நேர்காணல்:
திலகவதி I.P.S
சந்திப்பு : கிருஷாங்கினி
பிரேமா இரவிச்சந்திரன்
தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி அவர்கள், அந்தப் பணியில் இணைந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆனதையொட்டி எடுத்த நேர்காணல் இது. இலக்கியவாதியான இவர் பன்முகத்தன்மை கொண்டவர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர் எனும் அடையாளங்களைக் கொண்டவர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூற்கள் படைத்துள்ளார்.
கல்வி மறுக்கப்பட்டு வீட்டிலேயே பெண்கள் முடக்கப்பட்ட காலமாக அவர் பிறந்த 1952ஆம் ஆண்டு இருந்தது. இன்றைக்கும் கல்வியில் பின்தங்கியிருக்கும் அவர் பிறந்த ஊரான தர்மபுரி மாவட்டத்தின் நிலைமை அக்காலங்களில் மேலும் மோசமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நாட்டிற்காக உழைத்த ராணுவ வீரருடைய ஒரே செல்ல மகள் திலகவதி ஐபிஎஸ் அவர்கள், தந்தையால் தட்டிக் கொடுத்து சுதந்திரமாக வளர்க்கப்பட்டவர்.

கல்வியில் சிறந்து விளங்கிய அவருக்கு, இந்தியக் காவல்துறையின் உயர்ந்த பதவிக்கு கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. இவருக்கு முன்பு வேறெந்தப் பெண்ணும் அப்பணியைத் துணிவோடு தேர்ந்தெடுத்துக்கொள்ள முயலாவிட்டாலும் திலகவதி அதை அப்படியே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். தனது வாழ்க்கையில் அதுவரை அவர் சந்தித்திருந்த துயரங்களையும் சவால்களையும் துணிவு ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு சமாளித்தவரான இவர், காவல்துறையில் சவால்களை எதிர்கொண்ட பொழுதும் அதே துணிவோடு தன் நேர்கொண்ட பார்வையால் அவற்றை எதிர்த்து நின்று கடமையைச் செய்தவர். வழுக்கு மரம் ஏறுகின்ற விளையாட்டில்கூட முதன்முதலில் ஏறுபவன் அதிகப்படியான சறுக்கல்களை சமாளிக்க வேண்டி வரும்.
முதலாவது பாதை அமைப்பவர்களும் முதலில் அதில் பயணிப்பவர்களும் அதிக சோதனைகளையும் காயங்களையும் அபாயங்களையும் எதிர்கொள்வது இயல்பு.இவருடைய அனுபவமும் அதுவே. தமிழகத்தின் முதல் காவல்துறை பெண் அதிகாரியாகப் பணியாற்றியபொழுது, தான் கடந்து வந்த பாதையில் விரவிக் கிடந்த முட்களைத் தாங்கியவராக அறம் வழுவாமல் தன் சமுதாயக் கடமையை மக்களுக்கான பணியாக ஆற்றி வந்தவர்.
அரசுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அந்த அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியாகவே மாறிப்போவதைக் காண்கிறோம். தங்களுடைய சுயத்தைத் தொலைத்துவிட்டு சூழலுக்குப் பலியாகிறவர்களே அநேகர். திலகவதி இத்தகையவர்களிலிருந்து வேறுபட்டவராக இருக்கிறார். சிறுமியாக இருந்தபோதே தனக்கு சரியெனப்பட்டதை நடத்திக்காட்டும் தெளிவு அவருக்கு இருந்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக நூலகத்திற்குப் பெண்கள் போவதென்பது நினைத்துக்கூடப் பார்க்கப்படாத அறுபதுகளில், கல்வியில் பின்தங்கிய கிராமமான தர்மபுரியில் வாழ்ந்தபோதும்கூட சிறுவயதிலேயே நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தனக்கானதொரு தனி விருப்பமாகத் தொடர்ந்திருக்கிறார். இலக்கிய ஆர்வத்தால் படைப்பாளராக உருப்பெற்று முதலில் கவிதைகளை மட்டுமே எழுதி வந்தவர் தொடர்ந்து கதைகளையும் கட்டுரைகளையும் நாவல்களையும் படைக்கலானார். சிறந்த பிற மொழிப் படைப்புகளை, நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்..
தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய அரும் பணியைச் சிறப்பிக்கும் விதமாக உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருதினை தனது ‘கல்மரம்’ நாவலுக்காகப் பெற்றிருக்கிறார். தன் வளமான அனுபவங்களின் பின்னணியைக்கொண்டு, இலக்கியங்கள் படைத்து அவர் ஆற்றும் பணியைப் பலரும் அறிந்து பயன்பட அவருடன் நிகழ்த்திய நேர்காணல். சாகித்ய அகாதெமி இவருடைய மொழிபெயா்ப்பு நாவல்களை வெளியிட்டிருக்கிறது.
உங்கள் இளம் வயதிலேயே வாசிப்பு தொடங்கி விட்டதா? அப்படியென்றால் அதற்குக் காரணம் குடும்பமா? பள்ளியா?
பள்ளிக் காலங்களில் எனது பெற்றோர் அவர்களது பணியின் காரணமாக வீட்டிலிருக்கும் நேரம் குறைவாகவே இருந்தது.
எங்களோடு தங்கியிருந்த எனது பெரியம்மா தான் நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்கு எல்லாவிதமான நாட்டார் கதைகளையும் பாடல்களையும் சொல்லி வளர்த்து வந்தார்.
வில்லிபுத்தூரார் பாரதம், மற்றும் ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு அம்மா தாய்மாரே! இன்றைக்கும் சாவு நாளைக்கும் சாவு இருக்குது தலை மேலே! சண்டை முகத்தில் செத்தேனென்றால் ஜல்தி மோட்சமென்று, போர் முனையில் செத்தேனென்றால் புண்ணியம் மிகவுண்டு!’
என்கிற வீர வரிகள் அடங்கிய தேசிங்கு ராஜன் கதை, காத்தவராயன் கதைகள், புலந்திரன் களவு, அல்லி அரசாணி மாலைபோன்ற பற்பல கதைப் பாடல்கள் போன்றவற்றையெல்லாம் அவர் மூலம் கேட்டு வளர்ந்தவள் நான். எனது பத்து வயதிலேயே, ‘பாரதியார் கவிதைகள்’ நூலினை ஆசிரியையான அம்மா எனக்கு கொடுத்திருந்தார். அப்போதிருந்தே பாரதி கவிதைகளைப் படித்துப் படித்தே, அவை தானாகவே என் மனத்தில் பதிந்து போனது. நாட்டுப்பற்றை, சக மனிதர்மீது அன்பை, வாழும் காலத்தைக் கடந்து சிந்திக்கிற திறனை, துணிவை, மனிதர்கள் எல்லோரும் சமம் என்கிற பார்வையை, பாரதியின் படைப்புகளிலிருந்தே நான் கற்றேன்.
“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா!”
எனும் வரிகளே, நான் வாழ்வில் சந்தித்த எண்ணற்ற சிக்கல்களை, துரோகங்களைக் கடந்து வர எனக்குக் கை கொடுத்தது. எதிர்காலத்தில் எனது வாழ்க்கைக்கான ஒரு பிடிமானத்தையும் சோதனைகளை எதிர்கொள்வதற்கான ஆயுதங்களாகவும் அக்கருத்துக்களே என் வாழ்வின் அடித்தளமாயின. இதனைத் தொடர்ந்து பாரதிதாசன், மு. மேத்தா, மீரா, நா. காமராசன், அபி என்று கைக்குக் கிடைத்த கவிதை நூல்களையும், பள்ளு, குறவஞ்சி என்று சுலபமாகப் புரியும் இலக்கியங்களையும் படித்துத் தீர்த்தேன்.
நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது? வாசிப்பு காரணமாக எழுத வந்தீர்களா அல்லது அனுபவம் காரணமாகவா?
அன்றைய நாளில் பிரபலமானவர்களாக இருந்த கல்கி, அகிலன், மீ. பா. சோமு,
நா. பார்த்தசாரதி, விக்ரமன், அரு. ராமநாதன், சாண்டில்யன் ஆகியோருடைய படைப்புகளை என் வீட்டுக்கு அருகில் தங்கியிருந்த நூலகத்துக் பொறுப்பாளராக விளங்கிய ஆசிரியர் மூலமாகப் பெற்றுப் படித்தேன். எங்கள் ஊர் நூலகத்திலிருந்தும் ஏராளமான நூல்களை, குறிப்பாக மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்தேன். அவற்றில் ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு வந்தவை தவிர, பிற இந்திய மொழிகளான வங்காளம், மலையாளம், மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்திருந்த படைப்புகளையெல்லாம் படித்தேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டு விழா மலருக்காக ஒரு சிறுகதையை எழுதினேன். அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழா போன்றவற்றுக்கு நாடகம் எழுதுவது, ஆசிரியர்கள் மாற்றலாகிச் சென்றால் வாழ்த்துக் கவிதை எழுதுவது, ஆல்பம் தயாரிக்கும் பொழுது படங்களுக்குக்கீழே இரண்டு வரிகளில் கவிதை எழுதுவது என்பதாக என் எழுத்து ஒரு விளையாட்டுப்போல் தொடர்ந்தது. அவை பள்ளி, கல்லூரி நோட்டுப் புத்தகங்களில் கரைந்து போனது 1980இல் ‘அலைபுரளும் கரையோரம்’ எனும் என் கவிதைத் தொகுப்பு வந்தது.
நீங்கள் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்ட பிறகு கவிதைகள் படைப்பதை தொடரவில்லையே, ஏன்?
அதன் பிறகு நான் எழுதிய கவிதைத் தொகுதிகளுக்கான கையெழுத்துப் பிரதிகளை அறிவுமிக்க ஒரு கவிஞர் வாங்கிச் சென்று தொலைத்து விட்டார். இரண்டாம் உலகப்போரை எதிர்கொண்ட சூழலில் வாழ்ந்த 102 ரஷ்யப் பெண்கள் எழுதிய கவிதைகளை மொழிபெயர்த்தேன். அப்பாடல்களில் ஒலித்த பெண் குரல்கள் வித்தியாசமானவை. நமது சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கும் பெண் குரல்கள், பிரிவைச் சொல்லி வருந்துவதும், விரைந்து மணமுடிக்க தலைவனிடம் கோருவதும், தலைவன் மீது சந்தேகப்படுவதும், அவனோடு ஊடல் கொள்வதும் என்பதாகவே இருக்கும். இவை பெண்மையின் உணர்வுகள் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் ரஷ்யப் பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் போருக்குப் போகிற இளைஞனைப் பார்த்து அவனது காதலி சொல்கிறாள், ‘நமது உண்மைக் காதலை அத்தனை எண்ணிக்கொண்டு, வாழ்க்கையில் பெண்ணின் உடல் சார்ந்த இன்பம் என்பதை நீ அறியாமலேயே இறந்துவிடாதே! போகும் வழியில் எந்தப் பெண்மீதாவது உனது மனம் ஈடுபட்டால், அவளும் உன்னை நேசித்தால், எனக்குத் துரோகம் செய்வதாக நினைத்துக்கொண்டு அவளைத் தவிர்த்துவிடாதே! நீ போர்க்களத்திற்குப் போகிறாய். அங்கு என்ன நிகழுமோ தெரியாது. ஆகவே நீ உன் பயணத்தில் சந்திக்க நேரும் பெண்ணோடு ஆனந்தமாக இரு’ என்று சொல்லி அனுப்புகிறாள்.
மற்றுமொரு ரஷ்யக் கவிதையில், தாய் மண்ணையும், தேசியக் கொடியையும் மதித்தவளாக ஒரு, கவிஞர், ‘இது எங்கள் மண்! நான் இதை என்ன வேண்டுமானாலும் செய்வேன்! என் காலால் மிதிப்பேன்! என் உயிராக நேசிப்பேன்! இது எங்கள் கொடி. இதை நான் எப்படி வேண்டுமானாலும் சூடிக்கொள்வேன். என் நாட்டின்மீது நான் கொண்ட பற்று அத்தகையது’ என்கிறாள். அந்தக் கவிதைத் தொகுதியை நல்ல இலக்கியவாதியான பெரியவர் கோவேந்தன் அழகிய சிறப்புப் பதிப்பாகக் கொண்டுவர வேண்டுமெனும் எண்ணத்தில் என்னிடமிருந்த கையெழுத்துப் பிரதியை வாங்கிச் சென்றார். பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. அவரும் மறைந்து விட்டார். அதன் பிறகு நான் கவிதையைத் தொடரவும் இல்லை.
பத்திரிகையொன்று சிறுகதை எழுதித் தர கேட்டுக்கொண்ட பொழுது, மதுரையை அடுத்த பகுதிகளில் பிறந்தால் அதைப் பெண் குழந்தை நெல்மணி, கள்ளிப்பால், கோழிக்குழம்பு போன்றவற்றை ஊற்றிக் கொன்ற செய்தியைக் கேட்டு மனம் பதைபதைத்த நிலையில் இருந்தேன். அதையே கருவாகக்கொண்டு, ‘உதைத்தாலும் ஆண்மக்கள்’ எனும் தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். எதிர் வினைகளும் அந்தச் சிறுகதைக்கு கிடைத்த வரவேற்பும் என் கவிதைகளுக்காக நான் பெற்றவற்றைவிட மிகவும் அதிகமாக இருந்தது. எனவே சிறுகதை எனும் வடிவம் பெருவாரியான மக்களைச் சென்றடைந்து அவர்கள் சிந்தனையைத் தூண்டுகிறது என்பதாகப் புரிந்துகொண்டேன்.
ஆகவே அந்த வடிவத்தில் படைப்புகளைத் தரலாமென்று தோன்றியது. தவிர, நாவல், சிறுகதை ஆகிய படைப்புகளின் ஊடே கவிதைகளைப் படைக்கலாம். ஆனால் கவிதைகளில் கதைகளைப் படைப்பதற்கான வாய்ப்பு சரிவராது என்று பட்டது. ஆகவே நானடைந்த கஷ்டங்கள், நானறிந்தவர்களது துன்பங்கள், காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் ஆகியவற்றை என் இளைய தலைமுறை அத்துன்பங்களைத் தவிர்க்கலாமே என இவற்றையெல்லாம் கருவாகக்கொண்டு தொடர்ந்து என் படைப்புகளைப் படைத்தேன்.
கதைகள் எழுதுவதை எவ்வாறு மேம்படுத்திக் கொண்டீர்கள்?
வேலூரில் நான் ஏஎஸ்பி ஆக வேலை பார்த்த போது, கோவி.மணிசேகரன் அவர்களது தலைமையில் நடந்த எழுத்தாளர் நீலவன் அவர்களுடைய சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்கு எனது இலக்கிய ஆர்வம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல் நான் அங்கு அதிகாரியாக இருந்தேன் என்பதற்காக என்னை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்த நூலை ஊன்றிப் படித்து, விழா மேடையில் அதற்கான மதிப்புரையை நான் பேசியபொழுது, என்னிடமிருந்து அவ்வாறான இலக்கியச் சொற்பொழிவை சற்றும் எதிர்பார்த்திராத கோவி மணிசேகரன் அவர்கள் என் வாசிப்பு தீவிரத்தை உணர்ந்துகொண்டார். ‘உங்களால் நல்ல படைப்புகளைத் தரமுடியும்’ என்று சொன்னார். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் பெரியவர் சொல்கிறாரேயென்று ஒரு கருவை மையமாகக் கொண்டு கதையை எழுத ஆரம்பித்தபோது, கதைகளில் இடம்பெறும் களங்களை, மனிதர்களை, சம்பவங்களை, கூர்ந்து கவனித்துப் படைக்கவேண்டியிருப்பதை உணர்ந்தேன். நமது முன்னோர்களான கு.அழகிரிசாமி,எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா, புதுமைப்பித்தன், ஜானகிராமன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், சுஜாதா முதல், மாலன், இந்துமதி, பாலகுமாரன் வரையிலான பல படைப்பாளர்களை ஆழ்ந்து படித்தேன்.
அவர்கள் எழுதுவதற்குக் கையாண்ட விதத்தை மனப்பயிற்சி செய்தேன்.
புகழ்பெற்ற ‘தேவதாஸ்’ நாவலைப் படைக்கும்போது, நாயகனுக்குரிய உயர் பண்புகள், குணநலன்களென எதுவுமே இல்லாதவனான தேவதாஸை, வாசகர்கள் நேசிக்கும் கதைத் தலைவனாக சரத்சந்திரர் எப்படித்தான் செய்தார் என்று அப்படைப்பை அக்குவேறு ஆணி வேறாக அலசி வெகுநுட்பமாக ஆராய்ந்தேன். இத்தகைய ஆழ்ந்த வாசிப்பே என் படைப்புகளுக்கு வலிமை சேர்த்தது.
சிறுகதை, நாவல் என தரம் பிரிக்க எந்த மாதிரியான தளத்தில் செயல்படுகிறீர்கள்?
பெண் சிசுக்கொலையைக் கருவாகக்கொண்டு எழுதியபோது அப்படைப்புக்கு சிறுகதை கச்சிதமான வடிவமாக இருந்தது. கட்டிடத் தொழிலாளா்கள் வாழ்க்கையில் அவர்கள் படும் பாடுகளை என்ன செய்தும் எவ்வளவு உழைத்தும் பொருளாதாரரீதியாக நிறைவு காண முடியாத நிலைமையையும் படைக்க முற்பட்டேன். அத்தொழில் சார்ந்து இயங்கும் பலரையும் சித்தரிக்க விரிவான களம் தேவைப்பட்டது. எனவே அது நாவலானது.
உயர்தர ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணியாற்றும் பெண்ணை உழைக்கும் மகளிரின் வகைமாதிரியாகவும் இசையையே வாழ்க்கையாகக்கொண்டு அங்கு பாட வரும் பெண்ணை லட்சியமே வாழ்க்கை என வாழும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும் எதற்கும் தன்னை இசைவு கொடுத்து வாழ்க்கையில் வெற்றியடைந்து மகிழ்ச்சியாக வாழும் ஒரு பெண்ணை சமரசங்கள் செய்து கொண்டு வாழும் பெண்களுக்கு உதாரணமாகவும் கொண்டு, “பத்தினிப் பெண்” எனும் நாவலை எழுதினேன். பிரசுரகங்களில் அச்சுக் கோர்க்கும் தொழிலில் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் உடல்நலப்பாதிப்புகளுக்கு ஆளாகும் மகளிர் மற்றும் சில ஆடவர் ஆகியோரின் வாழ்க்கைச் சிக்கல்களையும் கருவாகக்கொண்டு, ‘ொப்பன பூமி’ எனும் எனது முதல் நாவலை வெளியிட்டிருந்தேன். எல்லா படைப்புகளுமே கள ஆய்வை அடிப்படையாகக் கொண்டவையே.
மொழிபெயர்ப்பு செய்ய எப்போது ஆரம்பித்தீர்கள்? மொழிபெயர்க்க எது தூண்டுதலாக இருந்தது?
நல்ல ஆங்கில நூல்களை வாசிக்கும்பொழுது அவற்றையெல்லாம் தமிழ் மட்டுமே தெரிந்த நமது மக்களும் படிக்கவேண்டுமென்கிற ஆசை தோன்றும். அதனால் சில நூல்களைத் தமிழில் மட்டுமே மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.
ஏற்கெனவே வங்கமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட வங்கமொழி எழுத்தாளரான விபூதி பூஷண் பந்தோபாத்யாய அவர்களது, ‘அபராஜிதோ’ எனும் நாவல் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றிருந்தது. ஆயினும் அது ஆங்கிலேயர்களுக்கு ஏற்றவாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எனவே அதை மூலநூலிலிருந்தே மொழிபெயர்க்க வேண்டுமென்கிற எண்ணம் கொண்டு சென்னையிலிருக்கும் வங்காளிகளின் சங்கத்தைத் தொடர்பு கொண்டு, பிரகல்ப பட்டாச்சார்யா எனும் ஓர் இளைஞரின் உதவியோடு தினமும் மாலை நேரத்தில் அம்மொழியைக் கற்றுக்கொண்டு, மூல மொழியான வங்காள மொழியிலிருந்து ‘அபராஜிதோ’ எனும் நாவலை நேரடியாக தமிழாக்கம் செய்தேன். அதற்காக நான் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைக்கவேண்டி வந்தது. குா்ரத்துன் ஹதாரின், ‘உதிரும் இலைகளின் ஓசை’ எனும் படைப்பை தமிழாக்கம் செய்யவும் மிக அதிக உழைப்பை செலுத்தவேண்டி வந்தது. இப்படி ஒவ்வொரு நூலின் மொழிபெயர்ப்பு கோரியவற்றையும் கூறினால் அதுவே ஒரு படைப்பாக உருக்கொள்ளும். ஆனால் அவற்றை நான் நேசித்தே செய்தேன்.
எழுத்தில் ஆண், பெண் பேதம் வேண்டுமா? ஆண் எழுத்தில், பெண் எழுத்தில் கருப்பொருள் தேர்வில் வேறுபாடு உண்டா?
இலக்கியத்தில் அப்படியொரு பிரிவு இருக்கவே கூடாது. ஆனால் இவ்வாறாகப் பெண் எழுத்து என்று தனியாக வகை பிரிப்பது, ஆணாதிக்க மனநிலையின் மற்றுமொரு சூழ்ச்சி. பெண்கள் அடுக்களைக்குள், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அடைத்துவைக்கப்பட்ட காலத்தில் பெண்தான் அங்கு பெற்ற அனுபவங்களைப் படைத்தளித்த எழுதும்பொழுது ‘வரதட்சணைக் கொடுமை, குடிகாரக் கணவன், மாமியார் கொடுமை, சமையல் குறிப்பு அடக்கியதே பெண் எழுத்து’ என்று இழிவாகவும் கிண்டலாகவும் சொன்னார்கள், ‘மேதாவிகள்’. இதில் என்ன நியாயம் இருக்கிறது. இதுபோன்றவற்றை எழுதுகிறாள்.
வாஸந்தி அவர்கள், அவர் காலத்தின் அரசியல் சூழலில், பற்றி எரிகின்ற பிரச்சனைகளாக யாருமே தொட அஞ்சும் சங்கதிகளை நாவலாக, கட்டுரையாக எழுதினார்.. 1983ஆம் ஆண்டுகளில் ஈழப்போர் வெடித்து ஏராளமான தமிழர்கள் இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் புகுந்த நேரத்தில், ‘நிற்க நிழல் வேண்டும்’ என்கிற தொடரினை எழுதினார். கலைஞரின் ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் தங்கள் உரிமைக்காகப் போராடிய பதினெட்டு தொழிலாளர்கள் மாண்டபொழுது, அதனை கருவாகக்கொண்டு அவர் எழுதிய நாவல், ‘இந்தியா டுடே’வில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.
நம்முடைய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு தில்லியில் என்ன நடந்தது என்பதையும் நாவல் ஒன்றில் தொட்டிருக்கிறார். சமகால அரசியலைப் பற்றிய மிகத் துணிச்சலான கருத்துக்களையெல்லாம் தன்னுடைய, ‘பொய் முகங்கள்’ என்ற கதையில் வைத்திருந்தார். இன்று இலக்கிய விவாதங்களிலோ உலகெங்கும் சென்று சொற்பொழிவாற்றி பணமும் புகழும் வாரிக் குவிக்கும் எழுத்தாளர்கள் தம் புகழ், தன் படைப்புகள், தன்னைச் சுற்றிவரும் ரசிகக் குஞ்சுகளின் படைப்புகள் பற்றி பேசுவார்கள். வாஸந்தியின் பெயரைக்கூட குறிப்பிட மாட்டார்கள். அவர் மட்டுமல்ல அவருக்கு முந்தைய பிந்தைய பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேச மாட்டார்கள். பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை “கதை சொல்லிகள்” தீண்ட மாட்டார்கள். அவா்களைப் பொருத்தவரை எழுத்தும் இலக்கியமும் ஆண்கள் பணி.
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் கணவர் பொறியாளராக இருந்தபோது பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். அப்போது ஊட்டியில் வாழ்ந்து வந்த படுகர் இனப் பழங்குடிகளோடு பழகி அவர்களது பிரச்சனைகளை அறிந்து, அவற்றையும் ‘குறிஞ்சித்தேன்‘ எனும் நாவலாக வடித்தார். எட்கர் தர்ஸ்டன் அவர்கள் எழுதிய பழங்குடிகள் பற்றிய நூலான, ‘குலங்களும் குடிகளும்’ எனும் புத்தகத்தில் படகர் இனம்பற்றி அவர் சொல்லியிருக்கின்ற பல தகவல்கள் தவறாக இருக்கின்றன என்று ராஜம்கிருஷ்ணன் எனக்குச் சொன்னார். ஏனெனில் மொழி தெரியாத மக்களோடு தொடர்புகொள்வதற்கு எட்கா் தர்ஸ்டன் தனக்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்ற கிராம அதிகாரி, வட்டாட்சியர் போன்றவர்கள் மூலமாகத் தெரிந்துகொண்டு அவர்கள் தங்கள் பார்வையில் எதைக்கண்டு என்ன தெரிவித்தார்களோ அவற்றையே பதிய வைத்திருக்கிறார். நீலகிரி மாவட்ட கெசட்டிலும் அப்படியே பதிவாகியிருக்கிறது என்பதையும் ‘குறிஞ்சித்தேன்’ நூலிலிருந்து அறிய முடிகிறது.
இதனால் ஏற்பட்ட தவறுகளும் அப்படியே பதிவாகி இருக்கிறது. நேரடிக் களஆய்வில் இறங்கி எழுதப்பட்ட நூலான குறிஞ்சித்தேனிலுள்ள படகர் வாழ்வுபற்றிய பதிவுகள் எட்க்கர் தர்ஸ்டன் நூலில் காணப்படுவனவைவிட உண்மையானவை. அவருடைய பல நூல்கள் ஆய்வுக்கொப்பான கள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றையும் நினைப்பாரில்லை.
எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் அவர்களின் இறுதிக் காலத்தில் அவருடன் இணைந்திருந்த பேராசிரியை பாரதி சந்துரு போன்ற பல முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர். உயிரோடு இருக்கும்போது அவருடைய நூல்களை நாட்டுடைமையாக்க முடியாது என்ற விதியைச் சொல்லி மறுக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. அப்போது கு.ப.ராவின் தங்கை கு.ப. சேது அம்மாள் உயிரோடு இருக்கும்போதே அவருடைய எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற முன்னுதாரணத்தைக் காட்டி ராஜம்கிருஷ்ணன் நூல்களை நாட்டுடைமையாக்க முடிந்தது. அந்த நிகழ்ச்சி ராஜம்கிருஷ்ணனுக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதை நாம் அனைவரும் அறிவோம். ராஜம்கிருஷ்ணனுடனான உங்கள் தொடர்பு பற்றி சொல்லுங்கள்.
நான் காவல்துறைப் பணிக்கு வந்த பிறகு, நான் பணிபுரிந்த இடங்கள் மற்றும் பணி நிமித்தமாகப் பயணித்த இடங்களிலிருந்த மூத்த எழுத்தாளர்களை மிகுந்த ஆர்வத்துடன் சந்திப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தேன்.
திருவனந்தபுரத்தில் நகுலனையும், நாகர்கோவிலில் சுந்தரராமசாமியையும், கும்பகோணத்தில் எம்.வி.வெங்கட்ராம், தேனுகா ஆகியோரையும் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலான எழுத்தாளர்களை சென்னையில்தான் சந்தித்தேன்.
அசோகமித்திரன், ல. சா. ராமாமிர்தம், சூடாமணி, ராஜம்கிருஷ்ணன், அனுராதாரமணன் என்று பலரையும் சந்தித்தேன். நான் ராஜம்கிருஷ்ணன் அவர்களை சந்தித்தபோது அவர் தாம்பரத்திற்கு அருகில் ஒரு சௌகரியமான பங்களாவில் வசித்து வந்தார். அவரும் அவருடைய கணவர் மட்டும்தான் அந்தப் பங்களாவில் இருந்தார்கள். அன்பான கணவர், உதவிக்குப் பணியாட்கள், தன்னைச் சூழ்ந்து புத்தகங்கள், எந்நேரமும் எழுத்து, மேடைப்பேச்சு என்பவராக, மாமரங்கள் அமைந்து சோலைபோல இருக்கும் இல்லத்தில் ஒரு மகாராணிபோல மனம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
கணவரின் மறைவுக்குப் பிறகு உதவிக்கென்று வந்தவர்களால் பொருளாதாரரீதியாக ஏமாற்றப்பட்டு கோடிக்கணக்கான மதிப்புடைய அந்தப் பெரிய பங்களாவை சில லட்சங்களுக்கு விற்றதாகக் காட்டப்பட்ட பொய்க்கணக்குகளால் கையிருப்பு வீழ்ந்து கட்டாய வறுமைக்குள் தள்ளப்பட்டார்.
திருவான்மியூர் பக்கத்தில் மிகப்பெரிய சாக்கடை ஓடுகின்ற ஒரு சின்னஞ்சிறிய வீட்டில்தான் அதன் பிறகு அவரைப் பார்த்தேன். அங்கிருந்த அவரது இறுதிக் காலம் வலி மிகுந்ததாக இருந்தது. உடல்நலமும் பாதிப்புக்கு உள்ளானது. எனவே மூத்த பெண்களுக்கான அமைப்பான, ‘விஸ்ராந்தி’யில் சேர்த்தோம். அங்கிருந்து அவசர சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டுவர நேர்ந்தது. அதன் பிறகு திருமதி கனிமொழி கருணாநிதி, ஊடகவியலாளர் சிகாமணி, டாக்டர். மல்லிகேஸ்வரர் எனப் பலரும் உதவிக்கு வந்தார்கள். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசும் உதவியது. அங்கிருந்தே அவர் இயற்கை எய்தினார். தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாகத் தந்தார். கண்ணெதிரிலேயே சிறப்பாக வாழ்ந்து சாகித்ய அகாதெமி, பாரதிய பாஷா பரிஷத் போன்ற ஏராளமான உயரிய விருதுகளைப் பெற்ற ஒருவர் இறுதியில் இந்த சூழலில் தன் உயிரை இழந்தார்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார்? உலக எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழில் எடுத்துக்கொண்டால் பாரதியார், பாரதிதாசன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களையும், இந்தியாவின் பிற மொழிகளான கன்னடத்தில் சிவராம கரந்த்,யூ.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட், எஸ். எல். பைரப்பா, பூரண சந்திர தேஜஸ்வி, சசி தேஷ் பாண்டே, ஷோபா, நம்பீஸன், வைதேகி, சாரா அபுபக்கர், தெலுங்கில் முப்பாளம் ரங்கநாயகி அம்மா, வாசிரெட்டி சீதாதேவி, வோல்கா, வங்காளத்தில் தாகூர், சரத்சந்திரர், சிர்ஷேந்து முகோபத்தியாயா, விபூதி பூஷண் பானர்ஜி, அமிதவ்கோஷ், மலையாளத்தில் தகழி, கேசவ்தேவ் பால்சக்கரியா, எம்.டி.வாசுதேவன் நாயர், ஹிந்தியில் நிர்மல்குமார் வர்மா பிரேம்சந்த், பயண இலக்கியங்களில் வில்லியம் டால்ரிம்பிள், காடுகள், விலங்குகள் பற்றிய ஜிம்கார்பெட்டின் படைப்புகள் ஆகியவற்றை விரும்பிப் படித்திருக்கிறேன்.
நீங்கள், ‘அம்ருதா’ என்ற மாத சிற்றிதழைக் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். சிற்றிதழ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவ்வப்போது மடைமாற்றியதில் சிற்றிதழ்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் அந்த சிற்றிதழ்கள் எழுபதுகளில் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் இது அடிதடியாகவும் சண்டையிலும் வன்முறையிலும்கூட முடிந்தது. ஆகவே இவ்வாறான குழு மனப்பான்மைக்கு அப்பாற்பட்டு, நல்ல இலக்கியத்தை வளர்க்கவும் நல்ல இலக்கியவாதிகளை அடையாளம் காணவும் ஆவல் கொண்டேன். அதற்காகவே அம்ருதா எனும் கலை இலக்கிய சமூக மேம்பாட்டு மாத இதழாக அதைக் கொண்டுவர விரும்பினேன்.
என் மகன் டாக்டர் பிரபு திலக்கின் உதவியாலும் ஒத்துழைப்பாலும் அது சாத்தியமாயிற்று. ஓர் ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதற்கு புதிய எழுத்தாளர்களுக்கு பெரும்பாலான வாய்ப்பினைக் கொடுக்கும் விதமாக என் படைப்புகளைத் தவிர்த்துவிட்டு இவ்விதழை நடத்தி வருகிறேன். படைப்பாற்றல் மிக்க கல்லூரி மாணவர்கள் பிற்காலத்தில் என்ன ஆகிறார்களென்றே தெரிவதில்லை. இலக்கிய வெள்ளப் பாய்ச்சலில் நீந்தி கரையேறத் தெரியாமல் இருப்பவர்களைக் கண்டடைந்து ஊக்குவிக்கவேண்டுமென்கிற எண்ணமும் ‘அம்ருதா’ இதழை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது.
வியாபார நோக்கம் இல்லாமல் ஒரு செயலைச் செய்யும்போது அதில் ஏற்றத்தாழ்வுகளும் உண்டாகும் அல்லவா? அப்போது மனச்சோர்வு ஏற்படும்போது உங்களை உற்சாகப்படுத்தும் சக்தி எது?
எனது லட்சியங்களும் எதார்த்தங்களும் மோதும்பொழுது எதார்த்தம் வென்று மனச்சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. தமிழ் இலக்கியம் வாழ வேண்டுமென்றால் நல்ல இலக்கியம் படைக்கின்றவர்கள் வாழவேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அம்ருதா பதிப்பகத்தைப் பொருத்தவரை நல்ல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். அவற்றை நிறைய பேரிடம் கொண்டுசேர்ப்பதில் சிரமமிருக்கிறது.
ஏராளமான பதிப்பகங்கள் வந்துவிட்ட நிலையில் பதிப்பகத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் பெரிய அளவில் வருமானம் ஈட்டி முன்னிலையில் இருக்கிறார்களென்றாலும், அவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது அனைவருக்கும் சாத்தியமானதாக இருக்கவில்லை. இவற்றையெல்லாம் எப்படி மாற்றுவது என்கிற ஏக்கமும் இருந்துகொண்டிருக்கிறது.
பதிப்பகம் அமைந்திருக்கும் இடத்தை வாடகைக்கு விட்டாலே கணிசமானதொரு தொகை கிடைக்குமென்கிற நிலையில், நஷ்டத்திற்கென்றே வருடக் கணக்கில் இதைத் தொடர்ந்து நடத்துவது தேவையா என்ற கேள்வியை, என் நலத்தில் நாட்டமுள்ள நண்பர்களும், வீட்டினரும் அடிக்கடி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சிறுகதை எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகளைத் தேர்வு செய்து அதை, ‘முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறீர்கள். அதில் பல எழுத்தாளர்களின் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. எந்தச் சிறுகதை எழுத்தாளரையும்பற்றித் தெரிந்துகொள்ள அது மிகவும் உபயோகமாக இருக்கிறது. அந்த எண்ணம் தோன்றியது எப்போது? எப்படி? இதற்கு முன்னோடி யாராவது இருக்கிறார்களா?
நாவல் சிறுகதை படிக்கவேண்டுமென்கிற விருப்பமுள்ளவர்கள்கூட தொடர்ந்து படிப்பதை சாத்தியமாக்க முடியாமல் வேகமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு கைக்கு அடக்கமாக இருக்கும்படியும் சுலபமாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் படிக்கின்ற விதத்தில் ஒரு படைப்பினைக் கொடுத்து வாசிப்பின் ருசியை மீட்டெடுக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் வேறு படைப்புகளையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் எண்ணத்தில் தோன்றியதுதான், ‘முத்துக்கள் பத்து’.

இலக்கியத்தில் இன்னமும் இவற்றைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் வைத்திருக்கிறீர்களா?
செய்வதற்காக கையிலெடுத்து நிறைவேறாமல் போன திட்டமாக, ‘கண் திறந்திட வேண்டும்’ எனும் நாவலைப் படைக்கும் முயற்சியைத்தான் சொல்ல வேண்டும். 1935இல் இந்திய அரசுச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகம், ஆந்திரா, கேரளா தவிர ஒரிசா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் சேர்ந்து, தென்னகமானது மெட்ராஸ் பிரசிடென்சியென்று இருந்த காலமது. அந்தக் காலகட்டத்திலிருந்து 1995 வரையிலான தமிழர் வாழ்வை, சமூக அரசியல் கலாச்சார நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு, நாம் என்னென்ன மாற்றங்களைச் சந்தித்திருக்கிறோம், வளர்ச்சியுற்றிருக்கிறோமா அல்லது தேய்மானமடைந்து விட்டோமா என்பதையெல்லாம் சொல்லவேண்டுமென்ற ஆவலில் தொடங்கப்பட்டது இந்தப் படைப்பு.
ஆங்கிலேயரிடமிருந்து நாம் அரசியல் விடுதலை பெற்றோம். ஆனால் அன்றைய தலைவர்களும் நமது அரசியல் அமைப்பும் கூறும் சமூகமாக ஆகியிருக்கிறோமா? சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு அதைத் தொடர்ந்து உருவான தலைவர்கள் எப்படி நாட்டு நலம், மக்கள் நலம், என்பதையே எண்ணித் தன்னலமற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதைப்பற்றிச் சொல்லி, இன்றைய இளைய சமுதாயத்திலிருந்து அத்தகைய தலைவர்கள் உருவாகி வரவேண்டிய உத்வேகத்தைத் தோற்றுவிக்கும் லட்சிய வேட்கையோடு அந்த நாவலை எழுதத் தொடங்கினேன். எழுதத் திட்டமிட்டிருந்த அத்தியாயங்களில் பாதியை எழுதியும் முடித்து விட்டேன்.
முதல் பத்தொன்பது அத்தியாயங்கள் பத்திரிகைத் தொடராகவும் வெளிவந்தது. இதற்காக அன்றைய வரலாற்றையும் அன்று வாழ்ந்த தலைவர்களின் வாழ்க்கையைப்பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். நிறைய பயணங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் என்று என் ஆராய்ச்சி தொடர்ந்தது. அதன் பிறகு நான் தேவதூதர்கள் என்று எண்ணியிருந்த பலர் பல சந்தர்ப்பங்களில் வெறும் அரசியல்வாதிகளாக மட்டுமே இருந்ததை அறிந்தபோது மனம் முடங்கியது. அதன் பிறகு அந்த நாவலைத் தொடர என்னால் முடியவில்லை. மற்றபடி நிறைய சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றிற்குரிய கருப்பொருள்கள் ஒரு கோட்டை விதையாக மனத்திற்குள் கிடக்கிறது. அவை வடிவம் பெற வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைத் தர வேண்டும்.
என் உடல்நிலை அதை அனுமதிக்கும் போது அவற்றைச் செய்யலாமென்று இருக்கிறேன். தவிர, ஆங்கிலத்தில் வரும் நல்ல படைப்புகளையும் மொழிபெயர்க்கப்பட்டு வரும் நல்ல நாவல்களையும் கட்டுரைகளையும் பார்க்கும் போதெல்லாம் அவற்றைத் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டுமென்கிற ஆவல் மேலிடுகிறது. அந்த விதத்தில் சிலவற்றைச் செய்து முடித்து விட்டேன். மேலும் செய்துகொண்டுமிருக்கிறேன்.
தற்கால இலக்கியப் போக்கு, அதன் மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றனவா? அவை நேர்மறை மாற்றங்களா, எதிர்மறை மாற்றங்களா? வாசிப்பு தற்காலத்தில் எப்படி இருக்கிறது? உலகத்தரம், தமிழின் தரம், பிளஸ் என்ன? மைனஸ் என்ன?
இலக்கியப் போக்குகள், அதில் தோன்றியுள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கவையாகவே இருக்கின்றன. இன்றைய தமிழ் இலக்கியம் காத்திரமாகவே இருக்கிறது. ஏராளமானவர்கள் எழுதுகிறார்கள். நிறைய பெண்கள் கடந்த பத்து ஆண்டுகளில் இலக்கியத்தில் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களும் நல்ல பல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். பல துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு விதமான பணியில் இருப்பவர்களும் எழுதுகிறார்கள். இவையெல்லாம் நேர்மறை மாற்றங்களே.
திறமையுள்ள எழுத்தாளரென்றால் திரையுலகிற்குப் போய்தான் ஆகவேண்டுமென்கிற எண்ணம் இன்று பலரையும் பிடித்தாட்டுகிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக சுயமரியாதையை பலி கொடுக்கவும் துதி பாடவும் ஒரு கூட்டமே தயாராகி நிற்கிறதென்பது வருத்தம் தருகிறது. படைப்புகளின் பெருமை பக்க எண்களில் இருப்பதாக நினைத்து, ஆயிரக்கணக்கான பக்கங்களில் தங்கள் படைப்புகளைத் தருவது தங்கள் மேதமையின் அடையாளமென்ற எண்ணமும் நம் காலத்தின் துயரம். இன்று படைக்கப்படும் நாவல்கள் பெருத்துப் பருமனாகும் (obesity) பிணியால் பீடிக்கப்பட்டவையாக இருக்கின்றன. குறுந்தொகையும் வெண்பாவும் குறட்பாவும் தமிழின் பெருமைகள் அல்லவா?
உலக அளவிலும், மாநில, மாவட்ட அளவிலும் நடக்கின்ற புத்தக விழாக்களில் புத்தக விற்பனை திருப்திகரமானதாகவே இருக்கிறது. இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி ,வாசிப்பிற்கு உதவுவதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு கிளாசிக் கிண்டில் கையிலிருந்தால் லட்சக்கணக்கான நூல்கள், ஆயிரக்கணக்கான இதழ்கள் நம் அருகிலேயே இருக்கின்றன என்று பொருள். வசதிக்கேற்ப, தேவைக்கேற்ப படித்துக் கொள்ளலாம்.
கைபேசியில் இருக்கும் செயலிகளில் இலக்கியச் சொற்பொழிவுகள் ஆய்வுரைகள் இவற்றையெல்லாம் வெவ்வேறு விதமான குழுக்கள் அளித்தபடி இருக்கின்றன. உலகத்தரம், தமிழின் தரம் என்று பேச வந்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழின் தரம் உலகத் தரத்தைக் காட்டிலும் ஒரு படி மேலாகவே இருக்கிறதென்பது என் அனுமானம்.
இலக்கியங்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடம் குறைந்திருக்கிறது. இதனை ஏற்படுத்த இளம் பெற்றோர்களது பொறுப்பாக தங்களது கருத்து என்ன?
மாணவர்கள் என்பவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் என்றே அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களும், அவர்களுடைய பெற்றோர்களும் நினைக்கிறார்கள். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கவேண்டுமென்று இன்றைய மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். எங்கேயாவது படித்து, எப்படியாவது நிறைய மதிப்பெண்களை வாங்கி, என்ன செய்தாவது பெரிய வேலைக்குச் சென்று, எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதித்து, விரைவில் பணக்காரனாக வேண்டும். அதுவே வாழ்வில் அவன் பெறும் வெற்றி.
‘வெற்றியின் அடையாளம் பணம்’ என்று பெற்றோர்கள் நினைப்பதால் பொதுவாக வாசிப்பென்பது மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பல பள்ளிகளில் இருக்கும் நூலகங்களின் நிலைமையைக் கண்டால் ரத்தக் கண்ணீர் வரும். இந்த நிலை மாற இளம் பெற்றோர்கள், வாசிப்பென்பது எத்தனை அவசியமானது என்பதைத் தாங்களும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமணி நேரமாவது நூலகத்திற்குச் சென்று மாணவர்கள் படிக்க வேண்டுமென்கிற விதியை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு நிறைய நூல்களைப் படிக்கிற மாணவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டி, மற்ற மாணவர்களும் அவ்வாறு செய்ய வேண்டுமென்கிற ஊக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
சாகித்ய அகாதெமி விருது பெறும் நூல்கள் பெரும்பாலும் நாவல்களாக இருப்பதற்கு காரணம் என்ன?
சாகிதிய அகாதெமிக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்திருக்கிறேன். நான் நடுவராக இருந்த அனுபவத்தில் பார்க்கும்போது கடைசிச் சுற்றுக்கு வருகின்ற பத்து புத்தகங்களில் சில கவிதை நூல்களாக, சில சிறுகதைத் திரட்டுகளாக, மற்றவை நாவல்களாக வருகின்றன. அவற்றில் தேர்வுக்காக ஒவ்வொன்றாகக் கழிக்கும்பொழுது கடைசியாக நிற்பது என்னவோ நாவல்களாக அமைந்து விடுகிறது.
நமது தமிழகத்தில் இலக்கியவாதிகளுக்கு அதனால் வரக்கூடிய பொருளாதாரம் பெரியதாக இல்லையெனும் நிலை நியாயமானதா?
பெரும் பணக்காரர்களும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு பணியில் இருப்பவர்களும் இன்று இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்குப் போராடும் எழுத்தாளர்கள், பெரும்பாலும் இல்லையென்றே தோன்றுகிறது. சிறந்த இலக்கியங்களுக்காக சில தனியார் துறைகள் கொடுக்கின்ற விருதின் தொகை மிக அதிகமாக இருக்கிறது. சாகித்ய அகாடமி விருதின் தொகை சிறிதாக இருந்தாலும் அதன் மதிப்பு மிகப்பெரியது. இலக்கியத்தின் தரத்தை அதனால் பெறும் பணத்தோடு ஒப்பிடவே முடியாது.
ஆங்கிலத்தில் எழுதப்படும் நூல்களுக்கு உலகெங்கும் வாசகர்கள் இருப்பதால் விற்பனை கோடிக்கணக்கில் இருக்கிறது. அதற்கேற்ப ராயல்டி தொகையும் அதிகரிக்கிறது. விற்பனையால் கிடைக்கும் லாபம் அதிகமென்பதால் பதிப்பகத்தினரும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் தொகையை ஊதியமாகக் கொடுக்கிறார்கள். தமிழின் வாசகப் பரப்பு அவ்வளவு பரந்தது அல்ல. நூலை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் பழக்கமும் குறைவுதான் என்பதால் எழுத்தாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானமென்பது ஒப்பீட்டளவில் குறைவாகத் தெரிகிறது.
சிறுகதைகளும் நாவல்களும் சமூகத்தில் ஏதாவது தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக நம்புகிறேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய, ‘அக்னிப் பிரவேசம்’ எனும் சிறுகதை ஒரு பெரிய விவாதத்தைத் தோற்றுவித்தது. தற்செயலாக தனது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தெரிந்து கொண்ட தாய், அவளை குளிக்கவைத்து, அவள் மீது குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி,
‘நீ சுத்தமாயிட்டேடி. உன் மேல கொட்டினேனே, அது ஜலம் இல்லடி. நெருப்புன்னு நினைச்சுக்கோ. உன் மேல இப்போ கறையே இல்லடி. நீ பளிங்குடி. மனசுல அழுக்கிருந்தா தான் தப்பு’. என்று மகளைத் தேற்றுகிறாள். இது அன்றைய பெண் வாழ்வின் பல கேள்விகளுக்கு ஒரு விடையாகத் தொனித்தது.
நவகாளி கலவரத்தின் போது காந்தி சொன்னாரே, “பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்களை, திருமணம் செய்து கொள்ள இளைஞர்கள் முன் வர வேண்டும். அவர்களில் சிலர் கருவுற்றிருக்கிறார்கள். அதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை தேசப்பற்றின் ஓர் அம்சமாகவே பார்க்கிறேன்” என்று அந்தக் குரலும், ‘கற்பு என்றால் கல்போன்று நிலைத்திருக்கும் ஒரு தன்மை, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுதல். இது ஏன் ஆண்களுக்கு இருக்கக் கூடாது?’ என்று பெரியார் சொன்னதும் இதே கருத்துதான். ஜெயகாந்தன், அக்னிப் பிரவேசம் கதை மாந்தர்களை வைத்தே படைத்த, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்‘, ‘கங்கை எங்கே போகிறாள்?’ போன்ற பல படைப்புகள் ஒரு மௌனப் புரட்சியை அந்தக் காலகட்டத்தில் ஏற்படுத்தியது.
இன்றைய காலகட்டத்தில் புதிரை வண்ணார்கள் வாழ்க்கையை மையமாகக்கொண்டு இமையம் எழுதிய, ‘கோவேறு கழுதைகள்‘ என்ற நாவல் கூறும் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ரவிக்குமார் எம்.எல்.ஏ சொன்னதைத் தொடர்ந்து, முதல்வர் அந்த நூலை வாங்கி படித்துப் பார்த்து, புதிரை வண்ணார்களின் வாழ்க்கையைப்பற்றி அறிக்கையைப் பெற்று, சில முடிவுகளை அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிரை வண்ணார்களுக்கான நல வாரியம் அமைக்கப்பட்டது. புதிரை வண்ணார் இனத்திலிருந்து கிட்டதட்ட 12 பேர் கொண்டு அமைக்கப்பட்ட குழுவிடம், அவர்கள் வாழ்க்கையை மேம்படுவதற்கான விதிமுறைகளை அறிக்கையாகத் தரும்படி கோரப்பட்டது. மேலும் புதிரை வண்ணார்கள் பட்டியல் இனத்தவர்கள் என்கிற ஜாதித் சான்றிதழ் பெறுவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இன்றைய சூழலில் எழுத்தாளர்களின் பொறுப்பு என்னவாக இருக்கிறது?
எழுத்தாளன் என்பவன் ஒரு சமூக விஞ்ஞானி. ‘சமூக மேம்பாட்டுக்கான ப்ளூ பிரிண்ட்டை தயாரித்துத் தரும் என்ஜினீயர்’ என்பார் மாக்ஸிம் கார்க்கி. ஒரு சமூகம் எந்த நிலையில் இருந்தாலும் அதைக் காட்டிலும் ஒரு படி மேன்மையான நிலைக்கு அதைக் கொண்டுசெல்ல வேண்டுமென்பதற்காக மானுட வாழ்வை மேலும் இனிமையானதாக, வளமானதாக ஆக்க வேண்டுமென்ற பொறுப்போடு எழுதுபவனே நல்ல இலக்கியவாதி. நாம் வாழும் இந்த நிகழ் காலம் எண்ணில்லா மாற்றங்களுடன் விரைந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.
மனித உறவுகள், உணர்வுகள், காதல், குடும்பம், மனச்சோர்வு, பணிச்சூழல், குழந்தை வளர்ப்பு, முதியோர் வாழ்வு என்று எதை எடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் புறச்சூழல்களின் தாக்கத்தால் மறு வார்ப்புப் பெற்றுவிட்டன. சுற்றுச்சூழல் மாறுபாடுகள், அறிவியல் வளர்ச்சி, தொலைத்தொடர்பு சாதனங்களின் பெருக்கம், ஊடகங்களின் வடிவ மாற்றங்களென்று பலவும் இன்றைய மனித வாழ்வை வேறு வடிவம் கொள்ள வைத்திருக்கின்றன. அதையொட்டி எழக்கூடிய சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் படைப்பிலக்கியம் பதிவு செய்ய வேண்டும்.
இன்றைய கல்வி, பணிச்சூழல் ஆகியவற்றால் ஆண்களும் பெண்களும் இரவு, பகல் பாராமல் கலந்து புழங்கவேண்டியதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஆண், பெண் உறவுகளிடையே ஏற்படக்கூடிய சிக்கல்கள், பெண்களும் ஆண்களும் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நெறிமுறைகள் இவற்றையெல்லாம் கருப்பொருளாக வைத்துப் படைப்புகள் வர வேண்டும்.
குடும்பங்களுக்குள் வன்முறை, சமூகத்தில் வன்முறை, கல்விக்கூடங்களில் வன்முறை, தீவிரவாதம், மத அடிப்படை வாதம், ஜாதிப் பிரிவினைகள், எல்லாப்புறங்களிலும் மலிந்து கிடக்கும் ஊழல் இவையே நம் காலத்தைப் பீடித்திருக்கிற பெரு நோய்கள். இவற்றைக் கடந்து மனிதன் மாண்பு கொண்டவனாக வாழ்வதற்கான மாதிரிகளைப் படைத்தளிப்பது இன்றைய இலக்கியவாதிகளின் பொறுப்பு என்று எண்ணுகிறேன்.