ஆயிஷா இரா. நடராசன்

என் கல்லூரிக் காலத்திலேயே அந்த நூலகத்தைப் பற்றி நான் அறிந்திருந்தேன். பேராசிரியர் ஆத்ரேயாவோடான மாலைநேரச் சந்திப்புகள் அவை. ஜார்ஜ் ஆர்வலின் 1984 நாவலை எங்களுக்கு பாடத் திட்டத்தில் வைத்த பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட்டம் நடந்த அந்த நாட்களில் அதற்கு மாற்றாக எந்த நூலை வைக்கலாம் என பேச்சுவார்த்தையில் “தெரிந்தால் சொல்லுங்கள்” என்று ஒரு பேராசிரியர் (மமதையோடு) நக்கலடித்தும், உங்களில் எத்தனைபேர் 1984 நாவலை முழுசாய் படித்துள்ளீர்கள் என்று காவல்துறை ஆய்வாளர் கிண்டலடித்தும்கூட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் எனும் பதாகையின் கீழே போராட்டத்தை தொடர்ந்தோம்.
மாற்று நூலாக நாங்கள் சிலர் முன் வைத்தது (ஆங்கில பாடம் என்பதால்) பாப்லோ நெருதாவின் கவிதைகளைத்தான். பேரா. ஆத்ரேயா தன்னிடம் இருந்த தி பொயட்ரி ஆஃப் பாப்லோ நெருதா (கிவான்ஸ் ஸ்டிவான்ஸ் தொகுத்தது.) எனும் நூலை எனக்கு வாசிக்கக் கொடுக்கிறார். அந்தப் புத்தகம் எனது ரசனையின் பல பரிமாணங்களை புதிதாக உசுப்பிவிட்டது. நெருதாவின் தோழர் கார்சிகா மார்க்வஸ் அந்த நூலுக்கு எழுதிய அந்த முன்னுரையில்தான் ஹங்கேரியின் ரகசிய நூலகத்தை பற்றி மார்க்வஸ் குறிப்பிடுகிறார். “பாழடைந்த தேவாலயம் பூட்டிய பழைய கூரையின் உள்ளே அடைபட்டிருந்த கடல்” என்று மார்க்வஸ் அந்த நூலகத்தை வர்ணிக்கிறார். அதுதான் 1950களில் வெளிஉலகம் அறிந்த இர்வின் ஸ்ஸாபோ நூலகம் புதாபெஸ்ட், ஹங்கேரி.

உலகில் மேலும் சில ரகசிய நூலகங்கள் உண்டு. ஆனால் இர்வின் ஸ்ஸாபோ நூலகம் அவற்றில் எல்லாம் தனித்துவம் வாய்ந்த துயர வரலாற்று பின்னணி கொண்டது. ரகசிய நூலகங்களில் பல இலக்கிய – கற்பனை கட்டுமான ஜோடனைகளால் விவரிக்கப்படுபவை. உதாரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தை பாட்லியன் நூலகம். எலிசபெத் மகாராணியின் மந்திரவித்தைக்காரன் ஜான் டீ 1602ல் விட்டுச் சென்ற நூலகம் என்றாலும் எண்ட் ஆஃப் டேஸ் (பென்-காஸ்ட்டா) மற்றும் ஆல் சோல்ஸ் மிடபோரா ஹார்க்னஸ் நாவல்கள் மூலம் கற்பனை செய்யப்பட்ட நூலகம் அது.
அமெரிக்காவின் ரோஹ்டி தீவில் மனிதத் தோலில் உருவாக்கப்பட்ட தோல் – அட்டைகள் கொண்ட நூறு நூல்கள் உள்ள ஜான்ஹே நூலகம் – ஹான்ஸ் ஹால்பியன் எழுதிய “தி டான்ஸ் ஆஃப் டெத்” மூலம் பிரபலமடைந்தது. ஒரு காலத்தில் புத்தகங்களை பைண்டிங் அட்டை போட எருமைத்தோலைப் பயன்படுத்தினார்கள். கன்றுக்குட்டிகளின் தோலில்தான் “மோசஸின் – பத்து கட்டளைகள்” பிற்கால பைபிளாக எழுதி வைக்கப்பட்டது. மனிதத் தோலை பதப்படுத்தி விளக்கம் செய்வது எனும் கற்பனையால் ரோஹ்டி தீவு நூலகம் “சினிமா” வாய்ப்பு பெற்றது.
“மந்திரவாதி ஜான் டீ யின் காணாமல் போகும் நூலகத்தைப் பொலவே ஜெ.ஆர்.ஆர். டோல்கினின் “வார்டு ஆஃப் தி ரிங்ஸ்” நாவலில் கிழவன் கேன்டால்ஃப் கண்டுபிடிக்கும் இஸிஸ்டூர் நூலகக் குகையும், உம்பர்ட்டோ ஈகோவின் இத்தாலிய நாவல் “தி நேதம் ஆஃப் ரோஸ்” சில் இடம்பெறும் அரிஸ்டாட்டிலின் (வாசித்தாலே மரணத்தை வெல்லலாம்) யார் கையிலும் கிடைக்காத நூல் பேணப்படும் ஓபே நூலகமும், ஜார்ஜ் லூகாசின் அறிவியல் புனைவான ஸ்டார்வார்ஸ் நாவலில் நமது பால்வெளி மண்டலத்தின் அனைத்து ஆதிகால பிரதிகளையும் பாதுகாக்கும் பிரமாண்ட ஒஸஸ் நூலகமும், ஹாரிபாட்டர் நாவல்களில் வரும் ஹாக்வார்ட்ஸ் நூலகமும் கற்பனை இலக்கிய உலகம் நமக்கு வழங்கிய ரகசிய நூலகங்கள் என்றாலும் முப்பதாண்டுகளுக்குமுன் இமயத்தின் – பவுத்த சமயநூல்களின் புதையலாய் கிடைத்த மொகாவோ குகை நூலகம் (வாங்-யுவான்லூ கண்டறிந்தது) கொடுத்த இன்ப அதிர்ச்சியையும் மறக்கமுடியாது.
இவை யாவற்றிலிருந்தும் வேறுபட்டது ஹங்கேரியின் இர்வின் ஸ்ஸாபோ நூலகம். மாபெரும் புரட்சியாளர்; அறிவியலாளர், மார்க்சிய சித்தாந்தி இர்வின் ஸ்ஸாபோ பெயரில் அது இன்று அழைக்கப்படுகிறது. ஹங்கேரிய – கிருத்துவ சபையும் எதேச்சதிகார வெறியன் பிரதமர் இஸ்ட்வான் டிஸாவும் துரத்தித் துரத்தி வேட்டையாடிய அறிவுச்சுரங்கம்தான் ஸ்ஸாபோ நூலகம். 1908ல் தோழர் கியூலா பிக்லர் எனும் சட்டத்துறை பேராசிரியராலும் அவரது மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்களாலும் கட்டமைக்கப்பட்ட கலீலியோ – வட்டம் என்பதே அந்த ரகசிய நூலகத்தின் ஆரம்பப்பெயர்.
வரலாற்றின் சமூக – அறிவியல் சித்தாந்த சிகரமாய் உள்ளது நூலக அமைப்பு. ஒவ்வொரு நூலகமும் ஒரு இயக்கம். ‘சுதந்திர வாசிப்பு நம் உரிமை’ என்ற முழக்க வாசகம்தான் கலீலியோ வட்டத்தின் உயிர்நாடி. 1900 களில் அஸ்ட்ரோ ஹங்கேரிய பேரரசு திருச்சபையோடு இணைந்து அறிவு இயக்கத்தை முடக்கி மதவெறியை விதைத்த ஆண்டுகளில் தங்களை கலீலியோவாதிகள் என்று அழைத்துக்கொண்ட சிந்தனாவாதிகள், சோஷலிஸ சமூகப் போராளிகள், புரட்சிகர ஜனநாயகவாதிகள், அறிவியலாளர்கள், மனிதநேயச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்திய ரகசிய வாசிப்பு இயக்கமே கலீலியோ வட்டம்.
தேவாலய மத–அடிப்படைவாதத்தோடு கைகோர்த்த பிரதமர் இஸ்ட்வான் டிஸா குருமார்கள், பிஷப்புகள், சுபோஸ்தலிக்கர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக்கினான். ஹங்கேரியின் பல்கலைக்கழகங்களை ஏற்கெனவே தேவாலயங்கள்தான் நிதி அளித்தல் எனும் பெயரில் ஆக்கிரமித்திருந்தன. மாபெரும் எழுச்சியோடு ஐரோப்பா முழுதும் வீசிய அறிவியல் எழுச்சி பற்றிய அனைத்து முனைப்புகளும் முடக்கப்பட்டன. வெறும் வேதாகமப் பள்ளிச்சாலைகளாக கல்விக்கூடங்கள் மாற்றப்பட்டன. கிறித்துவ தேசியவாதிகள் வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தனர். அனைத்துவகை மாற்றுச் சிந்தனையாளர்ளும் சிறைவைக்கப்பட்டனர். இந்த இருண்ட காலத்தின் ஒற்றை ஒளியாய் மிளிர்ந்ததுதான் அந்த ரகசிய நூலகம்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்கள், டார்வின் பிரான்சிஸ் பேக்கன், கலீலியோ நூல்கள் என்று வாசிப்பைத் தடை நீக்கம் செய்து பகிர்ந்திட சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கலீலியோவாதிகள் இயங்கினார்கள். அவர்களை வழி நடத்தியவர்கள் பலர். இர்வின் ஸ்ஸாபோ அவற்றில் முதன்மையானவர்; ஹங்கேரிய தேசிய நூலகராக இருந்த மார்க்சிய அறிஞர். இவரிடம் ரகசியப் புத்தகப் பரிவர்த்தனை நடத்தியவர்கள் பலர். அதில் தோழர் தலைவர் லெனினும் அடக்கம். இவரை வேட்டையாட ஹங்கேரிய டிஸா அரசு வெறிகொண்டு களமிறங்கியது. கலீலியோ வட்டம் எனும் அந்த ரகசிய நூலகத்தை ஏழாக உடைத்துப் பிரித்து, தலைமறைவு வாழ்க்கையில் ஜார்ஜி பெல்கானவ், காரல் காட்ஸ்கி, இலோனா டட்ஸ்சின்கா, பிளாஸ்க்கா பிக்லர் ஆகியோரோடு இணைந்து வாசிப்பு இயக்கத்தை 7000 புத்தகங்களுடன் நடமாடும் ரகசிய நூலகமாக்கி கலீலியோ வட்டத்தை விரிவுபடுத்தியவர் தோழர் இர்வின் ஸ்ஸாபோ.
அவர்களிலும் இலோனா டட்ஸ்சின்கா ஒரு பிரமிக்கத்தக்கப் போராளி. கலீலியோ, டார்வின் உட்பட பலரது நூல்களை வரிக்கு வரி அப்படியே தனது நினைவில் நூல்களாக்கி பொதுமக்கள்முன் சத்தமாக முன்வைக்கும் புத்தகப் போராளியாக – பிரசங்க நூலாளராக விளங்கிய பெண்மணி அவர். முதல் உலகப்போரில் ஹங்கேரியை நுழைத்த வெறியன் டிஸா, தனது ஆதிக்கவெறிச் சட்டங்களால் மேலும் பல உரிமைகளைப் பறித்தபோது கலீலியோ சட்டத்தை யுத்தத்திற்கு எதிரான இயக்கமாக்கி, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து என்று சோஷலிஸ்ட்கள் ஒன்றுகூடி – சுவிட்சர்லாந்தின் ஸிம்மர்வால்டு நகரில் யுத்த எதிர்ப்பு மாநாடு நடத்தியபோது அதில் ஹங்கேரி சோஷலிஸ இயக்கத்தின் சார்பாக கலந்து கொண்டவர் இலோனா.

இர்வின் ஸ்ஸாபோ உதவியோடு 16 பல்கலைக்கழகங்களில் ரகசிய நூலக அறைகளை மாணவர்கள் திறந்தபோது, சுவிட்சர்லாந்தில் இருந்தும் வியன்னாவிலிருந்தும் இலோனா ரகசியமாகக் கடத்தி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அந்த அறிவுப்பசி கொண்ட இளைஞர்களைச் சென்றடைந்தன. ஹங்கேரிய மொழியோடு கலீலியோ வட்டம் ஜெர்மன் மற்றும் ரஷ்ய மொழி நூல்களையும் வாசித்து அறிந்திட பயிற்சி வழங்க முடிந்தது. ஆஸ்கார் ஜஸி, ராபர் பரூன், மட்யாஸ் ராக்ஸோசி போன்றவர்களின் முயற்சியால் தொலைநோக்கி வழியே வான் பார்த்தல், ஆய்வுக்கூட கூட்டங்கள், புத்தக அறிமுக முகாம்கள் நடந்த அந்த காலகட்டத்தில் ரகசிய நூலகம் உருவாக்கிய கிரிகரி மார்க்ஸ், பிராஸ்க் அலெக்சாந்தர், எட்வர்டு டெலலர், ரொனால் எட்வோஸ் போன்ற அற்புத விஞ்ஞானிகள் வைட்டமின் ‘சி’யைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற (1937) அறிஞர் ஆல்பர்ட் செண்ட் கையோர்கி மற்றும் கணிதமேதை பால் எர்டாஸ் என உலகை மாற்றிய மாபெரும் சிந்தனையாளர்களை உலகம் இன்றும் கூட வியந்து பார்க்கிறது.
‘சூரிய சக்தி மூலம் மின் ஆற்றல்’ எனும் அறிஞர் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை யதார்த்தக் கண்டுபிடிப்பாக்கி உலகை அசத்திய பெண் விஞ்ஞானி மரியா டெல்கஸ், அந்த இர்வின் ஸ்ஸாபோ ரகசிய நூலகத்தின் வளர்ப்பு மகள் என்றே வர்ணிக்கப்பட்டவர். ஹைட்ரஜன் அணு இயலின் தந்தை என போற்றப்படும் எட்வர்டு டெல்லர், தனது சுயசரிதையில் தன் பத்து வயதில் தன் தந்தையினால் 17 பாக்கெட் கொண்ட நீண்ட சட்டையை அங்கிபோல அணிந்து கலீலியோ வட்டத்திற்கு ரகசிய நூலகத்திற்காக புத்தகக் கடத்தியாக தான் பயன்பட்டத்தை நினைவுகூர்கிறார்.
அரசையும் கல்வியையும் மதத்திடமிருந்து பிரிக்கும் கடும் போராட்டத்தின் உச்சமாக ரகசிய நூலகம் “சிந்தனைக்கு விடுதலை” (சாட்பாட் கோண்டோஸாட்) எனும் ஆய்வு – இதழையும் தொடங்கி தனது 1200 (ரகசிய) வாசகர்களுக்கும் மறைவிட அச்சாக்கப் புரட்சியை சாதித்தபோது இர்வின் ஸ்ஸாபோ உள்ளிட்ட ஆறுபேர் அதிபர் டிஸாவின் அரச படைகளால் சிறைப்படுத்தப்பட்டனர். இலோனா டட்ஸ்சின்கா வியன்னாவிற்கு தப்பிச்சென்றார். மாபெரும் மக்கள் கவிஞன் ஆண்ட்ரி ஆடி ரகசிய நூலகத்தின் பொறுப்பாளராகி அறிஞர் பினான்கா பிக்ளர் அம்மையாரோடு இணநை்து வாசிப்பு இயக்கத்தைத் தளரவிடாது ரகசிய நூலகத்தைக் காத்தார்.
1918 அக்டோபர் 31 அன்று மதவெறிபிடித்த கொடுங்கோலன் பிரதமர் இஸ்ட்வான் டிஸா புரட்சியாளர்களால் கொல்லப்பட்டு ஹங்கேரிய சோவியத் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட நாளில் ரகசிய நூலகம் ‘புதாபஸ்ட் இர்வின் ஸ்ஸாபோ தேசிய நூலகம்’ என்ற பிரம்மாண்ட பொது நூலகமாக மாற்றப்பட்டது. ஒரு நூலகம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹங்கேரியின் சோஷலிசப் போராளிகளால் நடத்தப்பட்ட ரகசிய நூலகம் வரலாற்றின் சாட்சி.
