ஜெ.பி. ஜோஸ்ஃபின் பாபா
மீராவின் கதையில் பெண்களின் பிரச்சனைகள் முக்கியமாகக் கையாளப்பட்டுள்ளது. கே.ஆர்.மீராவின் படைப்பு உலகத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் நிறைந்து இருப்பினும், அக்கதைகள் பெண்ணிய எல்லைக்கு அப்பாற்பட்டது. பாரம்பரியத்துடனும் அதிகாரத்துடனும் போராடும் மீராவின் பெண் கதாபாத்திரங்கள் பல வேளைகளில் இங்கு நிலவும் சமூகம் மற்றும் குடும்பச் சிக்கலில் இருந்து விடுதலை தேடுவது, அல்லது பதிலுரைப்பது என கதையை நகர்த்தி இருப்பார்.

இதில் மீராவின் குறு நாவலான ’மீரா சாது’ முக்கியமான கதையாகும். உயர் கணினி கல்வி பெற்ற பெண் தனது காதலால், காதல் கணவன் பிடியில் ஒடுங்கிப் போவதும், கணவரே உலகம் என்று நினைத்து இருந்தவள் எதிர்கொண்ட துரோகம், மென்மையான துளசி என்ற பெண்ணை கொடூரமாக மாற்றுகிறது. இரு குழந்தைகளின் தாய் ஆன பின்பு , வேறு பெண் உறவை நாடிய கணவனைத் தண்டிக்க, அவன் குழந்தைகளைக் கொலை செய்வதுடன், தன் கணவன் உயிரோடு இருக்கும் போதே தன்னை விதவைக் கோலம் பூண்டு, மொட்டையடித்து மீரா சாதுவாக மாறிய துளசியின் கதை வாசகர்களை மிரட்சியடையச் செய்கிறது. மத நம்பிக்கையின் பெயரிலுள்ள சமூக அவலத்தையும், விதவை என்ற நிலையில் பெண்களுக்கு நிகழும் அநீதியையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க மறக்கவில்லை மீரா.
முன்னும் பின்னுமாக நகரும் பாணியில் சொல்லப்படும் இக்கதையில், துளசி, தன்னைத்தானே தண்டிக்க விரும்புவதுடன் கணவனைத் தண்டிப்பதில் ஒரு வன்முறையான ஆனந்தமும் அடைகிறதைக் காண்கிறோம். காதல் ஒரு பெண்ணை உயிர்ப்புடன் வைப்பது மாதிரியே, அவளை வெறுப்பின் உச்சத்தில் கொலைகாரியாக மனப்பிறழ்வு கொண்டவள் ஆவதுடன், அவளைச் சார்ந்து இருப்பவர்களின் அழிவாகவும், குடும்பங்களின் அழிவாகவும் முடிகிறது கதை. மீராவின் கணவன் மாதவ் தன் தவறை உணர்ந்து மனந்திரும்பி அவளை விருந்தாவனத்தில் இருந்து திரும்பி அழைத்து வர நினைத்தாலும், இளமையிலே முதுமையைத் தழுவிக் கொண்ட துளசி, கணவனின் அன்பைப் புறக்கணித்துக் கடந்து செல்கிறாள்.

துளசியின் முடிவு வழியாக பெண்களின் அக ஓட்டத்தை வாசகர்கள் மனதில் சேர்க்கிறார் எழுத்தாளர். பெற்றோர்களால் முடிவாகி துளசியை திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்து இருந்த ஆணும், மீராவின் மேலுள்ள பரிவால் விருந்தாவனத்தில் இருந்து மீராவைக் காப்பாற்றி கணவனுடன் சேர்க்க முயல்கிறான். ஆனால் நம்பிக்கைத் துரோகியான கணவருடன் வாழ்வதை விட ஒரு விதவையாக மீரா சாதுவாக கிருஷ்ண பகவானின் பக்தையாகத் தன்னைக் கையளித்து நகர்வதுடன் கதை முடிகிறது. தன்னம்பிக்கை கொண்ட இளம் பெண்ணிலிருந்து பொறாமை கொண்ட நச்சரிக்கும், எப்போதும் சந்தேகப்படும் மனைவியாக , துளசியின் படிப்படியான மன முறிவை இயல்பாகவும் நம்பத் தகுந்ததாகவும் கே.ஆர்.மீரா சித்தரித்திருப்பது சுவாரசியம்.
அதே போல துளசியின் கணவரின் கதாபாத்திரப் படைப்பு இன்னும் சிறப்பானது. மனைவியிடம் அன்பாக இருப்பதாக நடித்துக் கொண்டே பிற பெண்களைத் தேடிச் செல்லும் இயல்பு, குற்ற மனநிலைக்கு வராது பாதிக்கப்பட்ட மனைவியை மேலும் குற்றம் கூறும் இயல்பு என தற்கால ஆண் உலகைச் சிறப்பாகவே சொல்லியிருக்கிறார். “எந்தப் பெண்ணின் காதலையும் நான் மறுக்க மாட்டேன். அது அவளை அழித்துவிடும். என் காதல் ஒரு பெண்ணை மகிழ்விக்கும் என்றால், நான் ஏன் அவளை மறுக்க வேண்டும்? உனக்கு புரியவில்லை துளசி. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருபோதும் நேசிக்கப்படவில்லை. அவர்கள் தந்தைகள், கணவர்கள் அல்லது அன்பானவர்களால் காதல் மறுக்கப்பட்டனர். அவர்களுக்கு என் அன்பை வழங்கினேன்.
என்னுடைய இந்த உடலை ஒரு நாள் எறும்புகளும் புழுக்களும் தின்றுவிடும். அது இன்னொரு மனிதனுக்குப் பயன்படும் என்றால், நான் ஏன் மறுக்க வேண்டும்? என்ற கணவனின் சொல்லாடலுக்கு முன்பு, காதலியாக இருக்கும் போது மாதவனுக்கு இருந்த 27 முன்னாள் காதலிகள் பற்றி அறிந்தும் பெரிது படுத்தாத, துளசியால் திருமணம் முடிந்த பின்பு கணவன் வேறு உறவுகளைத் தேடும்போது, கலங்கி, சுயநிலையை, தன்னுடைய எல்லாத் தகுதிகளையும் மறந்து மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள். இருப்பினும் கதையில் காதல், காமத்தின் ஒரு மருந்தாகச் செயல்படுகிறது. ஆனால் துளசிக்கோ மாதவனுக்கோ அது விமோசனம் தராது அவலமாக முடிந்துவிடுகிறது. கதாப்பாத்திரப் பெயர்களில் கூட மீரா பொருட்களை உள்ளடக்கி வைத்து உள்ளார்.
துளசி முடிவில் கண்ணனைத் தேடி விருந்தாவனத்தில் சரணாகதி ஆவதும், மாதவன் பெயரில் புராண கதைப்பாத்திரத்தையும் இணைத்த விதம் சிறப்பு. இயல்புக்கு மீறிய செயலால் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டிய துளசி என்ற கதா பாத்திரத்தை, இந்தியாவில் உள்ள விதவைகள் நகரம் என்று அறியப்படும் பிருந்தாவத்திற்கு அனுப்பி, கிருஷ்ணன் பெயரால் பெண்கள் மையல் கொண்டு இருக்கும் காதல், ராதா, மீரா என்ற விளக்கம் ஊடாக பெண்களின் ஆண்கள் மேலுள்ள கண் மூடித்தனமான காதல், அவர்கள் முடிவு என சுவாரசியமாக திகில் கொள்ளும் விதம் கதையை நகர்த்தி இருப்பது சுவாரசியம்.
மீராவின் குறிப்பிடத்தக்க அடுத்த நாவல் யூதாசின் நற்செய்திகள். ஏரிகள் மற்றும் ஆறுகளில் இருந்து சடலங்களை மீட்டெடுக்கும் யூதாஸ் என்ற இளைஞன். “பிணவறை போன்ற தோற்றமளிக்கும், ஜன்னல் இல்லாத குடிசையில்” வாழும் அலைந்து திரிபவரான முன்னாள் நக்சலைட் யூதாஸ். இவன் மீது தீராத காதல் கொண்ட பிரேமாவின் கண்களால் சொல்லப்பட்ட நாவல் இது. நாவல் இரண்டு தசாப்த காலங்களில் நடந்த சம்பவங்கள் ஊடாகச் செல்கிறது.
இளம் பெண்ணின் வெறித்தனமான காதலுக்கான வேட்கையில் அவள் தொடர்ந்து தேடிச் செல்லும் நக்சல். காவலதிகாரியாக இருந்த தனது தகப்பன் மேல் இருந்த வெறுப்பின் மறுபக்கமாக நக்சல் உடன் வெறித்தனமாகக் காதல் செய்து 20 வருடம் கடந்த நிலையிலும் அந்த ஆளிடம் சென்றடைகிறாள் பிரேமா. காவல்துறையின் அட்டூழியங்கள், அரசு இயந்திரத்தின் கொடூரமான முகம், காட்டிக்கொடுப்பின் விலை மற்றும் தியாகத்தின் உணர்வு ஆகியவற்றின் பின் விளைவுகள் பற்றிச் சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை இது.
கேரளாவில் நடந்த சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு இக்கதையை புனைந்துள்ளார் கே ஆர். அக்காலம் பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்த கொடூர போலிஸ் அதிகாரி ஜெயராம் படிக்கல் பெயரையும் குறிப்பிடத் தயங்கவில்லை. ஆனால் அவரவர் நியாயங்களை அவரவர் பார்வையில் இருந்து தர்க்க ரீதியாக விசாரணை செய்துள்ளார்.
அத்துடன் கதையிலுள்ள பெண் கதாபாத்திரங்களின் படைப்பு சிலிப்பூட்டும் விதமாக ஆளுமையான, ஆச்சரியம் தருவதாக இருந்தது.
பெண்ணியம் , தலித்தியம், கம்யூனிசம்,முற்போக்கு என எந்த வரையறைக்குள்ளும் நிறுத்த இயலாது, எல்லா நிலைகளிலும் வியாபித்து இருந்தது பெண்கள் கதாப்பாத்திர வெளி. எப்படி நக்சல் ஆக இருந்த யூதாசின் தோழி அரசின் அதிகாரப் பிடியில் கொல்லப்பட்டாளோ, அதற்கு எந்த குறைவும் இல்லாது தற்கால அரசியல் விடிவுகளுக்காகப் போராடின சுனந்தா கொல்லப்பட்ட சம்பவம் வழியாக காலம் மாறினாலும் மனித உரிமைகள் பறிபோவதும், அவர்கள் அவலமான நிலையில் தொடர்வதும் அதிகார மையம் அதே காழ்ப்புணர்ச்சியுடன் மக்களை வேட்டையாடுவதையும் மிகவும் எளிமையான கதை சொல்லல் வழியாக வாசகர்களைச் சென்றடைய வைத்துள்ளார்.
விவிலியத்தில் காணப்படும் யூதாஸ் உடன் நக்சல் ஆன யூதாஸ் கதாபாத்திரம் பொருத்திய விதம் சிறப்பு. கிறிஸ்து, ‘வேண்டாம்’ என்று தவிர்த்து விலகியும், அவரைப் பின்தொடர்ந்த மேரி என்ற பெண்ணை நினைவுபடுத்தியது பிரேமா கதாபாத்திரம்.
112 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் எதிர் வெளியீடு மூலம் வெளிவந்துள்ளது. விலை ரூ.200. இதன் மொழியாக்கத்தை எம். செந்தில் குமார் செய்துள்ளார்.
கே.ஆர் மீராவின் பெருவாரியான கதைகளில் தமிழர்கள் தவிர்க்க இயலாத கதாபாத்திரங்களாக இருப்பதைக் கவனிக்கலாம். தமிழர்களைப் பற்றிய எழுத்தாளரின் பார்வை கேரளப் பொதுப் புத்தியோடு இணைந்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பாண்டி, தமிழன், கறுத்த, தடித்த, சிவத்த கண்கள் போன்ற வார்த்தைகளால் தமிழர்களை ஒரு வகை வன்மத்துடனே அடையாளப்படுத்தி இருக்கிறார்.
ஒருவேளை கேரள வாசகர்களுக்கு எழுதியதால் அப்படியோ என்றும் தோன்றுகிறது. இருப்பினும் புதிய தலைமுறை வாசகர்களையும் மீராவின் கதைகள் ஊடாக தமிழர்களை அடையாளப்படுத்தும் பாங்கு கேள்விக்கு உட்படுத்தும் நிலையில் தான் உள்ளது.
கருப்பு தமிழர்களோடு இணைந்தது மட்டும் தானா? தடித்தவர்கள் மலையாளியாக இருப்பது இல்லையா? வரலாற்றைத் திறம்பட எழுதத் தெரிந்த மீராவிற்கு ‘தமிழன்’ என்ற சொல்லாடலில் துவங்கி தமிழரை அடையாளப்படுத்தலில் உள்ள மனச் சிக்கல் என்னவாக இருக்கும் என்பது நெருடலாகத் தான் உள்ளது.
மீராவின் இலக்கியப் படைப்பு தமிழ் இனம் சார்ந்த பொதுப்புத்தியில் இருந்து விலகாது இருப்பதன் காரணத்தைக் கேள்விகளோடு அவரைப் பின்தொடரும் இனம், மொழி சார்ந்த துவேஷத்தை எழுத்து ஊடாக மனிதர்களில் கடத்துவது, நீடித்த ஒரு தாக்கத்தை சமூகத்திற்குள் நிலைநாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.