ச.சுப்பாராவ்
வாசிப்பு எனும் போதை தலைக்கு ஏறியவர்கள் எப்படி இருப்பார்கள்? நீங்கள் அதுபோன்ற ஒரு போதைப் பார்ட்டியா என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பது பற்றி பல சுவையான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் Biblioholism – The literary Addiction. டாம் ராப் என்ற பெரும் வாசிப்புப் போதைப் பார்ட்டி எழுதியது.

இந்தப் புத்தகத்தைப் படித்தால் எத்தனை விதமான புத்தகக் காதலர்கள், வெறியர்கள், வாசிப்புத் திலகங்கள், வாசகமணிகள் இருக்கிறார்கள் என்று தெரியும். வாசிப்புப் பழக்கம் மரபணு ரீதியாக வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் மிகவும் லேசாகத் தான் இருக்கின்றன என்றாலும், அது மரபணுரீதியாக வருவது என்று நம்பும்படியாக பலர் மிகக் குட்டியாக இருக்கும் போதே பெரிய வாசகர்களாக இருந்திருக்கிறார்கள் என்றுதான் புத்தகம் ஆரம்பிக்கிறது.
ஜொனாதன் ஸ்விஃப்ட் மூன்று வயது நிரம்புவதற்கு முன்பே பைபிளின் எந்த ஒரு அத்தியாயத்தையும் படித்துக் காட்டுவாராம். ஹென்றி பிராட்ஷா என்பவர் 3-4 வயதாக இருக்கும்போதே சுமார் 500 புத்தகங்கள் உள்ள சொந்த நூலகம் வைத்து வாசித்துக் கொண்டிருந்தாராம். புத்தகங்கள் பலே பாலுவும், பாட்டில் பூதமும் போன்றவை அல்ல. அத்தனையும் செவ்வியல் இலக்கியங்கள். ஃபிரடெரிக் மேயர்ஸ் என்ற அறிஞர் 6 வயதில் லத்தீனில் விர்ஜிலைப் படித்து முடித்துவிட்டார்.
பெரியவர்களும் இதில் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. சார்லஸ் லாம்ப் ‘நான் நடக்கும் போது மட்டும்தான் வாசிக்க மாட்டேன்’ என்றாராம். ஆனால் நாம் எல்லோரும் எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் மெக்காலே, லண்டனின் நெரிசலான சந்து பொந்துகளில் கூட படித்துக் கொண்டே மிக வேகமாக நடந்து போவாராம். ஜான் வெஸ்லி என்பவர் தினமும் 100 மைல் குதிரைச் சவாரி செய்பவர். வரலாறு, தத்துவம், கவிதை என்று விதவிதமாக குதிரை சவாரியிலேயே படித்து முடித்தவர். லாரன்ஸ் ஆஃப் அரேபியா புகழ் லாரன்ஸ் அரேபியாவில் ஒட்டகச் சவாரி செய்யும் போதே அரிஸ்டோஃபேனஸின் படைப்புகளை மூலத்திலேயே படித்து முடித்தார். ஹிட்லர் உமாநாத்தில் ஒரு பாட்டில், சுருளிராஜன் ஒரு கையில் பென்சில், ஒரு கையில் அழிரப்பா், என்பாரே, அது போல், ஜுலியஸ் சீஸர் போர்க்களத்திலும் ஒரு கையில் வாள், மறுகையில் புத்தகம் என்று தான் போரிட்டாராம்.
வாசிப்பதற்கு நேரத்தை ஏற்படுத்திக் கொள்பவன், தனக்கு வசதியாக வாசிப்பை மாற்றிக் கொள்பவன் மட்டுமே நல்ல வெறிபிடித்த வாசகனாகிறான். இப்படித்தான் டார்வின் பெரிய புத்தகங்களை வாசிக்க வசதியாக 2- 3 பாகங்களாகக் கிழித்து வைத்துக் கொள்வாராம். நரம்பியல் துறையின் தந்தையான ஹக்லிங்க் ஜான்சன் புத்தகத்தை வாங்கியதும் இரண்டு சம பாகங்களாக பிரித்து, பேண்ட்டின் இரு பக்கப் பாக்கெட்டுகளிலும் வைத்துக் கொள்வாராம். யாரும் ஆட்டையைப் போட மாட்டார்கள். அப்படியே ஆட்டையைப் போட்டாலும், ஒரு பாதி மிஞ்சும் !
தான் வாங்க ஆசைப்பட்ட புத்தகத்தை வாங்குவதற்கு எதையும் செய்யத் தயாராக இருப்பவனே தீவிர வாசகனாகிறான் என்று அதற்கு பல உதாரணங்கள் தருகிறார் டாம். ஸ்வைன்ஹைம் மற்றும் பன்னார்ட்ஸ் லாக்டான்டியஸ் என்ற பாதிரியார்கள் தான் 1473ல் ரோமில் முதல் கிரேக்க நூலை அச்சில் வெளியிட்டார்கள். இந்த நூலைத் தேடி வாங்குவதற்காக ஸ்பென்சர் பிரபு ரோமில் சுமார் ஓராண்டு காலம் தங்கி பல இடங்களிலும் தேடித் திரிந்து வாங்கினார். அதுவல்ல விஷயம். அந்த ஓராண்டில் அவர் ஒரு முறை கூட வாடிகன் தேவாலயத்திற்கோ, கலோஸியத்திற்கோ போகவில்லை. காலையில் எழுந்ததும் பழைய புத்தகக் கடைகளுக்கு மட்டும்தான் !
புத்தக வாசிப்பு, புத்தகக் காதல் தொடர்பான ஏராளமான சொற்களுக்கு விளக்கம் தரும் அகராதியாக இந்தப் புத்தகம் இருக்கிறது. Bibliophobia வேறு, Bibliomania வேறு. முன்னது புத்தகக் காதல் – அறிவை வளர்த்துக் கொள்வதற்காகப் படிக்க புத்தகம் வாங்குதல். பின்னது புத்தகப் பைத்தியம். புத்தகங்களைச் சேகரிப்பதற்காகவே வாங்குவது. (நீங்கள் காதலரா? பைத்தியமா என்பதைக் கண்டுபிடிக்க சில கேள்விகள் உள்ளன. அதற்கு நேர்மையாக பதிலளித்தால், தெரிந்துவிடும். அதற்குக் கடைசியில் வருவோம்) சேகரிப்பைக் குறிப்பது Collectomania. புத்தககங்கள் சேகரிப்பதோடு நின்றுவிடாது இந்த நோய்.
நம்மிடம் உள்ளது பிறரிடம் இருக்கக் கூடாது என்றும் நினைக்க வைக்கும். கேப்டன் டக்ளஸ் என்பவர் இந்த ரகம். Parts of humour என்ற அபூர்வமான புத்தகத்தைப் பார்த்தார். உடனே கடையில் இருந்த அதன் நூற்றுச் சொச்ச பிரதிகளையும் வாங்கினார். வீட்டுக்கு வந்தார். தனக்கு மூன்று பிரதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் கணப்பில் போட்டுக் குளிர் காய்ந்து விட்டார். இனி அந்தப் புத்தகத்தை யாரும் வாங்க முடியாது. யாருடைய சேகரிப்பிலும் இருக்காது. ஒரு கட்டிங்கைப் போட்டுவிட்டு, நிம்மதியாகத் தூங்கினார்!
இதே போல் Readaholic என்று ஒரு கோஷ்டி. இவர்கள் தாம் படித்த நூலின் உள்ளடக்கம் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஒரு புத்தகத்தை எவ்வளவு சீக்கிரமாகப் படித்து முடித்தார்கள் என்பதைப் பற்றிப் பெருமை பேசுவதற்காக வேகமாகப் படிப்பவர்கள். நண்பர் வீட்டு அலமாரியில் Tom Clancy யின் Executive Order நாவலைப் பார்த்து, “இதா ! இத நா ரெண்டே நாள்ல படிச்சு முடிச்சேன்.” “தி.ஜா – உயிர்த்தேன் வாங்கியிருக்கீங்க போல? நா இத நாலு மணி நேரத்துல படிச்சு முடிச்சேன்” என்பது போல் நான் பல காலமாகச் சொல்லி வருவது டாமிற்கு எப்படியோ தெரிந்திருக்கிறது! இன்னொரு புதிய கோஷ்டி உருவாகியிருக்கிறது. இவர்களுக்கு Bibliowebbies என்று பெயர்.

தேவை இருக்கிறதோ, இல்லையோ, நல்ல புத்தகமோ, இல்லையோ, தினமும் பத்து புத்தகங்களை இணையத்திலிருந்து தரவிறக்கினால்தான் அன்றைய பொழுது நன்றாகப் போனதாக உணரும் கோஷ்டி. Click and Pick the Book என்பது இவர்களது கோஷம். தினமும் பத்து பேரிடமாவது “எங்கிட்ட ஒரு டிபி ஹார்ட் டிஸ்க் நிறைய புக்ஸ் இருக்கு” என்று சொல்லி, இதில் இரண்டு பேருக்கு பென்டிரைவில் இரண்டு புத்தகத்தை பதிந்து கொடுக்கும் புண்ணியவான்கள்! நான் இப்படி தோழர் ச.தமிழ்ச்செல்வனுக்கே ஏகப்பட்ட புத்தகம் காப்பி செய்து கொடுத்த பிப்லியோவெப்பி என்பதைத் தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன்!
இதிலும் சில அப்பிராணிகள் உண்டு. 100 ரூபாய் புத்தகங்கள் மட்டுமே வாங்குவது, நான்கு 200 ரூபாய் புத்தகம் வாங்கி விட்டு, இதற்குப் பதில் எட்டு 100 ரூபாய் புத்தகம் வாங்கலாமே என்று கடையைச் சுற்றிச் சுற்றி வந்து தேடுவது என்று திரிவார்கள். இவர்களுக்கு Money Limit Buyers என்று பெயர்.
வாங்கிய புத்தகங்களைப் பராமரிப்பது, பாதுகாப்பதில் வெறித்தனமாக இருக்கும் புத்தகக் காதலர்கள் – வெறியர்கள் பற்றியும் டாம் நிறையவே எழுதியிருக்கிறார். போப் நான்காம் சிக்டஸ் ‘‘வாடிகன் நூலகத்திலிருந்து எடுத்த நூலை 40 நாட்களுக்குள் திருப்பித் தராதவர்கள் மதத்திலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களோடு யாரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது’’ என்று உத்தரவு போட்டாராம்.
தன் வீட்டு நூலகத்தைப் பார்வையிட வருபவர்களுக்குப் பத்துக் கட்டளைகள் போட்ட ஒரு புண்ணியவான் (டாம் இவரது பெயரைக் குறிப்பிடவில்லை) ஒருவர் இருக்கிறார். நூலகம் என்ற இந்த புனிதத் தலத்திற்குள் செருப்போடு வரக்கூடாது. எழுதுபொருட்களை வாசலில் வைக்கவும். புத்தகங்களைத் தொடும் முன் வாசலில் உள்ள பாத்திரத்தில் உள்ள பன்னீரில் கைகளைக் கழுவிக் கொள்ளவும். பின்னர், காகிதக் கையுறைகளை மாட்டிக் கொள்ளவும். புத்தகங்களை ஒற்றைக்கையால் இழுத்து எடுக்கக்கூடாது. மிங் வம்ச பீங்கான் ஜாடியை எடுக்கும் கவனத்தோடு எடுக்க வேண்டும்.
புத்தகங்களைக் கையில் வைத்தபடி, இருமல், தும்மல், கனைத்தல் கூடாது. புத்தகத்தில் உங்களுக்கு வேண்டிய பக்கத்தை நுனியை மடக்கி அடையாளம் வைத்தால், உடனடியாக பின்புறம் உள்ள கிலோடினுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள். புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க ஒவ்வொரு அலமாரித் தட்டின் ஓரத்திலும் வைக்கப்பட்டிருக்கும் காகிதக் கத்தியைப் பயன்படுத்தவும். புத்தகங்களின் பக்கங்களை எச்சில் தொட்டுத் திருப்புபவர்கள் கழுத்து உடனடியாக நெரிக்கப்படும். இப்படி விதவிதமான புத்தகக் காதலர்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகிறது டாமின் புத்தகம். நீங்கள் புத்தகக் காதலரா? பைத்தியமா? என்பதற்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தரவும் என்று மிகச் சுவையான கேள்விகளை அவர் தருகிறார். அவை இங்கு அப்படியே–
நண்பரோடு புத்தகக் கடைக்குப் போகும் போது, நண்பரை விட அதிக எண்ணிக்கையில் புத்தகம் வாங்குகிறீர்களா? காலை எழும் போது, நேற்று எத்தனை புத்தகம் வாங்கினோம், எவ்வளவு ரூபாய்க்கு என்பது துல்லியமாகத் தெரியவில்லையா? புது புத்தகத்தின் வாசனையை நுகர்பவரா? ஒரே புத்தகத்தை நினைவின்றி, இரு முறை வாங்கியதுண்டா? அலுவலகத்திலிருந்து நேராக புத்தகக் கடைக்குப் போய்விட்டு, மிகவும் தாமதமாக வீடு திரும்பி, புத்தகக் கடைக்குப் போனதாகச் சொல்லாமல், வேறு இடத்திற்குப் போனதாக மனைவியிடம், அம்மாவிடம் பொய் சொல்பவரா?
புத்தகங்களைப் பரிசளிப்பவரா? சொந்த நூலகம் வைத்திருக்கிறீர்களா? புத்தகம் விற்கிறார்கள் என்பதற்காகப் போய் புத்தகம் வாங்குபவரா? அட்டை அழகாக இருக்கிறது என்பதற்காக புத்தகம் வாங்கியதுண்டா? வேலை நேரத்தில் புத்தகம் படிப்பது, புரட்டுவது ஆகிய குற்றங்களுக்காக மேலதிகாரியிடம் திட்டு வாங்கியதுண்டா? உங்கள் மனைவி உங்களது புத்தகம் வாங்கும் பழக்கம் – வாசிப்புப் பழக்கம் பற்றி உங்களிடம் டிஸ்கஸ் செய்திருக்கிறாரா? (இந்தப் பழக்கங்கள் பற்றி உங்கள் மனைவி திட்டியதுண்டா? என்பதைத்தான் டாம் இப்படி இடக்கரடக்கலாகக் கேட்கிறார். என்ன இருந்தாலும் வெள்ளைக்காரரல்லவா?)
கையில் புத்தகத்தோடு, டிவியை மியூட் செய்து கிரிக்கெட் மாட்ச் பார்ப்பவரா? விளம்பர இடைவேளையில் படிக்க மடியில் ஒரு புத்தகத்தோடு டிவி பார்ப்பவரா? முடி திருத்தகத்தில் காத்திருக்க நேரும் போது, ஐயையோ, கையோடு புத்தகம் எடுத்து வராது வந்து விட்டோமே என்று பதறுபவரா? திடீரென்று உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட்டு, உடனடியாக, அத்துறை சார்ந்த புத்தகங்களாக வாங்கிக் குவிப்பவரா? எத்தனை புத்தகம் வாங்கினீர்கள் என்பது பற்றி வீட்டில் பொய்க்கணக்கு சொல்பவரா? வாங்கிய புத்தகங்களை இணையருக்குத் தெரியாமல் சத்தமின்றி உள்ளே எடுத்துச் சென்று வைக்க புதுப் புது தந்திரங்களை யோசித்து நடைமுறைப்படுத்துபவரா?
வீட்டிற்கு புதிதாக வரும் அதிக பரிச்சயம் இல்லாத நபர், வந்ததும் உங்கள் புத்தக அலமாரி பற்றிப் பேசுகிறாரா? யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு துறை பற்றிய முக்கியமான பத்து பத்தகங்களின் பட்டியலைக் கேட்டால், உங்களால் சட்டென்று பட்டியலை யோசிக்காது கூற முடியுமா? எப்போதும் அடுத்ததாகப் படிப்பதற்காக குறைந்த பட்சம் ஆறு புத்தகங்கள் உங்கள் மேஜையில் இருக்கின்றனவா? வாடிக்கையாளர் கேட்கும் புத்தகத்தை புத்தகக் கடை ஊழியர் தேடிக் கொண்டிருக்கும் போது, “அது மூணாவது அலமாரில கீழ்தட்டுல இருக்குங்க’’ என்று நீங்கள் எடுத்துத் தருவீர்களா?
இவற்றிற்கு நான்கிற்கு மேல் ‘ஆம்’ என்றால் நீங்கள் புத்தக போதைக்கு அடிமையாகும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லலாம். எட்டுக்கு மேல் ‘ஆம்’ என்றால், உங்களை இந்த போதையிலிருந்து மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது. பன்னிரண்டுக்கு மேல் ‘ஆம்’ என்றால் நீயும் என் தோழனே!
அதாவது முற்றிய புத்தகப் பைத்தியம்!
ஆர்வமுள்ளோர் வாசிக்க – ோர் வாசிக்க – Biblioholism – The Literary Addiction by Tom Raabe.