தேவிபாரதி

ஈரோட்டில் அப்போது நீல்கிரீஸ் கலையரங்கில் இளம் பேச்சாளர்களுக்கான ஒரு கூட்டம் நடந்தது. அதில் ஏறத்தாழ இருபது பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த இருபது பேரில் நானும் ஒருவனாகப் பங்கேற்றிருந்தேன். மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருந்த ஓர் இளைஞரும் அதில் பங்கேற்றிருந்தார். சாட்டை போன்ற உறுதியான தேகம். கண்களில் ஒளி.
அவரை அதிகம் அறிந்தவனல்லன் நான்.
நாங்கள் இருவரும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் உறுப்பினர்கள் என்று அறிந்து பரஸ்பரம் ஒருவரை ஒருவர் செய்து அறிமுகம் கொண்டோம். பேச்சாளர்கள் ஒவ்வொருவராகப் பேசுவதற்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் அவர் நான்காமவராக அழைக்கப்பட்டார். பிறகு வேறு சிலர் பேச அழைக்கப்பட்டனர். பங்கேற்ற பேச்சாளர்களில் ஒருவரின் குரல் மற்ற எல்லோரையும் கவர்ந்தது. ஆற்றுப் பிரவாகம் போன்ற உரை. அரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது. அந்தக்குரல் ஸ்டாலின் குணசேகரனுடையது. கரவொலிகள் விண்ணைப் பிளந்தன. அந்தக்கணத்தில் தொடங்கின அவருடைய செயல்பாடுகள்.
இலக்கியம், அரசியல், பண்பாடு சார்ந்த தளங்களில் அவர் முன்னெடுத்த செயல்பாடுகளில் எதிலும் அவர் சோர்வடைந்ததேயில்லை. ஒரு கட்டத்தில் ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்பு இல்லாமல் ஈரோடு நகரில் எதுவுமே அசையாது என்னும் நிலை கூட உருவானது. அவருடைய செயல்பாடுகளில் முதன்மையானது என்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையை முன்னெடுத்துச் சென்றதைத்தான் சொல்ல முடியும்.
ஏறத்தாழப் பதினெட்டு வருடங்கள் அந்த அமைப்பை வழிநடத்தி வருகிறவர் அவர். அதை இந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட முறைகளில் உழைத்திருக்கிறார் அவர். அப்போது சென்னை புத்தகத் திருவிழாவை விட்டால் மதுரை உள்ளிட்ட வெகு சில பகுதிகளில்தான் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.புத்தகக் கண்காட்சிகள் மிக அரிதாக நடந்து கொண்டிருந்த காலம் அது. வாசிப்புப் பழக்கமும் அதிகம் இருந்ததில்லை. சிறு பத்திரிகைகள்தாம் வாசிப்புப் பழக்கத்தை விடாமல் பற்றிக் கொண்டிருந்தன.
சிற்றிதழ்கள்’ ஒரு வட்டத்துக்குள் இயங்கி வந்தவை. தாமரை இதழ் தனக்கான ஓர் இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து எழுபதுகளில் எண்ணற்ற சிற்றிதழ்கள்’ வெளியாகிக் கொண்டிருந்தன. சி.சு.செல்லப்பா எழுத்து இதழின் மூலம் தொடர்ந்து பங்களித்து வந்தார். நா.பார்த்தசாரதி தீபம் என்ற சிற்றிதழின் ஆசிரியராயிருந்து அதைச் சிறப்புற நடத்தி வந்தார்.
ராஜமார்த்தாண்டன் பங்களிப்பில் கொல்லிப்பாவை’ இதழ் நல்ல கவனம் பெற்றது. அவற்றைத் தொடர்ந்து வெவ்வேறு இதழ்கள் வெளிவரத் தொடங்கின.சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு காலச்சுவடு’ எட்டு இதழ்கள் தயாரித்து தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தாமரை, தீபம் ஆகிய இதழ்களைத் தொடர்ந்து இடதுசாரி இயக்க இலக்கிய இதழ்களாகச் ‘செம்மலர்’, சிகரம்’ போன்ற பத்திரிகைகள் வெளிவந்தன.
சமகாலத்தில் ‘சதங்கை’, ‘ஞானரதம்’ ஆகியனவும் வந்தன. பரந்தாமன் கவிதைக்கான ‘ஃ’ இதழைக் கொண்டு வந்தார். பாளையங்கோட்டையிலிருந்து தேடல் வந்தது.சொக்கர் ஆசிரியராக இருந்து நடத்திய ‘வெண்மணிப் புறாக்கள்’, கண்ணதாசன் ஆசிரியராயிருந்து நடத்திய கண்ணதாசன் இதழ், ஆர்.ஷண்முகசுந்தரத்தை ஆசிரியராகக் கொண்ட ‘வசந்தம்’ ஆகியவை தவிர ‘மஞ்சரி’ இதழ் உள்பட பல பத்திரிகைகள் வெளி வந்தன. மஞ்சரியில் நல்ல மொழி பெயர்ப்புக்கதைகள் இடம்பெற்றன.தவிர நல்ல புத்தகங்களின் சுருக்கங்கள் ஒவ்வோர் இதழிலும் வெளிவந்தன.

கணையாழி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒரு பத்திரிகை. அந்த இதழில் அசோகமித்திரன் பல ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். மாலன் திசைகள் ஆசிரியராயிருந்த போது வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு இதழ்களின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். குமுதம், இந்தியா டுடே, புதிய தலைமுறை போன்ற பல இதழ்கள் அவர் ஆசியராயிருந்தவை. அப்போது பிரபஞ்சன் குமுதத்தில் பணி செய்தார். அவருக்குப் பத்திரிகைப்பணி ஒத்துவரவில்லை.தமிழ்ப் பத்திரிகையுலகில் பங்களிப்புச் செய்த இதழ் சிகரம் பா. செயப்பிரகாசம், பூமணி, இராசேந்திரசோழன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
மீரா நடத்திய அன்னம் விடு தூது சில இதழ்களே வெளியாகின. அவற்றில் காத்திரமான பல சிறுகதைகள் வெளிவந்தன. எனது நினைவில், கோட்டோவியங்களுடன் வந்த இதழ் அன்னம்விடுதூது தான். ஆனால், பத்து இதழ்களுடன் அன்னம் விடை பெற்றுக்கொண்டது.
அந்தக்கால கட்டத்தில் தமிழ் இதழியல் துறை பெரும் வளர்ச்சியை எட்டியிருந்தது. காலச்சுவடு, சொல் புதிது முதலான எண்ணற்ற இதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. சுபமங்களா.இந்தியா டுடே போன்ற இடைநிலை இதழ்களும் நிறைய வரத்தொடங்கின.
கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின், சுபமங்களா தரமான இலக்கியப் பத்திரிகையாகப் பரிணமித்தது. இந்தியா டுடேயும் அவ்வாறே வெளிவந்தது. வாஸந்தி மாலன் ஆகியோர் அதன் ஆசிரியர்களாயிருந்தனர். தரமான இதழ்கள் இவை. எஸ்.வி.ஆர். ஆசிரியராயிருந்த இனி பத்திரிகையும் ஒரு தனித்தன்மை வாய்ந்த சிற்றிதழ். இந்தத்தருணத்தில் சிற்றிதழ்கள்-பெரிய பத்திரிகைகள் என்ற பிரிவினைக்கோடு அழிந்து, இலக்கியமே முதன்மையான அம்சம் என்ற இடம் உருவானது.
பெரிய இதழ்களில் இலக்கியப்பகுதிகள் முதன்மையிடம் பெறும் நிலை உருவானது. அதே சமயம், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா போன்ற இளைய தலைமுறைப் பத்திரிகையாளர்களும் வணிகரீதியிலான நாவல்களை உற்பத்தி செய்து தள்ளத் தொடங்கினர். அப்போது சென்னையில் மட்டும் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது.புத்தகத்துக்காக அப்படி ஒரு பெரு நிகழ்வு வேறு கற்பனை செய்யவில்லை. அத்தகைய ஒரு சூழலில்தான் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டுமென்று ஸ்டாலின் குணசேகரன் முன் முயற்சிகளை மேற்கொண்டார்.
பலரும் அவரின் இந்த முயற்சியை வரவேற்றனர். சென்னைப் புத்தகக் கண்காட்சியின்போது அவர் இதுபற்றிப் பேசினார். அப்போது ஈரோடு மாவட்டத்தில் புத்தகங்கள் வேண்டுமென்றால் ஈரோட்டுக்குத்தான் போயாக வேண்டும். அப்போது ஈரோட்டில் வேலா புத்தக அங்காடி மட்டும் இருந்தது. ஆனால், இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் அங்கே கிடைக்காது. தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் படைப்புகளைக் கண்டறிய ஈரோடு வாசகர்கள் மிகுந்த பிரயத்தனப்பட்டு வேண்டும்.
அப்போது வாணி நூலகம் என்ற ஒரு கடையும் இருந்தது. அதில்தான் பா.செயப்பிரகாசத்தின் காடு என்னும் அற்புதமான நூலை வாங்கினேன். பரவசம் தாங்காமல் அப்போதே அதைக் கையில் கொண்டு போய் தண்ணீர்த் தொட்டி ஒன்றில் உட்கார்ந்து அன்று பிற்பகலுக்குள் அதை வாசித்து முடித்தேன்.நூலகத்தில் வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்புக் கிடைத்தது. அங்குதான் அசோகமித்திரனின் கதைகள் கிடைத்தன. சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நாவலைத் தேடி அலைந்தேன். அப்போது வேறு சில புத்தகங்கள் கிடைத்தன. அப்படி இந்த வழியில்தான் வாசிப்புக் கைகூடி வந்தது.
அப்போதுதான் சில வருடங்களுக்குப் பின்பு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்த ஸ்டாலின் குணசேகரனைச் சந்தித்தேன். அப்போது நான் பணி நிமித்தமாகச் சென்னையிலிருந்தேன். ஈரோட்டில் ஒரு புத்தகச்சந்தையை உருவாக்கும் எண்ணத்துடனேயே இருந்த அவரைப்பார்த்தபோது அவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் அதைப்பற்றியே இருந்ததை உணர்ந்தேன். அவர் எப்போதும் யாரைச் சந்தித்தாலும் புத்தகச்சந்தையைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக அது கைகூடியது. எடுத்த எடுப்பிலேயே ஈரோடு புத்தகச்சந்தையை விரிவான முன்னேற்பாடுகளுடன் தொடங்கினார் ஸ்டாலின் குணசேகரன்.
உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது உறுதுணையாக நின்றார். ஸ்டாலினின் நண்பர்கள் பலரும் துணை நின்றனர். அவர்களில் பலர் தன்னார்வலர்களாக இருந்தவர்களே. ஒரு பெரிய புத்தகக்கண்காட்சியை வழி நடத்துவது என்னும் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்தப்பணியைச் செவ்வனே செய்தார்கள்.
ஒவ்வொரு நாளும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் நடந்தன. அவற்றில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆளுமைகள் பங்கேற்று உரைகளை நிகழ்த்தினர். திரைக்கலைஞர் சிவகுமாரும், உதயசந்திரனும் இடம் பெறாத ஒரு கண்காட்சி கூட நடக்கவில்லை எனலாம். ஈரோட்டுப் படைப்பாளிகள் மட்டுமன்றி தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழ்ந்திருந்த படைப்பாளிகளும் அது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றார்கள்.
என்னுடைய பிறகொரு இரவு என்ற சிறுகதைக் தொகுப்பை வெளியிட்டுப் பேசியவர் உதயசந்திரன். எனது மூன்று தொகுப்புகள் ஈரோடு புத்தகக் காட்சியிலேயே வெளியிடப்பட்டன. அந்த நகரிலேயே பல புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, விடியல், தமிழினி, மணல் வீடு, நடுகல் முதலான பல்வேறு பதிப்பகங்கள் தம் வெளியீட்டு நிகழ்வுகளை ஈரோட்டில் நடத்தின.
இலக்கியத்திற்கும் அப்பால் பல்வேறு பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை இடம்பெறச் செய்தன. இலக்கியம், அரசியல், சிறார் கதைகள் என எண்ணற்ற வகைமைகளைச் சேர்ந்த புத்தகங்களை சாகித்திய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற பதிப்பகங்கள் காட்சிக்கு வைத்து வந்தன.
சில ஆண்டுகளில் ஹார்ப்பர் காலின்ஸ் போன்ற சர்வதேசப் புத்தக நிறுவனங்களும் கூட ஈரோடு புத்தகச்சந்தையில் பங்கேற்கின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் விற்பனையில் சாதனை படைத்த நாவல். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்று வணிக இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்களும் பங்கேற்றனர்.
ஈரோட்டைத் தொடர்ந்து, காங்கேயம், வெள்ளகோவில் போன்ற சிறு நகரங்களிலும் கூடப் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.எல்லா ஊர்களுக்கும் அதுபோன்ற கண்காட்சிகளை ஸ்டாலின் குணசேகரனும், பாரதி புத்தகாலயத்தின் இளங்கோவும் இணைந்து முன்னெடுத்துச் சென்றனர். வெகு விரைவிலேயே புத்தகக் கண்காட்சிகள் அந்தந்த மாவட்டங்களின் இலக்கிய அடையாளங்களாக மாறின.
கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு பொது நூலகத்துறை, பள்ளிக்கல்வித்துறை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் தனி அக்கறை செலுத்தி ஒருங்கிணைத்தனர். பொதிகை இலக்கியத்திருவிழா, சிறுவாணி இலக்கிய நிகழ்வு முதலான பல முன்னெடுப்புகளை முதல்வரும், பள்ளிக்கல்வித்த்துறையும் முன்னெடுத்தனர். வாசகர்களும், பொதுமக்களும் ஈரோடு புத்தகச்சந்தையில் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கலைஞர் முன்னெடுத்த அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவை, வரலாற்றில் இடம்பெறத்தக்கவை.
கலைஞர் கருணாநிதி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட கலைஞர் பொற்கிழி விருது எழுத்தாளர்களின் மதிப்பை உயர்த்தியது.சென்னைப்புத்தகக் கண்காட்சிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட அந்த நிகழ்வில் தமிழின் முதன்மையான படைப்பாளிகளான அசோகமித்திரன், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டன.
தன் வாழ் நாள் நெடுகவும் படைப்பாளிகளையும், படைப்புகளையும் பெரு மதிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தவர் கலைஞர் அவர்கள். படைப்பாளிகளை போற்றியதுடன் அவர்கள் வாழ்வின் கவுரவத்தை உயர்த்தும் நோக்குடன் பல்வேறு விருதுகளை வழங்கி அவர்களைக் கவுரவித்து வந்தார் கலைஞர். அவரை அடியொற்றி நடை போடும் ஸ்டாலின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் படைப்பாளிகளுக்கு வீடுகளைப் பரிசளித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் கலை இலக்கியம் சார்ந்த தமிழ் நாட்டரசின் செயல்பாடுகள் தமிழின் பொற்காலம் என்றால் அது மிகையான கூற்று அல்ல. இப்போது வாய்ப்புகள் உள்ளன.ஸ்டாலின் குணசேகரன் பல கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார்.
ஈரோடு புத்தகக் கண்காட்சி அவரின் சாதனைகளின் சிகரம் என்பதில் ஐயமேயில்லை.