் தொகுப்பில் உள்ள ‘வர்ணகலா’ சிறுகதை. புலம்பெயர் நாடுகளில் எல்லாம் துயரோடும், தாயகத்திற்கு இனி மீள முடியாதென்ற ஏக்கத்தோடும், ஏதிலியாக அச்சத்தோடு அலைந்து திரிந்தாலும் சாதிய வன்மத்தை மட்டும் கைவிட மறுக்கும், சாதித் திமிறில் ஊறித் திளைத்து இன்பம் காணும் போக்கை விவரிக்கும் கதைதான் வர்ணகலா சிறுகதை.
காலாகாலாத்துக்கும் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் சுப நிகழ்ச்சியொன்றின் சிடி-யை நெருப்பில் போட்டுப் பொசுக்கும் அளவுக்கு சாதி வெறி பிடித்தலையும் குடியேற்றத் தமிழர்களின் மன வக்கிரங்கள் இந்தக் கதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணொருத்தி அந்தக் காட்சி ஆல்பத்தில் இருப்பதை வெறுத்து, ஆதிக்க சாதி மனப்பான்மையில் அந்த சிடி-யை நெருப்பிலிட்டு நினைவுகளை அழித்த பின்பும், பழைய போட்டோ ஆல்பங்களைத் தூசி தட்டி எடுத்து அந்த கீழ் சாதிப் பெண்ணின் முகத்தைக் கத்தரித்து விடும் ‘துணுக்கோடு’ கதை முடிகிறது. சிடி-யை நெருப்பிலிடுவதோடு அந்தக் கதையை முடித்திருந்தாலும் போதும்தான். சாதிய வன்மத்தின் கோரத்தை நிறைவாக நிலைநிறுத்த கடைசித் துணுக்குதான் வாசகனுக்கு உதவும் என்பதாலேயே கதையை நீட்டியிருக்கிறார்.

பாப்லோ நெரூடா இலங்கையில் தங்கியிருந்த காலப் பகுதியில் நிலவிய சமூக அமைப்பையும் பெண்களின் நிலையையும் இணைத்து கருங்குயில் என்ற தலைப்பில் கதையாக்கியிருக்கிறார்.ஒடுக்கும் அதிகார வர்க்கத்தினர் எதிர் அதிகார மறுப்பு கிளர்ச்சியாளர்களின் அரசியலைப் பேசும் இரண்டு கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தால், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அதிகாரம் அவரை விட்டுவிடாது என்பதை, ஆறாங்குழி சிறுகதையில் குலைநடுங்க வைக்கிறார் ஷோபா.
ஜேவிபி தலைவர் ரோகண விஜயவீர துடிக்கத் துடிக்க சுட்டுக் கொன்று உடலை எரித்த வரலாற்றை ஒரு கதாபாத்திரச் செருகலால் இலக்கியமாக்கியிருக்கிறார். சாவுக்கு முந்தி நிகழ்த்தப்படும் அவமானங்கள்தாம் சாவை விடக் கொடூரமானவை.
பல்லிராஜா சிறுகதையில் பெளத்தத் துறவியைத் துவம்சம் செய்யும் சிங்கள அதிகாரம் பற்றி பேசியிருக்கிறார்.அரசுக்கு எதிராகவெல்லாம் அந்தத் துறவி செயல்படவில்லை, மதத் தூய்மைவாதத்திற்கு உறுதுணையாக இருந்ததாக ‘நம்பப்படுவதாலேயே’, பெளத்தத் துறவி அரச வன்முறையை எதிர்கொள்ள நேரிடுகிறது. (அந்தத் துறவியின் ‘பெளத்த மயமாக்கல்’ நடவடிக்கைகள் இந்துத்துவ சக்திகளின் மஸ்ஜித் – மந்திர் பிரச்சினையை நினைவுபடுத்துகிறது.)
துறவு என்பது பெளத்தர்களின் மிக மிக உயர்ந்த ஆன்மிக நிலையாகப் பார்க்கப்படும் போது, ஆட்சியாளர்களுக்கு அசெளகரியத்தைக் கொடுப்பதால், பெளத்த மதத்தை இழிவுக்குள்ளாக்குவது பற்றிக் கவலை கொள்ளாமல், துறவைத் துறக்கப் பாலியல் நடவடிக்கையில் அந்தத் துறவியை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி அவமானப்படுத்துகின்றனர்.
குடியேற்ற வாழ்க்கையின் கோரத்தை ‘அகதியாக மானம் கெட்டு வாழ்வது’ என ஒற்றை வரியில் கலைத்துப் போட்டு அதனூடாக, தாய்நாட்டிலேயே தங்கி விட்ட ஒரு தாயின் தவிப்பையும், அவரை அழைத்துக் கொள்ள மருகும் வெளிநாட்டில் வசிக்கும் தனயனின் இயலாமையையும் One Way சிறுகதையில் வாசிப்பவர் மனம் கசிய வைத்திருக்கிறார் ஷோபா.
ஷோபாசக்தியின் தொகுப்புகளை நான் வாங்கும் போது, நூலின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிந்தனையாளர்களின் முத்திரை வாசகங்களைத்தான் முதலில் படிப்பேன். அதில் சில:
இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா?
ஆம், இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும். – Bertlot Brecht
கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை. – மால்கம் X
சொல்வதற்கான சுதந்திரம் காப்பற்றப்படும் போதுதான் கேட்பதற்கான சுதந்திரம் சாத்தியமாகிறது. – பாப் மார்லி
கருங்குயில் சிறுகதைத் தொகுப்பில் ஃபிரான்ஸ் ஃபனானின் முத்திரை வாசகம் ஒன்று இடம் பெற்றிருந்தது. இந்த நூலை வாங்கும் போது, ஸலாம் அலைக் நூலையும் சேர்த்து வாங்கினேன். அதில் இடம் பெற்றிருந்த முத்திரை வாசகம்தான் கருங்குயில் நூலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் எனக் கருதுகிறேன். அந்த வாசகம் இதுதான்:
புத்தகம் என்பது வாழ்க்கையின் இறந்துபோன கருத்து நிழல். அதன் பணி உண்மைகளைச் சாடையாகச் சொல்வது.
ஒரு நல்ல புத்தகத்தைக் காட்டிலும் ஒரு கெட்ட மனிதன் சிறந்தவன். – மாக்சிம் கார்க்கி.