நேர்காணல்:
கா. உதயசங்கர்
சந்திப்பு : ச.தமிழ்ச்செல்வன்
மணிமாறன்
2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய பால புரஷ்கார் விருதினைப் பெற்றுள்ள எழுத்தாளர் கா.உதயசங்கர் அவர்களை புத்தகம் பேசுது இதழுக்காக நேர்காணல் செய்தோம். 100க்கு மேற்பட்ட சிறுகதைகளும் குறுநாவல்களும் 120 க்கு மேற்பட்ட சிறார் நூல்களூம் சில கட்டுரை நூல்களும் எழுதியுள்ள உதயசங்கர் இரு திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னோடிப் படைப்பாளியாகவும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி வருகிறார்.தற்போதும் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

உங்கள் இலக்கியப் பயணத்தின் துவக்க கட்டம் பற்றிக் கூறுங்களேன்.எப்படி /எப்போது எழுத வந்தீர்கள்?மற்றும் உங்கள் குடும்பப்பின்னணி, கோவில்பட்டிக்காலம்… பற்றி…
என்னுடைய குடும்பம் மிக எளிய குடும்பம். அப்பா மில் தொழிலாளியாக இருந்தார். அம்மா அப்போதைய மூன்றாவது பாரம் படித்தவராக இருந்ததால் புத்தக வாசிப்பு அவரிடம் இருந்தது. அம்மாவின் வாசிப்பின் வழி தான் நான் எழுத்தாளனாவதற்கான விதை ஊன்றப்பட்டது என்று இப்போது நினைக்கிறேன். 1970-களில் பத்திரிகைகளில் வந்த தொடர்கதைகளை சேர்த்துப் புத்தகமாக்கிப் படிக்கின்ற பழக்கம் பொதுவாக பெண்களிடம் இருந்தது. அப்படித்தான் அம்மா புத்தகங்களை பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கிப் படித்தார். அவரே குமுதம், கல்கண்டு வாசகராகவும் இருந்தார்.
வாராவாரம் அம்மாவுக்குக் குமுதம் கல்கண்டு வாங்கிக் கொண்டு நடந்து வரும்போது அந்தப் பத்திரிகைகளைப் பிரித்து படம் பார்க்கிற வழக்கமும் வாசிக்கிற பழக்கமும் ஏற்பட்டது. ஆறாவது வகுப்பு படிக்கும் போது உயர்நிலைப் பள்ளியில் நூலக வகுப்பு இருந்தது. அந்த வகுப்பு நேரங்களில் ஆசிரியர் திரு அசோக் அவர்கள் உண்மையாகவே நூலகத்திற்கு அழைத்துச் சென்று, நாங்கள் புத்தகம் எடுத்துப் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இந்த வாசிப்பின் விளைவாக பள்ளிக்கூடத்தில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வமும் உருவானது.
எனக்கு வழிகாட்ட யாரும் இல்லையென்றாலும் நானே முட்டி மோதி ஏதாவது ஒன்றைத் தயார் செய்து கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்வேன். என்னுடைய இயல்பான தயக்கம் காரணமாக பேச்சுப்போட்டியில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசாகக் கிடைத்த பாரதியார் கவிதைகளை நான் வைத்திருந்த ஒரு சிறிய சாதிக்காய் பலகைப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தேன். அந்தப் பெட்டி தான் என்னுடைய புதையல் பெட்டி. சேமிப்புஅறை. தங்கச்சுரங்கம். ரகசிய அறையாக இருந்தது.
பின்பு எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த பள்ளித் தோழனான நாறும்பூநாதனைச் சந்தித்தது மிகப்பெரிய திருப்புமுனை. அவன் புத்தக வாசிப்பாளனாக இருந்தான். அவனிருந்த தெருவில் பொது நூலகமும் இருந்ததென்பதால் அடிக்கடி பொது நூலகத்திற்குச் சென்று குழந்தைகள் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாசிக்கின்ற பழக்கம் உருவானது. நான் புத்தகங்களை வாசித்தாலும் விளையாட்டிலும் தீவிரமாக ஈடுபடுவேன்.
தெருக்களில் விளையாடும் விளையாட்டுகள் எந்தக் கணத்தில் உருவாகும், எப்படி அது தொடர்ந்து ஊர் முழுவதும் பரவும் என்று இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. திடீரென்று பம்பரக் குத்து விளையாட்டு தொடங்கி விடும்.
ஊரெல்லாம் எல்லா தெருக்களிலும் பையன்கள் பம்பரக் குத்து விளையாடுவார்கள். திடிரென்று எல்லாத் தெரு பையன்களும் கோலிக் குண்டுகளை டவுசர் பையில் போட்டுக் குலுக்கிக் கொண்டே அலைவார்கள். திடீரென்று அதுவே புளியமுத்து செதுக்கும் விளையாட்டாக மாறும். ஓட்டுச்சில்லுகளை அடுக்கி விளையாடுகிற விளையாட்டாக மாறும். ஒரு மாலையில் வளைந்த விறகுக்கட்டைகளுடன் பையன்கள் தோன்றுவார்கள். ஹாக்கி விளையாட்டு புழுதி பறக்கும்.
இரவு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நாடகம் நடக்கும். எம்.ஜி.ஆர், நம்பியார் அல்லது எம்.ஜி.ஆர் சிவாஜி சண்டையாக உருவெடுக்கும். சினிமா வசனம் பொறி பறக்கும். யார் நம்மைக் கவனிக்கிறார்கள், யார் நம்மைக் கவனிக்கவில்லை என்ற எந்த உணர்வும் இன்றி 100% தன்னை வெளிப்படுத்திய பருவமாக பாலிய காலம் இருந்தது.ஆனாலும் புத்தக வாசிப்பும் கதை சொல்லுதலும் எனக்கு மிகவும் பிடித்தமானதாக உருவானதற்கு என்னுடைய அன்புநண்பன் எழுத்தாளர் நாறும்பூநாதன் தான் முதன்மையான காரணம்.
அப்படித்தான் அவனுடன் உரையாடிய பொழுதுகளில் அந்தந்தப் பருவத்துப் பையன்களுக்குரிய போட்டியுணர்வுடன் அவர் பேசுவதற்கு மாற்றான கருத்துகளைச் சொல்வது என்று நான் பேசிக் கொண்டிருப்பேன்.
அவர்தான் பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக்கு நாங்கள் சென்றபோது ‘மொட்டுகள்’ என்ற கையெழுத்துப்பத்திரிக்கை ஒன்றை தொடங்கி நடத்தினார். அந்த பத்திரிகையில் தான் என்னுடைய முதல் கவிதை பிரசுரமானது. ஏராளமான கவிதைகளை என்னுடைய நோட்டுகளில் கிறுக்கி வைத்திருந்தாலும் ஒரு பத்திரிக்கை என்ற அளவில் பிரசுரமானது அந்த கவிதை தான். அப்போது யாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டேன். அந்தப் பத்திரிகை சுற்றுக்கு வந்த போதுதான் கோவில்பட்டியில் வேறு பல எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்..
பல்வேறு சிந்தனைகள் கொண்ட அவர்களைச் சந்தித்து உரையாடினேன். பிறகு அப்போது கோவில்பட்டியில் மிக வலுவாக இருந்த இடதுசாரி இயக்கத்தின் இளம் தோழர்கள் எங்களிடம் உரையாடினார்கள். நாங்கள் இந்த இரண்டு குழுக்களோடும் உரையாடிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தோம். அதற்கு சிறிது காலத்துக்குப்பின் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் மிலிட்டரியிலிருந்து வந்திருந்தார்.
எங்களுக்கு அவருடைய வீடு இன்னொரு வீடாக மாறியது இதற்கிடையில் 1978 ஆம் ஆண்டு ‘மேற்குவங்கத்தின் மூன்றாவது அரங்கு’ என்ற நாடக அரங்கினை நடத்திக் கொண்டிருந்த பாதல் சர்க்கார் தமிழகத்தில் உள்ள ஒரு 18 எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் நாடகப் பயிற்சி அளித்துச் சென்றார். அதன் பிரதிபலிப்பாக தமிழகத்தில் மதுரையில் மு.ராமசாமி, மயிலத்தில் அஸ்வகோஷ், சென்னையில் ஞாநி போன்றவர்கள் நிஜ நாடக குழுக்கள் உருவாக்கினார்கள்.
அந்தப்பயிற்சியின் விளைவாக கோவில்பட்டியில் தர்ஷனா என்ற பெயரில் ஒரு நாடகக் குழு உருவானது. அதில் எழுத்தாளர்கள் கௌரிஷங்கர், வித்யாஷங்கர், இன்றைய திரைக்கலைஞர் சார்லி, கவிஞர்.தேவதச்சன், மாரீஸ், நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, திடவை பொன்னுச்சாமி, நான் என்று எல்லோரும் இணைந்து நடித்த அந்த புதிய நாடகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன.
இந்திய-சோவியத் நட்புறவுக் கழகத்தின் வழியாக ஏராளமான கிராமங்களுக்கும் நகர்ப்புறத்தில் தொழிற்சங்க அரங்குகளிலும் நாங்கள் நாடகங்களை அரங்கேற்றினோம்.
அந்தக் குழுவில் இருந்த முக்கிய நடிகர்கள் வேலை கிடைத்து ஊரைவிட்டு வெளியேறியதாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கோவில்பட்டி கிளை எழுத்தாளர் தமிழ்ச்செல்வனை செயலாளராக கொண்டு தொடங்கப்பட்டதாலும் நாங்கள் சிருஷ்டி என்ற நாடகக் குழுவை உருவாக்கினோம். இதற்கு மத்தியில் கோவில்பட்டியில் வாசிப்பு ஒரு பேரியக்கமாக நடந்து கொண்டிருந்தது.
யார் யாரிடமிருந்தோ எங்கெங்கிருந்தோ நூல்களை வாங்கி வாசித்தோம். நூலகங்களில் திருடி வாசித்தோம். வாசிப்பதற்காக வெளியூர்களில் இருக்கிற எழுத்தாளர்களை, நண்பர்களைச் சென்று சந்தித்தோம். இப்படி வாசிப்பு என்பது ஒரு மூச்சாக மாறியது. தமிழில் வெளிவந்த உலக இலக்கியங்கள், இந்திய இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்கள், அரசியல், தத்துவம், என்று எப்போதும் பரபரப்பாய் இருந்தோம். அந்த உரையாடலும் விவாதமும் வாசிப்பும்தான் இன்று வரை மனதில் அப்படியே கல்வெட்டாக பதிந்திருக்கிறது என்று சொல்லலாம்..
என்னுடைய சில கவிதைகள் பத்திரிகைகளில் வெளியானதென்றாலும் நான் சிறுகதை எழுத வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைக்கவில்லை. தொடர்ச்சியான வாசிப்பு, சிறுகதை, எழுத வேண்டும் என்ற உந்துதலை கொடுத்தது. திடீரென்று தான் நான் ஒரு சிறுகதையை எழுதி செம்மலர் பத்திரிக்கைக்கு அனுப்பினேன். அதற்கு முன்பு சிறுகதை என்று ஒரு உரைநடையை கல்லூரி ஆண்டு மலரில் எழுதியிருந்தேன்.
முதன் முதலில் 1980ல் மார்ச் மாதம் செம்மலரில் வெளியானது. அந்தக் கதையை வாசித்த தோழர்கள் கொடுத்த உற்சாகத்தினால் தொடர்ந்து சிறுகதைகளை நான் எழுதினேன்.
1983 ஆம் ஆண்டு செம்மலர் கரிசல் மலரை வெளியிட்டது அந்த கரிசல் மலரில் கோவில்பட்டி எழுத்தாளர்கள் எட்டு பேரின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் வெளியான ‘பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது’ கதை பரவலான பாராட்டுகளைப் பெற்றது, இப்படித்தான் என்னுடைய எழுத்துப் பயணம் தொடங்கியது அதில் என்னைக் கை பிடித்து எழுத வைத்த நாறும்பூ நாதனுக்கும் அதேபோல தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் கோவில்பட்டி தோழர்களுக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு.

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
1979 இல் நான் கி.ராஜநாராயணன் அவர்களை இடைசெவல் சென்று சந்தித்தேன். அதற்குக் காரணமானவர் என்னுடைய பள்ளித்தோழன் ஓவியர் மாரீஸ். அவருடைய சிறு வயதிலேயே அதாவது எட்டாவது வகுப்பு படிக்கும் போதே அணில் பத்திரிக்கையின் முகவராக இருந்தார் பாரம்பரியமான ஓவியக் குடும்பமான அவருடைய குடும்பத்தினர் அனைவருமே ஏதாவதொரு வகையில் கலைத்துறையில் இருந்தார்கள். அவருடைய அண்ணன் கோவில்பட்டியில் புகழ்பெற்ற சாரதா ஸ்டுடியோவை நடத்திக் கொண்டிருந்தார்.
ஆதலால் எழுத்தாளர்களோடு மாரீஸுக்கு மிகச் சுலபமாக தொடர்பு ஏற்பட்டது. பின்னாட்களில் அவர் கோவில்பட்டியின் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார் .
கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வரும்போதெல்லாம் மாரீஸைச் சந்திப்பது வழக்கம். அவர் என்னை கி.ரா.வை பார்ப்பதற்காக இடைசெவல் அழைத்துச் சென்றார். முதன்முறையாக கி.ரா.வை பார்த்தவுடனேயே ஒரு பெருமதிப்பும் நெருக்கமான உணர்வும் ஏற்பட்டது. ஏற்கனவே அவருடைய கதைகளை வாசித்திருந்ததால் அவருடன் இயல்பாக உரையாடவும் முடிந்தது.
அதன்பிறகு அவர் எப்போதெல்லாம் கோவில்பட்டி வருகிறாரோ அப்போதெல்லாம் நாங்கள் அவரை சந்தித்து உரையாடினோம். எங்களுடைய நாடகக் குழுவான தர்ஷனாவின் முதல் அரங்கேற்றம் இடை செவலில் தான் நடந்தது.கல்லூரி முடித்தபோது அடிக்கடி இடைசெவல் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது கி.ரா. கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதியைத் தொகுத்துக் கொண்டிருந்தார். கரிசல் வட்டாரச் சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து அதற்கான பொருளையும் எழுதுகிற ஒரு மிகப்பெரிய பணியை ஒற்றை ஆளாய் செய்து கொண்டிருந்தார்.
பேச்சுவாக்கில் ‘‘நீங்களும் வந்து அகர வரிசைப்படுத்தி கொடுக்கலாமே’’ என்று சொல்ல, தினமும் காலை அவருடைய வீட்டிற்குச் சென்று மாலை வரை அகர வரிசைப்படுத்துகிற வேலையை நான், மாரீஸ், முருகன் மூன்று பேரும் செய்து கொடுத்தோம். அப்போது அவருடன் உரையாடிய விஷயங்கள் இப்போது துல்லியமாக நினைவில் இல்லை என்றாலும் அவையெல்லாம் என்னுடைய மனதின் ஆழத்தில் ஒரு எழுத்தாளன் ஆக வேண்டும் என்பதற்கான அடியுரமாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன்.
என்னுடைய சிறுகதைத்தொகுப்புகளை வாசித்து விட்டு கரிசல் மண்ணுக்கும் தீரவாசத்துக்கும் இடையிலான பாலமாக உங்களுடைய எழுத்து இருக்கிறது. பின்னால் யாராவது வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். முன்னொரு காலத்தில் நூலை வாசித்து விட்டு இப்படி ஒரு நூல் எந்த ஊருக்கு வாய்க்கும். உலக எழுத்தாளர்களையெல்லாம் கோவில்பட்டி வீதிகளில் நடமாட வைத்து விட்டீர்கள் என்று பெரு மகிழ்வுடன் பாராட்டினார்.
என் திருமணத்தை ஒரு எழுத்தாளரின் தலைமையில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்த போது அவரையே தோழர்கள் முன்மொழிந்தனர்.புதுச்சேரி சென்ற பிறகு அடிக்கடி அவரைப் பார்க்க முடியவில்லையென்றாலும் எப்போது சந்தித்தாலும் பழைய நினைவுகளோடும் நெருக்கத்தோடும் அவர் பேசுவது வழக்கம். என்னுடைய கதைகளையும் நூல்களையும் அவர் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் தொலைக்காட்சி பேட்டிகளிலும் பத்திரிகை நேர்காணலிலும் என் பெயரை மறக்காமல் குறிப்பிடுவதை கண்டு நான் ஆனந்தம் அடைந்திருக்கிறேன். கோவில்பட்டி என்ற சிறு நகரத்தில் இத்தனை எழுத்தாளர்கள் உருவானதற்கும் ஏழு சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றதற்கும் மிகப்பெரும் பின்னணியாக கி. ரா. வும் கு. அழகிரி சாமியும் இருந்தார்கள்.
100 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள நீங்கள் அதே பாதையில் செல்லாமல் அல்லது அடுத்த கட்டமாக நாவல் எழுத்துக்குச் செல்லாமல் சிறார் எழுத்தின் பக்கம் திரும்பியது எப்படி?எந்தக்காற்று உங்களை இத்திசையில் உந்தித்தள்ளியது?
90களில் நான் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதத் தொடங்கினேன் அந்தச் சமயத்தில் அதாவது அழ. வள்ளியப்பாவின் மறைவுக்குப் பிறகு குழந்தை இலக்கியம் பெரிதாக பேசப்படவில்லை. அத்துடன் 90களில் உருவான ஆங்கிலக்கல்விமோகம் தமிழ்க்குழந்தை இலக்கியத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அழ.வள்ளியப்பாவின் காலத்தில் ஒரே ஆண்டில் இருநூறு புத்தகங்கள் வெளியாகின. ஆனால் அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அந்தக் காலகட்டத்தில் சமகால குழந்தைகளுக்கேற்ற படைப்புகளை எழுத வேண்டும் என்று நினைத்து அவ்வப்போது பாடல்களை எழுதிக் கொண்டிருந்தேன். அதுதான் என்னுடைய குழந்தை இலக்கியப் பயணத்தின் துவக்கப் புள்ளி என்று சொல்லலாம். அதன் பிறகு பச்சை நிழல் என்ற கதை தீக்கதிர் வண்ணக் கதிரிலும் ‘ஆறாம் திணை’ இணைய இதழிலும் வெளியானது. பிறகு குழந்தைகளுக்கான கதைகளையும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். அவை வண்ணக் கதிர், சிறுவர் மணி போன்ற பத்திரிகைகளில் வெளியாகின.
2012 ஆம் ஆண்டு தமிழ் இந்து மாயா பஜார் ஆசிரியராக இருந்த ஆதிவள்ளியப்பன் மாயா பஜாருக்கு கதைகள் அனுப்பும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ச்சியாக கதைகளை எழுதத் தொடங்கினேன். புதிய பாணியிலான அந்தக் கதைகளுக்கு கிடைத்த வரவேற்பு அந்த திசையில் என்னை மேலும் மேலும் பயணிக்க வைத்தது.
என்னுடைய முதல் பாடல் தொகுப்பு கேளு பாப்பா கேளு 2008 ஆம் ஆண்டு கவிஞர் ஸ்ரீ ரசாவின் காலம் பதிப்பக வெளியீடாக தலையாட்டி பொம்மை என்ற நூலாக வெளிவந்தது. 2014 ஆம் ஆண்டு பச்சை நிழல் என்ற கதைத்தொகுப்பு நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாக வெளியானது. அந்த நூல் எஸ் ஆர் எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் வழங்கும் அழ.வள்ளியப்பா விருது பெற்றது.
2016 -ஆம் ஆண்டு தம்பி மணிகண்டன் நூல்வனம் பதிப்பகம் தொடங்கினான். அதன் வழியாக மாயக்கண்ணாடி என்ற நூல் அவருடைய மிகச்சிறந்த வடிவமைப்பு காரணமாக பெரிதும் பேசப்பட்ட நூலாக மாறியது. அந்த நூலுக்கு.ஆனந்த விகடன் சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருதை அளித்தது. அதன் பிறகு நான் திரும்பிப் பார்க்கவில்லை. தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் பயணித்து இன்று வரை சொந்தப் படைப்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள் நூற்றியிருபது நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன்.
அரசியல் கட்டுரைகளும் எழுதியிருக்கிறீர்கள்…
பண்பாட்டு அரசியல் நூல்களாக, சாதிகளின் உடலரசியல், வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா, காந்தியத்தை விழுங்கிய இந்துத்துவா போன்ற நூல்களை எழுதினேன். 1990 – களில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை ஆசிரியராகக் கொண்டு நடத்திய புதுவிசை இதழில் சேலம் அசோகன் சுந்தர், சருக்கை கோபால் குரு என்கிற இரு பெரும் ஆய்வாளர்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்து இரண்டு கட்டுரைகளமொழிபெயர்த்திருந்தனர்.அவற்றை வாசித்த போது அம்பேத்கர் நூல்களையும் பெரியாரின் நூல்களையும் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, டி.என்.ஜா, ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவம், முத்துமோகன், ஆ.இரா. வெங்கடாசலபதி, மணிக் குமார் போன்றவர்களின் நூல்களை தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து எனக்குக் கிடைத்த சிறு பொறிகளை பண்பாட்டு அரசியல் கட்டுரைகளாக எழுதினேன். சாதிகளின் உடலரசியல் பெரிதும் பேசப்பட்ட நூலாக அமைந்தது. இன்றைக்கும் நாம் களமாட வேண்டிய மிக முக்கியமான பகுதியாக பண்பாட்டு அரசியல் இருக்கிறது.
மொழிபெயர்க்கிற அளவுக்கு மலையாளம் கற்றது எப்படி?
கோவில்பட்டியில் வாசிப்பில் வெறி கொண்டு திரிந்த நாட்களில் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்துக் கொண்டே இருந்தேன். நேஷனல் புக் ட்ரஸ்டின் மலையாள மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்த போது மலையாள இலக்கியத்தின் மீது தீராத காதல் உருவாகிவிட்டது. குறிப்பாக பஷீரின்’ இளம்பருத்து தோழியும் ’பாத்துமாவின் ஆடு’ (மொழிபெயர்ப்பு-எஸ் விஜயம்) என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து விட்டன. எப்படியாவது மலையாளத்தைக் கற்றுக் கொண்டு அந்த நூல்களை நேரடியாகவே படித்து விட வேண்டும் என்ற எண்ணம் அப்போதே தலைதூக்கியது.
1986 ஆம் ஆண்டு ரயில்வேயில் உதவி நிலைய அதிகாரியாக வேலை கிடைத்து திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள வேளானந்தலில் பணியிலமர்ந்த போது அங்கே அருகில் இருந்த தண்டரை ஸ்டேஷனில் தோழர் டி.என்.வெங்கடேஸ்வரன் பணியிலிருந்தார்.
அவர் தான் எனக்கு மலையாள அட்சரங்களை சொல்லிக் கொடுத்தார். டி.என்.வி. மலையாளமும் தமிழும் அறிந்த தோழராக இருந்ததினால் மிகச் சுலபமாக அவரிடம் கற்றுக் கொள்ள முடிந்தது.
அப்போதே இரண்டு மூன்று சிறுகதைகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன். அவை பத்திரிகைகளில் பிரசுரமும் ஆனது. பிறகு நெய்வேலியில் இருந்த மூழிக்குளம் ஆர்.சசிதரன் தந்த ஊக்கத்தினால் தொடர்ந்து மலையாளத்திலிருந்து நூல்களை மொழிபெயர்த்தேன். முதன்முதலில் பஷீரின் சப்தங்களை மொழிபெயர்த்தேன். கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.
பெரியவர்களுக்கான நூல்களாக ’கண்ணாடி பார்க்கும் வரையிலும்’ ’கிரேசி கதைகள்’ ‘மாதவிக் குட்டி கதைகள்’எம்.டி. வாசுதேவன் நாயரின் தயா, இ.எம். எஸ். நம்பூதிரிபாடின் நினைவஞ்சலி கட்டுரை தொகுப்பு என்று மலையாளத்திலிருந்தும், ஆங்கிலத்திலிருந்து மண்டோவின் கதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு பணி மிக கடுமையானதாக இருந்தாலும் அதை அவ்வப்போது இளைப்பாறிக் கொள்ளும் நிழல் தங்கலாகப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
முன்னொரு காலத்திலே …என்று உங்கள் கோவில்பட்டி வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதினீர்கள் அல்லவா?.
ஆம்.கோவில்பட்டியில் எனக்குக் கிடைத்த நண்பர்கள்தான் என்னை எழுத்தாளர் ஆக்கினார்கள். அங்கே அப்படித் தீவிரமான இலக்கிய ஈடுபாடும் கலைச் செயல்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன. தமிழகத்தில் புதிய புதிய கலைச்செயல்பாடுகளை முன்னெடுக்க நண்பர் மாரீஸ் இருந்தார். அந்தக் காலத்திலேயே வெளியூரிலிருந்து எந்த எழுத்தாளராவது ஊருக்கு வந்தால் எல்லோர் வீடுகளுக்கும் சென்று தகவல் சொல்லும் தகவலாளியாகவும் கூட்டங்களை ஒருங்கிணைப்பவராகவும் அவருடைய வீட்டிலும் ஸ்டுடியோவிலும் நண்பர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்து உணவளித்து இலக்கியத்தை வளர்த்தவராக இருந்தார்.
1983 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் ஓவியர் பாப்லோ பிகாசோ வின் நூற்றாண்டு ஓவியக் கண்காட்சியை முன்னின்று நடத்தினார்.
நான் அறிந்த வரையில் சென்னையில் கூட அப்படி ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து கார்ட்டூன் கண்காட்சியை நடத்தினார். அதன் பிறகு உலக சமாதான கண்காட்சி, யுத்த எதிர்ப்பு கண்காட்சி, என்று கண்காட்சி என்பதையே அரசியலாயுதமாக மாற்றியவர் மாரீஸ் என்று சொல்லலாம். அவர் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவையாக இருந்தன. புத்தக வடிவமைப்பு கலைஞராக அவர் செய்த பங்களிப்பு ஆயிரம் புத்தகங்களுக்கு மேலிருக்கும். எந்த புதிய விஷயமாக இருந்தாலும் அதில் ஆர்வத்துடனும் தீவிரத்துடனும் கற்றுத் தேர்ந்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்துகிற வல்லமை அவருக்கு இருந்தது. புகைப்படங்கள் நிரம்பிய கவிதைத் தொகுப்பும் ஓவியங்கள் நிறைந்த கவிதைத் தொகுப்பும் அவருடைய வடிவமைப்பில் வெளிவந்து புகழ் பெற்றன. அதேபோல விதவிதமான வடிவமைப்புகளில் புத்தகங்களைக் கொண்டு வருவார்.
கோவில்பட்டியில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளில் எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லோரையும் ஒருங்கிணைக்கிற மையப் புள்ளியாக மாரீஸ் இருந்தார்.
அதே போல எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் வீடாக இருந்த முத்துச்சிப்பி இல்லம் இரண்டாவது தாய் வீடாக எழுத்தாளர்களுக்குத் திகழ்ந்தது. எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கி வருவதற்கான எல்லா சுதந்திரமும் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருந்தது. அங்கேதான் புத்தகவாசிப்பு, அரசியல் தெளிவு, இலக்கிய உரையாடல்கள், தத்துவவிவாதம், நாடக ஒத்திகை என்று என்னைச் செதுக்கிக் கொண்ட இடமாக முத்துச்சிப்பி இருந்தது.
அத்துடன் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி என்னுடைய பால்ய கால நண்பர்களான எழுத்தாளர் நாறும்பூநாதன், எழுத்தாளர் சாரதி, அகாலத்தில் மறைந்து போன முத்துச்சாமி இவர்களுடைய நட்பில்லையென்றால் என்றால் நான் இப்படி இயங்கி ஆகி இருக்க மாட்டேன்.
அழ.வள்ளியப்பா காலம் இப்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக நினைக்கிறீர்களா?
அழ.வள்ளியப்பாவின் காலத்தில் இருந்ததைப்போன்ற எழுச்சி உருவாகிவிட்டது என்று சொல்ல முடியாது.
ஏனெனில் அழ. வள்ளியப்பாவின் காலத்தில் 300 சிறார் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்துடன் 50 சிறுவர் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சிறார் இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சி உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். இதுவரை பேசாத பொருட்களில் பேசுகிற படைப்புகள் உருவாகி இருக்கின்றன. ஆயிஷா நடராஜனின் ’ஆயிஷா’ இதற்கு ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்தது. அதேபோல யூமாவாசுகியின் மொழிபெயர்ப்பு நூல்களும் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
யெஸ். பாலபாரதியின் ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ கொ.மா.கோ. இளங்கோவின் ’சஞ்சீவி மாமா’ விஷ்ணுபுரம் சரவணனின் ’ நீலப்பூ’ ’விழியனின் ’மலைப்பூ’ சரிதா ஜோவின் மந்திரக்கிலுகிலுப்பை, ஹேமலதாவின் ஹம்போல்ட், பஞ்சுமிட்டாய் பிரபுவின் ஒலாடா, சிந்தனின் ‘பல்வாங்கர் பல்லு,’ நாரயணிசுப்ரமணியனின் ‘ஆழ்கடலின் அதிசயங்கள்,’ திவ்யாபிரபுவின் ரோக்கியா பேகத்தின் சுல்தானாவின் கனவு, சாலைசெல்வம் மொழிபெயர்ப்பில் வெளியான ‘இந்த மௌனத்தை யாரேனும் தகர்த்திருந்தால்’, ஆதி வள்ளியப்பனின் ‘சாலிம் அலி’, சுகுமாரனின் பெரியார், நக்கீரனின் பசுமைப்பள்ளி,
ஞா.கலையரசியின் நீலமலை பயணம், நா.பெரியசாமியின் ‘கடைசிபெஞ்ச்’, கமலாலயனின் ‘ஸ்டீபன் ஹாக்கின்ஸ்’ போன்ற புதிய பார்வையிலான படைப்புகள் உருவாகியிருக்கின்றன.
சிறார்களின் பள்ளியனுபவங்கள் சார்ந்தும், குழந்தைகள் உளவியல்சார்ந்தும் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பதின்பருவத்துக் குழந்தைகளுக்கான இளையோர் நாவல்கள் தனி வகைமையாக வெளியாகியிருக்கின்றன.
நவீன தமிழ்ச் சிறார் இலக்கியம், சூழலியம், இயற்கையியல், வரலாற்றியல் பெண்ணியம், சாதியம் குறித்தான கருப்பொருட்களை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தவும் உரையாடவும் விவாதிக்கவும் செய்கின்றன.ஆனால் இவை போதுமானதில்லை. இன்னமும் நிறைய வகைமைகளில் நூல்கள் உருவாக வேண்டும். குறிப்பாக பாடல்கள், கட்டுரை, கதைப்பாடல், நாடகம், பயண இலக்கியம், கல்வி இலக்கியம், இளையோர் கவிதைத் துப்பறியும் இலக்கியம், சாகசப் புனைவுகள் என்று தேவையிருக்கிறது.
எனவே செல்ல வேண்டிய தூரம் அதிகம்; ஆனால் சரியான திசைவழியில் தமிழ் சிறாரிலக்கியம் சென்று கொண்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
நவீன சிறார் எழுத்தாளர்கள் வழக்கமான கதை சொல்லும் முறையில் இருந்து மாறுபடுகிறார்கள். ‘ஒரே ஒரு ஊரிலே’ என்று சொல்கிற வழக்கமான முறையைத் தவிர்த்து தமிழ்ச் சிறுகதைகளின் பாணியில் கதையைத் தொடங்குகிறார்கள். அத்துடன் இதுவரை கவனிக்கப்படாத, கவனம் பெறாத, கருப்பொருட்களை எழுதுகிறார்கள்.
அதிகாரத்திற்கு எதிரான பகடியை எழுதுகிறார்கள். சாதியம் குறித்த உரையாடலை எழுதுகிறார்கள். துப்புரவுத் தொழிலின் அவலத்தை எழுதுகிறார்கள். பள்ளியில் உள்ள கழிவறைப் பிரச்சனையை எழுதுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலை எழுதுகிறார்கள். இப்படி நவீனத் தமிழ்ச் சிறாரிலக்கியம் ஒரு புதிய பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் படைப்புகளும் எழுத்தாளர்களும் இன்னும் போதவில்லை. மேலும் மேலும் ஏராளமான படைப்பாளிகள் சிறார் இலக்கியம் எழுத முன்வரவேண்டும்.
அப்போதுதான் அழ வள்ளியப்பா காலத்தைப் போல ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்.கொரோனா ஊரடங்கின் தொடர்ச்சியாக ‘கதை சொல்லிகள்’ என்கிற ஒரு புதிய பிரிவினர் தோன்றியுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்தென்ன?
கடந்த பத்து ஆண்டுகளில் சிறார் இலக்கியம் மெல்லத் தவழ்ந்து, எழுந்து, நடை போட்டுக் கொண்டிருந்தாலும் அதனுடைய வேகம் பாய்ச்சலென மாறியது கொரோனா காலத்தில் தான். பொதுமுடக்கம் குழந்தைகளிடமும் மிகப் பெரும் அழுத்தத்தை உருவாக்கியது. குழந்தைகள் நான்கு சுவர்களுக்குள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்திருந்தபோது ஒரு புதிய காற்று வீசியது.
வீட்டில் அடைந்து கிடந்த குழந்தைகளை மந்திரக் கம்பளத்தில் அமரவைத்து உலகத்தைச் சுற்றி வந்தது. அந்தக் காற்று தான் திடீரென்று உருவான கதைசொல்லிகள்.. அவர்கள் சிறார்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்தார்கள். ஒரு புதிய வகைமையாக சிறாரிலக்கியக் கதை சொல்லிகள் உருவானார்கள். ஆரம்பத்தில் சிறார்களுக்கான கதை சொல்லிகள் நாட்டுப்புறக் கதைகளையும், பீர்பால், தெனாலிராமன், கதைகளையும் புராணக் கதைகளையும், அவரவர் அறிதலுக்கு ஏற்ப குழந்தைகளுக்குச் சொன்னாலும் பின்னர் அவர்கள் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையும் சொல்லத் தொடங்கினார்கள். இப்போதும் பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுச் சமூகத்திற்கு சிறார் இலக்கியம் என்ற ஒரு வகைமை இருப்பதாகவோ, அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி இருப்பதாகவோ தெரியவில்லை.
பல இடங்களில் அழ.வள்ளியப்பாவைத் தாண்டி அவர்களுக்கு யாரும் அறிமுகமாகவில்லை. அப்படியே யாரையாவது தெரிந்தாலும் அது அவர்களுக்கு இலவசமாக கிடைக்கிற புத்தகங்களின் வழியே தான் அறிந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற பொருட்களை வாங்குவதைப் போல குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்குவதில் இன்னமும் மிகப்பெரிய சுணக்கம் இருக்கிறது. சிறார் படைப்புகளுக்கும் அதன் வாசகர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியை கதைசொல்லிகள் இட்டு நிரப்பினார்கள் என்று சொல்லலாம்.
அந்த வகையில் கதைசொல்லிகளை நான் குழந்தைகளின் தேவதைகள் என்று சொல்வேன்.
ஆனாலும் ஒரு எச்சரிக்கை தேவையாகவிருக்கிறது. கதைசொல்லிகள் தாங்கள் எந்தக் கதையைச் சொல்கிறோம், எதற்காகச் சொல்கிறோம், அந்தக் கதையின் கருப்பொருள் எதைப் பற்றியது என்பதைக் குறித்து குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு நவீன சமூகம் குறித்த புரிதலும், அரசியல், இலக்கியம், அறிவியல், என்று பரந்த வாசிப்பு வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை இப்போது மூன்னெடுக்கும் கலை இலக்கிய முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் என்னவெல்லாம் அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் கல்வித்துறையிலும் குழந்தைகள் நலன் சார்ந்தும் இலக்கியத் துறையிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர முடியும். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் இளம் தளிர் இலக்கியத் திட்டத்தில் இதுவரை சுமார் 59 புத்தகங்களை வெளியிடப்பட்டிருக்கின்றன. வயது வாரியான அந்தப் புத்தகங்கள் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை நிச்சயமாக உருவாக்கும். அதே போல பேராசிரியர் ச.மாடசாமி தலைமையில் உருவாகி இருக்கும் வாசிப்பு இயக்கம் குழந்தைகள் வாசிப்பதற்கு எளிதான வகையில் சிறிய நூல்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
மாவட்டம் தோறும் கலை இலக்கிய விழாக்கள் சிறார் கலை இலக்கிய விழாக்கள், கோடைக் கொண்டாட்டம் என்று ஏராளமான மாற்றங்களை அரசு செய்து கொண்டிருக்கிறது.
இந்த மாற்றங்களின் விளைவு அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெரியும் என்று நம்புகிறேன்.
கேரளாவில் பால சாகித்ய இன்ஸ்டிட்யூட் என்ற தன்னாட்சி அமைப்பு இருப்பதைப் போல் குழந்தைகள் நூல்களை வெளியிடுவதற்கு மட்டுமென்று தமிழ்நாட்டிலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
சிறார் எழுத்தாளர்களுக்கென ஒரு சங்கம் அமைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
நவீன தமிழ் சிறார் இலக்கியத்திற்கு ஏராளமான சவால்கள் இருக்கின்றன. வகைமைகள் சார்ந்து நூல்கள் உருவாக வேண்டியது, அப்படி உருவாகிற புத்தகங்கள் குழந்தைகள் கையில் சென்று சேர்வது, அந்தப் புத்தகங்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை குழந்தைகளிடம் தூண்டுவது, நூலக ஆணையை முறைப்படுத்துவது, விருதுகள் மூலமாக ஊக்கப்படுத்துதல் போன்று அரசின் உதவிகளைக் கேட்டுப் பெறுவது, குழந்தைப் படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்கப்படுத்துவது, இவை சமூகம் சார்ந்தவை.
குழந்தைகளுக்காக எழுத வருகிற எழுத்தாளர்கள் இதுவரை வெளிவந்துள்ள சிறார் இலக்கியத்தை வாசிக்கவேண்டும். அவர்களுக்கு அது குறித்து ஒரு புரிதல் வேண்டும். சிறார்களுக்கான கருப்பொருள்கள் குறித்த கவனம் வேண்டும். பிற்போக்கான அறிவியல் பூர்வமற்ற, மூட நம்பிக்கைகள் சார்ந்த படைப்புகளை எழுதக்கூடாது. அறநெறி, நன்னெறி, நீதி போதனை, என்ற விலங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
உலகளாவிய செவ்வியல் சிறார் இலக்கியங்களை வாசிக்க வேண்டும். தமிழ் செவ்வியல் சிறார் இலக்கியங்களை வாசிக்க வேண்டும். சிறார்களுக்கு எழுதும்போது அதிகபட்ச பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும் அறிவியல்சார்ந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும், எழுதும் மொழியில் கவனம் வேண்டும்; போன்றவற்றை எல்லாம் சிறார் எழுத்தாளர்கள் கவனம் கொள்ள வேண்டும்.இவற்றையெல்லாம் நிறைவேற்ற தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ளும்.
உங்கள் மகள்களில் ஒருவரே உங்கள் கதைகளுக்குப் படங்கள் வரைவது எப்படி நேர்ந்தது?அது என்னவிதமான உணர்வை உங்களுக்குத் தருகிறது?
என்னுடைய மூத்த மகள் உ.நவீனா ஹோமியோபதி முதுகலை மருத்துவர். பள்ளிப் பருவத்திலேயே ஓவியத்தில் ஈடுபாடுடையவராக இருந்தார். அவருடைய திருமணமே அவருடைய ஓவியக் கண்காட்சியுடனும், மருமகன் கண்ணனின் புகைப்படக் கண்காட்சியுடனும் நடந்தது.ஆனால் குழந்தைகளுக்கான ஓவியங்களை அவர் வரைந்ததில்லை. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான நூல்களை நான் எழுதிய போது அவரிடம் ஓவியங்கள் வரையக் கேட்டேன். மிக அற்புதமாக ஓவியங்களை வரைந்து கொடுத்தார். உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
பதிப்பகங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பெரியவர்களுக்கான இலக்கியம் போல சிறுவர்கள் நேரடியாக நூல்களை வாங்க முடியாது. இடையில் பெற்றோர்களோ ஆசிரியர்களோ பரிந்துரை செய்ய வேண்டியதிருக்கிறது. எனவே சிறாரிலக்கியம் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் சென்றடைய வேண்டிய மிகப்பெரிய பணி காத்திருக்கிறது. அதற்கு பதிப்பகங்கள் பள்ளி தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதும் அவர்கள் பதிப்பிக்கிற ஒவ்வொரு நூலிலும் எந்த வயதுக்குரியது என்பதையும் குறிப்பிட வேண்டும்.ஒவ்வொரு பள்ளி ‘ஒவ்வொரு தெரு’ இப்படி நுண்தளங்களில் வாசிப்புத் திருவிழாக்களை நடத்த வேண்டும். ஒத்த கருத்துடைய அமைப்புகளோடும் இயக்கங்களோடும் இணைந்து பதிப்பகங்கள் இதைச் செய்யலாம்.
இந்த விருது தரும் உணர்வு என்ன?
சாகித்திய பால புரோஷ்கார் விருது உண்மையில் எனக்கு மிகப்பெரும் வெளிச்சத்தைக் கொடுத்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. என்னுடைய நாற்பத்தியிரண்டு ஆண்டுகால இலக்கிய வாழ்வில் எனக்குக் கிடைத்திருக்கும், மிகப்பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறேன். இந்த விருதை என்னை உருவாக்கிய என்னுடைய ஊரான கோவில்பட்டிக்கே சமர்ப்பணம் செய்கிறேன். இப்போது கிடைத்திருக்கும் கவனை ஈர்ப்பை சிறார் இலக்கியத்தின், வளர்ச்சிக்கு அனைத்து வழிகளிலும் பயன்படுத்த முயற்சி செய்வேன். நன்றி.