ஜெயபால் இரத்தினம்
தங்களது வேர்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதிலும், அவற்றிற்கான தேடல்களிலும் பெரும் ஈடுபாடு காட்டி வருவதுமான ஓர் எழுச்சி மிக்க சிறப்பான சூழல் இன்று தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகிறது. தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாட்டு விழுமியங்களில் ஒன்று நீத்தார் நினைவு போற்றுதல். அதிலும் குறிப்பாக மக்கள் நலன் காப்பதற்காகப் போராடி வீரமரணம் அடைந்தோர்க்கு கல் நாட்டி வழிபட்டு வருதல் என்பது. தனித்துவமான சிறப்புமிக்கது.

நடுகல் அமைவு மற்றும் அவற்றின் வழிபாட்டு மரபு ஆகியவை காலமாற்றங்களுக்கேற்ப தனது நடைமுறைகளைத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டு, இன்றும் தமிழ் மக்களின் முக்கியச் சடங்குகளில் ஒன்றாய்த் திகழ்ந்து வருகிறது. இந்தப் பழமையான ஆனால் இன்றும் புதுமையான வழிபாட்டின் வரலாற்றை விவரிக்கும் நூலாக மலர்ந்திருக்கிறது ஆதிவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, “ கல்லாகிப் போனவர்கள் “ என்னும் நூல்.
நூலாசிரியர் குறித்து: நூலாசிரியர் திரு வே. பார்த்திபன், திருச்சியைச் சேர்ந்தவர். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் பெருவிருப்பமும் ஆர்வமும் கொண்ட இவர், ஆய்வு நூல்களைக் கற்றறிந்தும், தனிப்பட்ட முறையில் கள ஆய்வுகள் மேற்கொண்டும், நண்பர்களுடன் மரபு நடைபயணங்கள் மேற்கொண்டும் பல வரலாற்றுத் தரவுகளைக் கண்டறிந்து ” திருச்சி பார்த்தி” என்னும் பெயரில் கட்டுரைகள் எழுதி அச்சு ஊடகங்களில் வெளியிட்டும் காட்சி ஊடகங்கள் வாயிலாக உரைகள் நிகழ்த்தியும் வருகிறார். இவரது முதல் நூல் இது.
நூலின் கட்டமைப்பு: தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன் அவர்களது அணிந்துரை யுடனும், மூத்த வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வாளரான புலவர். செ. இராசு அவர்களது பாராட்டுரையுடனும், வரலாற்று ஆய்வாளர்களான இராஜாராம் கோமகன், காந்திராமன், பேராசிரியர் மணிமேகலை ஆகியோர்களது பாராட்டு மற்றும் மதிப்புரைகளுடனும் வெளிவந்திருக்கிறது இந்நூல். ’நடுகற்கள் ஓர் அறிமுகம்’ முதலாக ‘பள்ளிப்படைமரபு’ ஈறாக வெவ்வேறு தலைப்புக்களில், மொத்தம் பதினாறு அத்தியாயங்களாக கல்லாகிப்போனவர்கள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்று அத்தியாயங்களைத் தவிர மற்ற பதின்மூன்று அத்தியாயங்களிலும் ஏரளமான ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
நூலின் உள்ளடக்கம்: இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களில் ஈமச்சின்னங்கள் எழுப்புவது மற்றும் அவற்றை வழிபடுவது என்னும் மரபு பெருங்கற்படைக் காலத்திலேயே தொடங்கிவிட்டது; பொதுவாக ஈமச்சின்னங்கள், நெடுங்கல், குத்துக்கல், கற்குவை, கற்பதுக்கை, கல்வட்டம் என அவற்றின் அமைவு அடிப்படையில் அழைக்கப்படுகின்றன; மனித உருவிலமைந்த கற்களும் நடப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வரப்பட்டிருக்கின்றன;
இம்மரபின் நீட்சியாக பொ.ஆ.மு.ஆ.4ஆம் நூற்றாண்டு அளவில் இவ்வாறான வழிபடு கற்களில் இறந்தவரது பெயர், ஊர், மற்றும் இறப்பிற்கான காரணம் ஆகியவற்றையும் பொறித்து வைக்கும் மரபு உருவானது என, நடுகற்களின் ஆரம்பகால வரலாற்றை, புலிமான்கோம்பை, தாதப்பட்டி, பொற்பனைக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.
மேலும், இம்மரபின் அடுத்தகட்ட நகர்வாக நடுகற்களில் இறந்தவரின் உருவத்தை ஒரு கோட்டுருவமாக வரையும் நடைமுறையும், அதன்பின் சிலகாலம் கழித்து இறந்தவரின் உருவத்தையும் அவர் காட்டிய வீரத்தையும் நடுகல்லில் சிற்பமாக வடித்து காட்சிப் படுத்தும் வழக்கம் தோன்றியது எனவும்; அதனினும் நீட்சியாக இறந்துபட்டவரது குடும்பத்தாருக்கு உரிய மரியாதை செய்யும் வழக்கமும் நிலக்கொடை வழங்கும் வழக்கமும் தோன்றியது எனவும் அதன் காரணமாக நடுகற்கள் அருகில் கல்வெட்டு பொறிப்பு ஏற்படுத்தும் வழக்கம் உருவானது எனவும், அக்கல்வெட்டுக்களில் மன்னர் பெயர், நடுகல் எழுப்பப்பட்ட காலம், இறந்துபட்டவர் தொடர்பான விவரங்கள், அவர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மரியாதை மற்றும் நிலக்கொடை ஆகிய விவரங்கள் பொறிக்கப்பட்டன எனவும், இறந்துபட்டவருக்கு அளிக்கப்படும் நிலதானம் ’உதிரப்பட்டி’ எனக் குறிப்பிடப்பட்டது எனவும், நடுகற்கள் அமைவு மற்றும் அதன் பரிணாமத்தை முதல் அத்தியாயத்திலேயே சுருக்கமாக அறிமுகம் செய்யும் ஆசிரியர் அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவான தகவல்களை ஆதாரங்களுடனும் ஒளிப்படங்களுடனும் விவரிக்கிறார்.

தமிழ் மொழிக்கான இலக்கணம் மற்றும் தமிழர் வாழ்வியல் இலக்கணத்தையும் ஒருசேர வகுத்துள்ள ’தொல்காப்பியம்’, நடுகல் வழிபாட்டிற்கும் இலக்கணம் வகுத்துள்ளது; நடுகல்வழிபாடு குறித்து ஔவையார், ஆவூர் மூலங்கிழார், ; வடமோதங்கிழார், அல்லூர் நன்முல்லையார் உள்ளிட்ட புலவர்கள் நடுகற்கள் குறித்துப் பாடிய பல பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றிருக்கின்றன; என இலக்கியங்களில் காணப்படும் செய்திகளைத் தொகுத்தளிக்கிறார் நூலாசிரியர், புலிமான்கோம்பையில் கிடைத்த தமிழி கல்வெட்டுதான் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலேயே காலத்தால் முந்தியது (பொ.ஆ.மு.4ம் நூற்றாண்டு) எனக் குறிப்பிடும் ஆசிரியர், மாங்குளம், பொற்பனைக்கோட்டை, தாதப்பட்டி. கொங்கப்பட்டி ஆகிய ஊர்களில் கிடைத்த தமிழி பொறிப்புள்ள நடுகற்களைப் பற்றியும் விவரிக்கிறார்.
‘ஆகோள்பூசல்’ மற்றும் வீரச்செயல் புரிந்து பட்டவர்களுக்கு நடுகல் வைத்து வழிபட்டு வரப்பட்ட இம்மரபு, பின்னர் அருஞ்செயல் புரிந்தவர்களுக்கான மரபாகவும் நீட்சி பெற்றிருக்கிறது. அந்த வகையில், நீர்மேலாண்மைக்காக உயிர்நீத்தவர், ஏரி வெட்டியவருக்கு, ஏரிகாத்தவருக்கு, பெண்மானம் காப்பதற்காக உயிர்நீத்தவர், மடம் காப்பதற்காக உயிர் நீத்தவர் என்று பலவகை உயிர் துறப்புக்கு நடுகற்கள் எழுப்பப்பட்டிருப்பதையும் அவை வழிபாட்டில் இருந்து வருவதையும் விவரிக்கிறார் நூலாசிரியர்.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்கூட நடுகற்கள் எழுப்பப்பட்டு அவை வழிபாட்டிலும் உள்ளன என்ற விவரங்களை, அரசலாபுரம், இந்தலூர் ஆகிய ஊர்களில் கோழிச்சண்டையில் போரிட்டு இறந்த சேவலுக்கும், எடுத்தனூர் என்னும் ஊரில் நாய்க்கும், அம்பலூரில் நாய்க்கும் பன்றிக்கும் நடுகற்கள் அமைக்கப்பட்டிருப்பதையும், விவரிக்கும் நூலாசிரியர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் அருகே ஒரு புலிக்கு நடுகல் எழுப்பப்பட்டிருக்கும் செய்தியையும் பதிவிடுகிறார். வீரச்செயல் புரிந்து பட்டவர்களுக்கு மட்டுமே நடுகல் எழுப்பி வழிபடுபது மரபு என்றால், புலி என்ன வீரச்செயல் புரிந்திருக்கமுடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை. சுவரன் மாறன் என்னும் மன்னர், வேட்டையின் போது தான் கொன்ற புலிக்காக இந்த நடுகல்லை எழுப்பியுள்ளார்.
போருக்குச்செல்லும் மன்னரது வெற்றிக்காக, நாட்டின் நன்மைக்காக தன்னைத்தானே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது குறித்து ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. தூக்குதலை-தூங்குதலை நடுகற்கள், நவகண்டம் அரிகண்டம் அளித்தவர்களுக்கான நடுகற்கள் குறித்து பல செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, நடுகல்லாக அல்லாத, ஆனால் மக்களது வழிபாட்டில் கற்சிலைகளாக உள்ள நாட்டார் தெய்வங்களான ஐயனார், சாத்தனார், திரௌபதி அம்மன், அரவான், குறித்த தகவல்களும் பதிவு பெற்றுள்ளன.
உடன்கட்டை ஏறுதல் எனப்படும் சதியேற்றம் தமிழர் பண்பாட்டில் இல்லை. ஆனாலும் தமிழகத்தில் கணவனின் இறப்பின் தொடர்ச்சியாக நடைபெற்ற சில பெண்களின் தன்மரணங்கள் குறிப்பிடப்படுகிறது. மேலும், இறந்தவர் நினைவாக கல்லெழுப்பி வழிபடும் மரபின் நீட்சிதான் பள்ளிப்படை உருவாக்கமும் வழிபாடும் எனக் குறிப்பிடும் நூலாசிரியர், தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிப்படைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
கல்லாகிப் போனவர்களது வரலாறு மற்றும் சில நாட்டார் தெய்வங்களது வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்த இந்நூல், நடுகல் மற்றும் நாட்டார் வாழ்வியல் ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. நூலாசிரியர் பாராட்டிற்குரியவர்.
