முனைவர் சி. மகேசுவரன்
லெப்வேர்ட் புக்ஸ்… வெளியீட்டு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட, ‘Red Flag of the Warlis: History of an Ongoing Struggle’ எனும் நூலானது தோழர் கி. ரமேஷ் – அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, மிக அண்மையில் இந்நூல், பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ளது.

மராட்டிய மாநிலம் தானேயில் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்திட்ட வார்லி பழங்குடி எழுச்சி ஏற்பட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆண், பெண் என இரு பாலினரிடமும் இளையர், முதியோர் எனத் தலைமுறை தாண்டிய நிலையிலும் நிலவும் நினைவுப் பதிவுகளைப் புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அர்ச்சனா பிரசாத் தமது இளம் மாணவர் குழுவினருடன் இணைந்த திரட்டிய களப்பணித் தரவுகளின் அடிப்படையில் உருவான மூல நூலின் சுவையானது கொஞ்சமும் குறையாமல் இத்தமிழாக்கப் படைப்பைத் தந்துள்ள தோழர் கி. ரமேஷ் நமது பாராட்டிற்கு உரியவர்.
வார்லி பழங்குடியின மக்களுக்கு எதிராக நிலவுடைமையாளர், லேவாதேவிக்காரர் என இரு பெரும் சுரண்டல் குழுக்கள் ஆளும் கட்சியினரது ஆட்சியதிகாரத் துணையுடன், காலங்காலமாகச் செய்து வந்த, ‘வெத்பிகார்’ எனும் ‘கட்டாய (வெட்டி) வேலை’, ‘லக்னகடி’ எனும் ‘திருமணக் கடன்சார் கட்டாய உழைப்பு’ மற்றும் ‘பாலியல் வல்லுறவு’, ‘புல் வெட்டுதல்’, ‘டோடி’, எனும் (கட்டாய) ‘மரம் வெட்டுதல்’ உள்ளிட்ட சுரண்டல்களுக்கு எதிராக இணையரான இரு பெரும் மூத்த கம்யூனிஸ்ட் தோழர்கள் ஷாம் ராவ் பருலேகர் மற்றும் கோதாவரி பருலேகர் செங்கொடியின்கீழ் வார்லி பழங்குடி மக்களை அணி திரட்டி, வெற்றிகளைக் குவித்த வீரம் மிகுந்த வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் நிரல் படப் பதிவு செய்துள்ளமை பாராட்டிற்கு உரியது.
மேலும், 1945 – 46 காலகட்டங்களில் ஏற்பட்ட வார்லி பழங்குடி எழுச்சியானது 1950கள் தொடங்கி இன்றுவரை செங்கொடிப் பாதையில் தொடர்ந்து போராடும் சூழலையும் அது ஈட்டியுள்ள வெற்றிகளையும் படம் பிடித்தது போல இந்நூல் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தங்களை வழிநடத்திச் செல்லும் செங்கொடி இயக்கத் தலைவர்களான பருலேகர்கள் தலைமையில் அநீதிக்கு எதிராகப் போராடிட அணி திரட்டக் கற்றுக்கொண்ட வார்லி பழங்குடி மக்கள் தங்களுடைய தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதும் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் – அவர்கள் இருவரும் இல்லாமலேயே – அவர்கள் காட்டிய செங்கொடிப் பாதையில் தாங்களே தம்முடைய பழங்குடிச் சமுதாய மக்களை அணி திரட்டிப் போராடும் வகையில், தங்களை வளர்த்துக்கொண்டு செயல்பட்டமையையும் இந்நூல் பதிவு செய்திடத் தவறவில்லை.
போலியான பர்மிட்டுகளைக் காட்டி, அவை கம்யூனிஸ்ட் தலைவர்களால் தமக்கு அளிக்கப்பட்டவை என நிலவுடைமையாளர்கள் கூறி, பணி செய்யுமாறு கட்டாயப்படுத்தியபோது அதில் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி எங்கே?’ என்று கேட்டு, அப்போலி பர்மிட்டுகள் மீது காரி உமிழும் நெஞ்சுரம் மிக்கவர்களாக வார்லிக்களைச் செங்கொடிப் பாதை உருவாக்கியருந்தமையும் இந்நெடிய வரலாற்று நிகழ்வுகளில் பதிவாகியுள்ளன.
தங்களது செங்கொடித் தலைவர்களான பருலேகர்களை அரசியல் எதிரிகள் தாக்க முற்பட்டுள்ளதாகவும் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அவர்களைக் காத்திட ஆயுதங்களுடன் அணி திரளுமாறு வார்லி பழங்குடி மக்கள் ஆட்சியாளர்களால் தடியடி, பின்னர் உண்மை நிலை அறிந்து போராடி வெற்றி கண்ட வார்லி எழுச்சியும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாம்ராவ் பருலேகர், கோதாவரி பருலேகர் என்கிற இணையரது வாழ்வு மற்றும் செயல்பாடுகளுடன் இணைந்த போக்கில் இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளமை, ‘விவசாயிகள் சங்கத்தின் முதற் கட்டப் போராட்டங்களில் முன்னணிப் பழங்குடித் தலைவர்கள்’ எனும் இணைப்புப் பகுதியுடன் நூல் நிறைவுறுதல், முந்தைய காலகட்ட நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வார்லி பழங்குடி மக்கள் எழுச்சியானது செங்கொடிப் பாதையில் சென்றமையைப் பதிவு செய்யும்போது – புரிதலுக்காக – அன்றைய நிலவியல் பெயர்களுக்கு உரிய இன்றைய பெயர்களை அங்கங்கே அடைப்புக் குறிக்குள் தவறாமல் அளிக்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்புகள் எனலாம்.
1945-இல் டிட்டிவாலாவில் நடைபெற்ற விவசாய சங்க மாநாட்டிற்கு ஷாம்ராவ் பருலேகர் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட வார்லி பழங்குடியினர் மாநாடு முடிந்து திரும்பும்போது மாநாட்டுப் பந்தலிலிருந்த செங்கொடிகள் சிலவற்றைத் தங்களுடன் கொண்டு சென்றனர். அன்றிலிருந்து அச்செங்கொடிகள் அவர்களுக்குத் தோழனாக, வழிகாட்டியாக, தத்துவ ஆசிரியராக அமைந்துவிட்டன என்று அழகுற இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1947-இல் ஷாம்ராவ் பருலேகர் பதிவு செய்துள்ள, ‘வார்லிக்களின் எழுச்சி’யைத் தொடர்ந்து, தோழர் கோதாவரி பருலேகர் தாம் பங்கேற்ற போராட்டத்தை நினைவுகூர்ந்து, ‘மனிதர்கள் விழிப்படையும்போது’ என்னும் பொருண்மையில் 1970-இல் மராத்தி மொழியில் எழுதிய, ‘பழங்குடியினர் எழுச்சி: வார்லி விவசாயிகள் போராட்டத்தின் கதை’ எனத் தொடர்ந்த போராட்ட நிலையைச் ‘செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்’ என்கிற இந்நூல் பதிவு செய்துள்ளது எனச் சுருங்கக் கூறலாம்.
அக்கால கட்டத்தில் செயல்பட்டு வந்த, ‘ஆதிவாசி சேவா மண்டல்’ நிலவுடைமையாளர் மற்றும் லேவாதேவிக்காரர்களாக விளங்கிய காங்கிரஸ் கட்சியினர்க்கு மட்டுமே ஆதரவாகச் செயல்பட்டு வந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கமானது வார்லி பழங்குடியினர்க்கு ஆதரவாக, மிகுந்த ஈடுபாட்டுடன் முழுமையாகச் செயல்பட்டதால், செங்கொடிப் பாதையில் வார்லி பழங்குடியினர் பயணப்பட வழி ஏற்பட்டது என்பதையும் ஒப்பீட்டு நோக்கில் இந்நூல் பதிவு செய்துள்ளது மற்றுமொரு சிறப்பு ஆகும்.
மேலும், செங்கொடிப் பாதையில் ஏற்பட்ட வேலைப் பங்கீடானது பெண்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ததுடன், போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிட அவர்களுக்கு உற்ற நம்பிக்கையைக் கொடுத்து, அவர்களை வர்க்க ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவித்துள்ளது மற்றுமொரு சிறப்பு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சென்னை மாநிலத் தலைவர் தோழர் பெ. சண்முகம் – அவர்களுடைய அணிந்துரையுடனும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழுத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே- அவர்களுடைய வாழ்த்துரையுடனும் ‘செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்’ எனும் இந்நூல் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது.
தமக்கான போராட்டங்களில் மட்டும் அல்லாமல், மும்பையைத் தலைநகராகக் கொண்டு மராத்தி பேசப்படும் மாவட்டங்களை இணைத்து மகாராஷ்டிரம் உருவாகிட 1950-களில் மத்தியில் உருவான, ‘சம்யுக்த மகாராஷ்டிர சல்வால்’ மற்றும் போர்த்துக்கீசிய காலனி ஆட்சியிலிருந்து ‘தாத்ரா நகர் ஹவேலி’யை விடுவிப்பதற்கான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டம் என விரிவான போராட்ட இயக்கங்களிலும் வார்லி பழங்குடியினர் ஈடுபட்டனர். இத்தகைய பங்கேற்பானது வார்லி பழங்குடி மக்களது சமூக-அரசியல் பார்வையைச் செங்கொடிப் பாதையில் விரிவடைய வைத்தது என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.
செங்கொடியைப் பலவீனப்படுத்துவது என்பது தங்களுடைய இருத்தலையும், வாழ்வையுமே ஆபத்துக்கு உள்ளாக்கிவிடும் என வார்லி பழங்குடியினர் நன்கு உணர்ந்துள்ளமை வெளிப்படை.
செங்கொடிப் பாதை வார்லி பழங்குடியினர் போன்ற எளிய மக்களுடைய வாழ்வை மேம்படுத்துவதில் எத்தகைய சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் துணை புரியும். எனவே ஒவ்வொரு கம்யூனிஸ்ட் களப் பணியாளர் கையிலும் தவறாமல் இருக்கவேண்டிய தகவல் பெட்டகம் இது.
மூல ஆசிரியரான தோழர் அர்ச்சனா பிரசாத் எழுத்து நடையை அப்படியே தமது தமிழாக்கத்திலும் கொண்டுவந்த தோழர் கி. ரமேஷ் நம் எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவர். இத்தமிழாக்க நூலைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள சென்னைப் பாரதி புத்தகாலயம் மகுடத்தில் மற்றுமொரு மிளிர் கல் இந்நூல் எனில் அது மிகையாகாது