ச.சுப்பாராவ்
ஒருவன் அல்லது ஒருத்தி மீது மட்டுமே வருவதுதான் உண்மைக் காதல் என்பார்கள். புத்தகக் காதலில் இந்த நியதி செல்லுபடியாகாது. அங்கு பல ஆயிரம் புத்தகங்கள் மீது காதல் என்றால் தான் உண்மையான காதல். ஆனாலும் ஒரே புத்தகத்தின் மீது தீராக் காதல் கொண்டு, படாதபாடு பட்டு அதைப் படித்து முடித்த ஒரு ஏகபுத்தக விரதனும் இருக்கிறார். ஏ.ஜே.ஜேக்கப் என்ற அந்த ஏ.பு.வி அப்படி நேசித்து வாசித்த புத்தகம் ஆங்கிலக் கலைக்களளஞ்சியம்.

Encyclopedia Britannica.அப்படி நேசித்து வாசித்த அனுபவத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள The Know it all – One man’s humble quest to become The Smartest Person in the world என்ற புத்தகம் அதன் தலைப்பைப் போன்றே மிகவும் பெரியது. 540 பக்கத்தில் ஆங்கில அகரவரிசைப்படி தான் கற்றதையும், பெற்றதையும் மிக நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். பின்னே, ஒவ்வொன்றும் நான்கு பவுண்டு எடையில், 32 பாகங்கள், 330000 பக்கங்கள், 9500 கட்டுரையாளர்கள் 4,40,00,000 சொற்களில் எழுதிய 65000 கட்டுரைகள், கொண்ட மெகா புத்தகம் பற்றி சின்னதாகவா எழுத முடியும்?
ஜேக்கப் எழுதப் படிக்கத் தெரிந்ததும் வாசிக்க ஆரம்பித்து விட்ட ரகத்தைச் சேர்ந்தவர். பள்ளிக்கூட விடுமுறையில் டி.ஹெச்.லாரன்ஸ் படிப்பது, பதின்பருவத்தில் மார்க்சியத் தத்துவங்கள் பற்றி விவாதிப்பது என்று இருந்த அறிவுஜீவி. கல்லூரிப் படிப்பை முடித்ததும், ஒரு பொழுதுபோக்கு இதழில் உதவியாசிரியராகச் சேருகிறார். முழுக்க முழுக்க சினிமா, பாட்டு, ஃபேஷன் பற்றி எழுதும் பத்திரிகை அது. பணியின் தேவைக்கேற்ப மிக லைட் வாசிப்பாகவே செல்கிறது. தன் வாசிப்பு பெருமளவு குறைந்து, தனது பொது அறிவே மிகவும் குறைந்து விட்டதாக உணர்கிறார்.
என்சைக்ளோபீடியாவை முழுக்கப் படிப்பது என்று ஒரு சுபயோக, சுபதினத்தில் முடிவெடுக்கிறார். மனைவி இந்த விஷப் பரிட்சை எல்லாம் வேண்டாம். வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், நம் ஊரின் ஹோட்டல்களை எல்லாம் அகர வரிசைப்படி ஒரு பட்டியல் எடுத்துக் கொண்டு, தினமும் ஒரு ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு, ஒரு சாதனை செய்யலாமே என்கிறார். வாசிப்பை நேசிப்போர் எந்தக் காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் சொன்னதைக் கேட்டார்கள்? புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டார். 3 பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த வாசிப்பு அவருக்கு ஒரு புது உலகத்தைத் திறந்து விட்டது பற்றியதுதான் இந்த 540 பக்கப் புத்தகம்.
முதல் வரியிலேயே எப்படி வாசிப்பது என்ற சிக்கல் வந்துவிடுகிறது. முதல் சொல் A – ak பண்டைய கிழக்கு ஆசிய இசை. மேற்கொண்டு விபரங்களுக்கு Gagakuவைப் பார்க்கவும் என்கிறது. இப்போது அடுத்த சொல் பற்றிப் படிப்பதா இல்லை, gagaku எந்தப் பாகத்தில், எந்தப் பக்கத்தில் வருகிறது என்று தேடி எடுத்துப் படிப்பதா என்ற பெரிய பிரச்சனை. நிறைய யோசித்து நேரத்தை வீணடிக்காது, தொடர்ந்து படிப்பது, gagaku வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார். கலைக்களஞ்சியத்தை வாசிப்பது ரிமோட்டை வைத்துக் கொண்டு சேனலை மாற்றிக் கொண்டே இருப்பது போல என்கிறார் ஜேக்கப்.
தலைப்புகள் சட்டென்று மாறும். ஒரு கட்டுரை மனதைச் சோகமாக்கும். அடுத்தது உற்சாகத்தில் துள்ள வைக்கும். ஒன்று 3000 வருடப் பழமையான விஷயத்தைப் பற்றியதாக இருக்கும். அதன் அடுத்த கட்டுரை மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்றைப் பற்றியதாக இருக்கும். ஒன்று ஆன்மீகம் பற்றிப் பேசும் . அதற்கு அடுத்த கட்டுரை புழுக்களின் இனப்பெருக்கம் பற்றி. எனவே, வாசிப்பு என்பது ஒருபுறம் ஜேக்கப் நினைத்ததைவிட பன்மடங்கு கடினமானதாக இருந்த போதிலும். அது தந்த தகவல்கள் மற்றொரு புறம் வாசிப்பை மிகவும் சுவையானதாக ஆக்கின.
என்சைக்ளோபீடியாவைப் படிப்பது ஒரு பெரிய கடலை சிறிய கிண்ணத்தை வைத்துக் கொண்டு எடுத்து, எடுத்துக் குடிப்பதற்கு ஒப்பானது என்கிறார். இப்படி வாசிக்கும் போது அவர் அறிந்த, அறிந்து வியந்த பல அதிசயமான தகவல்களை ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். அவற்றை விட முக்கியமாக இந்த வாசிப்பு அனுபவத்தை, அதன் வழி தான் அறிந்ததை, தனது சிந்தனை மேம்பட்டதை, அவர் சொல்லும் விதம் தான் மிக அழகு. அவர் தரும் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கொட்டிக் கிடப்பவைதான். ஆனால் அவரது அந்த வாசிப்பு அனுபவம் அவரது புத்தகத்தில் மட்டுமே கொட்டிக் கிடக்கிறது.
என்சைக்ளோபீடியா முழுக்க ஏராளமான சாதனையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள். மேதைகள். அறிஞர்கள். படிக்கப் படிக்க நாம் வாழ்வில் ஒன்றுமே செய்யவில்லை, நாம் இருப்பதே வீண் என்று நம்மை எண்ண வைத்துவிடுபவர்கள். மற்றொரு புறம் பக்கம் பக்கமாகத் தோல்வியாளர்கள். ஒரு காலகட்டத்தில் புகழின் உச்சியில் நின்றுவிட்டு, பின்னர் வரலாற்றின் பக்கங்களிலிருந்து காணாமல் போனவர்கள். குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்துவிட்டு நடை மெலிந்தோரூர் நண்ணியவர்கள். புகழ் நிரந்தரமற்றது, அதைத் தேடிச் செல்வது வீண். வந்தால் மகிழ்ச்சி. போனால் பரவாயில்லை என்ற மனநிலையை இந்த வாசிப்பு அவருக்கு அளிக்கிறது.
வீட்டில் சமையலறையில், படுக்கையறையில், கூடத்தில், மேஜை, நாற்காலியில், கட்டிலில், காரின் பின்சீட்டில், முன்சீட்டில், சினிமா தியேட்டரில், உணவகத்தில், பாரில், அலுவலகத்தில், மருத்துவமனையில் என்று எல்லா இடத்திலும் வாசிக்கிறார், வாசிக்கிறார். வாசித்துக் கொண்டே இருக்கிறார். தன் வாசிப்பு வேகம் போதாது என்று உணர்கிறார். வேக வாசித்தலுக்கான வகுப்பில் சேர்கிறார். அந்த வகுப்பை ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது. கென்னடியும், நிக்சனும் அந்த வகுப்பில் படித்திருக்கின்றனர். மெதுவாக வாசித்தால் நமது மூளைக்குப் போரடித்துவிடும். நீங்கள் படித்தது எதையும் தனக்குள் சேமித்து வைக்காது. வேகமாகப் படித்தால்தான் படித்தது மனதில் நிற்கும் என்று அந்த வகுப்பில் சொல்கிறார்கள். புதிய உற்சாகத்தோடு ஜேக்கப் வேகமாக வாசிக்க ஆரம்பிக்கிறார்.
வாசிக்க வாசிக்க அறிவு என்பது என்ன? ஞானம் என்பது என்ன? என்று என்னென்னமோ சிந்தனைகள். படித்ததில் எது மனதில் நிற்கும்? எது மறந்து விடும்? மறதி என்பது என்ன? மறதி என்பது பென்சிலில் எழுதியதை ரப்பர் வைத்து அழிக்கும் போது, எழுதிய சுவடே தெரியாமல் மறைகிறதே ! அடுப்பின் புகை சற்று மேலே எழுந்து பின்னர் காணாமல் போகிறதே! அது போல் மொத்தமாக மறையும் விஷயமல்ல.
அது வெய்யிலில் போட்ட சோபாவின் நிறம் மங்குவதே தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக மங்குகிறதே அது போன்றது என்கிறார் ஜேக்கப். சரி, ஒருவரால் எவ்வளவு நினைவில் கொள்ள முடியும்? ஒரு விஷயம் பற்றி நிறையப் படித்தால், அது பற்றி உங்களால் நிறைய நினைவில் கொள்ள முடியும் என்கிறார் அவர். ஆனாலும் மனிதர் தானே? நாம் செய்வது வீண் வேலையா? பயனுள்ளதா? பயனற்றதா? என்ற கவலைகளும் அவ்வப்போது வருகின்றன. வாசிப்பின் மதிப்பு பற்றி பொதுவாகவே நிறைய யோசிக்கிறார். கண் பார்வையற்றவரான ஒருவர் பற்றி ஜான் லாக் எழுதிய ஒரு புகழ்பெற்ற கதையைச் சொல்கிறார்.
அந்த பார்வையற்றவர் கருஞ்சிவப்பு நிறம் (Scarket colour) பற்றி அறிய விரும்புகிறார். நீண்ட காலம் அது பற்றி யோசிக்கிறார். பலரிடமும் பேசுகிறார். கடைசியில் அது ஒரு டிரம்ப்பெட்டின் ஓசையைப் போன்றிருக்கும் என்ற முடிவிற்கு வருகிறார். நான் இந்த கருஞ்சிவப்பு நிறத்தைப் பற்றி அறிய முயன்ற பார்வையற்றவர் போன்றவன் தானோ? நான் பொய்யான டிரம்பெட் ஒலிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேனா? இயற்கையைப் பற்றிப் படிப்பது நல்லதா? இயற்கையை நேரில் ரசிப்பது நல்லதா? ஒன்றைப் பற்றிய புரிதலை அது குறித்த வாசிப்பு தருமா? இல்லை, அதை அனுபவித்துத்தான் அறிய வேண்டுமா? எத்தனை எத்தனையோ யோசனைகள். ஆனால், மனித மனம் தகவல்கள் மேல் ஆசை கொண்டது. அது நேரடி அனுபவங்களை விட தகவல்களுக்குத் தான் முக்கியத்துவம் தருகிறது.
அதனால்தான் அவரது புத்தகக் காதல் இந்த யோசனை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ‘போய்ப் படிடா, இன்னும் 22000 பக்கம் பாக்கி இருக்கு‘, என்று விரட்டுகிறது! ஆனால், ஒவ்வொரு சின்னச் சின்னக் கட்டுரையும் அவரது சிந்தனையை மேம்படுத்தவே செய்கிறது. ஒவ்வொரு பக்கத்தைப் படிக்கும் போதும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி. அவற்றைக் கூர்ந்து கவனித்து ஏதோ ஒரு புதிய விஷயத்தை நான் தெரிந்து கொள்கிறேன் என்கிறார்.
எலிஷா கிரே என்பவர் பற்றி அவர் படிக்கும் ஒரு துண்டுச் செய்தி செய்ய வேண்டிய வேலைகள் பல இருந்தால் எதற்கு முன்னுரிமை தருவது என்பதைக் கவனமாக முடிவு செய்ய வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தருகிறது. எலிஷா கிரே, ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்துவிட்டார். அதற்குக் காப்புரிமை வாங்க அதற்குரிய அலுவலகத்திற்குச் செல்கிறார்.
போகும் வழியில் பலசரக்குக் கடைக்குப் போய் சிலபல சாமான்களை வாங்கி, வீட்டு முகவரியைச் சொல்லி டோர் டெலிவரிக்கு ஏற்பாடு செய்து விட்டு சாவகாசமாகக் காப்புரிமை அலுவலகம் செல்கிறார். அங்கே உள்ள அதிகாரிகள் இதே கண்டுபிடிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பவர் காப்புரிமை வாங்கி விட்டார் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். அந்தக் கண்டுபிடிப்பு என்னவென்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இன்று எலிஷா கிரே என்சைக்ளோபீடியாவில் ஒரு பத்தியாக மட்டுமே இருக்கிறார் !

என்சைக்ளோபீடியா வாசிப்பு அவரிடம் சின்னச் சின்ன மாறுதல்களை ஏற்படுத்தி, அதன் காரணமாகப் பெரிய அளவில் அவரது வாழ்வை, மனநிலையை மாற்றுகிறது. விளிம்புநிலைப் பயன்பாடு (marginal utility) பற்றிப் படிக்கிறார். அதிக பணவசதி இல்லாதவர்களுக்குக் குறைந்த அளவு பணம் கூட அதிக மகிழ்ச்சியைத் தரும் என்று படிக்கிறார். அதிலிருந்து சிறுசிறு சேவை செய்வோருக்கெல்லாம் தாராளமாக டிப்ஸ் தருகிறார். அவர்கள் முகத்தில் அப்போது உண்டாகும் மகிழ்ச்சியைப் பார்க்க இவருக்கு அதனினும் மகிழ்ச்சி ! வாசிப்பு என்ன செய்யும்? என்ன செய்யும்? என்று பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதை விட வேறு என்ன செய்ய வேண்டும்?
உலகம் பற்றிய பார்வையை அவரின் இந்த வாசிப்பு மாற்றுகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அறிகிறார். உணர்கிறார். கல், மனிதன், அழகு எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றன. நாற்காலியின் வடிவம், சேவல் சண்டை விதிகள் எதுதான் மாறவில்லை? மாற்றங்கள் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்க, மற்றொரு புறம் மனிதன் மகத்தான சாதனைகளைச் செய்து கொண்டே இருக்கிறான். கிரேக்கத்தின் டெமொஸ்தனிஸ் தன் திக்குவாயை, குழறும் பேச்சை வாயில் கூழாங்கல்லை ஒதுக்கிக் கொண்டு பேசிப் பழகித்தான் மாபெரும் பேச்சாளனாகிறார். 20 கம்பெனிகள் நிராகரித்த போதும் தன் கண்டுபிடிப்பைப் பற்றிய நம்பிக்கையோடு போராடி வெற்றி காண்கிறார் ஜெராக்ஸ் இயந்திரம் கண்டுபிடித்த செஸ்டர் கார்ல்சன்.
ஒரு காலத்தில் பிரசவ மரணங்களின் சதவிகிதம் 75 ஆக இருக்கிறது. பண்டைய ரோமில் சராசரி ஆயுட்காலம் 29. உழைப்பாளிகள் ஓய்வே இல்லாமல் நாள் முழுக்க உழைக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள், எத்தனை சிறியவனானாலும், கணவனின் தம்பியை மணக்க வேண்டும் என்று ஒரு சமுதாயம் கட்டுப்படுத்துகிறது. குடைகளை வண்ண வண்ண நிறங்களில் உருவாக்கலாம் என்றே தெரியாமல் பல நூற்றாண்டுகள் கறுப்புக் குடைகளோடு கழிகின்றன.ஆனால், மனிதன் தன் தேடலால், அறிவாற்றலால், விடாமுயற்சியால் இந்த உலகை அனைவரும் வாழத் தகுந்ததாக மாற்றிக் கொண்டே வருகிறான். என்சைக்ளோபீடியா முழுவதும் இப்படியான சாதனைகளின் விவரிப்புதான்.
மனிதன் ரோமில் ட்ரெவி ஃபவுண்டனை அத்தனை அழகாக உருவாக்கியிருக்கிறான். பார்வையற்றோருக்காகப் பிரெய்லி முறையை கண்டுபிடித்ததோடு நிற்கவில்லை. அதில் ஸ்கிராபிள் என்ற விளையாட்டையும் விளையாட முடிகிறது. மருத்துவர்கள் செயற்கை இதயத்தைப் பொருத்துகிறார்கள்.
இந்த உலகம் அறிவால் வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் உலகம் , இது அனைவருக்குமானது என்ற புரிதலை அவரது இந்த 330000 பக்க வாசிப்பு அவருக்குத் தருகிறது. இந்த வாசிப்பு என் மூளையில் பதிந்து வைத்த தகவல்கள் காலப் போக்கில் மங்கிவிடலாம். ஆனால், அது கொடுத்த ஞானம், அது கொடுத்த பார்வை என்றும் என்னோடு இருக்கும். அது போதும் என்கிறார் ஜேக்கப். வாசிப்பைப் பற்றி இதைவிட அழகாக வேறு என்ன சொல்லி விட முடியும்?
