டாக்டர் இடங்கர் பாவலன்
வரலாறு நெடுக மனிதகுலம் நடந்து வந்திருப்பது கலாச்சாரம் எனும் வாசல்படியில்தான். பல்வேறு இனமக்களின் வாழ்நிலை சார்ந்து உருவாகும் மாறுபட்ட கலாச்சாரக்கூறுகள் அவரவர் வரலாற்றையும்கூட சுமந்தே நிற்கிறது. மனிதகுல வரலாற்றை தொல்லியல் எச்சங்கள் வழியே துவங்கி இன்று மரபணு ஆய்வுவரையிலும் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய தெய்வங்களை வைத்து மனிதகுலம் கடந்துவந்த பாதையை தோழர் ச.தமிழ்ச்செல்வன் தன்னுடைய ‘தெய்வமே சாட்சி’ நூல் வழியே ஆய்வு செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

என்னளவில் மனிதகுல வரலாறு என்பது பெண்ணின் வரலாறாகவே இருக்கிறது. பெண்ணுடல் மீது எழுதப்பட்ட வரலாறுதான் இன்றுவரையிலும் வரலாறாகவும், பண்பாடாகவும், வெற்றி தோல்வியெனும் முழக்கங்களாகவும் இருக்கிறது. அவள்மீது குடும்பத்தின், சாதியின், மதத்தின் அத்தனை மதிப்பீடுகளும் ஏற்றி வைக்கப்படுவதால் பெண்ணை அறிவதென்பது வரலாற்றை அறிவது, வரலாற்றை அகழ்வாய்வது என்பது ஆதிப்பெண்ணைத் தொடர்வது என்பதாகவே புரிந்து கொள்ள முடியும்.
இன்றுவரையிலும் கலாச்சாரப் புரட்சிதான் மக்களையே வழிநடத்தியிருக்கிறது. இன்றைய நமது வாழ்க்கையை யாரோ ஒருவர் உருவாக்கி வைத்துவிட்டுப்போன கலாச்சாரம் தான் தீர்மானிக்கிறது என்றால் அதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? அதை பெண்கள் வடிவிலும் பெண்தெய்வம் என்கிற வடிவிலும் பூடகமாக இருப்பதை நாம் இன்னும்கூட அறியாமல் இருப்பது ஏனோ?
அவ்வகையில் பல்வேறு மக்கள்வயப்பட்ட போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பண்பாட்டுத்தளத்தில் எழுத்தாணி வழியே கலாச்சாரப்புரட்சியை சப்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் எழுத்தை அறிவதும் அவசியமானது. அறிவொளி கால களப்பணியில் கிடைத்த நாட்டார் தெய்வங்களை வைத்து நிகழ்கால பிரச்சனைகளுக்கு ஏற்ப தமிழ் இந்து பத்திரிக்கையில் ‘பெண் இன்று’ தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே தெய்வமே சாட்சியெனும் நூல்! இதில் முழுக்க முழுக்க பெண் தெய்வங்களை மட்டுமே வைத்து பெண்ணின் வாழ்க்கையை பலகோணங்களில் பேசுகிறார்.
நாற்பது கட்டுரைகள் கொண்ட இப்புத்தகத்தில் முதலும் முடிவுமான கட்டுரைகளான கதைக்கு வருவோம், நாட்டார் தெய்வங்கள்- ஒரு புரிதலை நோக்கி.. என்பவை நாட்டார் தெய்வங்களைப் பற்றியும் அதன் தோற்றத்தை பற்றியும் நமக்கு எளிமையாக விளக்குகின்றன. இன்னும் இதைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமானால் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி மற்றும் சாமிகளின் பிறப்பும் இறப்பும் போன்ற புத்தகங்கள் கூடுதல் உதவியாக இருக்கும்.
ஆத்திகம்-நாத்திகம் எதிரெதிர் துருவங்களில் நின்று இழுபட்டுக் கொண்டிருக்கும் போது நிஜத்தில் ஆத்திகத்திற்குள் இருந்துதான் நாத்திகப் புரிதலையே உண்டு பண்ண முடியும் என்பதை நாம் விளக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய புரிதலை உண்டுபண்ணுவதற்கு நாட்டார் தெய்வங்களைப் பற்றிய புரிதலையும், இதிகாசங்களாலும் புனைவுகளாலும் உருவாக்கப்பட்ட பெருந்தெய்வக் கோவில் வரலாற்றைப் பற்றியும் நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. வீட்டில் இறந்தவர்களை நினைவு கூரும் போது ‘சாமி கும்பிடப் போகிறோம்’ என்று தானே சொல்கிறோம்.
இறந்தவர்களைக் கும்பிடுவது என்பது அவர்களை மறுபடியும் நினைவுகூருவது. இந்த இடத்திலிருந்தே நாட்டார் தெய்வங்களை நாம் அணுக வேண்டியிருக்கிறது. தாத்தா பாட்டியை கும்பிட்டு நினைவுகூறும் போது எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் இறந்து சாமியாகிவிட்டவர்களைக் கும்பிடுவதுதான் நாட்டார் தெய்வமரபு. அத்தகைய மரபில், வாழ்ந்து மடிந்து போனவர்களின் கதைகள்தான் இருக்குமே தவிர, தேவலோகம்- அரக்கர்கள் போன்ற கட்டுக்கதைகளெல்லாம் இருக்காது. அதுவுமே கண்ணீர்கதைகளாகத் தான் இருக்கும்.
அப்படி இறந்துபோன பெண் தெய்வங்களின் கண்ணீர்க் கதைகள் வழியே நம்முடைய வீட்டுப் பெண்கள் கடந்துவந்த வாழ்வை, இதுவரையிலும் பெண்கள் பட்ட பாட்டை, அவர்கள் மீது அவிழ்த்துவிடப்படுகிற கொடூரமான சமூக நிந்தனையினால் தற்கொலைக்கும் கொலைக்கும் உண்டாகி சிதைவுற்றதை தாங்கள் களப்பணியில் சேகரித்த கதைகளின் வழியே நெடிய வரலாற்றை தன் எழுத்தின் வழியே அவர் சொல்லிச் செல்கிறார்.

பாட்டாளி வர்கத்திற்கு உழைத்து உழைத்து உண்ண ரொட்டிகூட இல்லாமல் பசியாலும் பட்டினியாலும் செத்துப்போன மார்க்ஸ்-ஜென்னியின் குழந்தைகளின் நினைவாக அவர்களது நினைவிடத்தில் ரொட்டியை படைக்கிறார்கள் என்பதன் வழியே ஒரு வரலாற்றைச் சொல்லி, அதன்வழியே தன் பிள்ளையின் பசிக்காக தோட்டத்துப் பழங்களைத் திருடியதற்காக காவலாளியால் கொல்லப்பட்டு துர்க்கையம்மனாக மாறியவளுக்கு இனிக்க இனிக்க சர்க்கரைப்பொங்கல் வைத்து வழிபடுவதை இணைத்துச் சொல்கிற போது மனம் எப்பேர்ப்பட்ட வலியை உணர்கிறது!
குழந்தையில்லாமல் வரம்கேட்டுப் போகிற பாதையில் கணவன் இறந்துவிட, மனைவியும் உடன் சிதையேறி சாமியாகிவிட்ட மலட்டம்மன் கதையை வெறும் கதையாக மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா? வயிற்றில் ஒரு ஜீவன்கூட முளைக்காத அவள்தான் சாமியாகிய பின்பாக இவ்வுலகில் தளிர்க்கிற அத்தனை ஜீவன்களின் வலியையும் உணர்ந்துகொள்வாள் என்று பிள்ளைவரம் வேண்டி, கால்நடைகள் பால்சுரக்க வேண்டி, நிலத்தில் விளைச்சல் வேண்டி வந்து வேண்டிக் கொண்டு போகிறார்கள்.
மனிதர்கள் செல்லுமிடமெல்லாம் தெய்வங்களும் செல்லும் என்று தெய்வத்தின் மீது ஏறிநிற்கும் ‘மனிதச்சிந்தனை’ எனும் கட்டுரை வழியே விவரிக்கிறார். அதில் பிடிமண் எடுத்துச் சென்று பீடம் எழுப்பி வழிபடப்படும் சாமிகளைப் பற்றி பேசுகிறார். ஏதேதோ காரணங்களுக்காக பாடையெழுப்பப்பட்ட பெண்ணின் சாமிக்கதைகள் பற்றி பேசுகிறார். பேசப்பேச தீர்ந்துவிடாத பெண்களின் துயரத்தை தெய்வங்களாவது பேசுமா அல்லது தெய்வங்களான பின்னாவது அவள் பேசுவாளா என்றால் அப்படிக்கூட ஏதும் இல்லையே! அதற்கும் அறிவொளி இயக்கமும், பண்பாட்டுப் போராளிகளும்தானே வரவேண்டியிருக்கிறது.
தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன், கூத்தனாச்சி அம்மன், சீலைக்காரி அரசாயி, கொங்கு சின்னம்மாள், சந்தனமாரியம்மாள், பாலும் பழத்தம்மன், நீலியம்மன், முத்துமாடத்தி அம்மன் என்று இன்னும் எத்தனையெத்தனை பெண்தெய்வங்களின் வழியே பெண்ணுலகத்தை இப்புத்தகத்தில் தோழர் பேசியிருக்கிறார்! நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றி பேசினாலே கடவுள் மக்களைப் படைக்கவில்லை, மக்கள்தான் சாமியைப் படைத்தனர் என்ற எளிய தத்துவம் விளங்கிவிடும். கடவுளுக்கு கருவறைகளும், ஆச்சார வேதங்களும், சாதிபேதங்களும் புராண ஆகமங்களும் இல்லை என்று புரிந்துவிடும். சாதி தொடர்பான சாமிகள் இருந்தாலும்கூட அதுவுமே கடவுள்மீது மனித சிந்தனையை ஏற்றி வைப்பதுதானே! அதையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.
நாட்டுப்புறவியல் பக்கத்தை பண்பாட்டு முற்போக்காளர்கள் கைகளில் எடுக்காவிட்டால் குலதெய்வ வழிபாடு மறைந்துபோய் மடத்துச் சாமியார்களின் பௌர்ணமி பூஜைக்கு மக்கள் படையெடுக்கத் துவங்கிவிடுவார்கள். ஏற்கனவே பலவற்றை விழுங்கித் தன்வயப்படுத்திக் கொண்டு வளர்ந்துகொண்ட பார்ப்பனியம், சிவன் மற்றும் பார்வதியின் அவதாரங்களாக இன்னும் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு மக்கள் மனங்களைச் சிதறடித்துவிடும்.
இப்புத்தகத்தை மாதர் சங்கங்கள் போன்ற பெண்ணிய இயக்கங்கள் கையிலெடுத்தால் மக்களிடம் கருத்துகளை இன்னும்கூட வலிமையாகக் கொண்டு செல்ல நல்ல ஆயுதமாக இருக்கும் அல்லவா!