வரலாற்றில் விக்டர் ஹ்யூவின் வாசகமான “ஒரு பள்ளியைத் திறப்பவன் 100 சிறைசாலைகளை மூடுகிறான்” எனும் வாசகமும் வீரத்துறவி விவேகானந்தரின் “எங்கே ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கே ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” எனும் வாசகமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. கற்பிப்பும், வாசிப்பும் அவ்வளவு அற்புதங்களைச் சாதிக்கக் கூடியவை. ஒரு நூலகம் மூடப்படும்போது என்ன ஆகும்?
தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவு நமக்கு ஏற்படுத்திய மகிழ்ச்சி, கோவையின் அடையாளங்களில் ஒன்றான தியாகு நூலகம் மூடப்படுகிறது என்று அறிந்தபோது பெரும் துக்கமாக மாறியது. கோவை ஆர்.எஸ்.புரம் என்றாலே, தடாகம் சாலை தியாகு நூலகம்தான். 1980 கள் தொடங்கி தமிழ் வாசிப்புத் தடத்தின் மிக அழகான அடையாளம் அது. அன்று ஒரு நாளைக்கு 100, 200 பேர் வருவார்கள்.
இன்று ஒருவர் இருவர் கூட வருவதில்லை என்று தன் காரணத்தை விளக்கி இருக்கிறார் தியாகராஜன். முதல் பிரதிகள், பழமையான பதிப்புகள், ஏன் சில மூலப் பிரதிகள் கூட வைத்திருப்பார். நோய் தொற்று – ஊரடங்கிற்கு பிறகு நூலகம் நொடிந்தது. இந்த நூலகத்தை அரசு இந்நேரம் எடுத்து நடத்துவதற்கு முன்வந்திருக்க வேண்டும். அரை விலை, கால் விலைக்கு தமிழ் ஆங்கில புத்தக புதையலை விற்கும் அவலம் தியாகு நூலகத்திற்கு வந்திருக்கவே கூடாது. இத்தனைக்கும் புத்தக வாசிப்பிற்கான ஆதரவு அரசுதான் தமிழக மு.க.ஸ்டாலின் அரசு.
விழாக்களில் சால்வைகளைத் தவிர்த்து புத்தக அன்பளிப்பு வழங்குவதிலிருந்து, மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி திருவிழாக்கள், அண்ணா நூலக மேம்பாடு, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பது என்று பாராட்ட பல நூறு விஷயங்கள் உண்டு. ஆனால் அரசு நூலகங்களை தமிழக அரசு மேம்படுத்த வேண்டியுள்ளது. கடந்த நான்காண்டுகளாக நூலகத்துறை புதிய நூல்கள் எதுவும் வாங்கவில்லை.
பல அரசு நூலகங்கள் பழைய புத்தகக் கடை போலவே உள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பதிப்பகங்கள், நூலகத்துறை நூல்கள் வாங்குவதை நம்பியே உள்ளன. விரைவில் பிரமாண்டமாக தொடங்க இருக்கும் தமிழ் அறிவுத்தளத்தின் அற்புத அடையாளமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்காக நூல்கள் வாங்கும் – அதே நேரத்தில் தமிழகத்தின் அண்ணா பஞ்சாயத்து நூலகங்கள் உட்பட யாவற்றிற்கும் புதிய நூல்களை வாங்கலாமே. கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு தனியே நிதி ஒதுக்கீடு செய்தால் நன்றாக இருக்கும்.
பொது நூலகத்துறை பட்ஜெட்டை அதைநோக்கித் திருப்பிவிடுவது சரியா எனும் கேள்வியும் எழுகிறது. எது எப்படியோ ஒரு நூலகம் மூடப்படுகிறது என்பது நம் சமூகத்தின் அவலநிலையையே எடுத்துக்காட்டுகிறது. நூலகம் ஒரு அறிவுச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம். வெறும் கைபேசி வாட்ஸ் – அப் சமூகமாய் நாம் சுருங்கி அழிவை நோக்கி – பிரச்சார விளம்பரச் சுழலில் சிக்கி உழல்வதைத்தான் தியாகு நூலகம் மூடப்படுவது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தியாகு நூலகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழக நூலகத்துறை தமிழகம் முழுதும் உள்ள நூலகங்களை மேம்படுத்தி வாசிப்பை ஒரு இயக்கமாக்க வேண்டும்.
