ச.சுப்பாராவ்

இது ‘தினமலர்’ வாரமலரில் வரும் ஒரு பகுதியைப் பற்றியதல்ல. செய்யும் வேலையை நிறுத்திவிட்டு, முதலில் இதைப் படியுங்கள் என்று சொல்லும் Stop What You Are Doing And Read This என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பு பற்றியது. எந்தவொரு 24 மணி நேரத்திலும் நாம் தூங்கிக்கொண்டோ, சாப்பிட்டுக்கொண்டோ, குழந்தைகள் அல்லது பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையுடனோ அல்லது நண்பர்களுடனோ பொழுது போக்கிக் கொண்டோ, மின்னஞ்சல், தொலைபேசி, வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக், இசை, விளையாட்டு, அலுவலக வேலை, நம் சொந்த விருப்பமான வேலை, ஆசை, கனவு ஆகியவற்றிலோ பொழுது போக்கிக்கொண்டிருப்போம்.
அது எதுவாகினும். அதை நிறுத்திவிட்டு, இதைப் படி என்று அதிகாரமாகச் சொல்லும் புத்தகம் என்பது என்னை ஈர்த்தது. படித்தால், முழுக்க முழுக்க வாசிப்புபற்றிய கட்டுரைகள். பல்வேறு புத்தகக் காதலர்களும் தம் வாசிப்பு அனுபவம் குறித்தும், பொதுவான வாசிப்பு குறித்தும் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் சிறு புத்தகம். செய்யும் வேலையை நிறுத்திவிட்டு, இதைப் படிப்பது வீணாகாது. இந்த சிறு புத்தகம் உண்மையாகவே நம்மை ஒரு புத்தகக் காதலராக மாற்றிவிடும்.
இன்றும் உலகில் சரளமாக வாசிக்கத் தெரியாத குழந்தைகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் சிறு வாக்கியங்களை எழுதவும் தெரியாமல் இருப்பவர்கள். இங்கிலாந்தில் பதின்பருவத்தினரில் மூன்றில் ஒருவர் ஆண்டுக்கு இரண்டு புத்தகங்கள் மட்டுமே படிக்கிறார்களாம். அங்கே ஆறில் ஒரு குழந்தைதான் மிக அபூர்வமாக பள்ளிப் பாடங்களைத் தாண்டி ஏதோ ஒன்றிரண்டு புத்தகங்களைப் படிக்கிறதாம். கோடிக்கணக்கான வீடுகளில் புத்தகங்களே கிடையாதாம்.
பெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவதில்லை. கதை சொல்வதில்லையாம். உலகையே ஆண்ட கைப்பிள்ளைக்கே இந்தக்கதி என்றால், கைப்பிள்ளையிடம் அடி வாங்கியவர்களான நம் நிலை? அங்கு வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் முழுக்க முழுக்க நமக்கும் பொருந்துபவை என்று தனியே சொல்ல வேண்டியதில்லை.
வாசிப்பு என்ன செய்யும் என்பது பற்றி ஒரு கட்டுரை. “யதார்த்த உலகு உங்கள் மீது செலுத்தக்கூடிய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது வாசிப்பு மட்டுமே” என்கிறார் அந்தக் கட்டுரையாளர். நல்ல வாசகன் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து வைத்திருப்பவன். அவன்மீது இந்த உலகம் அதிகாரம் செலுத்த முடியாது. அவன்தான் உலகின்மீது அதிகாரம் செலுத்துவான் என்கிறது அந்தக் கட்டுரை. வாசிப்பதற்கு நேரமில்லை என்பதற்கும் நல்ல பதில் வைத்திருக்கிறது அந்தக் கட்டுரை. இப்படி பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் அருமையான கட்டுரைகளின் தொகுப்பு இது.
நவீன உலகில் வாசிப்பதற்கு நேரம் இல்லை என்பது பொய் என்கிறது இந்தக் கட்டுரை. உண்மையில் 20ம் நூற்றாண்டுவரை மனித இனத்தின் பெரும்பகுதி தனது ஒட்டுமொத்த நேரத்தையும் உணவு தேடும் போராட்டத்திலேயே கழித்துக்கொண்டிருந்தது. 20ம் நூற்றாண்டிலிருந்து இந்த நிலை சிறிது சிறிதாக மாறிவிட்டது. இப்போது உங்களுக்கு இரை தேடும் வேலையிலிருந்து ஓரளவிற்கு விடுதலை கிடைத்துவிட்டது. நேரம் எவ்வளவோ மிஞ்ச ஆரம்பித்துவிட்டது. நாம் அந்த நேரத்தை வாசிப்பதற்கு பயன்படுத்துவதில்லை என்பதுதான் பிரச்சனை. வாசிப்பதை எங்கு, எப்படி ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.
ஆரம்பித்துவிட்டால் போதும். வாசிப்பில் பழகிய மூளை, மனம் மற்ற அனைத்து விஷயங்களையும் மிகுந்த கவனத்தோடு செய்வதற்குப் பக்குவப்பட்டு விடுகின்றன.
மற்றொரு முக்கியமான கட்டுரை, கவனச் சிதறல் என்பது ஒரு நோயல்ல. அது வாசிக்காமல் இருப்பதால் வரும் ஒரு சிறு பிரச்சனை என்கிறது. ஒரு குழந்தைக்கு வாசிக்கக் கற்றுக்கொடுங்கள். அதனிடம் எல்லா பழக்க வழக்கங்களும் மாறிவிடும். பள்ளிப் பாடங்களையும் மிக எளிதாகப் படித்துவிடும்.
வாசிப்புப் பழக்கம் முழுமையாக ஒருவரை மாற்றிவிடும். ஆனால் வாசிப்பு என்பது சொல்வளம், இலக்கிய நயம் என்ற பல்வேறு ரசனை சார்ந்த விஷயங்களில் மட்டும் மாற்றம் ஏற்படுத்துவது என்று நினைத்துவிடக் கூடாது. அது நீங்கள் வாழும் முறை, வாழ்க்கையை, சகமனிதர்களைக் குறித்து உங்கள் பார்வை என்று எத்தனை எத்தனையோ கண்ணுக்குப் புலனாகாத விஷயங்களிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. ஏனெனில் வாசிப்பு என்பது எழுத்து எனும் குறியீடுகளை வெறுமனே பார்த்துப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. புத்தகம் என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்புமல்ல. இது ஒரு மனநிலையைக் காட்டுவது. வாழ்வின் கனவை உங்களுக்குப் புரிய வைப்பது.
வாசிப்பு என்பது மனித இனத்தின் இயல்பான ஒரு செயல்பாடு அல்ல. பார்வை, மொழியறிவு போன்றவற்றிற்கு மனித மூளையில் இயல்பாக இருக்கும் ஜெனிடிக் நிரல்களைப்போன்று வாசிப்பிற்கு இயல்பாக ஜெனிடிக் நிரல்கள் கிடையாது. நீங்கள் வாசிக்க வாசிக்கத்தான் அந்த நிரல்கள் மூளையில் உருவாகும். அச்சுக் கலை உருவான பிறகு, அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வர ஆரம்பித்தபின், வந்ததுதான் வாசிப்புப் பழக்கம்.
இன்று தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம்ஸ் போன்ற பலவற்றிற்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ‘எப்பப் பார்த்தாலும் டிவியா?’, ‘எப்பப் பாத்தாலும் கேம்ஸா?’, ‘எப்பப் பாத்தாலும் கம்ப்யூட்டரா?’ என்று திட்டுவதுபோல, அக்காலத்தில் வாசிப்பும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. ராபின்சன் குரூஸோ வெளியான காலத்தில் நம் பத்து தலைமுறைகளுக்கு முந்தைய தாத்தாக்கள் எப்பப் பாத்தாலும் புத்தகமா? என்று திட்டியிருக்கிறார்கள். எல்லா நவீனங்களையும் போலவே, வாசிப்புக் கலையும் பெரியவர்களின் திட்டுக்களால் வளர்ந்திருக்கிறது!
எழுத்து, வாசிப்பு ஆகியவற்றிற்கும் நவீன தொழில்நுட்பங்களுக்கும் உள்ள தொடர்புகள், அவற்றிற்கும் பிற கலை வடிவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள்பற்றி நிறைய சுவையான கட்டுரைகள் உள்ளன. எந்த ஒரு கலை வடிவத்தை நாம் ரசிப்பதற்கும், ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டதை நாம் வாசித்து ரசிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு நல்ல இசைப் பாடலை நீங்கள் ரசித்திருப்பீர்கள். அதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்.
அதேபோல ஒரு நல்ல ஓவியத்தை நீங்கள் ரசித்திருக்கக்கூடும். அதுவும் உங்கள் மனத்தில் நீங்காது நிலைத்து நிற்கக்கூடும். ஆனால், உண்மையில் நீங்கள் மனத்தில் நினைத்திருப்பதற்கும், நீங்கள் கேட்ட, பார்த்த அந்தப் பாடல், ஓவியத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கும். ஆனால், நீங்கள் ரசித்துப் படித்த ஒரு நாவலின் ஒரு குறிப்பிட்ட வரி அல்லது ஒரு கவிதையின் இரு வரிகள் அந்தப் புத்தகத்தில் இருப்பதைப் போன்றே உங்கள் மனத்தில் பதிந்திருக்கும். வாசிப்பின் மகத்துவம் அது. எழுத்தின் மகத்துவம் அது.
சிறுவயதில் நாம் மனப்பாடப் பகுதிக்காகப் படித்த திருக்குறள், வள்ளுவர் எழுதிய அதே குறளாகத்தானே அடிபிறழாமல் அப்படியே நம் மனத்தில் இன்றும் இருக்கிறது?
“புத்தகங்கள் தொழில்நுட்பத்தின் மாற்றங்களை, முன்னேற்றங்களை எளிதில் உள்வாங்கி, அதை வைத்து தம்மை மேம்படுத்திக்கொள்ள வல்லவை” என்கிறார் ஒரு கட்டுரையாளர். அதனால்தான் சித்திர எழுத்துகளாக இருந்த புத்தகங்கள் குட்டன்பர்க் காலத்தில் எளிதில் அச்சுவடிவில் வந்தன. அச்சுவடிவம் மின்வடிவமாகவும் இன்று மாறியுள்ளது.
புத்தகங்கள் எந்தவொரு வழிமுறையிலும் எளிதில் பிறருக்குக் கடத்திவிட முடியக்கூடிய குறியீடுகளின் தொகுப்பாகவே உள்ளன. ஒரு புத்தகத்தின் வார்த்தைகளை மோர்ஸ் கோடில் அடித்து அனுப்புங்கள். மின் துகள்களாக மாற்றி மின்னஞ்சல்வழி அனுப்புங்கள். ஃபேக்ஸ் செய்யுங்கள். ஜெராக்ஸ் செய்யுங்கள். அதன் தரமோ, உள்ளடக்கமோ சிறிதும் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் ஒரு புகைப்படத்தை, ஓவியத்தை, ஓர் இசையை இப்படியெல்லாம் மாற்றி அனுப்பினால், அதன் தரம் கண்டிப்பாகக் குறையும். இது எழுத்தின் மற்றொரு மகிமை!
நாம் பிம்பங்களை உருவாக்குவது, பார்ப்பது எல்லாம் போட்டோ ஷாப்பினால் பெரிதும் மாறிவிட்டது. இசைக்கும் அவ்வாறே. உங்களிடம் உள்ள ஆம்ப்ளிஃபையர், ஸ்பீக்கரின் தரத்தைப் பொருத்து நீங்கள் கேட்கும் இசையின் தரம் கூடலாம். குறையலாம். கருவிகள் ஒரு ஓவியத்தின் , புகைப்படத்தின், திரைப்படத்தின் தரத்தைக் கூட்டும். குறைக்கும். ஆனால் நீங்கள் மோகமுள்ளை சாணித்தாளில் படித்தாலும், பளபள தாளில் படித்தாலும், கிண்டிலில் அல்லது கணினித் திரையில் படித்தாலும், யமுனாவின் அழகு தி.ஜா சொன்ன அதே அழகுதான். கூடவும் செய்யாது. குறையவும் செய்யாது. அது எழுத்து அளிக்கும் சாகாவரம்!
அதே சமயம் அந்தப் புத்தகம் மனத்தில் எழுதும் சித்திரம் வாசிக்கும் நபருக்கு நபர் மாறுகிறது. பாபுவைப்பற்றியும், யமுனாவைப் பற்றியும் தி.ஜா. எழுதிய அதே வரிகளைத் தான் நானும் வாசிக்கிறேன். நீங்களும் வாசிக்கிறீர்கள். அந்த வரிகள் நிரந்தரம். ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கம் வேறு வேறு. என் மனத்தில் உள்ள யமுனாவின் சித்திரம் எனக்கே உரித்தானது. உங்கள் மனத்தின் யமுனா என் யமுனாவின் பக்கத்தில் கூட நிற்க முடியாது. அது போல்தான் உங்கள் மனதின் யமுனாவிற்குமுன் என் யமுனாவும். எனவே வாசிப்பு என்பது வெளியில் தெரியும் அளவிற்கு எளிமையானதல்ல. அது உண்மையில் உங்கள் மனத்தில் உள்ள எத்தனை எத்தனையோ கற்பனைச் சித்திரங்களை முழுமைப்படுத்துகிறது.
நல்ல படைப்புகளைப் படிக்கும்போது, நாம் நம்மையறியாமலேயே நமது மனச்சித்திரங்களுக்கு அந்தப் படைப்பின் வழி ஒரு முழுமையைத் தருகிறோம். அது நமக்கு மட்டுமேயானது. அதனால்தான் அந்தக் கட்டுரையாளர் “ஒரு புத்தகம் ஒவ்வொரு வாசகன் மனத்திலும் மறுவடிவில் எழுதப்படுகிறது. அதே சமயம் வாசகன் மனத்தையும் தனக்கே உரித்தான வகையில் மாற்றியும் எழுதிவிடுகிறது” என்கிறார். A book is rewritten in the mind of every reader and the book rewrites each reader’s mind in a unique way too.
எல்லா நல்ல வாசகர்கள்போலவே இந்தப் புத்தகத்தின் கட்டுரையாளர்களும் அச்சுப் புத்தகங்களுக்கு இணையாக மின் புத்தகங்களை ஏற்கத் தயங்கவே செய்கிறார்கள். “மின் புத்தகங்கள் வசதியானவை. அச்சுப் புத்தகங்கள் ரசிக்கத்தக்கவை” என்கிறார் ஒருவர். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் மிக அழகாக இருக்கிறது. “அச்சுப் புத்தகங்கள் தோட்டம் போன்றவை. மின் புத்தகங்கள் சூப்பர் மார்க்கெட் போன்றவை. சூப்பர் மார்க்கெட் நமக்கு வசதியானது. ஆனால் அதை ஒரு தோட்டத்தை ரசிப்பதுபோல் மெய்மறந்து ரசிக்க முடியுமா?” என்கிறார். என் போன்றோருக்கு அன்றாட வாழ்க்கையை ஓட்ட சூப்பர் மார்க்கெட்தான் முக்கியம் என்பதால், நான் கிண்டில் கட்சிதான். என்றேனும் ஒரு நாள் நான் தோட்டத்தை ரசித்துக்கொள்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்!
நாம் எல்லோருமே அனைவரும் நிறைய புத்தகம் வாசிக்க வேண்டும். மக்களுக்கு வாசிப்புப் பழக்கம் வரவேண்டும். வாசிப்புப் பழக்கம் மேம்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள்தான். எது வாசிப்பைத் தடுக்கிறது? நான் உட்பட பலரும், நம்மிடம் இயல்பாக உள்ள சோம்பேறித்தனம், பிற நடவடிக்கைகளில் நம் நேரத்தை வீணடிப்பது என்பதுபோன்ற தனிநபர் பலவீனங்களைத்தான் காரணமாக நினைக்கிறோம். சொல்லி வருகிறோம். ஆனால், ஒரு கட்டுரை பளீரென்று என் கன்னத்தில் அறைந்தது.
‘வேதம் புதிது’ சத்யராஜாக என்னை உணர்ந்த கணம் அது. எவை மக்களை வாசிக்காமல் தடுக்கிறது என்று பார்த்து அவற்றை சரிசெய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் அந்தக் கட்டுரை அந்தக் காரணங்கள் வறுமை, கல்வியறிவுக் குறைவு, கலாச்சாரரீதியாக மக்களில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்தல் ஆகியவைதான் என்கிறது. நாம் இவற்றை சரிசெய்தால், மக்கள் வாசிப்பது தன்னால் அதிகரிக்கும். நாம் இவற்றில் கவனம் செலுத்தாது, மக்கள் செல்லை நோண்டுகிறார்கள். டிவி பார்க்கிறார்கள். வெட்டிப் பொழுது போக்குகிறார்கள் என்று மேலோட்டமாகப் பேசுகிறோம். இவையும் முக்கியமான காரணங்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவை மட்டுமே காரணங்களல்ல. ஒட்டுமொத்த சமூகச் சூழலையும் புரிந்து கொண்டு, சமூக மாற்றத்திற்கும் நம்மால் இயன்றதைச் செய்யும்போது, வாசிப்பு உண்மையாக மலரும்.
அந்தப் புரிதலை எனக்குத் தந்த அற்புதமான தொகுப்பு இது. ஆர்வமுள்ளோர் வாசிக்க – Stop What You’re Doing And Read This.