நேர்காணல்:
ஏ.கே. பத்மநாபன்
சந்திப்பு : வீ.பா.கணேசன்
தொழிற்சங்க உரிமை என்பது ஜனநாயக உரிமையின் ஒரு பகுதிதான். ஜனநாயகம் தாக்கப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது தொழிற்சங்க இயக்கம்தான்.
(1960களின் இறுதியில் அனலாய் வீசியடித்த சென்னை தொழிற்சங்க இயக்கத்தில் கள வீரராகச் செயல்படத் தொடங்கி, சிஐடியுவின் மாநில அளவிலான தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, பின்னர் அதன் அகில இந்திய தலைவராக ஆறு ஆண்டு காலம் செயல்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்து (தொழிலாளியாக இருந்து இப்பொறுப்பினை ஏற்றவர்), தற்போது சிஐடியுவின் அகில இந்திய துணைத்தலைவராகச் செயல்பட்டுவரும் தோழர் ஏ. கே. பத்மநாபன் அவர்களை ‘புத்தகம் பேசுது’ மே மாத இதழுக்காகப் பேட்டி கண்டோம். பேட்டி கண்டவர்: வீ. பா. கணேசன்)
முதலில், ‘புத்தகம் பேசுது’ வாசகர்கள் சார்பில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக தொழிற்சங்க இயக்கத்திலும் இடதுசாரி இயக்கத்திலும் செயல்பட்டு வருகிறீர்கள். எது உங்களை இந்த இயக்கத்தை நோக்கி கவர்ந்து இழுத்தது?

ஏ.கே. பத்மநாபன்: ‘புத்தகம் பேசுது’ இதழின் முதல் இதழிலிருந்து ஒரு வாசகன் என்ற றையில், அந்த சிறப்பான இதழுக்கும் அதன் வாசகர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொழிற்சங்க இயக்கம் என்பதைவிட, எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் இருந்து செங்கொடி இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், அதையொட்டிய சுற்றுச்சூழலில் வளர்ந்தவன் நான்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய பலமான பகுதிகளில் ஒன்றான கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த சுற்று வட்டாரம் முழுவதும் இந்த இயக்கத்தோடு பின்னிப் பிணைந்து நிற்கக்கூடிய ஒரு பகுதி. நெசவுத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கள்ளிறக்கும் தொழிலாளர்கள் என்று இருக்கும் பகுதி.
அதுமட்டுமல்ல. நான் வளர்ந்துவருகிற போதே கேள்விப்பட்டு வந்த விஷயங்கள், 1948, 1949, 19050ஆம் ஆண்டுகளில் ஏவி விடப்பட்ட கடுமையான அடக்குமுறை நிகழ்வுகள், இப்படிப்பட்ட பின்னணியோடு பள்ளிக்கூடப் படிப்பு, அந்த நேரத்திலிருந்த அரசியல் வளர்ச்சிப் போக்கு இதனோடு ஏற்பட்ட ஈர்ப்புதான் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் சென்னைக்கு வந்தவன் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காகச் சென்றபோது, அங்கிருந்த தொழிற்சங்க இயக்கம் என்பதோடு இணைந்து, அந்த வேலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, நேரடியாக தொழிற்சங்க இயக்கத்தில் முழுநேர ஊழியராக மாறினேன். ஆகவே அந்த ஈர்ப்பு என்பது இயற்கையாகவே உருவான ஒரு சூழல் என்றுதான் கூற வேண்டும்.
இதில் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் என்னுடைய குடும்பம், என்னுடைய தந்தையின் செயல்பாடுகள் இதுபோன்ற விஷயங்களில் நான் உள்ளே போக விரும்பவில்லை. இடதுசாரி, தொழிற்சங்க இயக்கத்தை நோக்கி என்னை ஈர்த்தது இந்தப் பின்னணிதான் என்பதையே சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் நினைவிலிருந்து பார்க்கும்போது 1960களில் சென்னையில் வெடித்தெழுந்த தொழிலாளர் போராட்டங்களில் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கும் போராட்டமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
உண்மையில் 1967க்குப் பிறகு, தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், வெடித்துக் கிளம்பிய அந்தப் போராட்ட சூழல், அதனுடைய அரசியல் பின்னணி ஆகியவை ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய, பார்க்கப்பட வேண்டிய, உணரப்பட வேண்டிய, உணர்த்தப்பட வேண்டிய ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன். காரணம், 1967ஆம் ஆண்டுவரை ஒடுக்கப்பட்டு வந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கத்தினுடைய மிகப்பெரிய பகுதி அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் இணைந்து நின்று செயல்பட்ட நிலை.
தொழிற்சங்க ஜனநாயகம் என்பது முற்றிலும் மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்த ஒரு சூழல். இத்தகைய சூழலில் 1967ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற வகையில் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளோடு, இன்னும் சொல்லப்போனால், குறைந்தபட்ச ஊதியத்திற்காக நடைபெற்ற போராட்டம் போன்ற இதர பல போராட்டங்களை தேர்தல் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய கோஷங்களாகவே மாற்றிய பின்னணியில், அவை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில், 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னை நகரத்தின் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் புதிய எதிர்பார்ப்புகளும் அவற்றை நிறைவேற்றுவதற்கான போராட்டமும், போராடிப் பெற வேண்டும் என்ற ஆர்வமும், தாங்கள் விரும்புகின்றவர்களை தொழிற்சங்கத் தலைவர்களாக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையும் என இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சூழ்நிலை உருவானது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருந்தன.
1963 ஜூலை 9ஆம் தேதி நான் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் சட்டத்தின்கீழ் ஒரு பயிற்சியாளனாக நுழைகிறேன். அப்போதே அங்கு அரசியலின் பல அம்சங்கள் நிலவி வந்தன. அதற்குள் நான் போகவில்லை. 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட இந்த எதிர்பார்ப்பு ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நிலவியது.
நினைவில் நிற்கக்கூடிய தொழிற்சங்கப் போராட்டம் என்று சொல்லுவதுகூட மிகவும் கடினமானது. ஏனெனில் ஒவ்வொரு தொழிற்சாலைப் போராட்டத்திற்கும் அதற்கேயுரிய தனிச்சிறப்புகள் உண்டு. எம்.ஆர்.எஃப்.யூனியன் கார்பைட் (நேஷனல் கார்பன் கம்பெனி), அசோக் லேலண்ட், இஐடி பாரி போன்று ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உருவான போராட்டங்களின் தன்மை வேறு. இறுதியாக, சிம்ப்சனில் வந்த மிகப்பெரிய வெடிப்பு. அதை கடைசி என்றும் கூறிவிட முடியாது. இடையில் வந்த மிகப்பெரிய வெடிப்பு எனலாம். இவை ஒவ்வொன்றுமே தனித்தனி தன்மை வாய்ந்தவை.
ஒவ்வொரு தொழிற்சாலையின் நிகழ்வும் தன்னோடு இன்னொரு தொழிற்சாலையை இணைத்துக் கொண்டு சென்றது. இன்னும் சொல்லப்போனால், சென்னையில் சிறு தொழிற்சாலைகள் நிரம்பிய வடசென்னை சுந்தரம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (ஈஸ்வர அய்யருக்குச் சொந்தமானது) அந்தத் தொழிற்பேட்டையில் இருந்த எல்லா தொழிற்சாலைகளும் என்ஃபீல்ட் மற்றும் இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கக்கூடிய ஒரு தொழிற்பேட்டையாக இருந்தது. அங்கு நடைபெற்ற போராட்டங்கள் எல்லாமே 100 நாள், 80 நாள் என நடைபெற்றவை. இந்த ஒவ்வொரு போராட்டமும் எழுச்சியும் குறித்து ஒவ்வொரு மணிநேரம் பேசக்கூடிய அளவிற்கு தனிச் சிறப்புமிக்க நிகழ்வுகளாக இருந்தன.
அதில் சிம்ப்சன் தொழிலாளிகளின் போராட்டம் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. காரணம் நேரடியாக அரசாங்கத்தோடு மோதும் வகையில் நடைபெற்ற போராட்டம் அது. மற்ற எல்லா இடங்களிலும் அரசு பின்புலமாக இருந்து செயல்பட, நேரடியாக வருகிறபோது ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்திற்கு வேண்டிய தொழிற்சங்கத் தலைவர்கள் இவர்களை எதிர்த்து, தொழிலாளர்கள் விரும்பும் தலைவர்கள் வேண்டும் என்ற முறையில் நடைபெற்ற போராட்டம் அது. இவை எல்லாவற்றிற்கும் ஓர் அகில இந்தியப் பின்னணியும் இருக்கிறது. தமிழகம் தழுவிய பின்னணியும் இருக்கிறது.
ஆனால் சென்னை மாநகரத்தினுடைய எழுச்சி என்பது வடக்கே கோத்தாரி ஃபெர்டிலைசரில் (சிறிய தொழிற்சாலை) இருந்து பக்கத்தில் இருந்த இஐடி பாரி, எண்ணூர் ஃபவுண்டரி, அசோக் லேலண்ட் தொடங்கி மெட்டல்பாக்ஸ் வரை வட சென்னைப் பகுதியிலும், தெற்கே ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸில் இருந்து தொடங்கி, பல்லாவரம் இங்கிலீஷ் எலெக்ட்ரிகல்ஸ், கிண்டி தொழிற்பேட்டை, மேற்கே அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து டிவிஎஸ்ஸிலிருந்து டி.ஐ.சைக்கிள்ஸ், ஆவடி டாங்க் தொழிற்சாலை வரையில் கிழக்கே வங்காள விரிகுடா கடல் தவிர்த்து மற்ற மூன்று திசைகளிலும் இருந்த தொழிற்சாலை, தொழிற்பேட்டைகளில் எல்லா பகுதிகளிலும் நடந்த போராட்டங்கள்.
அந்தப் போராட்டத்தில் இணைந்து நின்று செயல்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள். ஒரு பக்கம் தோழர் வி.பி. சிந்தன் தலைமையிலான சிஐடியு அணி, இன்னொரு பக்கம் குசேலர் தலைமையிலான அணி. அவர்கள் போராடுகிறபோது அவர்களுக்கு ஆதரவாக நின்ற பல தொழிற்சங்கத் தலைவர்கள். ஆனால் ஒவ்வொரு ஆலைக்கும் ஒரு பின்னணி இருந்தது. எல்லா இடங்களுக்குமான பொதுத்தன்மை என்பது நான் தொடக்கத்திலேயே சொன்ன, ‘தாங்கள் விரும்பும் தலைமையை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை’யுடன் தங்களது பொருளாதார மேம்பாடு என்பதுதான். நெஞ்சைவிட்டு நீங்காத ஏராளமான நினைவுகள் உள்ளன. அவை எனக்கு மட்டுமல்ல;
1967ஆம் ஆண்டுகளில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த, அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஒவ்வொருவருக்கும், இன்னும் சொல்லப்போனால், தொழிலாளிகள் மட்டுமல்ல; அந்தக் காலத்தில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் உட்பட அனைவருக்குமே பசுமையான நினைவுகளாக இருக்கும். ஏனென்றால் இந்தக் காலத்தில்தான் தமிழகத்தின் மற்ற பல பகுதிகளில் விவசாயிகளுடைய, விவசாயத் தொழிலாளிகளுடைய, பஞ்சாலைத் தொழிலாளிகளுடைய, சர்க்கரை ஆலைத் தொழிலாளிகளுடைய என்று பல பகுதி தொழிலாளர்களின் போராட்டங்களும் எழுச்சிகளும் நடைபெற்று வந்தன.
ஆகவே ஒரு குறிப்பிட்ட போராட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். ஆனால் நிச்சயமாக ஒரு நிகழ்வை சொல்லியே ஆக வேண்டும். 1973 ஜூலை 18 அன்று சிம்ப்சன் போராட்ட காலத்தில் தோழர் வி.பி.சி. அவர்கள் தாக்கப்பட்டார் (தோழர் விபிசி மீதான இந்த சம்பவம் குறித்து, ‘தீக்கதிர்’ சிறப்பு மலரில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்). அதற்கும் மேலாக அந்தப் போராட்டத்தை ஒட்டிய வேறு எந்த நினைவுகளும் இல்லை. அது நம் மனதில் ஆழப் பதிந்த, மறக்க முடியாத, இன்னும் சொல்லப்போனால் உயிரோடு இருக்கும்வரை மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்ற வகையில் நீடிக்கிறது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
தோழர்கள் வி.பி. சிந்தன், கே. எம். ஹரிபட், பி.ஆர். பரமேஸ்வரன், கே. கஜபதி போன்ற முன்னோடிகள் உங்கள் மீது எத்தகைய தாக்கத்தை உருவாக்கினார்கள்?
இந்த நான்கு தோழர்களும் அவர்களோடு சேர்ந்து, என்னைப் பொறுத்தமட்டில் நான் இணைத்துக்கொள்வது தோழர் பி.ஜி.கே. கிருஷ்ணன். இவர்கள் எல்லோருமாக என் வாழ்க்கையை இன்றைக்கு நான் இருக்கக்கூடிய சூழலுக்குக் கொண்டுவந்து நிறுத்தினார்கள் என்றே சொல்வேன். எல்லா வகையிலும் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த என்னை, சென்னை மாநகரின் தொழிற்சங்க ஊழியராக மாற்றியதில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கேயுரிய பங்கு இருக்கிறது.
சொல்லப்போனால் தோழர் கஜபதி அவர்களை நான் பார்க்கிறபோது தமிழகத்திலேயே ஒன்றுபட்ட கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்து பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் மாவட்டச் செயலாளர் என்ற வகையிலான அவரது அறிமுகம். அவரைப் பற்றி பின்னர் தெரிந்துகொண்ட விஷயங்கள் தன்னை பி அண்ட் சி ஆலைத் தொழிலாளியாக 1948ஆம் ஆண்டு போராட்டங்களில் ஈடுபட்டவராக, ஓர் உறுதி வாய்ந்த தோழராக இருந்தவர்.
பிறகு அவரோடு பேசுகிறபோதெல்லாம், சிறிதுகாலம்தான் அவர் ஒன்றுபட்ட கட்சியின், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார் என்றபோதிலும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு எல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் வெளியுலகத்தில் எல்லோருடனும் நான் நெருக்கமாகப் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி, இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதில் மிகப்பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் தோழர் வி.பி.சி., தோழர்,பி.ஆர்.பரமேஸ்வரன், தோழர் பி.ஜி.கே கிருஷ்ணன் மற்றும் தோழர் ஹரிபட் ஆகியோர் ஆவர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்க்கையில் அவரவருக்குரிய பங்களிப்பு உண்டு. அவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட்டது குறித்து எனக்கு ஏராளமான அனுபவங்கள் உண்டு. 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தோழர் வி.பி.சி. அவர்கள் சென்னை நகரத்தின் தொழிற்சங்க இயக்கத்திற்கு மீண்டும் பணியாற்ற வந்தபிறகு, தொழிற்சாலைக்குள் நடக்கக் கூடிய நிகழ்வுகளை எல்லாம் அவரோடு பேசுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது என்ஜினீயரிங் தொழிலாளர்களுக்கான வேஜ் போர்ட் இருந்தது.
மத்திய அரசு இந்த வேஜ் போர்ட்-ஐ அறிவிக்கும். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நான் அப்போது நிரந்தர தொழிலாளியாக ஆகவில்லை என்றாலும், அங்கு அந்த வேஜ் போர்ட்-ஐ அமலாக்குவது என்ற முறையில், அன்றைய தலைவராக இருந்த எஸ்.சி.சி. அந்தோணிப்பிள்ளை முயற்சிக்கிறபோது, வடசென்னையில் நடந்த ஒரு பேரவைக் கூட்டத்தில் அந்த வேஜ் போர்ட் என்பது என்ன? அதனுடைய பாதகங்கள் என்ன? என்பதை விளக்கி, நிறுவனத்தின் தன்மைக்கேற்ப தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தையும் மற்ற சலுகைகளையும் நிர்ணயிக்க வேண்டும். அதற்காகத்தான் வேஜ் போர்ட்-ஐ எதிர்க்கவேண்டும் என்று தோழர் வி.பி.சி. சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் முதல் பணிகளைத் தொடங்கிய காலம். இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய இறுதிநாள்கள் வரை அவர் என்மீது ஏற்படுத்திய தாக்கம் அல்லது என்னுடைய பணிகள் குறித்த அவரது கவனம் அதையொட்டி ஏராளமான நிகழ்வுகள் உள்ளன.
சென்னை மாவட்டப் பணியிலிருந்து மாநிலப் பணிக்கு என்னை மாற்றியபோது அது சாத்தியமல்ல என்று அவரோடு வாதிட்டேன். அப்போது, தான் சென்னைக்கு வந்து சேர்ந்த நிகழ்வை எல்லாம் வரிசையாகத் தொகுத்து, ‘ஒரு முழுநேர ஊழியர் அவரது வேலையை சொந்தமாக நிர்ணயிக்க முடியாது; உன்னுடைய வேலையை நாங்கள் முடிவு செய்வோம். என் வேலையை முடிவு செய்வது அன்றைய கட்சித் தலைமை. இன்று மாலை புறப்பட்டு சென்னைக்குப் போ, என்று சொல்லி, வேட்டி- சட்டை ஆகியவற்றோடு ரயில்வே டிக்கெட்டையும் கொடுத்து தன்னை சென்னைக்கு ‘அனுப்பி வைத்ததை’ அவர் கூறினார். ஏற்கெனவே நான் படித்துத் தெரிந்திருந்த அந்த விஷயத்தை அவர் வாயிலாகவே நேரடியாகத் தெரிந்துகொள்ள 1979ஆம் ஆண்டில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இப்படிப் பல விஷயங்கள். கடுமையான விமர்சனம். கடுமையான வகையில் திருத்துவது என என்னை வழிநடத்த, சரிப்படுத்த அவருடைய முயற்சி என்பது இவை அனைத்தும் தோழர் வி பி.சி.மூலமாகக் கிடைத்தது. அதேபோன்று வேறுபல நிலைகளில் தோழர் பி.ஆர்.பி. என்னை வழிநடத்தி வந்துள்ளார். தொழிலாளிகளுடன் நடந்துகொள்ளவேண்டிய அணுகுமுறை, தொழிலாளர் நலச் சட்டங்கள், பிரச்சனைகள் இவற்றுக்கெல்லாம் தோழர் ஹரிபட் அவர்களுடைய வழிகாட்டுதல்கள் இருந்தன. முதன்முறையாக முழுநேர ஊழியராக ஆனபிறகு, நான் செயல்பட அனுப்பி வைக்கப்பட்டது சென்னை ஓட்டல் தொழிலாளர் சங்கத்திலும் பொதுத்தொழிலாளர் சங்கத்திலும்தான்.
அன்று ஸ்ட்ரிங்கர் தெருவில் அது செயல்பட்டு வந்தது. அப்போது தோழர்கள் பி.ஜி.கே.கிருஷ்ணனும் எஸ்.வெங்கட்ராமனும் அந்தச் சங்கத்தில் செயல்பட்டு வந்தனர். 1963இல் அசோக் லேலண்டில் ஒரு பயிற்சியாளனாகச் சேர்ந்து, 1972 செப்டம்பரில் டிஸ்மிஸ் ஆகி, டிசம்பர் மாதம் 6ஆம் தேதி காலை ஸ்ட்ரிங்கர் தெரு அலுவலகத்தில் தோழர் பி.ஜி.கே.யிடம் பயிற்சியாளனாக வந்து சேர்ந்தேன். நிரந்தரத் தொழிலாளியாக நான் பத்து மாதம் மட்டுமே வேலை செய்தேன். ஆனால் தொழிற்சங்கப் பணியினுடைய எல்லா முதற்கட்ட விவரங்களையும் தோழர் பி.ஜி.கே. வெங்கட்ராமன் போன்ற தோழர்களிடம்தான் கற்றுக் கொண்டேன். இப்படி ஒவ்வொருவரும் என்னை வழிப்படுத்தினர்.
சென்னை நகரத்தில் அன்றைக்கிருந்த தொழிற்சங்க இயக்கத்தில் இருந்த எல்லோருக்கும் நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கக்கூடியவர்கள் மட்டுமின்றி, தெற்குப் பகுதியில் இருக்கக் கூடியவர்களோடு இணைக்கப்பட வேண்டிய ஒரு பெயர் தோழர் சி.பி.தாமோதரன். அவரோடு சேர்ந்தும் எமர்ஜென்சி காலத்திற்கு முன்பாக தொடர்ந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் என்னுடைய பணிகளை மேம்படுத்த மட்டுமல்ல; என் போன்று அன்றைக்கு இருந்த முழுநேர ஊழியர்கள் அனைவருக்குமே இது பொருந்தும். சி.பி.தாமோதரன் போன்ற தோழர்களைப் பற்றிச் சொல்கிறபோது அன்று சென்னையில் இயக்கத்தில் இருந்த எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசித்திரமான விஷயம்தான்.
அன்றைக்கு கிண்டி ஹாஸ்டலில் மாணவர்களாக இருந்தவர்களை முழுமையாக செழுமைப்படுத்துவதில், முறையாக தமிழ்கூட பேச வராத, சி.பி.தாமோதரன் எப்படி இவர்களையெல்லாம் செதுக்கி எடுத்துக் கொண்டுவந்து இயக்கத்தில் சேர்த்தார் என்பதுதான். அ.சவுந்தரராஜனில் இருந்து தொடங்கி அது ஒரு பெரும் பட்டியல் (இந்தப் பேட்டியை எடுத்தவர் உள்ளிட்டு தோழர்களின் பெயர்கள் பலவற்றையும் வரிசையாக அடுக்கினார்). ஏராளமானவர்கள் இப்படி உருவானார்கள். அவரது போராட்ட உணர்வு கிண்டி தொழிற்பேட்டையிலிருந்த ஒவ்வொரு தொழிற்சாலையிலும் எதிரொலித்தது. இந்துஸ்தான் டெலிபிரிண்டர் வேலைநிறுத்த காலத்தில் போலீஸ் தாக்குதலுக்கு அவர் உள்ளானார்.
ஒரே வார்த்தையில் சொல்வதானால், இன்றைக்கு இருப்பதைவிட அன்றைக்கு இருந்த தலைவர்களுக்கும் எங்களைப்போன்ற புதிய ஊழியர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே மிக மிக நெருக்கமான உறவு நிலவியது என்பதை என்னால் பெருமையோடு சொல்ல முடியும். 1963லிருந்து தொடங்கி இன்றுவரை, இங்கு நான் குறிப்பிட்டிருக்கக்கூடிய எல்லோருடனும், சுமார் 60 ஆண்டு காலம் சென்னையிலுள்ள தொழிற்சங்க இயக்கத்தோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு எனது பிணைப்பு இருந்தது. மற்றபடி என்னுடைய சக ஊழியர்களாக, சற்று மூத்தவர்களாக இருக்கக் கூடிய தோழர்கள் வி. மீனாட்சிசுந்தரம்,
அ.சவுந்தரராஜன் போன்ற ஒவ்வொருவருமே இந்த உருவாக்கத்திற்கு உதவி புரிந்தவர்கள் என்றுதான் கூற வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட தோழர் என்று கூறிவிட முடியாது.
1979க்குப் பிறகு மிகப்பெரிய மாநில தொழிற்சங்கத் தலைவர்களான தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், ஆர்.உமாநாத்,ஏ.நல்லசிவன், கே.வைத்தியநாதன், கே.ரமணி, சி.கோவிந்தராஜன், ஜே.ஹேமச்சந்திரன் என இவர்கள் எல்லோருமே நான் மாநில மையத்திற்கு வந்த பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டிகளாக, கடுமையான விமர்சனம், சுட்டிக்காட்டுதல் என்ற வகையில் எனக்கு வழிகாட்டியது என்னை மேம்படுத்துவதில் மிகப்பெரும் பங்களிப்பு செலுத்தின.

தமிழ்நாட்டிற்கு வருகைதரும் அகில இந்தியத் தலைவர்களின் சொற்பொழிவுகளை மிக நீண்ட காலமாகவே நீங்கள் மொழிபெயர்த்து வந்திருக்கிறீர்கள். அதற்கான முன்தயாரிப்புகள் என்ன? இதில் எவருடைய உரை உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக, உற்சாகமூட்டுவதாக இருந்தது?
1962ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது தமிழில் ஒரு எழுத்தோ, ஒரு வார்த்தையோ தெரியாதவன் நான். 1962 ஜூலை மாதம் சென்னை தியாகராயர் கல்லூரியில் புகுமுக வகுப்பு மாணவனாக சேர்க்கப்பட்டேன். அந்த ஓர் ஆண்டு காலம் எந்த மொழியிலும் பேச முடியாமல் நான் பட்ட அவஸ்தையை இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால், மொழிபெயர்ப்பு என்கிறபோது இது எங்கிருந்து தொடங்கியது என்பதைச் சொல்ல வேண்டும். மொழியே தெரியாத ஒரு காலமும், அதையொட்டிய சிரமங்களும், பேசுவதற்குரிய ஆங்கிலத் திறமை இல்லாவிட்டாலும் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய ஆங்கில அறிவுதான் அப்போது ஒரு எஸ்.எஸ்.எல்.சி. மாணவனுக்கு இருக்கும். ஆனால் என் ஆசிரியர்களின் வற்புறுத்தலால் ஆங்கில இதழ்களையும் புத்தகங்களையும் படிப்பது என்பது இருந்தது. ஆனால் பேசுவதற்குரிய வாய்ப்பு இருக்கவில்லை.
என்னைப் போன்றுதான் என்னுடைய சக மாணவர்களும் இருந்தார்கள். எனக்கோ தமிழும் தெரியாது. அந்த ஓர் ஆண்டு காலம் தமிழ் மொழியைக் கற்றாக வேண்டும் என்ற ஒரு வெறியோடு நான் இந்த மொழிப் பிரச்சனையை அணுகினேன். எழுத்துக்களை எழுதிப் படிப்பது; அதை வார்த்தையாக மாற்றுவது; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, ‘தினத்தந்தி’யைப் படிப்பது என இவையெல்லாம் அந்த ஒரு வருடத்திற்குள்ளே நடந்தது. அது முடிவதற்குள்ளேயே தேர்வு எழுதி, இண்டர்வியூ முடித்து ஜூலை 9ஆம் தேதி அசோக் லேலண்டில் பயிற்சியாளனாகச் சேர்ந்து விட்டேன். இதற்கு இடையிலான 6 மாத காலத்திற்குள் தேவையான அளவிற்கு தமிழில் பேசுவதற்குக் கற்றுக்கொண்டேன்.
என்னுடைய நண்பர்களாக இருந்த கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழ்ப் புத்தகங்களை படி என்று ஏராளமான புத்தகங்களைக் கொடுத்தார்கள். அங்கு திருவள்ளுவர் நூலகம் என்று கம்பெனிக்குள் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமல்ல; நூல்களும் உள்ளுக்குள் விநியோகம் செய்யப்பட்டன. நான் புரிந்துகொள்ள முடியாத புத்தகங்கள். திரு.வி.க வின் ‘பெண்ணின் பெருமை’ புத்தகத்தைக் கொடுத்து ‘இதில் ஒரு பக்கத்தை நீ படி பார்ப்போம்!’ என்று எனக்கு சவால் விட்ட காலமெல்லாம் இருந்தது.
இப்படி ஆரம்பித்த தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி 1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தெருமுனைக் கூட்டங்களில் பேசுவோரில் ஒருவனாக என்னை மாற்றியது. 1970ஆம் ஆண்டு சிஐடியு தொடக்க மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியாக சென்னை மாவட்டக்குழு என்னை அனுப்பி வைத்தது. அங்கு பிரதிநிதிகளிடையே தமிழில் மொழிபெயர்ப்பு செய்தது நானும், பின்னாளில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்களின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவரான து. ஜானகிராமனும் தான். அன்றைக்கு ஏராளமானவர்களுக்கு ஆங்கிலம் புரியாது. அங்குதான் மொழிபெயர்ப்பு என்ற பணியை முதலில் தொடங்கினேன். எனக்கும் தன்னம்பிக்கை உருவானது. மற்றவர்களும் என்னை அடையாளம் கண்டனர்.
திரும்பி வந்தவுடன் 1971ஆம் ஆண்டிலிருந்தே பொதுக்கூட்டங்களிலும் மற்ற நிகழ்வுகளிலும் எனது மொழிபெயர்ப்பு தொடர்ந்தது. இந்த மொழிபெயர்ப்பிற்கான தயாரிப்பு என்று சொல்வதைவிட இரு மொழிகளிலும் நிறையப் படிப்பது, பேசுவது என்றுதான் கூற வேண்டும். 1970ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தொடர்ந்து ஐந்து நாட்கள் உரைகளை மொழிபெயர்த்து, மொழிபெயர்த்து எங்கள் இருவருடைய குரலையும் இழந்து சென்னைக்கு வந்து சேர்ந்தபோதுதான் என்னாலும் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவானது. ஆனால் அங்கு நேரடியாக, உடனடியாக மொழிபெயர்ப்பது என்பது இல்லை.
பேசி முடித்தபிறகு அதை தமிழில் எடுத்துச் சொல்வது என்பதாகத்தான் இருந்தது. நேரடியாக மொழிபெயர்ப்பு செய்வதற்கான முயற்சி என்பது தொடங்கி கிட்டத்தட்ட இந்தியாவில் கட்சியினுடைய பெரிய தலைவர்கள் அனைவரது உரைகளையும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். 70லிருந்து தொடங்கினால் நான் டெல்லிக்குச் சென்ற 2010 வரையிலான 40 ஆண்டுக் காலத்தில் எல்லோருக்கும் மொழிபெயர்த்திருக்கிறேன். இதில் யார் என்னைக் கவர்ந்தது என்றால், நிச்சயமாக தோழர் இ.எம்.எஸ்தான். ஏனென்றால் முதன்முதலில் இ எம் எஸ்ஸுக்கு மதுரையில் மொழிபெயர்த்தபோது, அதற்கு முன்பே பலபேருடைய உரைகளை நான் மொழிபெயர்த்திருந்தபோதிலும்,இ.எம்.எஸ்.ஸின் உரையை மொழிபெயர்க்கப் போகிறோம் என்றபோது எனக்குள் ஒரு வகையான அச்சம் எழுந்தது.
என்னைப் பார்த்தவுடன், ‘என்ன இங்கே?’ என்றுதான் அவர் கேட்டார். ‘நான்தான் இன்று உங்கள் உரையை மொழிபெயர்க்கப் போகிறேன்’ என்று சொன்னேன். மேடையில் ஏறி அவர் வழக்கமாகக் கூறும் முதல் வார்த்தையை, அதாவது கேரள மக்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்ற வாக்கியத்தை, அவர் உதிர்த்தபோது எனக்கு வார்த்தையே வெளிவரவில்லை. காலெல்லாம் நடுங்கியது. இ.எம்.எஸ்.ஸின் உரையை மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வு என் மனதை எங்கெல்லாமோ கொண்டு சென்றது.
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது அவருக்கு அளித்த வரவேற்பின்போது பக்கத்தில் போய் நின்றது போன்ற பல நிகழ்வுகளின் சித்திரங்கள் என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தன. மனதை ஒருமிக்கும் வாய்ப்பு கிடைக்காத ஓர் அவஸ்தையான உணர்வோடு நான் அப்போது இருந்தேன். எனினும் அவரது இரண்டாவது வார்த்தையில் இருந்து நான் மீண்டு வந்து விட்டேன். அவரும் உரையை முடித்தவுடன், ‘முதலில் கொஞ்சம் சிரமப்பட்டீங்கபோல இருக்கு. அப்புறம் சரியாயிடுச்சு!’ என்று சொன்னார். ‘சரியாயிடுச்சு!’ என்று அவர் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவரால் தமிழை நன்கு புரிந்து கொள்ள முடியும். மொழிபெயர்ப்பில் தவறு செய்தாலும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் ஏ.கே.ஜி.யும் அவரும். அதனால் அவரது எளிமையான மொழி, சுருக்கமான வார்த்தைகள் இப்படித்தான் அவரது உரை இருக்கும். கிட்டத்தட்ட கட்சித் தலைவர்கள் அனைவரின் உரையையும் மொழிபெயர்த்திருக்கிறேன்.
நமது நவரத்தினத் தலைவர்களில் பி.ஆர்.ஒருவர். மற்றொரு தலைவர் பிரமோத்தாஸ் குப்தா. அவர் எந்தப் பொதுக்கூட்டத்திற்கும் வராதவர். இவர்களைத் தவிர, ஏழு பேரின் உரைகளை, மொழிபெயர்த்திருக்கிறேன், பிறகு வந்த எல்லா தலைவர்களின் உரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். மாணிக் சர்க்கார் உட்பட. இன்னும் சொல்லப்போனால், வாலிபர் சங்கத் தலைவர்கள், கேப்டன் லஷ்மி உட்பட பலரின் உரைகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இவர்களின் உரைகளை மொழிபெயர்ப்பது போக, பொதுக் கூட்டங்களுக்காக இந்தத் தலைவர்களோடு பயணித்த அனுபவம் என் வாழ்க்கையிலேயே மிகவும் தனித்துவமானது.
நிருபன் சக்ரவர்த்தியோடு, இ.எம்.எஸ்.ஸோடு,ஏ.கே.ஜி.யோடு, சுர்ஜித்தோடு பயணித்த நாள்கள் இன்றைக்கும் நினைவில் நிற்பவையாக உள்ளன. இத்தகைய பயணத்தின்போது சுர்ஜித் விவசாயம் குறித்தும், அறுவடை குறித்தும் என்னோடு பேசுகிறபோது, கடையில் அரிசி வாங்குவது தவிர, எனக்கும் விவசாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரிடம் சொல்ல வேண்டியதாயிற்று. இப்படி ஒவ்வொரு அனுபவமும் இருந்தது. இவை தனியாக மனதில் நிலைத்து நிற்கக்கூடிய விஷயங்கள்.
ஆனால் இந்த மொழிபெயர்ப்பு என்பதில் ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். புதுவை ஞானம் என்கிற தோழர் ஞானப்பிரகாசம் எனது வகுப்பு நண்பர். என்னுடைய புகுமுக வகுப்புத் தோழர். என்னுடைய மிகப்பெரிய நண்பர். கல்லூரி நாள்களில் இருந்தே அவருக்குக் காது கேட்காது. என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு நான் எழுதும் குறிப்பைப் பார்த்து எழுதிக் கொள்வார். அந்த ஞானம், பிறகு மொழிபெயர்ப்பாளராக, கவிதை, கதை ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். அதை வைத்துக்கொண்டே வாழ்வது என்ற அளவிற்கும் போனார். எனக்குத் தமிழ் தெரியாத காலத்தில் அவரோடு பேசியதும், திராவிட அரசியல் என்பதாக அவரது தொடக்க கால அரசியல் இருந்தபோதிலும், பிறகு எல்.ஐ.சி.யில் சேர்ந்து சங்கப் பொறுப்பாளராகவும் மாறினார்.
1963க்குப் பிறகு 1969இல் அவரை மீண்டும் சந்திப்பதற்கு முன்பு 2-3 கடிதங்கள்தான் எழுதியிருப்போம். 69இல் சந்தித்தபோது அவர் கட்சிக்காரர் ஆகியிருந்தார். மொழிபெயர்ப்பு என்னும்போதெல்லாம் எனக்கு புதுவை ஞானம்தான் நினைவில் தோன்றுவார். அவரது ஒரு வகையான மொழிபெயர்ப்பு. நான் வேறு வகையான மொழிபெயர்ப்பு என்றாகி விட்டது. நான் மொழிபெயர்ப்பு செய்யும் கூட்டங்களுக்கு வந்து, கூட்டம் முடிந்தவுடனே ‘ஏய்! நீயா மேடையில இதெல்லாம் பண்ணிட்டிருக்க?’ என்று ஒருமுறை அல்ல, பல முறை தோழர் ஞானம் சொன்னது என்னால் மறக்க முடியாத ஒன்று. அது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சான்றிதழ் என்றே சொல்லலாம்.
அன்றைக்கு அப்ரெண்டிஸ்களை நிரந்தரமாக்க தொழிற்சங்கங்கள் போராடி வந்தன. இன்று ஜிக் தொழிலாளர்கள் எனப்படும் பிரிவினருக்கு எந்தவிதப் பணிப்பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. இதில் தொழிற்சங்கங்கள் எத்தகைய பங்கினை வகிக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
அன்றைக்கு இருந்த சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஏனெனில் அன்று பயிற்சியாளர்களை பயிற்சியாளர் திட்டத்தின் அடிப்படையில் பணிக்குச் சேர்த்தார்கள் என்று சொன்னால், கிட்டத்தட்ட 100க்கு 100 பேர் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் இருந்தது. 1963இல் நான் பயிற்சியாளனாக சேரும்போது எங்கள் பயிற்சித் திட்டம் என்பது மூன்றாண்டு காலத்திற்கு வாரம் 5 நாள் தொழிற்சாலையில் பணி; ஒரு நாள் ஐ.டி.ஐ. வகுப்பு. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் தேர்வை எழுதுவது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டு ஆண்டுகள் செமி ஸ்கில்ட் ஊதியத்தில் சிறப்புப் பயிற்சி. நிரந்தரம் இல்லையென்றாலும் செமி ஸ்கில்ட் ஊதியம் கிடைத்தது. அதன் பிறகு ஸ்கில்ட் ‘பி’ கிரேடில் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள்.
யாரும் அன்றைக்குப் போராட வேண்டியதே இல்லை. ஏனென்றால் இவர்கள் மிகக் குறைந்த உதவித் தொகையில் திறமையாக வேலை செய்யக் கூடியவர்களாக மாறுபவர்களாக இருந்தனர். இன்னொரு பிரிவினர் ஐ.டி.ஐ. படிப்பு முடித்து பயிற்சிக்கு வருவார்கள். அவர்களும் ஆலைகளில் இருந்தனர். அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுப் பயிற்சி. அதை முடித்ததும், அவர்களும் நிரந்தரம் என்பதாகத்தான் நிலைமை இருந்தது.
தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவை என்ற வகையில் அவர்களை உள்வாங்கிக் கொள்வது என்பது கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் (1960களில்) பெரிய நெருக்கடி வருவதற்கு முன்னால் இருந்தது. 1967 தேர்தலுக்கு முந்தைய காலம் நமக்கு நினைவிருக்கும். ஒரு பக்கம் உணவுப் பற்றாக்குறை; மறுபக்கம் பொருளாதார நெருக்கடி. அதுதான் எங்களையெல்லாம் கடுமையாகப் பாதித்தது.
1966ஆம் ஆண்டில் பயிற்சி முடிந்தவுடனே எங்களுக்கு செமி ஸ்கில்ட் ஊதியம் தரும் நேரத்தில் இங்கே ஒருபக்கம் வேலையின்மை நெருக்கடி. மறுபக்கம் உங்களுக்கெல்லாம் லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி தரப்பட்டுள்ளது. எனவே நாங்கள் உங்களை வெளியேற்றப்போவதில்லை. ஆனால் நீங்கள் போவதாக இருந்தால் போகலாம் என்றார்கள்.
3 வருடம் பயிற்சி முடித்து அதே 95 ரூபாய் உதவித் தொகையில் இரண்டேகால் வருடம் எங்களை எல்லாம் ஷிஃப்டில், உற்பத்தியில் வேலை வாங்கினார்கள். அது ஒரு பக்கம். ஆனால் அன்று நெருக்கடி இருந்தது. இன்னொரு பக்கம் இந்த நெருக்கடியை முதலாளிகள் தகுந்தமுறையில் பயன்படுத்திக்கொண்டார்கள்.
1967ஆம் ஆண்டு தேர்தலின்போது நான் மூன்று ஷிஃப்ட் செய்திருக்கிறேன். எனக்கு மாற்றாக அடுத்த ஷிஃப்டில் வருபவர் அன்றைக்கு 3,500 ரூபாய் ஊதியம் வாங்கியபோது நான்
95 ரூபாய் உதவித்தொகை வாங்கிக்கொண்டு நள்ளிரவு ஷிஃப்ட் செய்துகொண்டிருந்தேன். இது ஒரு பக்கம். ஆனால் பொதுவான நிலை என்பது பயிற்சி முடிந்தபிறகு வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. நெருக்கடிகள் வரும்போது நிறுவனத்தின் நிலைமைக்கு ஏற்ப சற்றே மாற்றங்கள் இருக்கும். ஆனால் இன்றைக்கு அப்படியல்ல, பயிற்சி என்பதுகூட இந்த அப்ரெண்டிஸ் சட்டப்படியான பயிற்சி அல்ல.
அப்ரெண்டிஸ் என்பது சுரண்டலை முழுமைப்படுத்தவும், எந்தச் சட்டமும் பொருந்தாது என்று சொல்வதற்கும் உள்ள ஒரு திட்டமிட்ட முயற்சி. இது 80களின் இறுதியிலும் 90களிலும் எல்லா இடங்களிலும் பெருமளவிற்கு வரும்போதுதான், அன்றைக்கு இருந்த திமுக அரசு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் எத்தனை சதவீதம் பயிற்சியாளர்கள் இருக்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பேசப்பட்டு, கிட்டத்தட்ட அதற்கான சட்ட முன்வரைவும்கூட தயாரிக்கப்பட்டது.
எனவே 1960களில் இருந்து 2020க்கு வரும்போது பயிற்சியாளர் என்ற முறை அல்லது கேஷுவல் அல்லது காண்ட்ராக்ட் என்ற முறை எனப் பல்வேறு வகையான வழிகளில் நுழைந்துள்ளது. அதாவது, அவுட்சோர்சிங் அல்லது காண்ட்ராக்ட் என்பது பல வகையான மாற்றங்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் பல வடிவங்களில் உள்ளன. அதனால் அன்றைக்கு இருந்த நிலைமையும், அன்று இருந்த தொழிற்சங்க உணர்வு என்பதும் முற்றிலும் வேறுபட்டது.
இன்றைக்குப் பயிற்சியாளர் என்பது பலவகையில் மாறியுள்ளது. நிரந்தர வேலைவாய்ப்பு அல்லது மத்திய அரசு உருவாக்கிய பல திட்டங்கள் எல்லாம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டன. ஏனெனில் சுதந்திரமான சுரண்டல் என்ற நிலைக்கு வந்ததால், இந்த வடிவம் என்றில்லாமல் தொழிற்சங்க உரிமையைக் கேட்க முடியாத அளவுக்குள்ள பல வடிவங்களால் ஆன சுரண்டலாக இன்றைய சூழல் இருக்கிறது.
இதில்தான் உங்கள் கேள்வியின் முக்கியமான அம்சம் அடங்கியுள்ளது. இன்றைக்கு, ‘உங்கள் சொந்த நலனுக்காகவேனும் இந்தப் பிரச்சனையில் தலையிடவில்லை என்றால் நீங்கள் யாருமே போராட முடியாது; உரிமைகளைக் கேட்க முடியாது; எந்தச் சுரண்டலையும் எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகும்’ என்று நிரந்தரத் தொழிலாளிகளிடம் தொழிற்சங்க இயக்கம் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. ‘முன்மாதிரி முதலாளி’ என்று உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக் காட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து, அரசுத் துறைகளிலிருந்து, பெரிதும் சிறிதுமாக உள்ள தனியார் நிறுவனங்கள்வரை, இந்தச் சுரண்டல் பல வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிரந்தரத் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
சமீபத்தில் ஒரு நாடாளுமன்றக் குழு பல பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சென்றிருந்தபோது, அதில் இடம்பெற்றிருந்த (சிஐடியுவின் அகில இந்திய செயலாளர்) தோழர் இளமாரம் கரீம் சொன்னார்: பல பொதுத்துறை நிறுவனங்களில் 35,40,45 சதவீதம்தான் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர். மற்ற எல்லோருமே பலவகையில் உள்ள தொழிலாளர்கள்தான். இந்த நிலையில் சங்கங்களின் கடமை என்பது – உங்கள் கேள்வியின் கடைசிப்பகுதியை குறிப்பாக எடுத்துக்கொண்டால் – சொந்த நலனுக்காகவேனும் இவர்களை சங்கரீதியாகத்திரட்டி, அவர்களது உரிமைகளுக்காக இந்த நிரந்தரத் தொழிலாளர்களும் அவர்களுடைய சங்கங்களும் செயல்படுவது நிரந்தரத் தொழிலாளிகளின் சொந்த நலன்களுக்கு அவசியமான ஒன்று.
இதை இன்றைய தொழிலாளர்களும் உணர்ந்தாக வேண்டும். தொழிற்சங்க இயக்கமும் உணர்ந்தாக வேண்டும். சிஐடியுவை பொறுத்தமட்டில் அதை உணர்ந்திருக்கிறது என்பது மட்டுமல்ல; அதை வலியுறுத்தி வருகிற நல்ல முறையிலான தலையீடு எங்கெல்லாம் சாத்தியம் ஆகிறதோ அங்கெல்லாம் தலையிடவும் தொடங்கியுள்ளோம்.
இது இன்றைக்கு மட்டுமானதல்ல. தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது என்ற கோரிக்கையுடன், பல ஆயிரக்கணக்கானோரை பணி நிரந்தரம் செய்யப் போராடிய அரசையும், மின்வாரியத்தையும், இதர பல தொழிற்சங்கங்களையும் எதிர்த்துப் போராடிய, அனுபவம் சிஐடியுவிற்கு உண்டு. எனவே தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டிலும் இது இன்றைக்குள்ள அவர்களுடைய சொந்த நலனுக்காக, அவர்களது உயிர்ப்பிற்காக போராடியே ஆக வேண்டும் என்பதுதான் உண்மை.
உற்பத்தித் துறையை மீறி சேவைத்துறை இன்று மிக வேகமாக முன்னேறி வருகிறது.
இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் போன்றவை உருவாகவிருக்கின்ற வேலைவாய்ப்புகளையும் பறித்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் இந்த நிலையை மாற்ற எத்தகைய முனைப்பு தேவைப்படுகிறது?
மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக உங்கள் கேள்வி உள்ளது. ஒன்று உற்பத்தித் துறையில் இருந்து சேவைத்துறைக்கு மாற்றம் என்பது வருகிறது. ஆனால் உற்பத்தி இன்றி சேவைத்துறை என்பது செயல்பட முடியாது. இன்றைக்கு முதலீடு என்பதும் கூடுதல் லாபம் என்பதும் ஆன நோக்கம் வருகிறபோது சேவைத்துறையை நோக்கி மூலதனம் செல்கிறது. ஆனால் உற்பத்தித் துறையின் வளர்ச்சி என்பது உத்தரவாதப்படுத்தப்படாமல் இன்னொரு பக்கத்தில் சேவைத்துறையின் வளர்ச்சிக்குப் போய்ச் சேரவே முடியாது.
கணினி அல்லது அதுபோன்று இருக்கக்கூடிய இயந்திரமயமாக்கல் – அந்த இயந்திரம் என்ற வார்த்தைகூட இன்று போய்விட்டது – இன்று செயற்கை நுண்ணறிவு என்ற நிலைக்கு வளர்ந்து விட்டது. எனவே இந்த மூன்று அம்சங்களிலுமே ஒரு சரியான விகிதாச்சாரம் இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் நீடித்து நிற்க முடியாது. வெளிநாட்டை நம்பியோ அல்லது இறக்குமதியை நம்பியோ நாடு போகவேண்டி வரும். உற்பத்தித் துறை என்பது மேம்படாது. உற்பத்தித் துறையோடு இணைந்த சேவைத்துறையின் வளர்ச்சியும் தேவைப்படுகிறது.
இந்த இரண்டும் உள்நாட்டின் தேவையை கணக்கிலெடுத்து நம்முடைய முன்னேற்றத்திற்காகவும் ஒரு திட்டமிட்ட முறையில் எடுத்துக்கொண்டு போவதற்கான ஏற்பாடு இருந்தால், அது பொதுத் துறையோ அல்லது தனியார் துறையோ, அதுவே நமக்குத் தேவையாக இருக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள நிலைமையில் திட்டமிடுதலும் கைவிடப்பட்டுவிட்டது. எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்ற சுதந்திரமும் வந்து விட்டது. நேரடி அந்நிய முதலீடு என்பது எந்தத் துறையிலும் எந்த அளவிற்கும் போகலாம் என்றும் வந்தாகி விட்டது. ஆகவே முதலீடு செய்பவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது அவர்களுடைய லாபம். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கக்கூடிய அம்சங்களை நாம் பார்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் கேள்வி அடிப்படையான ஒரு கேள்வி. இதில் அல்லது அதில் முதலீடு செய் என்று இந்தப் பிரச்சனைகளை தொழிற்சங்க இயக்கமோ அல்லது தொழிலாளர்களோ அல்லது நாட்டுமக்களோ சொல்ல முடியாது. அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள கொள்கைகளை முன்வைக்க வேண்டும். இப்போது கொள்கைகளின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவது என்பது கொள்கைகளை எதிர்த்த போராட்டமாக மாற வேண்டும் என்ற வகையில், கொள்கைகளை மாற்றுக! என்று மாற்றத்திற்கான போராட்டத்தினை தீவிரமாக்க வேண்டும். இதுதான் கண்ணனூர் அகில இந்திய மாநாட்டில் சிஐடியு முன்வைத்த முழக்கமாகும்.
இன்னும் சொல்லப்போனால் அது புதிய முழக்கம்கூட அல்ல. தோழர் பி.டி.ரணதிவே அடிக்கடி சொல்வதுண்டு: ‘விளைவுகளை எதிர்த்து நடத்துகிற போராட்டம் நம்மை எங்கேயும் கொண்டுசெல்லாது; இத்தகைய விளைவுகளை உருவாக்கும் நாசகாரக் கொள்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’. விலைவாசி உயர்விற்குக் காரணமான கொள்கைகளை மாற்றாமல், பஞ்சப்படி உயர்விற்கான போராட்டமாக அதை நடத்தி முன்னுக்குச் செல்ல முடியாது என்று தொடங்கி, அவரது வாழ்நாளில் பல அம்சங்களை எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த முறையில், சுருக்கமாகச் சொல்வதெனில், கொள்கைகளை எதிர்த்த போராட்டமாக அதை மாற்ற வேண்டும்.
இதில் அடுத்து மிகப்பெரிய அபாயமாக, இன்றும் முழுமையான தெளிவு இல்லாத விஷயமாக இருப்பது கணினிமயம் அல்லது அது போய் தானியங்கி என்பதாகி, பின்பு செயற்கை நுண்ணறிவு என்றாகி, இப்போது சாட் ஜிபிடியில் வந்து நிற்கிறது. அந்தத் துறையைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இன்றைக்குள்ள சாட் ஜிபிடி போன்று இருக்கக்கூடிய மிக வேகமான லாபத்தை ஈட்டுவதற்கான இந்தப் போட்டியை நிறுத்திவிட்டு, எது சமூகத்திற்குத் தேவை; இன்றைய தேவை எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வெளிநாடுகளில், ஐரோப்பாவில், அமெரிக்காவில் இத்துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள் கூட, இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர்.
ஏனெனில் பல நிறுவனங்களில் – உதாரணமாக மாருதி நிறுவனத்தில் – குர்காவ்னில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே ரோபோக்கள் பணியாற்றிக்கொண்டிருந்தன. ஏனென்றால் ஆட்டோமொபைல் துறையில்தான் முதலில் அசெம்ப்ளி யூனிட்டில் ரோபோ பயன்படத் தொடங்கியிருந்தது. 1963-67ஆம் ஆண்டிலெல்லாம் அசெம்ப்ளி யூனிட்டில் பார்த்த நிலைக்கும், பிறகு மாருதி போன்ற நிறுவனங்களின் அசெம்ப்ளி யூனிட்டில் வந்திருக்கும் ரோபோக்கள் என்பது மிகப்பெரிய மாற்றம். அதாவது இயந்திரமயமாக்கல், கணினி மயமாக்கல், தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு என்று வந்திருக்கக்கூடிய மாற்றம், தொழில்துறையில் என்ன விளைவுகளை உருவாக்கும் என்று முழுமையாக இன்னும் மதிப்பிடப்படவில்லை.
ஏனெனில் லாபத்தைப் பெருக்குவது என்பது சமூகத்திற்கு அதனால் ஏற்படுகிற லாபம்; அறிவியல் துறையின் முன்னேற்றம் என்பது உலகிற்குப் பயன்பட வேண்டும் என்று லெனின் காலத்திலிருந்து நாம் சொல்லி வந்திருக்கிறோம். ஆனால் ஒரு முதலாளித்துவ சமூக முறையில் இயந்திரத்தின் சமூகப் பயன்பாடு என்பது நடக்காது என்பதை தொழிலாளிகளுக்குப் புரியவைத்து, இந்தக் கொள்கைகளில் அடிப்படையான மாற்றம் காண்பதற்கான போராட்டமாக அதை மாற்ற வேண்டியுள்ளது. உற்பத்தித்துறை, சேவைத்துறை, கணினி அல்லது தானியங்கி முறை என்ற இந்த மூன்று அம்சங்களுமே இன்று நம் முன் கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி உலக அளவில் இத்தகைய துயரங்களை உழைக்கும் வர்க்கத்தின் மீது சுமத்தி வருகிறது. அவ்வகையில் அதற்கான எதிர்ப்புகள் உலக அளவில் எவ்வாறு வெளிப்படுவதாகக் கருதுகிறீர்கள்?
நான் சற்றுமுன் சொன்னதில் கூடுதலாக ஒரு விஷயம். உலகத்தில் இந்தத் துறையை சார்ந்தவர்கள் கூட செயற்கை நுண்ணறிவு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறார்கள். இது இப்போது தேவையா என்று ஒருவருக்கொருவர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை எதிர்த்து உலக தொழிற்சங்க இயக்கம் (WFTU) பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை என்ற முறையில் பல ஆண்டுகளாகவே கேள்வி எழுப்பி வந்துள்ளது.
ஐரோப்பாவிலிருந்து அல்லது அமெரிக்காவிலிருந்து அல்லது இங்கிலாந்திலிருந்து தோன்றிய இந்த நிறுவனங்கள் அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கக்கூடிய ஊதியம், சலுகைகளை தவிர்க்க குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய ஆசியாவிலும் மற்ற நாடுகளிலும் உற்பத்தியைக் கொண்டுசெல்வது என்பது கடந்த காலத்திலேயே இருந்து வந்துள்ளது. இதில் மிகப்பெரிய மாறுதல் என்பது இதை எதிர்த்து உலகத் தொழிற்சங்க இயக்கம், குறிப்பாக சமூக மாற்றத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரே உலகத் தொழிற்சங்க அமைப்பான WFTU உட்பட இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், தென்கொரியாவில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொள்ள தென்கொரியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நிறுவனங்களை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களாக கொரியாவில் இருக்கும் ஹுண்டாய் போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்கள் நடத்துகின்ற போராட்டம், அதில் உலகளாவிய ஒற்றுமையைக் கொண்டு வந்து அந்த நிறுவனங்களை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் என்ற நிலை ஆகியவற்றைக் காண முடிந்தது.
இங்கே ஹூண்டாய் தொழிலாளி போராடியபோது தொழிற்சங்கத் தலைவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது; அவர்களோடு பேச முடியாது என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின்போது கொரியாவிலிருந்து தொழிற்சங்க ஊழியர்கள் இங்கே வந்தபோது அந்த தொழிற்சங்கத் தலைவர்களை வரவேற்று தொழிற்சாலைக்குள் வருவதற்கு அனுமதித்ததையும் பார்த்தோம். அது அங்கே இருக்கும் நிர்ப்பந்தம்.
இவ்வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்றைக்கு வெளிநாடுகளில் அல்லது ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் அல்லது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்து வருகின்றன. பலவீனங்களும் இருக்கிறது. பலமான போராட்டங்களும் இருக்கிறது. அது இந்தப் பிரச்சனைகளை எல்லாம் உள்ளடக்கியது. கிட்டத்தட்ட 90-91ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச மாநாடுகளில் உலகமயமாக்கலுக்கு எதிராக எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் சரி, அது பிரேசிலோ, இலங்கையோ, கொரியாவோ இவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. திரும்பி வரும்போது நாங்கள் சொல்கிற ஒரே விஷயம் இதுதான். மொழிதான் வேறுபட்டு இருக்கிறதே தவிர, பிரச்சனைகள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஒன்றாகத்தான் இருக்கிறது என்று கூறி வந்துள்ளோம். இதை நானும் பேசியிருக்கிறேன். மற்றவர்களும் அதையே கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் உலகளாவிய முறையில் நிலவும் எதிர்ப்பைப் பொறுத்தவரையில், கடைசியாக நடைபெற்ற மாநாடு உட்பட உலகளாவிய முறையில் இந்தச் சுரண்டலுக்கு எதிராக ஓர் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிகளும் இப்போதுள்ள நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
கூட்டுறவு இயக்கம் என்பது அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான ஓர் இயக்கமாகும். ஆனால் இன்று அந்த இயக்கம் நேர் எதிர் திசையில் சென்று வருகிறது. இதில் நமது தொழிற்சங்கங்கள் எத்தகைய தலையீட்டைச் செய்துள்ளன. அந்த இயக்கத்தை வலுப்படுத்த எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்?
கூட்டுறவு என்பது ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற முழக்கம் எல்லாம் சரிதான். ‘ஒவ்வொருவரும் அனைவருக்காக! அனைவரும் ஒவ்வொருவருக்காக!’ (Each for All, All for Each) என்று சொல்லப்படும் விஷயங்கள்தான். ஆனால் இதில் என்ன பிரச்சனை? கூட்டுறவு என்பது அரசின் கொள்கைகளோடு நேரடியாக இணைக்கப்பட்டு சூறையாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஜனநாயக இயக்கங்கள் வலுவாக உள்ள இடங்களில் கூட்டுறவு என்பது உண்மையிலேயே அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான, அவர்களுக்கு நலன் பயக்கக்கூடியதாகவும், உலகத்திற்கு நன்மை செய்வதாகவும் விளங்குகிறது.
ஒரு மாநிலம் என்ற வகையில் பார்த்தால், அந்தத் துறையில் மிகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கக்கூடிய இடம் கேரளாதான். அங்கு உற்பத்தித்துறையில், சேவைத்துறையில், சமூக நலன்களில், மருத்துவமனைகளை நடத்துவதில், கல்லூரிகளை நடத்துவதில் என எல்லாத் துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. அதில் பல இயக்கங்களை சார்ந்தவர்களும் தலைமையேற்று செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையான சட்ட விதிகளும், ஜனநாயகபூர்வமான தன்மையும் அங்கே செயலில் உள்ளது. ஆனால் கூட்டுறவு என்பது ஆளும்கட்சியின் விருப்பத்திற்குரிய ஒரு விளையாட்டுக் களமாக ஆக்கப்பட்ட அனுபவம்தான் தமிழ்நாட்டுக்கு உண்டு.
ஆனால் கூட்டுறவு இயக்கத்தின் ஒட்டுமொத்தமான வாய்ப்புகள் இன்றைக்கு மத்திய அரசின் கைகளில் உள்ளது. இதுவரை மாநிலங்கள் மட்டுமே சுதந்திரமாக, அவர்கள் மட்டுமே செயல்படக்கூடிய ஒரு பிரிவாக கூட்டுறவு இருந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் சில கூட்டுறவு அமைப்புகள் மட்டுமே மத்திய அரசின் சட்டப்படி செயல்படும் என்று இருந்தது. இப்போது அது உள்துறை அமைச்சகமும் சரி அல்லது விவசாயத் துறையோடு இணைந்த கூட்டுறவு அமைச்சகமும் சரி, நேரடியாக இந்தியா முழுவதும் கூட்டுறவு அமைப்புகளில் தலையிடும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது.
இதன் மூலம் இதுவரை மாநிலங்களுக்கு கூட்டுறவு அமைப்புகளின் மீது இருந்த உரிமை பறிக்கப்படுவதோடு, மத்திய அரசின் செல்லப்பிள்ளைகளின் மூலம் மாநில மக்களின் உழைப்பில் வளர்ந்த கூட்டுறவு அமைப்புகளை விழுங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக ஆகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இன்று பல துறைகளில் நல்ல முறையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு அமைப்புகள் உருவாகி, விவசாயிகளின் பாதுகாப்பிற்கு, விவசாய உற்பத்தியை தொழில்துறையில் பயன்படுத்துவதற்கு என பலவகையில் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. அங்கு கூட்டுறவு என்பது பெயரளவிற்குத்தான்.
தமிழ்நாட்டிலேயே சில கூட்டுறவு அமைப்புகள் பெயரளவிற்கு இருக்கிறதே தவிர, அதன் உறுப்பினர்களுக்கு தலையிடுவதற்கான வாய்ப்பே இல்லை. அது நிறுவனமயமாக்கப்பட்டு, இன்னும் சொல்லப்போனால், சில நபர்கள் அல்லது குடும்பங்களுக்கு சொந்தம் என்பதாக மாறியுள்ளன. மகாராஷ்ட்ராவில் விதர்ப்பாவிற்கும் மற்ற பகுதிகளுக்கும் போனால் தெரியும். இது இவருக்கு சொந்தமான, ஆனால் கூட்டுறவு என்ற பெயரில் செயல்படும் நிறுவனம் என்று சுட்டிக் காட்டுவார்கள். கூட்டுறவு என்பது உண்மையிலேயே கூட்டுறவாக மாற்றப்பட வேண்டும். அதற்கான தலையீடு கூட்டுறவு சங்கங்களில் உள்ளவர்கள் மட்டுமின்றி, இன்றைக்கு தொழிற்சங்க இயக்கத்திலும் அதைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.
அடிப்படையில் அது தனது உறுப்பினர்களின் நலன்களுக்கு உட்பட்டதாகவும், சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் மாற்றப்பட வேண்டும். உண்மையிலேயே கூட்டுறவு நாட்டுயர்விற்காக பயன்பட வேண்டியது என்று சொன்னால் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. அது ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சியோடு இணைக்கப்பட்ட ஒன்று. அது இல்லாமல் இது நடக்காது என்பதைத்தான் நமது இந்திய அனுபவம் காட்டுகிறது.
சமீபத்தில் டெல்லியில் தொழிலாளிகள்-விவசாயிகள்- விவசாயத் தொழிலாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றம் நோக்கிய பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் பிரிவினரின் மீதான தாக்குதல்களும் மேலும் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் உழைக்கும் மக்களிடையேயான இந்த ஒற்றுமை மேலும் வலுப்படவும், நீடிக்கவும் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகள் என்ன?
சொல்லப்போனால் தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளி என்ற மூன்று பிரிவினரும் தான் நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்கள் (wealth creators). இது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். மத்திய அரசும் நமது மாண்புமிகு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு wealth creators என்றால் அம்பானி-அதானிதான். நாட்டின் மிகப்பெரும்பான்மையான மக்கள் இந்த மூன்று பிரிவுகளை சார்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காக கூட்டாக ஓர் இயக்கத்தை, நடவடிக்கையை கொண்டுசெல்ல வேண்டும் என்ற முயற்சி இப்போது டெல்லி பேரணியில் நடந்ததல்ல.
1980இல் சிஐடியுவின் முன்முயற்சியில் இதர மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தேசிய கிளர்ச்சிப் பிரச்சாரக் குழு என்ற ஓர் அமைப்பு மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் உருவாக்கப்பட்டது. அன்றைக்கு நாம் முன்வைத்திருந்த கோரிக்கைப் பட்டியல் – உண்மையிலேயே அது ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு கோரிக்கைப் பட்டியல் – விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும்; விவசாயத் தொழிலாளிக்கான ஒருங்கிணைந்த சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் இருந்து, குறைந்தபட்ச ஊதியம் உட்பட தொழிலாளிகளின், விவசாயிகளின், விவசாயத் தொழிலாளிகளின் கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு கோரிக்கை சாசனம் அது.
தேசிய கிளர்ச்சிப் பிரச்சாரக் குழுவின் சார்பில் இது உருவாக்கப்பட்டு, டெல்லியில் ஒரு பேரணி நடத்தப்பட்டு, 1982 ஜனவரி 19 அன்று ஓர் அகில இந்திய வேலைநிறுத்தம் அந்தக் கோரிக்கைப் பட்டியலை முன்வைத்து நடத்தப்பட்டது. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில்தான் தமிழ்நாட்டில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தத்தில் பத்து பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. எண்ணற்றோர் காயமுற்றனர். அதைப் பட்டியல் போட நான் முயற்சிக்கவில்லை.
1982இல் தேசிய கிளர்ச்சிப் பிரச்சாரக் குழு (National Campaign Committee) முன்முயற்சி எடுத்து தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக, கூட்டாக நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளின் கோரிக்கைகளோடு தொழிற்சங்கத்தை இணைப்பது என்பதில் எல்லா அமைப்புகளும் ஒரே பார்வையோடு செயல்படும் தன்மை உருவாகவில்லை. இதனால்தான் 2018இல் சிஐடியு மீண்டும் முயற்சி எடுத்து, சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் என்ற, கொள்கை ஒற்றுமைகொண்ட, மூன்று அமைப்புகளும் இணைந்து 2018 செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய பேரணியை நடத்தின.
சுதந்திர இந்தியாவில் அதுவரை நடைபெற்ற பேரணிகளிலேயே மிகப்பெரும் பேரணியாக அதை மாற்றின. நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி அது. அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 19-ஐ தியாகிகள் தினமாக கூட்டாகக் கொண்டாடுவது; தொழிலாளி – விவசாயி ஒற்றுமையை மேம்படுத்துவது என்ற முறையில் ஒரு தொடர் முயற்சியை செய்துகொண்டே இருந்தோம்.
அதற்கிடையில்தான் இந்த 2020இல் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு உருவானது. ஆனால் இந்த அடிப்படை அம்சங்களையும் கோரிக்கைகளையும் ஒன்றிணைத்து, தொழிலாளி-விவசாயி – விவசாயத் தொழிலாளி என்ற இந்த மூன்று அடிப்படை வர்க்கங்களையும் ஒன்றிணைத்து, களத்தில் இறக்க வேண்டும் என்ற முறையிலான முன்முயற்சியை இந்த மூன்று அமைப்புகளின் தலைவர்களும் செய்தனர். அதில்தான் இந்த சுற்றில் 2022 செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் ஒரு சிறப்பு மாநாட்டை நடத்தி, அதில் எடுத்த முடிவுதான், ஆறுமாத காலம் இந்தியா முழுவதும் பிரச்சார இயக்கத்தை நடத்துவது; ஏப்ரல் 5 அன்று டெல்லியில் பேரணியை நடத்துவது என்பதாகும்.
14 அம்ச கோரிக்கைகள் என்று இப்போது முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் தொழிலாளிகளின், விவசாயிகளின், விவசாயத் தொழிலாளிகளின் கோரிக்கைகள் மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த மக்களுடைய கோரிக்கைகளும் ஆகும். அந்தக் கோரிக்கைப் பட்டியலை பார்த்தால் தெரியும். அது மக்களுடைய சாசனம். அதைத் தொடர்ந்து கொண்டுசெல்வது என்று முடிவெடுத்தோம். இந்த ஓர் இயக்கத்தை நடத்தி முடிப்பது என்பதல்ல. மூன்று அமைப்புகளும் தொடர்ச்சியாக அதை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் பொருள். ஏனென்றால் சிஐடியுவைப் பொறுத்தமட்டில் ஜனவரியில் பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் எடுத்த முடிவு மூன்று வகையான இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
ஒன்று, சிஐடியு அதன் சொந்த நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும் இயக்கங்களை நடத்துவது. இரண்டாவது, ஜனவரி 30ஆம் தேதி டெல்லியில் நடந்த ஒரு சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைப்பட்டியலை முன்வைத்து, பிஎம்எஸ் தவிர்த்த அனைத்து தொழிற்சங்கங்களின், அதனோடு மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல் போன்ற தொழில்வாரி சம்மேளனங்களையும் இணைத்துக் கொண்டு இயக்கங்களை நடத்துவது. மூன்றாவது, சிஐடியு, அகில இந்திய விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்றும் சேர்ந்து இந்தக் கோரிக்கைகளுக்காக இயக்கம் நடத்துவது. இந்த மூன்று வகையில் அந்தந்த நேரங்களில் உருவாகும் எழுச்சிகளை முன்னுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணிக்கு மிகச்சிறப்பான பிரச்சாரம் செய்யப்பட்டது. சொல்லப்போனால், இதற்கு முன்னால் இருந்திராத அளவிற்கு விரிவான பிரச்சார இயக்கம் பலமான இடங்களிலும் பலவீனமான மாநிலங்களிலும் நடந்தது. அதன் பிரதிபலிப்பைத்தான் நாம் ராம் லீலா மைதானத்தில் பார்த்தோம். அது தொடர வேண்டிய ஒன்று என்று முடிவெடுத்திருக்கிறோம். அதைத் தொடர்வது என்பது இந்தக் கோரிக்கை சாசனம், கொள்கை ஆகியவற்றை அரசின் கொள்கைகளை எதிர்த்த பிரச்சாரமாக, அந்தக் கொள்கைகளை மாற்றுவதற்கான பிரச்சாரமாக கொண்டுசெல்வது. வரும் நாள்களில் இந்த இயக்கத்தை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அடிப்படை வர்க்கங்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்காக, இந்த சமூகத்தில் மாற்றம் வரவேண்டுமானால், தொழிலாளிகளும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் ஒருங்கிணைந்து நின்று அந்த சமூக மாற்றத்திற்காகப் போராடுகிற நிலைக்கு இந்தியாவின் மிகப்பெரும்பான்மையான மக்கள் திரளிடையே கொண்டுசேர்க்க வேண்டும் என்ற பார்வையோடு திட்டமிடப்பட்ட நிகழ்வு அது. ஆனால் அதுவே முடிவல்ல. அது தொடர்ச்சியாக நடக்கவேண்டிய ஒரு நிகழ்வு. வரும் நாட்களில் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் உருவாகும்.
தங்களின் உயிர்வாழ்தலுக்காக உழைப்புச் சுரண்டலை எதிர்க்கவேண்டிய நிலையில் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் பெருமளவில், இன்னும் சொல்லப்போனால், உலக அளவிலும் கூட, வலதுசாரி தாக்கத்திற்கு இரையாவது ஏன்?
உண்மையான இடதுசாரி கருத்துக்களை அழுத்தமாக உழைப்பாளி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்ட பின்னடைவு என்றுதான் நான் அதைப் பார்க்கிறேன். ஏனெனில், சுரண்டலை எதிர்த்து, அடிப்படையான அம்சங்களை கொண்டுசெல்ல வேண்டிய இடத்தில் வலதுசாரி கருத்துக்கள் ஏன் வருகிறது என்று சொன்னால், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய நிலப்பிரபுத்துவ பிடிமானம், நிலப்பிரபுத்துவ கருத்துக்கள், முதலாளித்துவத்திற்கு முந்தைய சூழல் இன்றுவரையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை, அதில் இந்த சமூக மாற்றத்திற்கு எதிராக நிற்கும் அனைத்து பிற்போக்கு சக்திகளும் ஒன்றிணைவதை இந்தியாவின் அனுபவத்தில் நான் பார்க்கிறேன்.
அதற்கு மதமும், சாதியும் பழக்கவழக்கங்களும் என எல்லாமே பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. ஐரோப்பா என்று வருகிறபோது, முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும், அங்கே ஆட்சியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பின்னடைவுகளை மிக சாமர்த்தியமாக வலதுசாரி சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
கடைசியாக வந்த பின்லாந்து போன்றிருக்கக் கூடிய நாடுகளில் இருந்து, அதற்கு முந்தைய சூழல்வரை பல நாடுகளிலும் நாம் பார்த்தோமெனில், வலதுசாரிகள், அதாவது மூலதனத்தைப் பாதுகாப்பதற்கு, முதலாளித்துவ அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்கு என்ற வகையில் முற்போக்கு முழக்கங்களைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் பிற்போக்குத்தனமான அம்சங்களை மக்களிடையே கொண்டு செல்கின்றனர். இங்கெல்லாம் வெளிவரக்கூடிய விஷயம் என்ன? உண்மையான இடதுசாரி சக்திகள் இந்த அலைபாயுதலில் உறுதியாக நிற்க முடியவில்லை. 90ஆம் ஆண்டிற்குப் பிறகு, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவ நாடுகளில் அல்லது ஐரோப்பாவில் அல்லது மற்ற பல நாடுகளில் இடதுசாரி இயக்கங்களுக்கு ஏற்பட்ட பலவீனமும் வீழ்ச்சியும் இந்த வலதுசாரி கருத்துக்கள் மேலோங்க உதவின.
அது மக்களின் மீதான சுரண்டல் என்பதிலிருந்து அவர்களை திசைதிருப்பக்கூடிய வகையில் ஒரே தன்மையில்தான் இந்தப் பிரச்சாரம் நடக்கிறது. இன்னொருவர்தான் நமது துன்பங்களுக்குக் காரணம் (Othering) என்று சொல்வதுபோல, ஒவ்வொருவரும் வேறு ஒரு பிரிவினர் மீதான வெறுப்பினை தூண்டுவதாக அது அமைகிறது. அமெரிக்காவில் அது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சுட்டுகிறது; இப்போதும்கூட சுனாக் (ரிஷி) வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வருபவர்களுக்கு எதிராக முழக்கமிடுகிறார்.
ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அதுதான் நடக்கிறது. இங்கே அது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் என்பதாக இல்லாவிட்டாலும், இங்கே நம் நாட்டில் இருப்பவர்களில் ஒரு பகுதியினரை எதிரிகளாக சித்தரித்து, மதம் சார்ந்த அல்லது கடவுள் சார்ந்த, ஒரு நம்பிக்கையை சார்ந்த அல்லது மதமோ, சாதியையோ சார்ந்த கருத்துக்களாக அதை மாற்றி, வலதுசாரி கருத்துக்களைப் பரப்புகின்றனர்.
அங்கே வர்க்கரீதியான நிலைபாடுகளுடைய உறுதியான இடதுசாரி கருத்துக்கள் இல்லை. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், அந்த இடதுசாரி கருத்துக்களை தொழிலாளர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் ஏற்பட்டிருக்கக்கூடிய பலவீனம் அல்லது குறைபாடு என்று சொல்லலாம். இந்தக் குறைபாடுகளுக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. அவை களையப்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் காரணம் என்று சொன்னால் இதுதான்: where the real left is failing. அதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. ஆனால் failing என்பது உண்மை.
விடுதலைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை, குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில், கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும் இந்தப் பிரிவினரை தொழிற்சங்க மயப்படுத்துவதில், அவர்களை அரசியல்படுத்துவதில் தொழிற்சங்க இயக்கம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று கருதுகிறீர்கள்?
உங்கள் கேள்வியின் முதல்பகுதியில் இருக்கக் கூடிய அம்சத்தில் மிகப்பெரியதொரு மாற்றம் வந்திருக்கிறது. இடைக்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுத் துறைகளில் பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைத்தன என்பது உண்மை. ஆனால் ஒட்டுமொத்த பெண்களின் எண்ணிக்கையைப் பார்க்கிறபோது, உழைக்கும் படையில் அவர்களின் பங்கேற்பு என்பதைப் பார்க்கிறபோது, பெண்களின் பங்கு என்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், 60ஆம் ஆண்டுகளில் நாங்கள் தொழிற்சங்கங்களில் வரும்போது, 70ஆம் ஆண்டுகளில் சங்க வேலைகளை மேற்கொண்டபோது, அன்றைக்கு உதாரணமாக காட்டப்பட்ட பெண்களுக்கு இருந்த வேலை வாய்ப்புகள் எப்படி மறுக்கப்படுகின்றன என்பதற்கு, பஞ்சாலை போன்ற தொழில்களில் பெருமளவிற்கு அவர்கள் வேலை செய்து வந்த நிலை மாறி, பெண்களை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு போன்ற சட்டரீதியாகப் போராடிப்பெற்ற சில சலுகைகளை கொடுக்க வேண்டிவரும் என்பதால், அவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டது. பிறகு 90களில் அல்லது 2000களில் என்ன பார்க்கிறோமெனில், அதே பஞ்சாலைகளில் எந்தவிதமான உரிமைகளும் இன்றி, சுமங்கலித் திட்டமாகவும் மற்றதாகவும் பெண்களை அடைத்து வைத்து வேலை வாங்கப்படுகின்ற நிலையினைக் காண்கிறோம்.
இன்னொரு பக்கத்தில் வேலையில் உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால், இன்றைக்குள்ள தொழிற்சங்க இயக்கத்தைக் கூர்ந்து கவனித்தால், இந்தியா முழுவதும் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களில் கணிசமான அளவிற்கு பெண்கள் அணிதிரளுவதைப் பார்க்கிறோம். அரசினால் சுரண்டப்படுகின்ற ஒரு பகுதியினர். அவர்கள் மதிய உணவுத் திட்டத்தில் வேலை செய்வோர்;
அங்கன்வாடி ஊழியர் போன்று பல துறைகளில் பெண்கள் லட்சக்கணக்கானோர் வந்துவிட்டனர். வாலண்டியர் என்ற பெயரில் அவர்கள் எவருக்கும் தொழிற்சங்க உரிமைகள் இல்லாமல், சமூக நலனுக்காகப் பணியாற்றக் கூடிய தொண்டர்கள் என்ற பெயரில் கல்வித்துறையில், விவசாயத்துறையில், மருத்துவத்துறையில் என பல துறைகளில் இது நிலவுகிறது. அதேபோன்று தேசிய சுகாதார இயக்கம் என்பதன்கீழ் ஆஷா அல்லது அங்கன்வாடி போன்றவற்றில் பல லட்சக்கணக்கான பெண்கள் பணியாற்றும் நிலை உள்ளது.
இதில் ஒரு நல்ல அம்சம் என்னவெனில், அந்தத் தொழிலாளிகள் ஒன்று திரண்டுள்ளனர். களத்திற்கு வருகின்றனர். சாலைமறியல் போராட்டங்களிலும் கூட அவர்களது பங்களிப்பு அதிகமாக உள்ளது. வேலைநிறுத்தங்கள் நடக்கின்றன. டெல்லிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பேரணி நடத்துகின்றனர். இது ஒருபக்கம். மறுபக்கத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது அணி திரட்டப்பட்ட துறைகளில் அல்லது அரசு அலுவலகங்களில் புதிய ஆளெடுப்பு கிட்டத்தட்ட இல்லை என்று ஆகிறபோது, பெண்களுடைய, அதாவது உரிமைகள் பெற்ற பெண் தொழிலாளர்களுடைய எண்ணிக்கை குறைந்துள்ளது.
1979ஆம் ஆண்டு சென்னை நகரத்தில் நடைபெற்ற சிஐடியு நான்காவது அகில இந்திய மாநாட்டில்தான் உழைக்கும் பெண்கள் அரங்கம் உருவானது. ஒரு மத்திய தொழிற்சங்கம் அதுவரையில் உழைக்கும் பெண்களுக்கான கமிட்டிகள் எதையும் கொண்டிருக்கவில்லை. பெண் தொழிலாளர்களுக்கான கமிட்டி என்பது இல்லை. 1979இல் நாம் அதை உருவாக்கினோம். அதற்குப் பிறகு வேறு பல மத்திய தொழிற்சங்கங்கள் பெயரளவிற்கேனும் அத்தகைய கமிட்டிகளை உருவாக்கியுள்ளன. பல துறைகளில் அது வந்துள்ளது. பெண்களை சங்கமாக்குவதிலும் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிஐடியு போன்ற அமைப்புகளில் கிட்டத்தட்ட 28 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் உள்ளனர். இது பெருமைக்குரிய ஒரு விஷயம்தான். அதேபோன்று அந்தப் பெண் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் பொறுப்பாளர்களாக மாற்றுவது என்ற வகையில், சிஐடியுவின் அகில இந்திய மையத்திலிருந்து மாவட்டக்குழுவரை, மாநிலத்திலிருந்து மாவட்டத்திலிருக்கும் சங்கங்கள்வரை, பெண் ஊழியர்களும் உருவாகியுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் இல்லை என்றே கூறவேண்டும். அதற்குக் காரணம் பெண்களை பின்னுக்குத் தள்ளுகின்ற, ஆணாதிக்க மனப்பான்மை எல்லா மட்டத்திலும் உள்ளது. தொழிற்சங்க இயக்கமும் அதில் இருந்து விடுபட்டதல்ல. ஏனெனில் அந்தப் பெண் தொழிலாளர்களோடும் ஒருங்கிணைப்புக் குழுக்களோடும் இணைந்து பணியாற்றிய என்னுடைய அனுபவத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது அது இன்னும் தேங்கி நிற்கிறது என்றே கூறலாம்.
ஆனால் கடந்த காலங்களிலிருந்து ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிஐடியுவை பொறுத்தமட்டில் இதில் கவனம் செலுத்துவது என்பதும், அதற்கான முன்முயற்சி எடுப்பது என்பதும், தொடர்ந்து அந்தப் பணியில் ஈடுபடுவது என்பதும் தொடரும். அதன் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 28 சதவீதத்திற்கும் மேலான பெண் தொழிலாளர்கள் சிஐடியுவில் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் கட்டுமானம், பீடி, தேயிலை/காபி தோட்டத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளிகளிலிருந்து எல்லா வகையினரும் உள்ளனர். இன்னொரு பக்கம் இன்சூரன்ஸ், வங்கி, மத்திய-மாநில அரசு ஊழியர் என சிஐடியுவோடு இணைந்து தோழமையோடு செயல்படும் சங்கங்களிலும் பல ஆயிரக்கணக்கான பெண் உறுப்பினர்கள் உள்ளனர். அங்கேயும் இதுபோன்ற முயற்சிகள், அவர்களை சங்கத்திலும் சங்கத்தலைமையிலும் ஈடுபடச் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பெருமளவிற்கு இந்திய சமூகம் பெண்களை மதிக்காத சமூகமாக இருக்கும் சூழலில், தொழிற்சங்க அரங்கத்திலும் பெண்களை இயக்கத்திற்குள் கொண்டுவருவதிலும் கடுமையானதொரு போராட்டம் தேவைப்படுகிறது.
இறுதியாக ஒரு விஷயத்தை நான் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இந்திய மக்களுக்கு மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருப்பது வகுப்புவாதம். மதரீதியாக தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 92ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில்கூட ஓரளவிற்கு தொழிலாளர்களிடையே அதற்கெதிரான ஒரு கருத்தை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றோம். ஆனால் இன்று பார்க்கும்போது 2014ஆம் ஆண்டிற்குப்பிறகு வகுப்புவாத சக்திகளுடைய தலையீடு, திட்டமிட்ட செயல்பாடு, அரசு மூலமான செயல்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்து ஊழியர்கள், தொழிலாளர்களிடையே வகுப்புவாதக் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவிச் சென்றுள்ளதை மிகப்பெரியதொரு அபாயமாக சிஐடியு கருதுகிறது. எந்த நேரத்திலும் இது நமக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும்.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பல தொழில் மையங்களில் இருந்த தொழிலாளர் குடியிருப்புகளில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து, ‘நேற்றுவரை உறவாடிக் கொண்டிருந்தவர்கள் எங்களை தாக்கினார்கள்’ என்று அவர்கள் கூறியபோது, பெரிதும் கவலையுற்றோம். தோழர் பி.டி.ஆர். அதைப்பற்றிக் கூறியதெல்லாம் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. இந்த உணர்வு அதற்குள் ஆனது. மிக விரைவிலேயே இந்த வகுப்புவாதத் தீயை பற்ற வைக்க முடியும் என்ற அனுபவம் நமக்கு இருக்கிறது. இன்று அதை எதிர்த்து பிரச்சாரம் ஒருபுறத்தில் நடந்தாலும், இன்றைக்கு அது பேரபாயமாக வளர்ந்திருக்கிறது.
இந்த அபாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்த வேண்டிய பொறுப்பு தொழிற்சங்க இயக்கத்திற்கு உண்டு. மிகப்பெரியதொரு சவாலாக அது நம் முன்னால் நிற்கிறது. தொழிற்சங்க உரிமை என்பது ஜனநாயக உரிமையின் ஒரு பகுதிதான். ஜனநாயகம் தாக்கப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது தொழிற்சங்க இயக்கம்தான். எப்போதும் தொழிலாளி வர்க்கம்தான். ஹிட்லர் காலத்திலிருந்து இன்றுவரை அதுதான் நிலைமை. இங்கேயும் தொழிலாளர் விதிமுறைகள் (லேபர் கோட்) மூலமாகவும், வேறு வகையிலும், தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
ஓர் அரசு ஊழியர் அரசின் கொள்கைகளுக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டால், அதற்கு குற்றப்பத்திரிக்கை வழங்கக்கூடிய அளவிற்கு, ‘உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று கேட்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவித்தால், ஆர்ப்பாட்டத்திற்குப் போனால் நடவடிக்கை பாயும் என்று சுற்றறிக்கை உடனடியாக வருகிறது. சங்கம் சேரும் உரிமை, கூட்டுபேர உரிமை மறுக்கப்படுகிறது. ஒருபுறத்தில் ஜனநாயக உரிமைகள் தாக்கப்படும்போது, அதை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளது. தொழிற்சங்க இயக்கம் தொழிலாளியிடம் ஒன்றுபட்டுப் போராடு என்கிறது. மறுபக்கத்தில் நமது எதிரி முகாம் அவர்களை பிளவுபடுத்த திட்டமிட்டு முயற்சிக்கிறது. இதற்கு மதம், சாதி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. கடவுள்களும் மற்றவர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் ஒரு மாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டியுள்ளது.
இந்த ஆண்டு மே தினத்தை நாம் கொண்டாடுகிறபோது சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு மே தினத்தன்று வெளியிட்ட கோரிக்கை சாசனத்தில் உள்ள அனைத்தும் இன்றும் நம்முடைய கோரிக்கைப் பட்டியலில் நீடிக்கிறது என்பதுதான் 75ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை. ஒன்றுமே நடக்கவில்லையா? அப்படிச் சொல்லமுடியாது. ஆனால் அடிப்படை அம்சங்களில் மாற்றம் இல்லை. மிகப் பெரும்பான்மையானவர்கள் இன்றைக்கும் வேதனையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சங்க இயக்கம் மிகப்பெரிய சவால்களை சந்திக்கும் ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம். அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு, தத்துவார்த்த ரீதியாக, அரசியல்ரீதியாக, அமைப்புரீதியாக, தொழிலாளி வர்க்கத்தை தயார்படுத்தும் பணியை நாம் செய்யவேண்டியுள்ளது. சிஐடியுவும் அந்தப் பணியை செய்யவே பாடுபட்டு வருகிறது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் சொந்த முறையிலும், தொழிலாளி-விவசாயி-விவசாயத் தொழிலாளிகளின் ஒற்றுமையின் மூலமாகவும் இந்த சவால்களை அணுகவும், அவற்றின் மீது வெற்றி ஈட்டவும் முயற்சித்து வருகிறோம். இறுதியாக, ‘புத்தகம் பேசுது’ வாசகர்களுடன் உரையாடக் கிடைத்த இந்த வாய்ப்பிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.