இரா.செந்தில் குமார்
1970- களின் தேனி நகரின் சாமானிய மக்களின் வாழ்க்கைச் சூழலை விவரித்துக் காட்டும் நாவல் ‘ஒற்றை வாசம்’. வாழ்ந்து முடிக்கப் போகும் தருவாயில் உள்ள தம்பதியின் முந்தைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அற்புதமான புனைவு. கதையின் மையமாக சுகந்தனும், ஜோதியும் வலம் வந்தாலும் ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதமாகப் படைக்கப்பட்டு இருக்கிறது. சாமானிய மனித வாழ்வில் பாலியலும், பொருளாதாரமும் எப்படி பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்பதை விவரிக்கிறது. சுகந்தன் பின் நாட்களில் பெரிய வியாபாரியாக மாறினாலும் வாழைப்பழ வியாபாரியாக தள்ளுவண்டி தள்ளும் மனிதனாகவே ஆழமாக மனதில் பதிந்துவிட்டது.

சூது வாது அறியாத சுகந்தனின் திருமணப் படலங்கள் ஆரம்பித்தது முதல் காணும் கனவுகள். பெண்களின் மீது ஏற்படும் மையல். பிடித்துப் போன ஜோதியை குயில் என மனதில் வருணித்துக் கொண்டு அது கூடி வராத போது குயில் இல்லை என்றால் ஒரு காகம் என்று சட்டென்று மாறும் மனநிலை; நமக்கு மனிதனின் மனநிலை எப்போது எப்படி மாறும் என்பதைக் கணிக்க முடியாது அறிய வைக்கிறது.
ஜோதியின் வீட்டில் நடக்கும் வறுமை தானாக ஏற்படவில்லை, அவரின் தந்தையின் நடத்தையால் ஏற்பட்டது என்பதை அறியும் போது மனம் வலித்தது. நிலக்கோட்டையில் பெண்களுக்கு அடிக்கடி பேய் பிடிக்க என்ன காரணம் என்பதை நாசுக்காக வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. சுகந்தன் – ஜோதி திருமண வாழ்வு எனது திருமண வாழ்வை நினைவூட்டியது. திருமணத்திற்கு முன்பு இருவர் வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை காட்சிப் படுத்திய விதம் அழகாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு ஜோதிக்கும் சுகந்தனின் அம்மாவிற்கும் நடக்கும் மனக்கசப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் தவிர்க்க முடியாத சங்கதி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
50 ஆண்டு காலத்திற்கு முந்தைய மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் கலாச்சாரம் எப்படி இருந்தது என்பதையும் அவர்கள் புழக்கத்தில் இருக்கும் வட்டார வழக்குகளையும் அறியும் காலப்பெட்டகமாகவும் நாவல் இருந்தது. அரிசிச் சோறு என்பது விசேஷங்களுக்கு மட்டுமே ஆனது என்பதும்; சாதாரணமாக களியும் கேப்பையும் தான் பிரதான உணவு என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருந்தது.
தற்போது அரிசிச் சோறு மதிப்பிழந்து சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் போது அப்போதைய அரிசிச் சோறு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்துள்ளது என்பதோடு, கால வெள்ளத்தில் மாறி வரும் கலாச்சாரத்தில் உணவுமட்டும் விதிவிலக்கு ஆகிவிட முடியுமா என்ன?
கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சிவந்தநாதன் என்ற பெயர் தேர்வு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. சிவநாதன் என்று வைத்திருந்தால் அது ஏதோ சாமி பெயர் என்று கடந்திருப்பேன். ஆனால், சிவந்த நாதன் என்பது அவரின் கட்சியின் நிறத்தை குறிப்பால் உணர்த்தும் பெயர் என்பதைக் கூர்ந்துநோக்கும்போது புரிந்தது.

பெயருக்கு ஏற்ப அவரின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தன. சுகந்தன் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மனிதர்கள் மனநிலை புரிந்து சமூகமாக அவர் தரும் தீர்வுகள் மிகவும் அலாதியானது. மேலும், காவலர்களால் தாக்கப்படும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக காவல் ஆய்வாளரைச் சந்திப்பது முதல் அடாவடியாக நடந்த காவல்துறை ஆட்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கிக் கொடுத்தது வரை அவரின் செயல்பாடுகள் மெய்சிலிர்க்க வைத்தது. தற்போது மூச்சு விடும் அவளுக்கு உள்ள பெண்ணடிமைத்தனச் சங்கிலியின் நீளம் அப்போதைய காலகட்டத்தில் எப்படி இறுக்கமாக இருந்தது என்பதை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் வழியாக அறிய முடிகிறது.
ஆண்கள் உண்ட உணவை பெண்கள் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு என்று தனியாக சமைக்க வேண்டும், அடுப்படியில கெடக்கப்போற புள்ளைக்கு படிப்பு எதற்கு என்பவை அதற்கு சிறிய உதாரணங்கள்.நான் கடந்த மாதம் வாசித்திருந்த இவரின் கடை நாவலுக்கும் இந்த நாவலுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை உணர முடிந்தது. இருவருமே பழக்கடை மூலம் வளர்த்தவர்கள், தங்கராசு அண்ணன் பழக்கடை என பல இருக்கிறது. நாவலின் சிறப்பு வாய்ந்த பகுதியாக நான் கருதுவது எழுத்தாளரின் இயற்கை கோட்பாடு சார்ந்த புரிதல் ஆழப்பட்டிருப்பது தான்.
‘கடை’ நாவலில் வரும் நாயகர் பழங்களைப் பழுக்க வைக்க கல் பயன்படுத்தினார். இந்த நாவலில் வரும் நாயகன் இயற்கையான முறையில் வைக்கோல் போட்டுப் பழுக்க வைக்கிறார் என்பது இயற்கை உணவை உண்ண விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதைக் காட்டும் இலக்கிய ஆவணம்.
மேலும் ஒரு இடத்தில் சிவந்தநாதன் கூறுவதாக ஆசிரியர் கூறும் காய்ச்சல் குறித்த கருத்து மிக முக்கியமானது. அதற்குக் காரணமாக அவர் இயற்கை வைத்தியம் மற்றும் மரபு மருத்துவம் சார்ந்த நூல்களை வாசித்தும் அனுபவித்தும் இருக்கக் கூடும் என்று கருதுகிறேன். சிறந்த வாசிப்பு இன்பத்தை எனக்கு தொடர்ந்து வழங்கி வரும் நாவல்களின் வரிசையில் ஒற்றை வாசம் புதினம் தனித்த இடம் பிடித்து இருக்கிறது.