கி.ரமேஷ்
மிகப் பெரிய தொழிற்சங்கப் பாரம்பரியம் கொண்டது சென்னை மாநகரம். சர்க்கரைச் செட்டியார், சிங்காரவேலர், வி.பி.சிந்தன் என்று இங்கு தொழிற்சங்கக் கொடியை உயர்த்திப் பிடித்த தலைவர்கள் பட்டியல் மிக நீளம். அதில் ஒரு சிறு பகுதியை, 1918 முதல் 1939 வரையிலான காலகட்டத்தை ஆராய்ந்து நமக்கு ஒரு சிறந்த புத்தகத்தை அளித்துள்ளார் மறைந்த முனைவர் தே. வீரராகவன் அவர்கள். ஆங்கிலத்தில் லெஃப்ட்வேர்ட் பதிப்பகம் ‘The making of the Madras working class’ என்ற பெயரில் வெளியிட்டது.
சி.பி.ஐ.எம். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் பிரகாஷ் காரத் அதை வெளியிட்டார். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை முன்னமே அலைகள் வெளியீட்டகம் ‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’ என்ற தலைப்பில் வெளியிட்டது. முதலில் அதை வாங்கிப் படித்த நான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பலருக்கும் வாங்கிப் பரிசளித்தேன். இன்னும் கூட சென்னையில் பல தொழிற்சங்கத்தினருக்கும் அந்தப் புத்தகத்தைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். அந்த அளவுக்குச் சிறந்த புத்தகம் அது.
சென்னை மாநகரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் தொடக்க காலம் குறித்து இதில் எழுதுகிறார் வீரராகவன். இந்தியாவிலேயே முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க இயக்கமாக மெட்ராஸ் லேபர் யூனியன் தான் கருதப்படுகிறது. நூறாண்டுகளைக் கடந்த அதன் அலுவலகம் வடசென்னையில் சிதிலமடைந்த நிலையில் இருப்பது என்பது நமக்கெல்லாம் மிகவும் வருந்தத்தக்க விஷயம். சென்னையில் அந்தக் காலத்தில் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று .
பி&சி மில் என்ற அதனுடன் மெட்ராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும். இந்த ஆலையை 1990 களில் மூடி விட்டு அந்த இடத்தில் தற்பொழுது அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விட்டார்கள். இந்த ஆலைதான் சென்னையில் தொழிற்சங்க இயக்கத்தின் மையமாக இருந்தது. சென்னையில் ஜவுளித் தொழில், தோல் பதனிடும் தொழில், அச்சுத் தொழில், டிராம், பஸ் எனப் பல தொழில்பிரிவுகள் இருந்துள்ளன. இந்தத் தொழில்கள் வளர்ச்சியடைந்ததையும், அவற்றில் தொழிற்சங்கங்கள் வளர்ந்ததையும் இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

மிகவும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், மெட்ராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கு அச்சாரமிட்டவர் செல்வபதி என்ற ஒரு மத நிறுவனர் என்பதாகும். அவரது மதநிறுவனத்தின் வளாகத்திலேயே அவர் ஒரு அரிசிக்கடை வைத்திருந்தார். அங்கு அரிசி வாங்க வரும் தொழிலாளர்கள் தமது கஷ்டங்களை இவரிடம் பகிர்ந்து கொள்ள, அவர் தொழிற்சங்கம் உருவாக முயற்சி எடுத்துள்ளார்.
இந்தப் புத்தகம் மெட்றாஸ் பின்னி மில்லின் தொடக்கக் காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் குறித்துப் பதிவு செய்கிறது. மேலும் அப்போது இரண்டரை மாதங்கள் நீடித்த ரயில்வே போராட்டம் குறித்தும் விளக்கியுள்ளது. ஆங்கிலேய அதிகாரிகள் ஆலைக்குள்ளேயே தம் கைத்துப்பாக்கியால் தொழிலாளர்களை சுட்டுக் கொலை செய்யக் கூடத் தயங்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி.
பிரம்மஞான சங்கத்துக்கு நெருக்கமான பி.பி.வாடியாதன் மெட்ராஸ் லேபர் யூனியனுக்கும், பின்னி தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சீர்திருத்தவாதிகள்தான் முதலில் தொழிற்சங்கங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளனர். சென்னையில் கம்யூனிஸ்டுகள் தம்மை அமைப்பாகத் திரட்டிய தொடக்க காலமான 1933 ல் தலைமை தாங்க வருகின்றனர். சிங்காரவேலர் தலைமை தாங்க வருகிறார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முறையாகத் தொடங்கிய அமீர் ஹைதர்கான்தான் முதல் கம்யூனிஸ்ட் குழுவை உருவாக்குகிறார். அதன் பிறகுதான் முறையான கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருகின்றனர்.
சீர்திருத்தவாதிகள் குறித்து வீரராகவன் இந்தப் புத்தகத்தில் விமர்சித்துள்ளார். இந்தத் தலைவர்கள் உண்மையிலேயே தொழிலாளர் மீது கரிசனம் கொண்டிருந்தாலும், அவர்கள் புரட்சிகர சிந்தனையைப் பெற்றிருக்கவில்லை.
இன்றைய தொழிற்சங்க இயக்கம் குறித்த ஆய்வில் வீரராகவன் நான்கு விதமான முடிவுகளுக்கு வருகிறார். அவை நான்கும் மிகவும் சரியானவையே ஆகும்.
முதலாவதாக, அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட தேசிய இயக்கம் குணாம்சத்தில் முதலாளித்துவ (பூர்சுவா) மனப்பான்மையைப் பெற்றிருந்தது. எனவே அது, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குக் கொடுக்காதது மட்டுமல்ல, அவற்றை மூடி மறைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டது. தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச மற்றும் கம்யூனிசச் சிந்தனைகள் வளரத் தொடங்கியதைக் கண்டு அது அவர்களை அணிதிரட்டுவதையே குறைத்துக் கொண்டுவிட்டது.
இரண்டாவதாக, இடதுசாரி சக்திகள் தலைமையில் இருந்த இயக்கங்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் அடக்குமுறையை ஏவி அவற்றை நசுக்குவதில் வெற்றி கண்டன. இது சீர்திருத்தவாதத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, தொழிலாளர்களைத் தங்களின் கீழ் வைத்துக்கொள்வதிலும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் எழுப்புவதோடு தங்களைச் சுருக்கிக் கொள்வதிலும் நிறைவடைந்தனர்.
மூன்றாவதாக, காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் தாமதமாக வந்தபோதிலும், அரசின் கடும் அடக்குமுறை காரணமாக அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தவாதத் தலைவர்களையும் அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.
நான்காவதாக, இந்திய சமூகம் பல்வேறு கலாச்சாரங்களையும், பலவீனங்களையும் உள்ளடக்கிய ஒன்று. நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் வகுப்புவாத சிந்தனைகள் மிகவும் மோசமானமுறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சமூகமாக இது இருந்ததால், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர வர்க்க உணர்வு உருவாவதற்கு அவை மாபெரும் தடைக்கற்களாக அமைந்திருந்தன.
சென்னையின் மிக முக்கியமான பகுதியாக தொழிற்சங்கம் இருந்துள்ளது என்பது நமக்குத் தெளிவாகிறது. நான் சென்னைக்கு வந்த வருடம் 1991. 1987லேயே தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் மறைந்துவிட்டார் என்பது எனக்கு இழப்பு என்றே கருதுகிறேன். நான் சென்னை மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில் வந்து சேர்ந்தபோது, எங்கள் தொழிற்சங்கமான மெட்ராஸ் சிவில் ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் அசோசியேஷன் ஒரு தொழிற்சங்க மையமாகவே இருந்தது எனலாம்.
காலையிலிருந்து இரவு வரை எப்போதும் அனைத்துப் பிரிவு ஊழியர்களும், தொழிலாளர்களும் அங்கு வந்து சென்று கொண்டே இருப்பார்கள்.
மத்திய அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள், மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள், மாதர் சங்கத் தலைவர்கள், சிஐடியூ என அங்கு வராத தோழர்களே இல்லை. சென்னையைப் பொருத்த வரை என்னுடைய தொழிற்சங்க அனுபவங்கள் மத்திய, மாநில அரசு ஊழியரைச் சுற்றியே பெரும்பாலும் அமைந்தன.
நான் இங்கு வந்த புதிதில் எங்கள் அலுவலகத்தில் கணிணித் திணிப்புக்கு எதிரான இயக்கம் வலுவாக நடந்துகொண்டிருந்தது. சங்கம் சிஏஜி அலுவலகத்துக்கும், அகில இந்திய சங்கத்துக்கும் இடையில் ஒரு அதிகார பூர்வ பேச்சுவார்த்தையையும், உடன்பாட்டையும் கோரியது. பணியில் இருக்கும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு பாதிக்கப்படாது என்ற உறுதிமொழி, ஆட்குறைப்பு இருக்காது என்ற உறுதிமொழி ஆகியவற்றைக் கோரியது. ஊழியர்கள் உறுதியாக சங்கத்தின் பக்கம் நின்று போராடினர்.
நிர்வாகம் ஊழியர்களைத் தனித்தனியாக அழைத்து மிரட்டுவது போன்ற பல முயற்சிகளை எடுத்துத் தோல்வியடைந்தது. கடைசியில் சங்கம் கோரியபடி சிஏஜி நிர்வாகம் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்த பிறகுதான் இங்கு கணிணியைக் கொண்டு வர முடிந்தது. இன்றுவரை யாரும் அதனால் பணியிழக்கவில்லை என்பதும், பதவி உயர்வை பாதிக்கவில்லை என்பதும் சங்கம் செய்தது சரி என்பதை நிரூபிக்கின்றன. அதேபோல் ஐந்தாவது சம்பள கமிஷன் போராட்டமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமானது.

மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் பரிந்துரை செய்த 20%கு மேல் ஒரு பைசா கொடுக்க முடியாது என்று நிலையெடுக்க, முதல் போராட்ட அறைகூவல் விட்டது தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்தான். அது எங்கள் சங்கத்தில்தான் செயல்பட்டது. அதன் தலைவர் தோழர்.ஏ.ஜி.பசுபதியும் பொதுச்செயலாளரான தோழர்.துரைபாண்டியனும் தலைமை தாங்க, சனிக்கிழமை கூடிய மகாசம்மேளனக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டில் ஒருநாள் வேலைநிறுத்தம் என்று அறைகூவல் விடுத்தது. அந்த வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வு பெற்றுத் தந்தது. அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த தோழர். இந்திரஜித் குப்தாதான் இந்த ஒப்பந்தத்தை அளித்தவர்.
மத்திய அரசு ஊழியர்கள் இப்போது ஒரு நாகரிகமான ஊதியம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு இடதுசாரிக் கட்சிகளின் பங்கு முக்கியமானது. இதே போல்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் பிரச்சனை ஏற்பட்ட போதும், ஏழுநாள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் களமிறங்கிப் பேசி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாது.
நான் பார்த்த இன்னொரு மாபெரும் போராட்டம் என்பது 2004இல் ஜாக்டோ ஜியோ தொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம். அன்றைய ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அரசு ஒரே நேரத்தில் 1,70,000 பேரை ஒரே உத்தரவில் வேலைநீக்கம் செய்தது. அப்போதும் தோழர்.டி.கே ரங்கராஜன் தான் அவர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடுத்தார். அந்தக் கதை வேறு. என்றாலும், இறுதியில் வென்றது சங்கம்தான். 55 பேரை பலி கொடுத்து, இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றோம். வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் வேலை பெற்றனர்.
இந்தப் போராட்டத்தில் நாங்களும் உடன் நின்றோம் என்பது பெருமையான விஷயம். வீரராகவன் அவர்களின் ‘சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு’ புத்தகத்தின் மீதான வாசிப்பு சென்னைசார்ந்த என் தொழிற்சங்க அனுபவங்களை அதன் நினைவுகளை இணைத்து எழுத வைத்து விட்டது.