சு.பலராமன்
ஆதி, வள்ளியப்பன் எழுதிய ‘எப்படி? எப்படி?’ அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல் என்னும் அபுனைவுப் பிரதி தொன்னூற்று ஆறு பக்கங்களுடன் 2016ஆம் ஆண்டு புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டான 2023இல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் விற்பனைச் சந்தையில் பத்தாயிரம் பிரதிகளை நோக்கிச் செல்லும் படைப்பாக உள்ளது. இப்பிரதிக்குக் கலை இலக்கிய பெருமன்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழலியலாளர், சிறார் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமையாக விளங்குபவர் ஆதி வள்ளியப்பன். ‘இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பிரிவு ஆசிரியராக உள்ளார். தினமணி, தினகரன், இந்தியா டுடே, ஃபெமினா போன்ற செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களில் செய்தியாளர், உதவி ஆசிரியர், இதழாசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், தாத்தா பூ எங்கே போகிறது (லின் சாங்யிங்), பறவை டாக்டர் (லின் சாங்யிங்), கும்பிடுபூச்சியின் பயங்கர பசி (லின் சாங்யிங்), யார் அங்கே பாடுவது? (ஜென் ஷாஸோங்) ஆகிய நூல்களை மொழிபெயர்ப்பு ஆக்கமாக அளித்துள்ளார். தமிழ் இலக்கியச் சூழலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட படைப்புகளை வார்த்துள்ளார். தொடர்ந்து பல்வேறு நாளிதழ் மற்றும் இதழ்களில் அறிவியல்சார்ந்தும், சிறார்கள்குறித்தும், சூழலியல் பற்றியும் எழுதி வருகிறார்.
‘எப்படி? எப்படி?’ நூலின் பின் அட்டையில், தினமணி சிறுவர்மணியில் வெளியான காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் பின்னணியில் பொதிந்திருக்கும் அறிவியல் அம்சங்களை எளிமையாக விளக்குகின்றன. முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் முதல், ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது என்பது வரை இந்தப் புத்தகம் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
‘எப்படி? எப்படி?’ பிரதியின் உள்ளடக்கத்தில் பழைய கருவி, நவீன கருவி, போக்குவரத்து, பொது, இயற்கை, உயிரினங்கள், மனித உடல், தண்ணீர் ஆகிய எட்டுப் பொதுத் தலைப்புகளில் எழுதியுள்ளார். ஒவ்வொரு பொதுத்தலைப்பிலும் குறைந்தது மூன்று முதல் அதிகபட்சம் பத்து உட்தலைப்புகளில் வினாக்களைத் தலைப்பாக்கியுள்ளார். அதனடிப்படையில் நாற்பது உட்தலைப்புகள் உள்ளன. வினா-விடை என்னும் உத்தியில் இப்பிரதி கட்டமைக்கப்பட்டுள்ளதால் தலைப்புகள் அனைத்தும் பிரதியின் தலைப்பு உட்பட வினாவாகவே இருப்பது கவனத்திற்குரியது.வினாவை எழுப்பி அதற்கான விடையளிப்பதில் குறைந்தது ஒரு பக்கத்திலிருந்து தொடங்கி அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் வரை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாத் தலைப்பிற்கேற்ற கோட்டோவியம் பிரதியில் இடம்பெற்றுள்ளது கூடுதல் கவனம் பெறுகிறது.
ஓவியங்கள் மிக நேர்த்தியாகவும், பாடுபொருளை உள்வாங்கிப் பொருத்தமாகவும் ஈர்ப்பைத் தரும் வகையில் வரைந்துள்ளார் ஓவியர் சொக்கலிங்கம். ‘எப்படி? எப்படி?’ பிரதியின் முகப்பு அட்டைப் பக்கத்தில் அவரது கைவேலைப்பாட்டிலான ஓவியம் அமைந்(த்)திருந்தால் இப்பிரதி இன்னும் கூடுதலான கவனத்தையும் பொருத்தத்தையும் பெற வாய்ப்புள்ளது. மேலும், 38ஆம் உட்தலைப்பான, ‘கடற்கரை பகுதிகளில் அதிகம் வியர்ப்பது ஏன்?’ விளக்கப் பகுதியில் கோட்டோவியம் இடம்பெறாமல் மாற்றாகப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
‘எப்படி? எப்படி?’ பிரதியின் உள்ளடக்கத்தில் உள்ள வினாக்களை எளிமையாகவோ அசட்டையாகவோ நாம் கடந்து சென்றிருப்போம். ஆனால் ஆதி வள்ளியப்பன் அவற்றை கவனப்படுத்திச் செல்கிறார். அன்றாட வாழ்வில் நாம் அறிவியலோடு பயணிக்கிறோம் என்பதை வெளிச்சமிடுகிறார். இதனால் நம்மைச் சுற்றி நிகழும் எந்த ஒன்றிலும் அறிவியல் உள்ளதா? எந்த மாதிரியான அறிவியல் செயல்பாடு அல்லது கோட்பாடு உள்ளது? என்பதான அடிப்படை வினாக்களை வாசகர்களிடம் எழுப்ப முனைகிறது இப்பிரதி. அறிவியல் பார்வை, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

ஒரு நிகழ்வில் உள்ள அறிவியலை விளக்கச் சொல்லும்போது மற்றொரு அறிவியலையும் தூவிச் செல்கிறார். பிரதியில் இடம்பெற்றுள்ள நாற்பது உட்தலைப்புகளிலும் அன்றாட வாழ்வியலோடு இணைந்த உரையாடலோடு தொடங்குகிறார் ஆதி வள்ளியப்பன். இது வாசிப்பிற்கு ஆர்வத்தையும் உள்ளிழுப்பையும் தருவதாக உள்ளது. ஒவ்வொரு செயல்பாட்டின் இறுதி வடிவத்திற்கு வரும்போதும் ”அறிவியல் கோட்பாட்டின் செயல்பாடு” என்று பதிவு செய்வது அறிவியல்சார் நம்பகத் தன்மையைப் பெறவைப்பதாக உள்ளது.
விண்வெளி வீரர்கள் அணியும் ஆடையின் எடை சுமார் எழுபது கிலோ. ஆனால், விண்சூழலில் இந்த எடை ஒன்று அல்லது இரண்டு கிலோவாக மாறிவிடும். மேலும், இருபதுக்கும் மேற்பட்ட அடுக்குகள் உள்ளன. விலை அதிகமான இந்த ஆடையை அணிவதற்கே தனிப் பயிற்சி தேவை.
பூனை மேலிருந்து கீழே விழுந்தாலும் அடிபடாமல் தப்பிப்பது, தண்ணீரில் கப்பல், ஐஸ்கட்டி மிதப்பது, முட்டை நீள் வடிவமாக இருப்பது, நீர்த்துளி கோள வடிவில் இருப்பது, முடி மற்றும் நகம் வெட்டும்போது வலிக்காமல் இருப்பது போன்றவற்றில் உள்ள அறிவியலை எளிமையாகக் கடத்துகிறார் ஆதி வள்ளியப்பன். மேலும், ஸிப் வேலை செய்வது எப்படி? என்பதான வினாவிற்கு விளக்கமளிக்கையில் அதில் கையாளப்பட்டுள்ள சொல்லாட்சியையும் விவரிப்பு முறையையும் உள்வாங்க வாசகர்கள் மறுவாசிப்பைக் கோரவேண்டியுள்ளது.
பல்வேறு அறிவியல் செய்திகள் நிறைந்த பிரதியாக ‘எப்படி? எப்படி?’ விளங்குகிறது. ஆதி வள்ளியப்பன் எழுப்பும் நாற்பது வினாக்களும் மிக எளிமையாக இருந்தாலும் அவை சிந்திக்க வைக்கின்றன. இவற்றை அறிந்துகொள்ள அறிவியல்சார் அறிவு அல்லது அறிமுகம் அவசியம் என்று பொதுநிலை வாசகர்கள் கருதலாம். ஆனால், அவரது மொழிநடையும் உத்திமுறையும் அறிவியல் அறிவு, அறிமுகம் ஆகிய இரண்டையும் வாசகர்களுக்கு எளிமையாகக் கடத்திச் செல்கிறது என்பதே நிதர்சனம்.