ஆயிஷா இரா. நடராசன்

அந்த நாட்களில் நான் தினந்தோறும் சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே சுரங்கப் பாதையில் நடந்து, கடந்து பணிக்கு ஓடும் வாழ்வைப் பெற்றிருந்தேன். ரேஸ் டிக்கெட் லாட்டரி விற்பனை செய்யும் விழியற்ற வீதி சகோதரர்களின் மத்தியில், அவர் இறந்த பிறகு அறிந்து கொண்டேன். அவர் பெயரே தேவதைதான் இப்போ தொடர்பு அறுந்து விட்டது. அது மாதிரி ஒரு புத்தக தேவதையைக் கண்டதில்லை இன்று வரை. பழைய புத்தக சாலைக்கடை நம்பி எனும் பெரியவர் மூலம் அறிமுகம். “தேவதைக்குப் புத்தகம் வாசிக்கிறீர்களா… சார்?” என்று அசால்டாக கேட்டார். அப்போது தான் கவனித்தேன்… அப்போதிலிருந்து கவனித்துக்கொண்டே இருந்தேன்.
கடந்துபோகும் மாணவியர்… கல்லூரிப் பையன்… அந்த கிளிப்பச்சை சேலை மூன்றாம்பால் நட்பு என யார் யாரோ நான் சுரங்கப் பாதையைக் கடக்கும் போதெல்லாம் தேவதைக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை சத்தமாக வாசித்துக் காட்டியபடி இருப்பார்கள். அவர்களது சுரங்கப்பாதை இருப்பிட மூலையில் – கல்கி, ஜெயகாந்தன் முதல் தாமரை, கணையாழி, சுஜாதா என பார்த்து வியந்திருக்கிறேன். கணையாழியில் பின் நாட்களில் என் முதல் சிறுகதையும் ஆயிஷாவும் வெளிவந்தபோது முதலில் தோன்றியது, கண்டிப்பாக தேவதை வாசித்திருப்பார்.
இப்போது மட்டுமென்ன, உங்களுக்கு தனக்கோடி சாரைத் தெரியுமா? என் முதல் வாசகர். என் படைப்புகளை உடனே புசித்து விவாதிப்பது இருக்கட்டும். தமிழாசிரியர். அவர் ஒரு விழியற்ற மாற்றுத் திறனாளி என்றே எனக்கு ரொம்ப நாள் தெரியாது. நான் வாசிக்கத் துடிக்கும் பல நூல்களை எனக்குமுன் வாசித்துவிட்டு இதுபற்றி எழுதவில்லை… அதுபற்றி விமர்சிக்கக் கூடாதா எனப் பேசுவார். நான் உரை நிகழ்த்தும் கூட்டங்களில் பங்கேற்று தவறாமல் தன் கருத்தைப் பதிவுசெய்வார். அந்தக் கூட்டங்களில் ஒன்றில்தான் கவனித்தேன், அய்யோ… மாற்றுத்திறனாளியா இவர் என்று மனம் நெகிழ்ந்து போனது.

பார்வை இல்லாதவர்களின் புத்தக வாசிப்பு ஒரு பெரிய போராட்டம். ஒரு மில்லியன் விழியற்ற மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட மக்கள் தொகையைப் பெற்ற நம் இந்தியாவில் அவர்களுக்கான சிறப்புப் புத்தக வெளியீடுகள் மிக மிகக் குறைவு. பட்ஜெட்டில் 0.002 சதவிகிதம் என்றால் மனம் வெதும்புகிறது. பிரெயில் மொழியில் நல்ல புத்தகங்களை அச்சாக்கம் செய்வது தமிழகம் உட்பட நாலே மாநிலங்களில்தான் நடக்கிறது. அவற்றில் மிகுதியானவை ஆரம்பப் பள்ளி பாடநூல்கள். இதற்கு மத்தியில் நாவல், சிறுகதை, நல்ல கட்டுரைகள், அறிவியல் என்றெல்லாம் பிரெயிலில் வருவது ரொம்ப அபூர்வம். இன்றைய நவீன – இணைய வாசிப்பு – ஸ்கிரீன் ரீடிங் எனும் மென்பொருள்மூலம் ஓரளவு சாத்தியமாக்கி உள்ளது என்றாலும் எத்தனை மாற்றுத் திறனாளி விழியற்ற வாசகரிடம் முதலில் திறன்-பேசி உள்ளது?
ஆனால் விழியற்ற சகோதரிகளான தேவதை போன்றவர்களுக்கு என்றே ஒரு நூலகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதற்கான போராட்டம் மிகப்பெரிது. இங்கிலாந்தின் லண்டன், தெற்கு ஹாம்ஸ்டில், 73, ஃபேர்பாக்ஸ் ரோடு எனும் இல்லத்தின் ஒண்டிக் குடித்தனத்தில் ஒரு மாடிபடிக் கட்டின் கீழே மார்த்தா அர்னால்டு எனும் ‘தேவதை’ தொடங்கிய போராட்டம் அது. வருடம் 1882 அப்போது லண்டனில் வதங்கிக் கொண்டிருந்த விழியற்ற மாற்று ‘தேவதை’களில் அறுபது பேருக்குமேல் வாரம் தவறாமல் வந்து கூடி மார்த்தாவின் உதவியாளர் கார்லோட்டா டோவ் மற்றும் சில தன்னார்வலர்களின் உரத்த வாசிப்பை – கேட்பது பிரெயில் மொழியில் விரலால் சுவைத்து வாசிக்கக் கற்று மார்த்தாவின் புத்தகப் படையில் இணைந்ததும் வரலாறு.
மாதம் இரண்டு பிரெயில் புத்தகங்களை மார்த்தா எப்படியோ தயாரித்து விடுவார். இரவும் பகலும் அதற்காக உழைக்க வேண்டும். இன்று இருப்பதுபோல பிரெயில் நூல் அச்சிட்ட இயந்திரமெல்லாம் அன்று கிடையாது. பத்து புரவலர்கள். வீதியில் வீசப்பட்ட அட்டைகள், எடைக்குப் போடப்பட்ட பழப்பெட்டி, அட்டைகள் ஏன் எப்படிப்பட்ட தடிக் காகிதமாக இருந்தாலும் தானமாக வழங்கப்பட்ட எல்லாவற்றிலும் குண்டூசிகளை வைத்து விரல்களில் உதிரம் வர மார்த்தாவும் கார்லோட்டாவும் கடுமையாகப் பணி செய்தார்கள். வாரம் திங்கள் மதியம் கூடிய வாசகிகள் – விரைவில் சில விழியற்ற வாசகர்களையும் கூட்டி வந்தபோது பிரெயில் நூல்களை உருவாக்கும் பட்டறை வேலையில் ஆறு பேர் இணைகிறார்கள். இதில் பெரிய சவால் யாராவது பார்வை உள்ள ஒருத்தர் சத்தமாக வாசிக்க வேண்டும். அதை செவிமடுத்து மார்த்தாவும் அவரது தோழர்களும் பிரெயிலில் அதை துளை செய்ய வேண்டும். அட்டைகளை வாங்குவதற்காக வருடாந்திர சந்தா என்று இரண்டு ஸ்டெர்லிங் எனும் மிகச் சிறிய காசு பெறப்பட்டது.
விரைவில் பெரிய அதிர்ச்சியை சமூகம் கொடுத்தது. 1886ல் வீட்டைக் காலி செய்ய ஜப்தி நோட்டீஸ். மார்த்தா மற்றும் தோழர்களின் அந்த ஒற்றை நூலகம் வீதியில் வீசியெறியப்பட்டது. அப்போது அவர்களிடம் 750 பிரெயில் நூல்கள் இருந்தன! முதலில் 28, பவுண்டி சாலைக்கும் பிறகு அங்கிருந்தும் வீசப்பட்டு லண்டனின் பெல்சைஸ் சாலைக்கும் அந்த வரலாற்று நூலகம் இடம் பெயர்ந்தது. ஆனால் விழியற்ற ‘தேவதை’களின் வீதி நூலகம் என்ற அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக அந்த நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கு ஒரு வாசகர் சந்திப்பை மார்த்தா ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பிடிவாதமாக புத்தக தேவதைகள் மிகப்பெரிய ஒரு வேலை செய்தனர்.
தங்களிடம் சேர்ந்திருந்த சொற்ப தொகையில் நூறு சராசரிப் புத்தகங்களை விலைக்கு வாங்கி நூறு பெரிய மனிதர்களுக்கு அவற்றைப் பரிசாக தபால் பார்சலில் அனுப்பினார்கள். இது ஒருதிட்டம்தான். மேலும் 60 புத்தகங்களை வாங்கி, ‘தி பிளஸ்டு’ எனும் அனாதை சிறுவர் பள்ளியின் குட்டி இளவரசர்களுக்கு நேரில் சென்று பரிசாக அளித்தனர். இந்தப் பிரமாண்ட தியாகத்திற்குப் பிறகு இரண்டு பாதிரியார்களும், ஒரு உணவு விடுதி அதிபரும், பண உதவி செய்திட 1899ல் 300 விழியற்ற ‘தேவதை’ வாசகர்களின் பிடிவாதமான வாசிப்பு யுத்தத்திற்கு நடுவே பிரெயில் நூலகத்தில் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 3,200ஆக உயர்ந்திருந்தது.
மார்த்தாவின் பிரமாண்ட செயல்திட்டம் விரைவில் பதினாறு கிளை நூலகங்களை உருவாக்குகிறது. பல மைல்கள் கடந்து வந்து வாசிக்கத் தேவையில்லை.

அவரவர் வாழும் பகுதியிலேயே விழியற்ற தேவதைகளின் வீதி நூலகங்கள் முளைக்கத் தொடங்கின. 1906ல் அரசு தலையிடுகிறது. பார்வையற்றோருக்கான தேசிய நூலகக் குழுமம் என்கிற அமைப்பைத் தோற்றுவித்து மார்த்தாவை அணுகியது. 125, குயின்ஸ் ரோடில் அரசு கட்டிடத்தில் விழியற்ற வாசகர்களின் நூலகத்தை நடத்துமாறு கேட்டது. ஆனால் அனைத்து நூலகத்தையும் நடத்துமாறு கேட்டது. ஆனால் அனைத்து வீதி நூலகங்களையும் மூடிவிட்டு ஒற்றைப் பிரமாண்ட நூலகத்தில் இணைந்திட மார்த்தா மறுத்தார்.
விரைவில் பேஸ் வாட்டர், வெஸ்ட்மின்ஸ்டர் என்று பிற நகரங்களிலும் விழியற்ற தேவதைகளின் வீதி நூலகங்கள் திறக்கப்பட்டன. இத்தல் ஆஸ்டின் எனும் இளம் ‘தேவதை’ மார்த்தாவோடு இணைந்தபோது இரண்டு முக்கிய மாற்றங்கள். ஆஸ்டின் எனும் விழியற்ற அந்த தேவதையின் தந்தை ஒரு பொறியியலாளர். அதுவரை மார்த்தாவின் தோழர்களிடம் இருந்தது. கைபட உருவான பிரெயில் நூல்களும், மூன்-டைப் என்று வில்லியம் மூன் கண்டுபிடித்த லத்தீன் அகர முதலியைப் பயன்படுத்த இடமிருந்து வலமாகச் செல்லும் முத்திரை வடிவ மரவாசிப்பும்தான் ஆஸ்டின் சேர்த்தது. லூக்காஸ் பிரெயில் அச்சடிப்பு ஆரம்பகால இயந்திரம். இந்த இயந்திர அச்சாக்கம் வந்த பிறகு 600 கிளை நூலகங்களாக விழியற்ற தேவதைகளின் வீதி நூலகங்கள் விரிவடைந்தன.
1916ல் முதல் உலக யுத்தத்தின் குண்டுவீச்சில் மார்த்தாவின் பிரதான நூலகம் சிதைத் தெரியப்பட்டபோதும் அதை ஒரே மாதத்தில் மறு செப்பனிட்ட மகிழ்ச்சியிலும் தனது புத்தகப்பயணத்தை ஆஸ்டின் எனும் அடுத்த தலைமுறை ‘தேவதை’யிடம் ஒப்படைத்த திருப்தியிலும் 7,000 பிரெயில் நூல்களை இவ்வுலகிற்குத் தந்து மறைந்த மார்த்தா எனும் ஒப்பற்ற புத்தகப் போராளியின் நினைவாகப் பார்வையற்றோருக்கான தேசிய நூலகம் எனும் அமைப்பு ராயல் பார்வையற்றோருக்கான கல்வியகம் எனும் கிளைகளின்மூலம் இன்றும் செயல்படுகிறது. மார்த்தா திட்டம் என்று இன்று நூலகம்தோறும் இங்கிலாந்தில் விழியற்றவர்களுக்கான தனிச்சிறப்பு வாசிப்பு அரங்கங்களும் உள்ளன.
முகந்திரண்டு புண் உடையார். அதாவது கண் உடையார் அல்ல – என்று வள்ளுவம் வாசிக்கத் தெரியாதாரை சாடுகிறது. முகத்திரண்டு கண் இல்லாதாரான மார்த்தாவை ‘தேவதை’களும் தேவதைகளைப் போன்ற மார்த்தாக்களும் – நம் சராசரிகளை எவ்வளவு மேம்பட்டவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். புத்தகத் திருவிழாக்களில் நாம் இந்த விழியற்ற தேவதைளுக்கு ஒரு தனி வாசிப்பு அனுபவப் பகிர்வு அரங்கத்தை இணைப்பது இனியாவது பரிசீலிக்கப்படுமா?