காளிங்கராயன்
’வனத்தின் பச்சிலைச் சாறூறும் கவிச்ச-யினை வரைந்திடும் கலைஞன் வாழ்க்கை மேலும் மேலும் அதிகச் சமநிலையை அடையும்பொழுது அங்கே கலை என்பது முற்றாக மறைந்துபோய் விடுகிறது.’
–எர்னஸ்ட் ஃபிஷர்
எனவேதான் மனித வாழ்க்கை முரண்பாடுகள் நிறைந்த போராட்டமாக இருந்துகொண்டிருக்க, அங்கே கலையும் உயிர்ப்புடன் இயங்குகிறது. அத்தகைய முரண்பாடுகளினூடாக மானுட அன்பை உறுதிபடப் பேசிடும்பொழுது அக்கலையும் இலக்கியமும் மக்களுக்கான ஒன்றாகிவிடுகிறது. நவீன கான்க்ரீட் காடுகளில் இன்று வாழப் பிழைத்துக்கொண்டிருந்தாலும் நினைவில் காடுகளின் எச்சங்களைச் சுமந்தலையும் மிருகங்களாகவே நாம் இருக்கிறோம்.

காடுகளின் மர்மங்கள் நிறைந்த இருண்மையினையும் விடுவிக்க இயலாத அவற்றின் புதிர்களையும்போலத்தான் மனிதர்களின் மன அமைப்பும் அதனூடாக அவர்தம் வாழ்வும் அமைந்திருக்கிறது. காடுகளின் பேரழகும் குறையிருள் ரகசியங்களும் பல தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் கதையாடிகளுக்கு வழங்கி விடுகின்றன. அத்தகைய தொன்மங்களிலிருந்து, நமக்குள் புதைந்துபோன நமது மூப்பன்/மூப்பத்திகளின் ஓர்மைகளைக் கிளறும் ருசி மிகுந்த புனைகதைகளைப் பரிமாறுகின்ற ஓர் மிகச்சிறந்த கதைசொல்லியாக இங்கே தோழர் சாரோன் விளங்குகிறார்.
பெரும்பாலும் காடும் ஊரும் சந்திக்கும் எல்லைக் கிராமத்தில் வாழ்ந்திடும் எளிய மக்களே சாரோனின் கதை மாந்தர்கள். அவர்கள் தமது அடிப்படைத் தேவைகளின் பொருட்டு காட்டிற்குள் சென்று வருகிறார்கள். முயல், கீரி, உடும்பு, எலி என உணவுக்கான சிறுவேட்டைகள்,, தேனெடுக்க, கிழங்கு தோண்ட, காளான் – மூங்குருத்து பறிக்க, விறகு வெட்ட, ஆடுகளை மேய்ப்புக் காட்ட எனத் தமது அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்காகவே காடுகளுடன் உறவாடுகிறவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
வெவ்வேறு கதைகளில் உலவிடும், காளி, தைலு, பிச்சோடன், லவ்சதா போன்றவர்களுக்கு காடுகளுடனான அந்த உறவு நாளடைவில் உயிருடன் இறுகி உறைந்துபோன ஒன்றாகி விடுகிறது. காடு தனக்குள் உருப்பெறுகின்ற ரகசியங்களை அவர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்கிறது. காடு குறித்த பேரறிவுகொண்ட- காட்டினை நேசிக்கும் மாயாவிகளாக, சாகச வேட்டைக்காரர்களாக, மருத்துவர்களாக, வேளாண் காவலர்களாகப் படைத்ததன்மூலம் தமது கதைகளின்வழி குறிஞ்சியின் தலைவனாக/தலைவியாக அவர்களைக் கொண்டாடித் தீர்க்கிறார் சாரோன்.
தொகுப்பின் முதல் சிறுகதையான ‘ஈசல் வேட்டை’, காட்டின் மக்களான காளி-வள்ளி இணையரின் காதலும் வீரமும் நிறைந்த திணை வாழ்க்கையினைப் பலப்பல சட்டகங்களாகக் காட்சிப்படுத்துகிறது. ஊர்க் குடியானவர்களின் பயிர்களை எலி, பாம்பு, கீரி, பன்றிகளிடமிருந்து இருவரும் காவல் காக்கிறார்கள். காட்டின் அற்புத விளைபொருட்களை ஊர்மக்களின் மலிவான பண்டங்களுக்கு மாற்றாகக் கொடுக்கிறார்கள்.
பெரிய பூச்சிக்கடிகளுக்கு (பாம்பு) காட்டு மருந்துகள்கொண்டு மருத்துவம் செய்து குடியானவர்களின் உயிர் காக்கிறார்கள். அத்தகைய தருணங்களில் கையெடுத்துக் கும்பிடும் ஊர்சனம்தான், வள்ளி பாம்பு தீண்டி உயிர் துடிக்கக் கிடக்கும்பொழுது அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றாமல் சாதி வெறி மனநோயாளிகளாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி அவளைக் கொலை செய்கின்றனர். அத்தகைய சாதிய வன்மத்தை சீற்றத்துடன் எதிர்கொள்ளும் காளி தனது நிர்வாணத்தை ஊரின்மீது எறிந்தபடி வள்ளியின் உடலத்தை ஏந்திக் காடு நோக்கிப் போகிறான்.
அதுபோலவே, ஆடுகளுடன் ஆனைக்கன்றினையும் ஓட்டிவந்து பட்டியில் அடைத்து வைக்கும் பிச்சோடன் (கரியோடன்), கணவனையும் பின்னர் நிறைசூலியான செவத்தி எனும் ஆட்டையும் காட்டிற்கே காவு கொடுக்கும் தைலு (ஈத்தை), மாயங்களும், சாகசக் கதைகளும் நிறைந்த லவ்சதாவின் மலங்காட்டு வாழ்க்கை ‘லவ்சதாவும்’… எனக் காட்டின் பச்சிலைகளுடன் அதன் கவிச்சையினையும் கலந்து குகைப் பாறைகளில் வரைந்து காட்டும் ஓர் அற்புத ஓவியக் கலைஞனாகி நமக்குக் கதைகளைச் சொல்லுகிறார் தோழர் சாரோன்.
காடுகளைப்போலவே, சாரோனின் பிற கதைகளும் இதுவரையிலும் சொல்லப்படாத கதைக் களன்களையும் அவற்றின் சொல்லப்படாத கோணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன.பல தலைமுறைகளுக்குச் சோறூட்டிய நெற்களஞ்சியம் காவிரி நீரின்றிக் களராகிப் போன நிலையில் ரியல் எஸ்டேட் வணிகர்களிடம் நிலத்தைத் தாரைவார்க்க மனமில்லாததால் ஒட்டகம் மேய்த்திடக் கானல் நீரோடும் மறுபூமிக்குத் தூக்கியெறியப்பட்ட இளங்கோவின் அவல வாழ்வினைச் சொல்லும் கதை ‘வெயில் நுரைக்கும் இரவுகள்’.
நகரமயமாக்கலில் சுயதொழில் நசிந்து வறுமையினால் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். அங்கே, உழைப்புச் சுரண்டலுடன் அந்தப் பெண்ணின் உடலும் முதலாளியால் பாலியல்ரீதியாக சுரண்டப்படுவதில் குடும்பமே தகர்ந்து போகும் கொடுமையினைப் பதிவு செய்யும் கதை ‘கூச்சலிடும் நினைவுகள்’.
காமத்தின் தன்னின்பத்தில் திளைத்து, தனிமையின் வெம்மையில் கருகிச்சாகும் வாழ்நிலை அப்பனிடமிருந்து மகனுக்குத் தொற்றும் தொடர்சாபமாக எனச் சொல்லும் மணியின் கதை ‘அகவெளி வண்ணங்கள்’.
எல்லாக் கதைகளினூடாகவும் ஆண்டைகளின் – முதலாளிகளின் –குடியானவச் சாதியினரின் உழைப்புச் சுரண்டலையும் சாதிய- ஆணாதிக்க ஒடுக்குதல்களையும் அதற்கு எதிரான அடித்தட்டு மக்களின் எதிர்வினைகளையும் நுட்பமான அரசியலுடன் பதிவு செய்துள்ளார் தோழர் சாரோன். போலவே, கடும் உழைப்பின் வலியினைப்போன்றே அவ்வுழைப்பு தரும் பேராற்றலும் மனமகிழ்வும் காளியின் வேட்டைக்குப் பின்னான பெருமுயக்கத்தின் மூலம் அதன் அழகியலோடு சொல்லப்படுகிறது.
சாரோனின் படைப்புகளில் முதன்மையாக கவனம் கொள்ளத்தக்க பகுதி அறிவியலும் கலாச்சாரத் தொன்மங்களும் சந்திக்கும் புள்ளிகள்தாம். தொன்மங்களும் நம்பிக்கைகளும் காட்டின்–ஊர் மக்களின் வாழ்வனுபவங்கள் சார்ந்து உருவானவையாகும். மாறாக புரோகிதம், பாவ-புண்ணியம், பரிகாரம்… போன்ற பார்ப்பனீய சடங்குகள் சார்ந்த மதநம்பிக்கைகள் அல்ல.

நாகனும் சாரையும் பிணைந்தாடும் தொன்மம். மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் உறவுகொள்ளும் ஆண் பலான ஜன்னி கண்டு இறந்துபோவான், அது ஆம்பளைங்களை முழுங்கிற ஊடு எனும் ஊர்மக்களின் நம்பிக்கை போன்றவை சமூக நடப்பியல் கூறுகளாக ஓர் புனைவுச்சுதந்திர வெளியில் படைப்பாளியால் பதிவுசெய்யப்படுகின்றன. அங்கே தொன்மங்களைப் புனிதமாக்கும் ஆகிருதிகள் எவருமிலர்.
அடுத்ததாக, வேலூர் மாவட்டக் காட்டெல்லைக் கிராமத்தின் வட்டார வழக்குகளும், கவிதையின் செவ்வியல் கூறுகளும் இணைந்த சாரோனின் புதிதான மொழியமைப்பு குறித்துச் சொல்லியே ஆகவேண்டும். அது உயிர்ப்பும் செழுமையும், பலவிடங்களில் இலக்கின் துல்லியத்தையும் கொண்ட நீரோட்டமாகப் பாய்ந்து வந்து நமது உணர்வுகளில் தன்மையினை ஊட்டுகிறது. குறிப்பாக காடு- வேட்டை- தேனெடுத்தல் போன்றவை குறித்த அவரது விவரிப்புகள் நேர்த்திமிக்க ஒளிப்படக் காட்சிகளாய் நம் கண் முன்னே விரிகின்றன. காடுகளில் அவர் விவரிக்கும் நூற்றுக்கணக்கான மரம், செடி, கொடிகள், பூக்களின் பெயர்கள் பெரும் தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன.
• பருந்தைப்போல அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தது வெயில்.
• போகிப் பாறையை ஏறிட்டுப் பார்த்தான். காட்டையே அடைகாக்க ரெக்கை சிலுப்பி நிற்கும் பழுப்புநிறப் பறவையாகத் தெரிந்தது அது.
• தூண்டில் முள்ளை முழுங்கத் தப்பிய முரட்டுக் கெண்டை குளத்து நடுவில் செத்து மிதப்பதைப்போல தனித்து மிதந்து கிடக்கும் பிறை நிலா.
• ஈசல் பிடிக்கும் உடும்பின் நாக்கைப்போல கையை வெளியே நீட்டி பாலை வாங்கிக் கொண்டு கதவடைத்து விட்டாள்.
• சொத்தையெல்லாம் முழுங்கியும் ஊத்துக் காணாத கடும்பாறைக் கெணமாய் எலும்புகளுக்கு நடுவில் கிடந்தது வயிறு.
என சாரோன் எழுதிச் செல்லும் உவமைகளும் ஒப்பீடுகளும் முற்றிலும் புதிய வடிவிலானவை.
இறுதியாக- காடு சார்ந்த-கிராமம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை இழந்து நிற்கிறோம் என்கிற அயர்ச்சியினூடாக நிகழ்காலத்தின் எதார்த்தத்திலிருந்து தப்பித்து ‘பழைமைக்குத் திரும்புதல்’ என்பதாக இல்லாமல், தமது கதைகளின் வழி அம்மாற்றங்களின் வேர்களைத் தேடிக் கண்டடையும் முயற்சியாக சாரோனின் படைப்புகள் அமைந்திருப்பது பெருமகிழ்ச்சியினையும் நிறைவையும் தருகிறது.
இந்நூலைப் பிழைகளேதுமின்றி சிறப்புடன் வடிவமைத்து நம் கைகளில் தந்திருக்கும் எதிர் வெளியீடு அனுஷ்க்கு அன்பும் வாழ்த்துகளும்.