து.பா.பரமேஸ்வரி
பெண்களின் பாலுணர்வு மீதான சமூகத்தின் பிற்போக்குத் தனத்தைத் தகர்க்கும் புள்ளியிலிருந்து விரிகிறது ”க்ளிக்” நாவல். க்ளிக் நாவல் 25 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. மனிதமனத்தின் உளவியல் சிக்கல்களைக் குடும்பவாரியாகவும், பூசல்கள் குழப்பங்கள் எதிர்ப்புகள் போன்ற எதிர்மறை உணர்வுகளை மட்டும் கதைக்காமல் மாறுபட்ட காதல், வித்தியாசமான நேசம், தேவைக்கு பாசம், பகுத்தறிவில் பிடித்தம், சமகால யதார்த்தம் போன்ற இயல்பான நேர்மறை உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

ரவிச்சந்திரன் – சித்ரா தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள்-சித்ரா மற்றும் கலைச்செல்வன். சிறுபிள்ளைகளாக இருக்கும் போதே ரவிச்சந்திரன் விபத்தொன்றில் சிக்கி இறந்து போகிறார். சித்ரா பிள்ளைகளுடன் தாய் வீடு திரும்புகிறாள். சித்ராவின் தந்தை பூசைபழமும் தாய் பத்மாவதியும் பேரப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார்கள். திருமணத்திற்கு முன் ரவிச்சந்திரனை கல்யாணி என்றொரு பெண் தீவிரமாகக் காதல் செய்கிறார். ரவிச்சந்திரனின் தந்தை சித்ராவுடன் அவரை மணமுடித்து வைக்கிறார் . திருமணத்திற்குப் பின் கல்யாணி ரவிச்சந்திரனையே நினைத்துக் கொண்டு திருமணம் செய்யாமல் இருக்கிறாள்.
ரவிச்சந்திரனின் அகால மரணம் அவளைப் பைத்தியமாக்கி விடுகிறது. அவன் நினைவில் பித்துப்பிடித்து சித்ராவின் குடும்பத்தைச் சுற்றியே அலைகிறாள். நாவலின் நாயகி பூங்குழலி யதார்த்தமான பெண். “உன் படிப்புதான் உனக்குத் துணை..” என்கிற அப்பாவின் வார்த்தையும்,” கீழே விழுந்தா தூக்கி விட இங்க யாரும் இல்லை.” என்கிற பிராஜெக்ட் டீம்ஹெட் ஃபாஸ்டல் லியோவின் அறிவுரையும் பூங்குழலிக்குள் ஆழமாகப் பதிந்து விடுகிறது. தந்தையின் இழப்பும் பிள்ளைகளைக் கரை சேர்க்க அவள் தாய் படும் தவிப்பும் அவளை வைராக்கியமாக்குகிறது. படித்து முடித்து சென்னையில் ஐ.டி. கம்பெனியொன்றில் வேலைபார்க்கிறாள். நரேனுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அம்மாவின் மகிழ்ச்சிக்காக நரேனை மணம் முடிக்கச் சம்மதிக்கிறாள் பூங்குழலி. பூங்குழலிக்கு நரேனின் குணாதிசயங்கள் மனதிற்கு நெருக்கமாக இல்லை.
சித்ரா மற்றும் சந்திரா பாத்திரங்கள், குடும்பத்தையும் கணவனையும் சார்ந்து வாழும் பழைய பாரம்பரியத்தின் மிச்சங்கள் என்பதை சந்திரா எதிர் வீட்டில் வசிக்கும் பவித்ரா தனது கணவனின் துய்ப்பின்போது உண்டான அசௌகரியத்தை, ஆதங்கத்தை வெகு சாதாரணமாக பகிர்ந்தபோது சந்திராவின் தாம்பத்தியத்தில் கணவனின் விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்கிற புரையோடிய பெண் மனோபாவத்தின் விரக்தி நிலை உள்ளுக்குள் வெளிப்படுகிறது.
பவித்ராவின் தாம்பத்தியத்தைப் பற்றிய வெளிப்படையான பேச்சு பழைய பண்பாடுகளில் ஊறிப் போன சந்திராவிற்கு வியப்பைத் தருகிறது; ‘‘இப்படியெல்லாமா ஒரு பெண் படுக்கையில் பேசுவாள், நடந்து கொள்வாள்?” என்று ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.சந்திராவின் பெற்றோர்களுக்கு இடையில் எப்போதுமே ஒரு பனிப்போர் மெலிதாக இருந்து வந்ததையும் அதன் நிமித்தமாக வாழ்வின் இறுதி வரை ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசி கோபித்து, திட்டி, தமது உணர்ச்சிகளைப் பரிமாறியதாகக் கண்டதில்லை என்பதையும் சந்திரா தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டதை நாவல் பதிவு செய்கிறது.
மூன்று தலைமுறை கண்ட பெண் பாத்திரங்களைக் கொண்ட நாவல் வெவ்வேறு தலைமுறையின் மாறுபட்ட உளவியல்களை வழங்குகிறது. கலையரசனும் வேற்று மதப் பெண்ணான மெர்சியைக் காதலித்துக் கரம்பிடிக்கிறான். முழுக் குடும்பமும் அவனை ஒதுக்கி வைக்கிறது. பூங்குழலியின் நிச்சயதார்த்தத்தில் அவளின் பிடிவாதத்தில் குடும்பத்துடன் கலக்கிறான். இன்றைய லிவிங்க் டு கெதர் கலாசாரத்தை ஆதரிக்கும் விதமாக ஸ்ரீஜா மற்றும் ஆஷாவின் சிந்தனைகள் காதலையும் மண வாழ்க்கையையும் யதார்த்தமாகக் கடக்கும் சுபாவம் கொண்டவர்களாக ஆண்களைப் பதற்றமின்றி அணுகும் முறையிலும் உள்ளன. பாலின சமத்துவம் பேச்சளவில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் பிற துறைகளில் ஐ.டி துறையில் பாலின சமத்துவத்துவத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அங்குள்ள சூழல்கள் அமைந்திருப்பதை நாவலில் அறிய முடிகிறது.
பூங்குழலி, நாம் அன்றாடம் தரிசிக்கும் பிற பெண்களிலிருந்து வித்தியாசப்படுகிறாள். எதிலும் புதுமையை, சுவாரசியத்தை எதிர்பார்க்கும் பெண்ணாக அவள் இருப்பதால் அவளை அதிசயிக்கும் ஆண்மகனாக நரேன் இல்லாது தன்னிடமிருந்து அவனைத் தள்ளி வைத்தே பார்க்கிறது. நாவலின் நாயகனாக நரேன், ஐந்து வயதில் அவனைப் பாதித்த நிகழ்வொன்றால் பெண்களிடம் பேசுவதென்றால் பதற்றம் தொற்றிக் கொள்ளும். இந்த மன நிலையிலிருந்து விடுபட அவன் வெறித்தனமாகப் படித்து முடித்து சென்னை ஐ.டி கம்பெனியொன்றில் பணி புரிந்து அறுபதாயிரத்திற்கும் மேல் ஊதியம் பெறுகிறான். தனியாக அறையெடுத்து நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.
அம்மா என்றால் நரேனுக்குக் கொள்ளை பிரியம். அனைத்தையும் பகிர்ந்து கொள்வான். அவனின் இந்த இயல்பின் காரணமாகவே பூங்குழலியின் வெறுப்பைச் சம்பாதிக்கிறான். பூங்குழலி அம்மாவை நறுக்குத் தெரித்தாற் போல பேசிவிடுவாள் என்றே அம்மா அவளுக்கு ஃபோன் செய்வதைத் தடுக்கிறான். அம்மாவிற்கு அடுத்தபடியாக பவித்ராவை அதிகமாக நேசிக்கிறான். பூங்குழலி அவனை நிராகரித்த பின் பவித்ராவே அவனை இயல்பிற்குத் திருப்புகிறாள். “நமக்குள் செட் ஆகாது. என்ன செய்யலாம்..” என்று முகத்தில் அடித்தாற் போல பேசியபோதும் பூங்குழலியை அவன் வெறுக்கவேயில்லை. அவளை அந்த அளவிற்கு நேசிக்கிறான். பவித்ராவிற்கு அடுத்தபடியாக நரேன் நேசிக்கும் பெண்ணாக ஆஷா அதிகம் பிடித்துப் போகிறாள்.
பெண்கள்மீதான கூச்சத்தை அவனுக்குள்ளிருந்து உடைத்தது ஆஷா என்பதாலேயே ஆஷாவுடன் சகஜமாகப் பழகுகிறான். அவளை அலுவலக மேனேஜருடன் ஹோட்டலில் சேர்ந்து பார்த்தபோது ஏற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறான்.. தனது இயலாமையை அவள் மீது கோபமாக வெடிக்கிறான் வெறுத்தொதுக்கவும் முடியாமல் தவிக்கிறான். மீண்டும் தானே சென்று ஆஷாவை சமாதானப்படுத்துகிறான். பெரும்பாலும் பிற ஆண்களைப் போல பிரியத்தைத் தன்னிடம் நரேன் வெளிப்படுத்திய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கவே செய்கிறாள் பூங்குழலி. அம்மாவிடம் அவற்றையெல்லாம் ஒன்று விடாமல் பகிரும் அந்த குணமே அவளை வெறுப்பின் உச்சியில் நிறுத்துகிறது. குறிப்பாக இரண்டு நிகழ்வுகள், பூங்குழலி நரேனை நிச்சயத்திற்குப் பின் முழுமையாக ஒதுக்கும் காரணிகளாக அமைந்து விடுகிறது.

ஒன்று முக நூலில் ஹிந்தி படத்தை பார்த்து விட்டு ‘‘குயின் இஸ் ரைட் கிங் இஸ் ராங்” என்கிற வாசகத்தை வாசித்து, தவறான புரிதலில் அம்மாவிடம் குறை கூறி பிரச்சனை உண்டாக்கியதும்; மற்றொரு மிக முக்கியமான சம்பவமாக இருவரின் வீட்டு பெரியவர்களின் ஆலோசனையின்படி அவளை அழைத்துச் சென்று தியேட்டரில் படம் பார்க்கும் போது பூங்குழலியிடம் கொஞ்சம் வரம்பு மீறியதும் அவளை திருமணத்தையே நிறுத்தும் அளவிற்குக் கொண்டு விடுகிறது.
தனது பால்யகால நண்பனான பிரகாஷைப் போல சுவாரஸ்ய நபராக நரேன் இல்லாததும் பூங்குழலியின் மனதில் பிரகாஷின் அழுத்தமான தடங்கள் பதிந்ததாலும் இவளுக்கு நரேன் மீது காதல் அபிப்பிராயம் ஏற்படவில்லை. அதுவே அவனின் யதார்த்தமான செயல்கள் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டு அவனை நிராகரிக்கிறாள் என்பதே பூங்குழலியின் மனநிலை. பெண் என்கிற அலட்சியத்தில் பாலுணர்வு சார்ந்து அவள் மீதான சக உறவுகளின் பார்வை அதற்கான முயற்சிகள் அனைத்தும் அவளை அடிபணிய வைக்கும் யுக்திகளாகவே உணர்கிறாள் பூங்குழலி. அவர்களின் எல்லை மீறிய மேம்போக்கு எண்ணங்களை உடைக்கவே திருமணத்தை விடாப்பிடியாக நிறுத்துகிறாள்.
மேலும் தந்தையின் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட கல்யாணி, வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சி செய்துகொண்ட சோஃபியாவின் கணவன் விக்னேஷ், எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் பத்மாவதி, திரும்பத் திரும்ப அவள் மீது வரட்டு உரிமை எடுக்கும் சந்திரா எனச் சுற்றியுள்ளவர்களின் அனுபவங்கள், வாழ்க்கைப் பயணங்கள், திருமணத்தின் மீது பூங்குழலிக்கு பெருத்த அருவறுப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் கடும் போராட்டத்தில் திருமணத்தை நிறுத்திய பூங்குழலி அதிலிருந்து வெளி வந்து இயல்பிற்குத் திரும்பியவுடன் நட்பின் நிமித்தம் நரேனுடன் இயல்பாகிறாள்.
இருவரும் மனம்திறந்து பேசிப் பழகுகின்றனர். இதுவரை பரிமாறப்படாத பல இயல்புகள் அவர்களை மீறி வெளிப்படுகிறது. இருவரின் தொடர்சந்திப்புகள் குடும்பத்துடனான பூங்குழலியைவிட; நண்பர்களுடனான பூங்குழலியை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. நண்பனாக பூங்குழலி தியேட்டர் இருட்டில் சகஜமாக அவன் கைகளைப் பற்றிக்கொண்டும் நரேனை ஒருமையில் அழைத்ததும் இத்தனை நாட்கள் அவளுக்குள்ளிருந்த திருமண இறுக்கத்தைத் தளர்த்தியதை நரேன் அப்போதே புரிந்து கொள்கிறான். அவளுக்குள் மறைந்திருந்த பிறிதொரு பிரியமான குழந்தைமை, பாசம் அவனுக்குள் அப்போதே வெளிச்சப்படுகிறது.
‘‘உண்மையிலேயே ஒரு குயினா பெண் இருக்கா, குயின் பக்கத்துல ஆண் வந்து கிங்கா நிக்கும்போது தான் தப்பாகுது.” என்பது தான் நாவல் வாசகருக்கு வழங்கும் செய்தி.
தனது காதலை பக்குவமாக எடுத்துரைக்கத் தெரியாமலும் பூங்குழலி மீது இயல்பான உணர்வுகளின் தடுமாற்றத்தை மிகைப்படுத்தி குற்ற உணர்விற்கு ஆட்பட்டு புழுங்கித் தவிக்கும் நரேனை விட பருவகாலத்திலேயே துணிச்சலாக தனது காதலை வெளிப்படுத்திய பிரகாஷ் பூங்குழலியின் சுவாரஸ்ய ஆண்வட்டத்திற்கு சரியாக க்ளிக் ஆகலாம் .
இங்கு சுவாரஸ்யம் என்று பூங்குழலி எதிர்பார்ப்பது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தனது வாழ்க்கைத்துணை மீது இயல்பாக முளைக்கும் எதிர்ப்பார்ப்புகளும் தேவைகளும்.அதன் பொருட்டே முந்தைய காலத்தில் சுயம்வரங்கள் நிகழ்த்தப்பட்டு தனக்கு உகந்த ஆண்மகணைத் தேர்வு செய்யும் உரிமையை மணப்பெண்ணிற்கு வழங்கியது சங்க காலச் சமூகம். அதேபோல நட்பில் களங்கம் பாராட்டாது கற்பொழுக்கமாக ஒழுகி நிற்கும் கலையரசனும் ரைட் கிளிக்கிற்கு உகந்தவனாகப் படுகிறான்.