நிகழ் அய்க்கண்
இந்நூலானது விசை, புதியவிசை, புத்தகம் பேசுது, வல்லினம் போன்ற இதழ்களிலும், நாளிதழில் எழுதிய கட்டுரைகள், வானொலியில் ஆற்றிய உரைகள் அடங்கிய 25 கட்டுரைகளின் தொகுப்பாகும். பக்க விரிவஞ்சி, முக்கியத் தலைப்புகளின்கீழுள்ள கட்டுரைகளில் பேராசிரியர் கூறியுள்ளவற்றினைப்பற்றிக் காணலாம்..
இந்திய வரலாற்றுச்சான்றுகள்

இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை வகைப்படுத்தும்போது மூன்றுவகை வரலாற்றை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது, புராண வரலாறு, சமயச்சார்பு வரலாறு, சமூக வரலாறாகும். அதுபோல, இந்திய இலக்கியங்களை வரலாறு சார்ந்த, வரலாறு கலந்த, வரலாறு சாராத படைப்புகளாக மூவகைப்படுத்தலாம். பிராமண, புத்த, சமண பாரம்பரியங்களைகூறும் நூல்கள் வரலாறு கலந்த படைப்புகளாகும். வரலாறு சாராதவை மகாபாஷ்யம், ரகுவம்சம் போன்றவையாகும்.
பண்டைய இலக்கியங்களுக்கு முற்றிலும் மாறாக, இடைக்காலத்தில் இலக்கியங்கள் உருவாகியுள்ளன. வரலாற்றுக்கு முந்தையகால மானுட வரலாற்றை அறிய புதைபொருள் ஆராய்ச்சியே பெரிதும் உதவுகின்றன. 20 ஆம் நூற்றாண்டில், மொகஞ்சதோரோவும், ஹரப்பாவும் இந்திய வரலாற்றை 3000 ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்துச்செல்கின்றன. அரசர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இந்திய வரலாறு எழுதப்பட்டதுபோக, டி.டி. கோசாம்பி போன்றவர்கள் மக்களுடைய வரலாற்றினை எழுத முயன்றனர்.
ஆரியர்- திராவிடர் சர்ச்சை :
கடந்தகால நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறவர்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்த நவீன காலத்தில் ஆதாரமற்ற புனைவுகளும், திரிபுகளுமே வரலாறு என கட்டமைக்கப்பட்டு அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் ரிக்வேதப் பண்பாடு என்ற கருத்தை நிலைநாட்ட 1922 ல் மொகஞ்சதோரோ, ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரிக்வேத சமுதாயம் நிற அடிப்படையில் மட்டுமே வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. பிறகான வேத காலத்தில்தான் நான்கு வருணங்களைக் கொண்டிருந்த சமுதாயம் உருவானது. ஆரியர்கள் பல்வேறு காலகட்டங்களில் கூட்டங்கூட்டமாக மத்திய ஆசியாவிலிருந்து ஈரான் வழியாக இந்தியாவிற்குள் கி.மு.1750 வாக்கில் குடியேறியிருக்கலாம்.
பிராமண எதிர்ப்பு இயக்கங்கள் :
பெளத்த மதத்தின் தோற்றம் ;
பகுத்தறிவு வாதத்திற்குப் பெயர்போன காலமாக கி.மு. ஆறாம் நூற்றாண்டு விளங்கியது. இக்காலத்தில் ஏராளமான சமயப்பிரிவுகள் உருவாகின. அவற்றில் சமணம், பெளத்தம், ஆசிவகம் முக்கியமானவை. இவற்றில், மகாவீரரின் சமணமும், புத்தரின் பெளத்தமும் தழைத்தன. கோசலர் தோற்றுவித்த ஆசிவகம் அழிந்தது. கோசலர் மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் நடைபயணம் மேற்கொண்டு, இறுதியில் அவரிடமிருந்து விலகி ஆசிவகத்தைத் தோற்றுவித்தார். ஆசிவகத்தில் கடவுள் நம்பிக்கை கிடையாது.
புத்தர் புத்தகயாவில் தங்கி தியானத்தில் ஈடுபட்டு ஞானம் பெற்று, நான்கு உண்மைகளை விளக்கினார். அதாவது, பிறப்பிலிருந்து இறப்புவரை துயரம், அறியாமையே துன்பத்திற்கும் துயரத்திற்கும் காரணம், எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் விவேகம் இருந்தால் துன்பத்தைத் தவிர்க்கலாம், எந்த ஒரு நோயையும் சரியாக அறிந்தால் அதைக்குணப்படுத்தலாம் இதுதவிர, சரியான எட்டுவகை கருத்து விழைவுகள் ; பேச்சு ; நடத்தை ; வாழ்க்கை ; முயற்சி ; எண்ணம் ; தியானம் கடைபிடித்தால் முக்தியடையலாம் என்பது அவரது போதனைகளாகும்.
புத்தரும் பெளத்த மதத்தின் கோட்பாடுகளும் ;
புத்தர் தனது போதனைகளை பீஹாரின் ஆதி மொழியாகக் கருதப்பட்ட அர்த – மகதியில் வழங்கினார். அவரது கருத்துகள் பாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு திரிபிடகா எனும் நூல் வடிவமாகியது. புத்தர் மக்களின் மொழியிலேயே போதனை செய்ய வலியுறுத்தினார். அவரது போதனைகளானது – வர்க்கம், சாதி, இனம் மற்றும் குலம் ஆகியவற்றால் மனிதனுக்கு மனிதன் இடையேயான வேறுபாடுகள் மேலோட்டமானவை ; சாதியின் அடிப்படையில் சமுதாயத்தில் எந்நிலையில் இருந்தாலும் இரக்கமுடையவர்களாக இருந்தால் முக்தியடையலாம் ;
சமூக நல்லுறவு, தர்மம், அனைத்திற்கும் மேல் பாலுணர்வுக் கட்டுப்பாடு, ஆகியன சமூக நன்மை அதிகரிக்க உதவும் என்றார். மேலும், பிராமணிய நடைமுறைகளான கடவுள் வழிபாடு மற்றும் பலி கொடுத்தல் போன்றவற்றினால் எந்தப்பயனுமில்லை. மாறாக, ஒருவர் ஆத்திரம், தீய எண்ணம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மனத்தூய்மையுடன் இருந்தால் தனக்குத்தானே எஜமானனாக இருக்கமுடியும்.
ஆங்கிலேயர் வருகையும் நில உடைமை மாற்றங்களும் ;
முஸ்லிம் மன்னர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்குமேல் இந்தியாவை ஆண்டபோதிலும், அவர்களது ஆட்சி மக்களது சமூகப்பொருளாதார வாழ்வினை பெரிதும் பாதிக்கவில்லை. ஆனால், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே வேளாண் மற்றும் நிலவரிக்கொள்கையில் செய்த மாற்றங்கள் வேளாண் சமூகத்தை மட்டுமின்றி, கிராமப்புற பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்தது. மேலும், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இரு நோக்கங்களைக் கொண்ட வர்த்தகக் கொள்கைகளைக் கொண்டிருந்தது. 1. இந்தியாவிலிருந்து மலிவுவிலையில் கச்சாப்பொருட்களை ஏற்றுமதி செய்வது; 2. இங்கிலாந்து தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்து அதிகவிலைக்கு விற்பது.
திப்பு சுல்தான் :
இந்திய வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் தனி இடத்தைப்பெற்றவர் திப்பு சுல்தான். வங்காளத்திலும், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும் வெற்றிபெற்றிருந்த ஆங்கிலேயர், தெற்கில் திப்பு சுல்தான் – ஹைதர் அலியிடம் கடும் சவாலைசந்திக்க நேர்ந்தது. மைசூர் உடையார் ஆட்சியில், சாதாரண போர் வீரராகவும், பிறகு, தனது திறமையால் திண்டுக்கல் கோட்டையின் இராணுவத் தலைவராகவும் ஆகி, அதன்பின் இராணுவத் தலைமைத் தளபதியானர் ஹைதர்அலி.
இவரும், திப்புவும் சேர்ந்து மைசூர் அரசை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு அடிப்படையாகவுள்ள, வணிக முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமையிடத்தை ஒரு பக்கம் மங்களூருக்கு மாற்றினர். இன்னொரு பக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிரி நாடான பிரெஞ்சுடன் உதவியை நாடி, உள்நாட்டு மக்களைக்கொண்ட படையை உருவாக்கி போர்ப் பயிற்சியையும் அளித்தனர். இதனிடையே ஹைதர் அலி நோயினால் இறந்துபோக, திப்பு அரசுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திப்பு தனது நாட்டு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சமதர்மச் செயல்பாட்டாளாராகத் திகழ்ந்தார். நிலம், தொழிற்சாலை, சுரங்கம் அனைத்தையும் அரசின் கட்டுப்பாடின்கீழ் கொணர்ந்தார். மைசூரில் வெட்டியெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, தந்தம், மிளகு, ஏலம், பருத்தி நூல்களை விற்று, அதில் கிடைத்ததை வைத்து துப்பாக்கிகள், பீரங்கிகள், இரசாயனப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கினார். மத விஷயங்களில் திப்பு நடுநிலையோடு செயல்பட்டார். அரசு உயர்பதவிகளில் பல இந்துக்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் முதல் சமூக இயக்கம் ;
பெரும்பாலும் சமூகப்பொருளாதார மாற்றங்கள் நிகழும்போதே, சமூக இயக்கங்கள் தோன்றுகின்றன. சமூக இயக்கத்தின் தன்மைகளைக் கூறும்போது, 1. அது கூட்டு முயற்சியின் வெளிப்பாடாக இருக்கவேண்டும், 2. அதில் பங்கெடுப்போர், தத்துவார்த்த அடிப்படையில் சில பொதுவான குறிக்கோள்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 3. அரசியல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியில் இருந்து மாற்றத்தை கொண்டுவர முயலவேண்டும். சமூக வன்முறையென்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைசார்ந்தவர் என்பதற்காக அவர்மீதோ அல்லது அவரது உடைமைகள் மீதோ நடத்தப்படும் தாக்குதலே சமூக வன்முறையாகும். 19 ஆம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் தீண்டாமை, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாடார்கள் நடத்திய வலிமையான சமூகப்போராட்டமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்கு வித்திட்டவர்கள் கிறித்துவ பாதிரியார்களே.
காந்தியடிகளின் இறுதி 200 நாட்கள் :
காந்தியார் இறுதியாக வாழ்ந்த 200 நாட்களில், பெண்களின் அபார சக்தி பற்றிய காந்திஜியின் பேச்சு ; தலமைப்பண்பு பற்றிய அவரது கண்ணோட்டம் ; தேசியக்கொடியில் ஏன் இராட்டை இருக்கவேண்டும் ; ஜமின்தார்கள் தானாக முன்வந்து தனது உடைமைகளை தானம் செய்யவேண்டும் ; ஆத்திரமிக்க இந்துமத வெறிக் கும்பலை கல்கத்தாவில் எதிர்கொண்ட விதம் ; முதலாளி – தொழிலாளி நல்லுறவு; உழைப்பே மன அழுத்தத்திற்கு அருமருந்து; அரிஜனங்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட அனுமதிக்கவேண்டும் என்பதாக அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் அமைந்திருந்தன.
இ.எம்.எஸ் நம்பூதிரிபாடின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு:
மார்க்சியக் கோட்பாட்டை செயல்பாட்டுடன் இணைக்ககற்றுக் கொடுத்தவரான இ.எம்.எஸ். ஸின் நூலில், அன்னியராட்சிக்கு எதிரான 1857ல் முடிவடைந்த இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் கட்டத்தில் குறுநில மன்னர்கள் தலைமை ஏற்றிருந்ததையும், 1947 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த இரண்டாம் கட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் தலைமை வகித்ததாகவும் இ.எம்.எஸ் மதிப்பீடு செய்திருப்பதாகவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை வகுத்தவர்களுக்கு இந்தியாவைப் பற்றியோ, மற்ற ஆசிய நாடுகளைப் பற்றியோ எதுவும் தெரியாது. எனவே அக்கோட்பாடு இந்தியாவிற்குப் பொருந்தாது என்கிற வாதத்தை ஏற்க மறுக்கும் அதேநேரத்தில், இந்தியாவைப்பற்றிய மார்க்சின் மதிப்பீடு முழுமையானது என்றோ, தகவல்கள் அடிப்படையில் தவறற்றது என்றோ வாதாடமாட்டேன் என்கிறார் இ.எம்.எஸ்..
அம்பேத்கரும் கம்யூனிஸமும் :
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய அம்பேத்கர், இந்தியத் தேசிய காங்கிரஸ் குறித்தும், இந்துமதம் குறித்தும் தனது கருத்துகளை முன்வைத்தார். சமயத்தில் மட்டும் சமத்துவம் வந்தால் போதாது. சமூகப்பொருளாதாரத் தளங்களிலும் சமத்துவம் ஏற்படவேண்டும் என வாதாடியவர் அம்பேத்கர். சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத்தவிர ஆங்கிலேயர்களது ஆட்சி சிறப்பாக எதையும் மக்களுக்குச் செய்யவில்லை என்கிறார். விவசாயத்தில் கூட்டுப்பண்ணை முறையை ஆதரித்தார். அனைத்துமக்களும் அரசாங்கத்திற்கு வரி கட்டுகின்றனர். தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச்சென்று கல்விபயில முடியவில்லை என்கிறார்.
தொழிலாளர்கள் – பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்தவராவார். மார்க்ஸுக்கும் புத்தருக்கும் இடையே, உலகை மாற்றியமைப்பது ; வர்க்கங்களுக்கிடையேயான மோதல்கள்; தனியுடைமைக்கோட்பாடு; சுரண்டலுக்கு வழிவகுத்தல் ; நல்லதோர் சமுதாயத்தில் சொத்துகள் பொது உடைமையாக்கப்படவேண்டும் ; ஆகிய நான்கு விஷயங்களில் ஒத்த தன்மை கொண்டிருப்பதைக் கூறுகிறார். மேலும், மார்க்ஸின் சமத்துவக்கோட்பாட்டின் மீது தனக்கு முழுமையான உடன்பாடு என்றாலும், புத்தரின் இதர கோட்பாடுகளான, சுதந்திரம், சகோதரத்துவம் பற்றி கம்யூனிஸ்டுகள் கவலை கொள்ளாதிருப்பது தனக்குக் கருத்துவேறுபாடு உண்டு என்கிறார்.
சகோதரத்துவத்தின் மறுபெயர்தான் ஜனநாயகம். அது ஓர் வடிவம் மட்டுமல்ல. சேர்ந்து வாழ்வது; சகமனிதனை மதித்து நடத்துவது இங்கு அவசியமானது என்கிறார்.