பழ .அதியமான்
மரணம் நெருங்கும் வேளையில் நெருக்கமானவர்களும் பெரியவர்களும் கடைசியாகப் பேசும் வார்த்தைகளை நாம் நினைவில் வைத்துப் பாதுகாக்கிறோம். அவற்றுள் பல காலத்தால் புகழ்பெற்றவைகளாகவும் மாறிவிடுகின்றன. ” பிதாவே! இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் இன்னது செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறார்கள் ” என்பது அப்படியான ஒரு இறுதிச் சொல். இது இயேசு கிறிஸ்துவின் சொல் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.”

‘ஹே ராம்’ என்று இன்னொருவர் இறுதியாக இறைவனை அழைத்ததாகச் சொல்வார்கள். அவ் வெளிப்பாடு அழைப்பா? அணத்தலா? என்பது தெரியவில்லை. குரலின் தொனியைக் கொண்டு முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது. ” நான் என்ன தீங்கிழைத்தேன் உனக்கு?” என்று தன்னைச் சுட்டவரை இந்திரா காந்தி கேட்டாராம்.
இவ்வாறு இறைத்தூதர், மகாத்மா, மனிதர் என்ற முத்தரப்பினரின் மூன்று கடைசி வாக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். அவற்றுக்குள் இருக்கிற வேறுபாடுகளையும் கூர்மையான வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
“அம்மா, நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா, கஞ்சி” என்று தன் மகளிடம் மரணப்படுக்கையில் இருந்த பாரதி முனகியதாகச் சொல்வார்கள். இப்படியான கடைசி வார்த்தைகளை அவலச்சுவையும் அதே சமயத்தில் சுவாரசியமும் தரும் ஒரு கட்டுரையாக்கினார் ஜூலை 5 அன்று நினைவு நாள் அனுசரிக்கப்படும் கு. அழகிரிசாமி. அவருக்கு இவ்வாண்டு நூற்றாண்டு (1923 – 2023).
ராபிலெய் என்ற பிரஞ்சு நாட்டு நகைச்சுவை எழுத்தாளர் “திரையைத் தொங்க விடுங்கள். கேலிக்கூத்து முடிந்தது” என்றாராம். பீத்தோவன் 40 ஆம் வயதில் செவித்திறனை இழந்த இசை மேதை. பரிதாபகரமாகக் கழிந்தது அவரது இறுதிக் காலம். “தெய்வலோகத்தில் எனக்குக் காது கேட்கும்” என்றாராம் அவர். பூவுலகில் தீராத வேண்டுகோள் பரலோகத்தில் பரிசீலிக்கப்படும் என்று நினைத்தார் போலும்.
ஒரு சேவை நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரது கடைசி வாக்கியத்தை இங்கு குறித்து விட்டு கட்டுரையைத் தொடரலாம். உள்ளொளி முக்கியம் என்று மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் போதித்த அவரது கடைசி வாசகம் இது. “இப்பொழுது நான் தெளிவோடு இருக்கிறேன். மிகவும் தெளிவோடு இருக்கிறேன். நல்லது. தெய்வாம்சம் எல்லோரிடத்திலும் சாவின் மீது கூடப் படர்ந்து பரவி உள்ளது” .
வழக்கமாக இறுதி நேரத்தில் பயமும் குழப்பமும் மனித மனத்தை சூழ்ந்துவிடும் என்பார்கள் . ஜார்ஜ் பாக்ஸ் தெளிவாக இருந்தாரோ இல்லையோ தான் தெளிவாக இருந்ததாகக் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
இத்தகைய உள்ளொளி கொண்டவரும் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்தவருமான எழுத்தாளர் கு. அழகிரிசாமி நோயுற்றுச் சில நாட்கள் படுக்கையில் இருந்து அகால மரணத்தை 1970 ஜூலை ஐந்தில் தழுவினார். மருத்துவமனையில் அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இறுதிக் கட்டத்தைக் கடப்பவரின் கடைசிச் சொற்கள் செவிலியர் காதுகளில்தாம் படர்ந்து பரவி இருக்க கூடும். எனினும் கு. அழகிரிசாமியின் கடைசி வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.
தன் இறுதி நிமிடத்தை உணர்ந்தோ உணராமலோ நிச்சயம் ஏதாவது அவர் சொல்லி இருப்பார் என்று நான் நம்பி அவர் மகன் சாரங்கனிடம் சமீபத்தில் ஒரு நாள் காலையில் இது பற்றிக் கேட்டேன். அழகிரிசாமி 47 ஆவது வயதில் காலமான போது சாரங்கனுக்குப் பத்து வயது இருக்கலாம். அவரது நான்கு குழந்தைகளுக்குமே வயது 14க்குக் கீழ்தான். சாரங்கன் ஈனஸ்வரத்தில் ‘ஹுகூம்’ என்று முனகினார். அம்மா ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா? அம்மாவிடம் இதுபற்றிக் கேட்டிருக்கிறீர்களா? என்று விடாமல் கேட்டேன்.
கவலையும் வருத்தமும் நிறைந்த அதே ஒலிக்குறிப்பில், இல்லை என்று உணர்த்தினார். தவிர வார்த்தையாகப் பதில் வரவில்லை. சாரங்கனை வருத்தப்படுத்தி விட்டேனோ என்ற எண்ணத்திலேயே மழை பெய்து கொண்டிருந்த அந்தக் காலைப்பொழுது முழுவதும் கவலையில் கழிந்தது.
கடைசி வார்த்தை கிடைக்கவில்லையாயினும் கு.அழகிரி சாமியைக் கடைசியாகச் சந்தித்தது பற்றி ஜெயகாந்தன் எழுதியிருப்பதைப் பார்க்கலாம்..
“நானும் அவரும் தனியாக உரையாடிக் கொண்டிருந்த போது, என்னைச் சதா நேரமும் அப்பொழுது வேட்டையாடிக் கொண்டிருந்த மரண பயத்தைக் குறித்துப் பேசினேன். கு. அழகிரிசாமி எனக்குச் சமாதானங்கள் சொன்னார்.’ஒரு 35 வயதுக்கு மேல் எல்லோருக்குமே இப்படி ஒரு பயம் வரும்’ என்றார் அவர். அப்போதுதான் ‘அந்த உயிலின் மரணம்’ என்ற கதையை எழுதியிருந்தேன். அதை அவர் வெகுவாகப் பாராட்டி விட்டு ‘நம்மைப் போன்ற எழுத்தாளர்களுக்கு என்ன பயம் வந்தாலும் அதிலும் கூட ஒரு லாபம் இருக்கிறது பார்த்தீர்களா?’ என்று சிரித்தார்.
இப்படியெல்லாம் 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தினர் நடத்திய ஒரு கூட்டத்தில் இருவரும் பேசிக் கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் தான் பேசியதாக ஜெயகாந்தன் எழுதியுள்ளது பின்வருவது:
“இப்பொழுது உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்:- இவர்களில் யார் யார் எந்த வரிசையில் போவார்கள் என்று நினைவு என்னுள் ஓடுகிறது. இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான சிந்தனைகள் படைப்புக்கு வித்தாகலாம் என்று நான் அப்பொழுது சொன்னேன்.முன் வரிசையில் இருந்த அழகிரிசாமி தான் முதலில் போவார் என்ற எனக்கு அப்போது தெரியாது”
ஜெயகாந்தனுக்கு மட்டுமல்ல, யாருக்குத்தான் தெரியும்! தமிழ் எழுத்தாளர்களின் அகால மரணங்களை எழுதி எழுதி தமிழ்க் கைகள் ஓய்ந்து விட்டன. சுந்தர ராமசாமி ஜே.ஜே:சில குறிப்புகளில் முதல் பத்தியிலேயே இதைத்தான் எழுதியிருந்தார். “மேதா விலாசத்துக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? அதிலும் நாற்பதை ஒட்டிய வயதுகள். விசேஷமாக, வறுமை பிடுங்கும் இந்தியாவில் எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்திருக்கின்றன.
தமிழிலும் பாரதி, புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, மு. தளைய சிங்கம் என்று எத்தனை இழப்புகள்.”
சு.ரா. வின் இக்குறும்பட்டியலில் இடம்பெறாத 44 வயதில் அகால மரணம் எய்திய எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பிக்குத்தான் ஜே.ஜே: நாவலைச் சுந்தர ராமசாமி சமர்ப்பித்திருந்தார்.
இறையனார் களவியல் உரையிலிருந்து புதுமைப்பித்தன் முடிய தமிழ் உரைநடை வளர்ந்து வந்த வரலாற்றை எழுத்தாளர் பலரின் உரைநடைகளைத் தந்து ஒரு நீண்ட கட்டுரையை அழகிரிசாமி எழுதினார். அவர்களின் உரைநடைகளை மாதிரிக்காக ஒரு பத்தி அல்லது இரண்டு பத்தி அளவில் கட்டுரையில் அவர் தந்திருந்தார். அவர் காலமாவதற்கு ஓராண்டு முன்பு தமிழ் வட்டம் மலரில் (1969) அது வெளிவந்தது.
அதில் இடம்பெற்றிருந்த 72 எழுத்தாளர்களுள் 12 பேர் 50 வயதிற்குள் காலமான தமிழ்ப் படைப்பாளிகள். பச்சையப்ப முதலியார் (40), மனோன்மணீயம் சுந்தரனார் (42), ச.ம. நடேச சாஸ்திரி (47), அரசஞ் சண்முகனார்(47), பரிதிமாற் கலைஞர் (33), ராஜமையர் (26), வ.வே.சு. ஐயர் ( 44 ), பாரதி (39), சுப்பிரமணிய சிவா (41),எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு(49),கலாநிலையம் சேஷாசலம் (47), புதுமைப்பித்தன் (42) என அந்த அபாக்கியவான்கள் அமைந்தனர். குதிரையால் தாக்குண்டு ச.ம. நடேச சாஸ்திரி காலமாக, அருவியில் தவறி விழுந்து காலமானவர் வ.வே.சு.ஐயர். இவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் ஏறக்குறைய சு. ரா. சொன்ன மாதிரி வறுமையினாலும் நோயினாலும் பிடுங்கித் தின்னப்பட்டவர்கள்.
‘சக்தி’ இதழில் கு. அழகிரிசாமிக்கு முன் ஆசிரியராகப் பணியாற்றியவர் புகழ்பெற்ற தி.ஜ. ரங்கநாதன் (கு.அழகிரிசாமியை விட 23 வயது பெரியவர், கு.அ.காலமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலமானவர்) எழுதிய இரங்கலுரையில் இப்படி எழுதி இருந்தார்.
“ஆஸ்பத்திரியில் கடும் நோயுடன் கு. அழகிரிசாமி சேர்ந்திருக்கிறார் என்ற செய்தி கேட்டு நானும் நண்பர் ‘ஆர்.வி. ‘யும் படுத்த படுக்கையாய் இருந்த அவரைப் போய் கண்டபோது ஒருகணம் கண்ணீர் விட்டு விட்டார்.
வேறு சில நெருங்கிய நண்பர்கள் கண்டபோதும் இப்படியே கண்கலங்கி இருக்கிறார். நாம் பிழைக்க மாட்டோம் என்ற முன்னுணர்வு அவருக்கு ஏற்பட்டுவிட்டதோ என்னவோ; அதுவே, இதன் காரணமாக இருக்கலாம். ஆயினும் இரண்டொரு கணத்தில் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு ‘இது அப்படி ஒன்றும் உயிருக்கு ஆபத்தானதில்லை. சிறிது காலத்தில் குணமடைவேன்’ என்று வழக்கமான புன்சிரிப்போடு எங்களுக்குத் தைரியம் கூறினார். மறுமுறை நான் அவரை உயிரோடு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை” (கலைமகள், 1970 செப்டம்பர்).
முதுகெலும்பில் எலும்புருக்கி நோய் (இதை இன்று காச நோய் என்கிறோம்) என்ற காரணம் பற்றியே மருத்துவமனையில் கு.அழகிரிசாமி சிகிச்சை பெற்று வந்தார் . U வடிவப் படுக்கையில் ஆடாமல் அசையாமல் படுத்துக் கொண்டிருக்க வேண்டுமாம். அப்படித்தான் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு அவரும் படுத்துக்கொண்டிருந்தார். ஆனால் தினமும் மாலை வந்த காய்ச்சலை இந்நோயின் பகுதி எனக் கருதி மருத்துவரும் பொருட்படுத்தவில்லையாம். இறுதியில் இதயம் இயங்குவது நின்று இறந்து விட்டார். இது யாரும் எதிர்பாராதது. தி.ஜ.ர.விடம் அவர் சொன்னது போல எலும்புருக்கி நோய் குணப்படுத்தக் கூடியது தான். இதே நோயில் இருந்து பிழைத்த கி.ரா. 100 வயதை நெருங்கித் தானே போனார்.
“பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்/ கல்லாதார் வாழ்வது அறிந்திரேல்- கல்லாதார்/ சேதனம் என்னும் அச்சேறு அகத்தின் மையால்/ கோது என்று கொள்ளாதாம் கூற்று.”
கற்றறிந்தோர் சாறு நிறைந்த கரும்பைப் போன்றவர்கள்; கல்லாதவர் வெறும் சக்கையைப் போன்றவர்கள். ஆதலால் மென்சாறு போன்ற கற்றவரைக் கவர்ந்து செல்கின்றான் கூற்றுவன் என்பது மேற்கண்ட பாடலின் பொருள். இந்த நாலடியாரை நினைவுகூர்ந்து நண்பர் அழகிரிசாமியின் அகால மரணத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டார் புலவர் ல. சண்முகசுந்தரம் (தாமரை, 1970 நவம்பர்).
“கு. அழகிரிசாமி நவீன எழுத்தாளர், அறிவாளியும் கூட ” என்பது சுந்தர ராமசாமியின் கவனப்படுத்தல். கு. அழகிரிசாமி அதிர்ஷ்டம் இல்லாத ஞானவான் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி . இப்படி இருக்க சாறுள்ள கரும்பு அழகிரிசாமி என ல.ச. நினைத்தது வெறும் அன்பால் அல்ல. குறுகிய வாழ்வில் கு. அழகிரிசாமியின் சாதனைகள் வியப்பூட்டுகின்றன. சிறுகதை தொகுதிகள் 13, நாவல்கள் 3 , கட்டுரை நூல்கள் 6, சிறுவர் நூல்கள் 3, நாடகங்கள் 4, மொழிபெயர்ப்புகள் 11, பதிப்புகள் 4 . இன்னும் நூலாகாதவை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும். இவையெல்லாம் 47 வயதுக்குள். சாதனை மனிதர்தான் கு. அழகிரிசாமி சந்தேகமே இல்லை.
‘இறந்தார்’ என்ற சொல்லுக்குக் “கடந்தார் ” என்பதுதான் பொருள் . அதையேதான் ஆங்கிலமும் passed away என்கிறது. எங்கிருந்தோ வந்தார், இப்போது இந்தப் பூவுலகத்தைக் கடந்தார் என்று இவ்வுலக வாழ்வை நீத்தாரை அச்சொல் சுட்டுகிறது. இலங்கையில் ஓரிடத்திற்கு “யானை இறவு ” என்று பெயர். அப் பெயரின் ஆங்கில வடிவம் Elephant Pass, அதாவது யானைகள் கடக்கும் இடம். இந்த உலகத்தை, கடப்பதற்கான ஒரு இடமாக மதம் பார்க்கிறது. பூலோக யாத்திரை என்றொரு நூலை அழகிரிசாமி மொழிபெயர்த்திருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது.
அழகிரிசாமி தன் குறுகிய இப்பூவுலக வாழ்வில் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று வந்தவர். திருவனந்தபுரம், மும்பை முதலியன அவற்றுள் சில. தமிழ்நாட்டில் அவர் செல்லாத முக்கிய நகரம் இல்லை. வெளிநாடுகளிலும் மலாயா, இலங்கை சென்று வந்தவர். ஏன் மலாயாவில் ஐந்தாண்டு வாழ்ந்தவரும் கூட. அவருக்குக் கடவுச்சீட்டும் (பாஸ்போர்ட்)இருந்தது. இந்தியாவை விட்டு இருபது நாள் முன்பு இலங்கை சென்றவர் 28. 9. 67 அன்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். இதுதான் அவரது இறுதி வெளிநாட்டுப் பயணம். இப்பொழுதெல்லாம் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.கு.அழகிரிசாமி காலத்தில் என்ன நடைமுறை என்று தெரியவில்லை.
கு.அழகிரிசாமியின் கடவுச் சீட்டில் அது முடிவுக்கு வரும் நாள்(Expired date) 5.7.1970 என்று குறிக்கப்பட்டிருந்தது. அது முடிவுக்கு வந்த நாளில் கு.அழகிரிசாமியும் பூலோக யாத்திரையை முடித்துக் கொண்டார். ஆம்; பூவுலகைக் கடந்து சென்றார். இதையெல்லாம் தற்செயல் என்கிறது அறிவியல். நானும் அப்படியே நம்ப விரும்புகிறேன்.